கருத்துக் கண்காட்சி/கம்பன் கழகம்

கலைக்கூடப் பகுதி

2. கம்பன் கழகம்

கம்பன் கழகம் இனியது-இன்றியமையாதது. கம்பன் கழகத்துள் புகின், கலைச் செல்வங்களை நிரம்பவும் பெற்று மகிழலாம். ஆங்குப் பல கலைகள் பயிலப்படும்ஆராயப்படும்-அறியப்பெறும்-இத்தகு கழகம் உள்ள நாடு பெருமைக்குரியது; நகரம் சிறப்பிற்குரியது. எனவே கம்பன் கழகம் இனியது-இன்றியமையாதது.

ஆனால், திருவள்ளுவர் தெரிவித்துள்ளார். 'கழகத்துள் புகக்கூடாது; புகின், பழகிய செல்வமும் பண்பும் கெடும். ஏழமை - மிகும்' இது வள்ளுவர் கூறும் கருத்து. ஆயின், கம்பர் அறிமுகப்படுத்தும் கழகம் இனியது. ஏற்றது-இன்றியமையாதது.

யாமறிந்த புலவரிலே:

இஃதென்ன முரண்பாடு! "யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர் போல்இளங்கோவைப் போல், பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலை உண்மை வெறும் புகழ்ச்சியில்லை" எனச் சுப்பிரமணிய பாரதியாரால் பாராட்டப்பெற்றுள்ள பெரும்புலவர் மூவருள், கம்பர், கழ கத்தைச் சிறப்பித்துக் கூறுகிறார்; திருவள்ளுவரோ கழகத்துள் புகுதலைக் கண்டிக்கிறார்.

ஆம்! கம்பர் தமது இராமாயண நூலில் பால காண்டத்தில் நாட்டுப் படலத்தில் கோசல நாட்டின் சிறப்பைக் கூறி வருங்கால்

          "பந்தினை இளையவர் பயிலிடம் மயிலுரர்
          கந்தனை யனையவர் கலைதெரி கழகம்
          சந்தன வண்மல சண்பக வனமாம்
          நந்தன வனமல நறைவிரி புறவம்"

என்னும் (48) பாடலில் கழகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகக் கடவுளைப் போன்ற இளைஞர்கள் கலை பயில்கின்ற கழகம் அந்நாட்டில் உள்ளதாகக் கம்பர் கூறுகிறார். கலை பயிலும் இடம்கலை ஆராயும் இடம் கழகம்’ என்பது கம்பர் கருத்தாகத் தெரிகிறது. திருவள்ளுவரோ, சூது ஆடும் இடம் கழகம் எனக் கூறியுள்ளார். திருக்குறளில் ‘சூது’ என்னும் பகுதியில்,

          ‘கவறும் கழகமும் கையும் தருக்கி
          இவறியார் இல்லாகி யார்.’ (935)

          ‘பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
          கழகத்துக் காலை புகின்.” (937)

என்னும் இரண்டு குறள்கள் உள்ளன. கழகமும் கையும் சூதாடு கருவியுமாக இருப்பவர் ஒன்றும் இல்லாத ஏழையராவர்; கழகத்தில் புகுந்தவர் பழகிய செல்வமும் பண்பும் கெடுவர்-என்பன மேலுள்ள குறட் கருத்துக்கள்.

கலை பயிலும் இடம் கழகம் எனக் கம்பர் கருத்துத் தெரிவித்திருக்க, அவருக்கும் பல நூற்றாண்டுகள் முற்பட்ட வராகிய திருவள்ளுவர் சூதாடும் இடம் கழகம் எனச் சொல்லியிருப்பதிலுள்ள உண்மை யாது? அஃது ஆராய்தற் குரியது:

சங்க இலக்கிய ஆட்சி

திருக்குறளைப் போலவே சங்க காலத்தைச் சார்ந்த இலக்கியங்களில் கழகம் என்னும் சொல் ‘சூதாடு களம் என்னும் பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. எடுத்துக் காட்டுக்கள் சில வருமாறு, கலித்தொகையில்,

"தவலில் தண் கழகத்துத் தவிராது வட்டிப்பக்

கவறுற்றவடுவேய்க்கும் காமர்பூங் கடற்சேர்ப்ப" (130)

எனவும், திரி கடுகத்தில்,

”கழகத்தால் வந்த பொருள்கா முறாமை

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல்-ஒழுகல்

உழவின்கண் காமுற்று வாழ்தல் இம்மூன்றும்

அழகென்ப வேளாண் குடிக்கு” (42)

எனவும், ஆசாரக் கோவையில்,

"சூதர் கழகம் அரவம் அறாக்களம்

பேதைகள் அல்லார் புகாஅர் புகுவரேல்

ஏதம் பலவும் தரும்" (98)

எனவும், கழகம் என்னும் சொல் திருக்குறளில் உள்ளாங்கு ஆளப்பட்டி ருப்பதைக் காணலாம்.

திருக்குறளின் வழி

திருக்குறளுக்குப் பின் தோன்றிய சங்க இலக்கியங்களும் இடைக்கால இலக்கியங்களும் பிற்கால இலக்கியங்களும் திருக்குறளின் வழியைப் பின்பற்றிப் பல கருத்துக்களை வெளியிட்டிருக்கும் உண்மையைத் தமிழ் இலக்கியப் பயிற்சியாளர் அறிவர். இந்த அடிப்படையில் சங்க இலக்கியங்களே யன்றி, இடைக்கால-பிற்கால இலக்கியங்கள் சிலவும், திருக்குறளைப் போலவே ‘கழகம்’ என்னும் சொல்லைச் ‘சூதாடுகளம்' என்னும் பொருளில் கையாண்டிருப்பதையும் ஈண்டு மறப்பதற்கில்லை. எடுத்துக் காட்டிற்காக இடைக்கால இலக்கியம் ஒன்றையும் பிற்கால இலக்கியம் ஒன்றையும் காண்பாம்; ஒன்பதாம் நூற்றாண்டினராகக் கருதப்படும் திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணியில் கனகமாலையார் கலம் பகத்தில் உள்ள

"ஆகந் தானோர் மணிப்பலகையாக முலைகணாயாகப்
போகக் கேற்ற புனை பவழ வல்குல் கழகமாக
ஏக வின்பக் காமக் கவறாட வியைவ தன்றேல்
ஆக தோற்றிட் டடங்க லாண்மைக் கழகென்பவே"

என்னும் (101) பாடலிலும், பதினாறாம் நூற்றாண்டின ரான அதிவீரராம பாண்டியனார் இயற்றிய நைடதம் சூதாடு படலத்தில் உள்ள

"கள்ளுண விரும்புதல் கழகம் சேர்தல் மால்
உள்ளுறப் பிறர்மனை நயத்தல் ஒன்னலர்க்கு
எள்ளரு ஞாட்பினுள் இரியல் செய்திடல்
வள்ளியோய் அறநெறி வழுக்கும் என்பவே"

என்னும் (20) பாடலிலும் கழகம் என்பது சூதாடு களத்தைக் குறிப்பது காணலாம்.

உயரிய பொருளில்:

இதே நேரத்தில், கழகம் என்னும் சொல், இடைக்கால இலக்கியங்களிலும் பிற்கால இலக்கியங்களிலும், கம்ப ராமாயனத்தில் உள்ளரங்கு உயரிய பொருளில் கையாளப் பட்டிருப்பதையும் ஈண்டு மறப்பதற்கில்லை. இடைக்கால இலக்கியம் ஒன்றிலிருந்தும் பிற்கால இலக்கியம் ஒன்றிலிருந்தும் இதற்குச் சான்று காண்பாம்:

எட்டாம் நூற்றாண்டினராகக் கருதப்படும் நம்மாழ்வார் அருளியுள்ள திருவாய் மொழியில் உள்ள 

          "குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை
                                   செய்து கன்மம் ஒன்றில்லை
          பழகியாம் இருப்போம் பரமே இத்திருவருள்கள்
          அழகியார் இவ்வுலகம் மூன்றுக்கும் தேவிமை
                                                  தகுவார் பலருளர்
          கழகம் ஏறேல் நம்பி உனக்கும் இளைதே கன்மமே”

என்னும் (6-2-6) பாடலில் கழகம் என்னும் சொல் திரு வோலக்கம்’ என்னும் உயரிய பொருளில் அமைந்திருப் பதை அறியலாம். அடுத்து, பதினாறாம் நூற்றாண்டினரான பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற் புராணம் -திருநாட்டுப் படலத்தில்,

"கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ”

என்னும் (57) பாடலில், பழைய மதுரைத் தமிழ்ச் சங்கத்தைக் கழகம் என்னும் பெயரால் சுட்டியிருப்பது ஈண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது. கடவுளே கழகத்தில் அமர்ந்து தமிழ் ஆராய்ந்ததாக இப்பாடல் கூறுகிறது. இடைக்காலத் தவராகிய கம்பரும் கலைக் கூடங்களைத் தானே கழகம் எனக் கூறியுள்ளார். கம்பர் ஒன்பதாம் நூற்றாண்டினர் எனச்சிலரும், பன்னிரண்டாம் நூற்றாண்டி னர் எனச் சிலரும் கூறுகின்றனர். ஆகக்கூடியும், கம்பர் இடைக்காலத்தவர் என்பது உறுதி. இடைக்காலமும் பிற்காலமும் இருக்கட்டும்! பிற்காலத்திற்கும் பிற்காலமாகிய இக்காலத்தில், கல்லூரிக்கும் மேற்பட்ட பெரிய கல்வி நிலையத்தைப் பல்கலைக்கழகம்’ என நாம் அழைக்கிறோம். கழகம் என்னும் இந்த இனிய பெயரை, பல துறைகளில் பலர் கூடிப் பணியாற்றும் பலவகை நிறுவனங்களும் இன்று பெற்றுள்ளன.

அங்கனமெனில், சங்ககால நூல்களிலும் இடைக்காலபிற்கால இலக்கியங்களிலும், 'கழகம்’ என்னும் சொல், இரு துருவங்கள் போல் மிகவும் மாறுபட்ட இருவேறு பொருள்களில் ஆளப்பட்டிருப்பதிலுள்ள உண்மை யாது? இதனை நாம் கண்டு பிடிக்கக் கழகம் என்னும் சொல் குறித்து ஒரு சிறிது ஆராய வேண்டும்:-

கழக வரலாற்று ஆராய்ச்சி

கழகம் என்னும் சொல்லை எழுத்து எழுத்தாக அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து 'அறுவை மருத்துவம்’ செய்து ஆராய்ச்சி செய்பவரும் உண்டு. இதற்காக இவ்வளவு மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை. இது மிகவும் எளிதில் அவிழ்க்கக் கூடிய சிக்கலேயாகும். எட்டாம் நூற்றாண்டில் எழுந்த சேந்தன் திவாகரம்’ என்னும் நிகண்டு நூல் இதற்குத் துணைபுரியும். கழகம் என்னும் சொல்லுக்குத் திவாகர நிகண்டில் கிடைக்கும் பொருள் விளக்கம் வருமாறு:

“செல்லல் தீப்க்கும் பல்புகழ்ச் சேந்தனில்
வல்லுநர் நாவலர் வாய்ந்த இடமும்
மல்லும், குதும், படையும், மற்றும்
கல்வி பயில் களமும், கழகம் ஆகும்"

சேந்தன் திவாகரம்-இடப்பெயர்த் தொகுதி-160

'சேந்தனைப் போல் கல்வியறிவிற் சிறந்த நாவலர்கள் கூடும் இடமும், மற்போர் பயிலும் இடமும், சூது ஆடும் இடமும், படைப் பயிற்சி பெறும் இடமும், கல்வி கற்கும் இடமும், கழகம் எனப் பெயர் பெறும்' என்பது மேலுள்ள 

திவாகர நூற்பாவின் கருத்தாகும். 'பலர் கூடும் இடம்’ என்னும் பொது அடிப்படையிலேயே, மேற்கூறப்பட்டுள்ள இடங்கட்கும் கழகம் என்னும் பெயர் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. திவாகரத்தில், கழகம் என்னும் பெயர்க்கு உரியனவாக ஐந்து இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதலும் ஐந்தாவதுமே, ‘வல்லுநர் நாவலர் வாய்ந்த இடமும்’, ‘கல்விபயில் களமும் கழகம் ஆகும்' என முழு முழு அடியில் கூறப்பட்டு முக்கியம் பெற்றுள்ளன: ஏனைய மூன்றுமோ வெனில்; 'அதுவும் இதுவும் உதுவும்' என்ற 'ஏனோ தானோ'முறையில் மல்லும் சூதும் படையும் என ஒற்றை வரியில் ஒட்டிக்காட்டப் பட்டுள்ளன. ஒவ்வொன்றன் தகுதி பற்றித் திவாகர ஆசிரியரின் உள்ளத்தில் இருந்த மதிப்பீடுகள்பாட்டாக வெளி வரும் போது அதற்குரிய உருவம் பெற்றுவிட்டன. இலக்கியத் திறனாய்வுக் கலைஞர்களும் உளநூல் வல்லுநர்களும் இதனை எளிதில் உணர்வர். இதிலிருந்து நாம் உணர வேண்டியதாவது:

அறிஞர்கள் பலர் கூடும் சங்கங்களும் கல்விக் கூடங்களுமே கழகம் என்னும் பெயரை முன்னர்ப் பெற்றிருந்தன. பின்னரே மற்போர்ப் பயிற்சிக் களமும் படைக் கலப் பயிற்சிக்களமும், சூதாடுகளமும் கழகம் என்னும் பெயர் பெற்றிருக்க வேண்டும். இதற்கு மாறாக, சூதாடும் இடந்தான் முன்னர்க் கழகம் என அழைக்கப்பட்டது; அந்தப் பெயரே பின்னர் அறிவியல் மன்றங்கட்கும் கடன் வாங்கப்பட்டது - என்று யாரும் சொல்ல முடியாது, ஏனெனில், அன்று தொட்டே அறிஞர்கள் சூதாட்டத்தை இழித்துப் பேசி வருகின்றனர். எனவே அந்த இழிசெயல் நடக்கும் இடத்திற்குக் கழகம் என்னும் பெயர் முதலில் இருந்திருக்குமானால் அந்த இழிந்த பெயரையா அறிஞர்கள் கூடும் ஆராய்ச்சி மன்றங்களுக்குப்பின்னர் பெயராகச் குட்டியிருக்க முடியும் ஒருகாலும் முடியாது. ஆகவே, அறிவுமன்றங்களும். கல்விக் கூடங்களுமே கழகம் என்னும் பெயர்க்கு உரியனவாம். இக்காலத்தில் உடற் பயிற்சியும் படைப்பயிற்சியும் கல்வித்திட்டத்தில் சேர்ந்திருப்பதைப் போல, அக்காலத்திலும் மற்போர்ப் பயிற்சியும் படைக்கலப் பயிற்சியும் இன்றியமையாதனவாய்க் கருதப்பட்டதால், அவை நடைபெற்ற இடங்களும் கழகம் என அழைக்கப்பட்டதில் வியப்பில்லை. ஆனால் சூதாடுகளத்திற்கு இந்தப் பெயர் வந்த வரலாறுயாதாக இருக்கலாம்? இதற்கும் பதில் இதோ கிடைத்துவிட்டது:

நிலை தடுமாற்றம்:

அறிவியல் கலை மன்றங்களில் ஒய்வு நேரங்களில் பொழுது போக்கிற்காகச் சூதாட்டம் நடந்திருக்கலாம். முதலில் பந்தயம் இன்றி ஆடியிருக்கலாம். பின்னர்ப் பணம் வைத்துப் பந்தயம் கட்டி ஆடியிருப்பர். இப்படியாகச் சில இடங்களில் நாளடைவில் அறிவியல் ஈடுபாட்டினைக் காட்டி அலும் சூதாட்டமே முதல் இடம் பெற்றுவிட்டிருக்கலாம். போகப் போகச் சில அறிவியல் மன்றங்கள் கலைந்து போக அல்லது கலைக்கப்பட, அந்த இடங்கள் முழுக்க முழுக்கச் சூதாடுங்களங்களாகவே மாறிவிட்டிருக்கலாம் (இன்றைய உலகிலும் இத்தகைய நிலையைச் சில இடங்களில் காணக் கூடும்). ஆனால் நிலைமை மாறியும், கழகம் என்னும் அந்தப் பழைய பெயர் மட்டும் அப்படியே ஆணி அடித்துக் கொண்டு-வேர் பாய்ந்து நிலைத்துவிட்டிருக்கலாம். அதனால்தான் திருவள்ளுவரின் திருக்குறளிலும் சூதாடும் இடம் கழகம் எனச் சுட்டப்பட்டுள்ளது. இந்தத் திருக்குறள் ஆட்சியைக் கொண்டு, கழகம் என்னும் சொல், சூதாடும் இடத்தை மட்டுந்தான் பண்டைக் காலத்தில் குறித்து வந்தது என்று முற்றுப்புள்ளி வைத்துவிடக்கூடாது. திருக் குறள் காலத்திற்கு முன்பு, இன்று போலவே கலைக்கூடங்களையே கழகம் என்னும் பெயர் குறித்திருக்கவேண்டும். பின்னர் நிலைமை மாறிவிட்டிருக்கிறது.

மற்றும், ஒர் இலக்கியக் கழகத்தைப் பற்றிப் பேசும் போது, கழகம்-கழகம் என்றால் அஃது அந்த இலக்கியக் கழகத்தைக் குறிக்கும்; ஒர் அரசியல் கட்சிக் கழகத்தைப் பற்றிப் பேசும் போது, கழகம்-கழகம் என்றால், அஃது அந்த அரசியல் கட்சியைக் குறிக்கும்; இஃது இக்கால உலகியல். இது போலவே, திருவள்ளுவர் திருக்குறளில் ‘சூது’ என்பதைப் பற்றிப் பேசும் போது, கழகம்-கழகம் என்றால், அது சூதாடும் இடத்தைக் குறிப்பதில் வியப்பென்ன இருக்கமுடியும்?

திருக்குறளில் கழகம் என்னும் சொல் ‘சூதாடு களம்’ என்னும் பொருளில் ஆளப்பட்டிருப்பதைக் கண்ட புலவர்கள், தம் நூல்களிலும் அவ்வாறே ஆளத் தொடங்கினர். ஆனால், நாளடைவில், சூதாடும் கழகங்கள் திருவள்ளுவர் போன்ற அறிஞர் பெருமக்களால் இழித்துக் கண்டிக்கப்பட்டமையாலும், அதனால் சூது பெரும்பாலான பொது மக்களால் புறக்கணிக்கப் பட்டமையாலும், சூதாடும் இடங்களைக் கழகம் என அழைக்கும் சொல்லாட்சி இன்று அறவே மறைந்து விட்டது. அறிஞர்கள் கூடும் சங்கங்களும் கல்வி பரப்பும் நிலையங்களும் திருக்குறள் காலத்திற்கு முன் போலவே இன்று கழகம் என அழைக்கப்படுகின்றன. இது தான் 'கழகம்’ என்னும் பெயரின் வரலாறாக இருக்கக்கூடும். இவ்வளவு அரிய கருத்துக் களையும் அறிவதற்குத் துணைபுரியும் திவாகரப் பாடலுக்கு நாம் மிகவும் நன்றி செலுத்த வேண்டும்.

மற்றும், இந்தக் காலத்தில் 'கிளப்' (CLUB) என்னும் ஆங்கிலச் சொல் பல்வேறு வகை இடங்களையும் சுட்டி நிற்பதைப் போல, அந்தக் காலத்தில் கழகம் என்னும் சொல் பல இடங்களையும் சுட்டி நின்றது என்பதையும் ஈண்டு சுட்டாமல் விடமுடியவில்லை.

கலைக்கழகம்

இந்த அடிப்படையுடன் கம்பராமாயணத்திற்கு வரு வோமே யானால், கம்பன் கழகம் அதாவது கம்பன் கண்ட கழகம், ஒருவகை விளையாட்டரங்கம் (SPORTS CLUB) போலவும் தெரிகிறது; அதுமட்டுமா படைக்கலப் பயிற்சிபெறும் ஒருசார் மறக்கலைக்கூடமாகவும் (இராணுவக் கல்லூரியாகவும்) தோன்றுகிறது. அம்மட்டுமா? பல்வேறு கல்விக் கலைகளை ஆராய்ந்து கற்கும் கல்விக் கூடமாக (University) எண்ணவும் இடம் அளிக்கிறது.

கம்பன் கண்ட கழகத்தில் கலை தெரிபவர்கள், மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகன் போன்றவர்களாம். அங்ஙனமெனில், அவர்கள் இளைஞர்கள்-அழகு மிக்கவர்கள்-ஆற்றல் உடையவர்கள்-அன்பு மணம் கமழ்பவர்கள் அல்லவா? அவர்தம் பயிற்சி சிறந்ததாகவே இருக்கும்-அவர்கள் பயிலும் இடம் உயர்ந்ததாகவே இருக்கும். அந்தக் கழகம், தெய்வ முருகனது திருக்கோயில் போன்று போற்றுதலுக்கு உரிய உயரிடமாகும்.

இலை மறை காய்

இங்கே, கலைக்கழகம் உடையதாகக் கம்பர் கூறும் கோசல நாட்டிற்குள் இலைமறை காயாகத் தமிழ் நாடு மறைந்திருக்கிறது என்பது நினைவுகூரத்தக்கது. கம்பன் தான் கண்ட தமிழ் நாட்டையே கோசல நாடாக மாற்றிக்காட்டியுள்ளான் என்னும் பேருண்மையைக் கம்ப ராமாயணத்தை ஆழ்ந்து கற்றவர் அறிவர். மற்றும் வைணவ இராம காதையில் சைவ முருகன் இடம் பெற் றிருப்பது சமயச் சார்பற்ற - சமய வெறியற்ற கம்பனது உயரிய பண்பை உலகறிய உணர்த்துவதும் எண்ணத்தக்கது.

கோசல நாட்டை அறிமுகப்படுத்தும் வாயிலாகத் தம் காலத்துத் தமிழகத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ள கம்பன் கழகம் பற்றிய பாடல் தரும் படிப்பினையாவது: இந்தக் காலத்து இளந்தலைமுறையினர் திரைப்படக் கொட்டகைகளைச் சுற்றிக்கொண் டிருப்பதில் பெரும் பொழுதை-பெறுதற் கரிய நற்பொழுதைக் கொன்னே கழித்துவிடக் கூடாது; முன்னியது முடிக்கும் முருகனே போலமுயற்சி உடையவராய்-என்றும் இளைஞராய்-எழில் மிக்கவராய்-ஏற்றம் பெற்றவராய்த் திகழ வேண்டும்; உயரிய கழகங்கள் கண்டு உயர்ந்தோருடன் பழக வேண்டும்; உடலோம்ப உடற்பயிற்சி செய்ய வேண்டும்; நாடு காக்கப் படைப்பயிற்சியும் பெறவேண்டும்; பயனுள்ள பல்வேறு கலைக்கல்விகளையும் ஆராய்ந்து கற்று ஆக்கப் பணிகள் புரிய வேண்டும்; சமய வெறியின்றிச் சான்றாண்மையுடன் வாழவேண்டும் - என்னும் படிப்பினையாகும்.

ஆம்!. இத்தகைய அறிவுரையை அளிப்பதுதான் கம்பன் கழகம்-கம்பன் கண்ட கலைக்கழகம். எனவே. கம்பன் கழகம் இனியது-இன்றியமையாதது. கம்பன் கழகம் வாழ்க!