கருத்துக் கண்காட்சி/மணிமேகலையில் ஒரு மாலைக் காட்சி

இயற்கைக் காட்சிப் பகுதி

1. மணிமேகலையில் ஒரு மாலைக்
காட்சி

"மாலை நேரம்- மஞ்சள் வெயில் சாயும் வேளை . ‘காதலர் பூங்கா' வில் காதலனும் காதலியும் களிப்புடன் அளவளாவத் தொடங்கினர். அந்த நேரம் பார்த்து, ‘சிவபூசனையில் கரடி விட்டாற் போல்', மழை 'பிசுபிசு’ என்று பெய்யத் தொடங்கியது’-இப்படிப் போல எத்தனையோ மாலைக் காட்சிகளைக் கதைகளில் படித்திருக்கலாம். இதோ ஒரு புதிய காட்சி:

காவியக் காட்சி

ஒர் அன்னச் சேவலும் அதன் பெடையும் ஒரு தாமரைப் பொய்கையில் வாழ்ந்து வந்தன. இரண்டும் இணை பிரியாது ஆடியும் ஒடியும் நீந்தியும் பறந்தும் களிப்பது வழக்கம். ஒருநாள் பொழுது சாயும் வேளை-பெடையானது, விரிந்திருந்த ஒரு பெரிய தாமரை மலரில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது மாலை நேர மாதலின், தாமரை மலர் தன்மேல் விளையாடித் கொண்டிருந்த அன்னப் பெடையையும் சேர்த்து முடிக் கொண்டது. மாலையில் தாமரை மலர் கூம்பிக் குவிவது இயற்கைதானே!

பெடைக்கோ ஒன்றும் ஒடவில்லை. எங்கிருக்கிறோம்எப்படி இந்த இருட்டறையில் அகப்பட்டுக் கொண்டோம்  சேவல் எங்கே இருக்கிறது-அதை எப்படி எப்போது அடைவது-என்றெல்லாம் பல எண்ணியது; செய்வதறியாது திகைத்துத் திக்குமுக் காடியது.

அந்நேரம் எங்கேயோ கவனமாயிருந்த சேவலன்னம் திடீரெனத் திரும்பிப்பார்த்தது.பெடையைக் காணவில்லை; எங்கே சென்றதோ-அதற்கு என்ன நேர்ந்ததோ என்று ஏங்கிக் கவன்றது. எப்படியாவது உயிர்க் காதலியைத் தேடிக் கண்டுபிடித் தாகவேண்டுமே! என்ன செய்வது! குறிப்பாகப் பெடை விளையாடிக் கொண்டிருந்த தாமரை மலர்ப் பக்கம் கண்பார்வையை ஆராயவிட்டது. குவிந்திருந்த அந்த மலர் இயற்கைக்கு மாறாகப் பெரிதாயிருந்தமையாலும், ஆடி யசைந்து அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்ததாலும், உள்ளிருந்து எழுந்த ஒலிக்குறிப்பாலும், அம் மலராகிய சிறைக்குள்ளேதான் தன் பெட்டை அடைக்கப்பட் டிருக்கிறது என்று துணிந்து மலர்களின் இதழ்களைக் கிழித்துப் பெடையை விடுதலை செய்தது; உடனே அதனை அழைத்துக் கொண்டு அருகி லிருந்த ஓர் உயர்ந்த தென்னை மரத்தின் மடலில் ஏறிக்கொண்டு மகிழ்ச்சி யடைந்தது. இந்த அன்னப் பறவைகளின் அன்பு வாழ்க்கை எத்துணை இனியது பாருங்கள்! இந்த இன்ப அன்புக் காட்சியினை, மணிமேகலை என்னும் காவியத்தில் உள்ள

     "அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
     தன்னுறு பெடையைத் தாமரை அடக்கப்
     பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு
     ஓங்கிருந் தெங்கின் உயர்மடல் ஏற"-

என்னும் பாடல் பகுதியில் (மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை, 123-126) காணலாம். இந்நிகழ்ச்சியை எடுத்துக்காட்டியதில் காவியப் புலவர் சாத்தனாரின் கற்பனையும் கலந்திருந்தாலும், நாம் நயந்து மகிழத்தக்க நயங்களும் இப்பகுதியில் மிகவும் உண்டு. மனைவியைப் பேணிக் காக்கவேண்டும் என்பதில் ஆண் அன்னத்திற்கு இருக்கும் அக்கறையும் ஆர்வமும் விரைவும் நமக்குப் புலப்படுமே!

அயர்ந்து விளையாடிய:

இப்பாடல் பகுதியி லுள்ள அயர்ந்து விளையாடிய’ என்னும் தொடரை நோக்குக. அயர்ந்து என்றால். மெய்ம் மறந்து-தன்னை மறந்து என்று பொருளன்றோ? தன்னை மறந்த அயர்ச்சியால் பெடை தாமரை மலர்க்குள் அகப்பட்டுக் கொண்டது-பெடை அயர்ந்திருந்த நேரம் பார்த்துத் தாமரை அதை அடக்கிக்கொண்டது- என்னும் கருத்து நயம் 'அயர்ந்து’ என்னும் சொல்லாட்சியிலிருந்து கிடைக்கின்றது. அசர்ந்திருந்த நேரம் பார்த்து அடித்துக் கொண்டு போய் விட்டான்’ என்னும் உலக வழக்கு ஈண்டு ஒப்பு நோக்கற் பாலது. மற்றும், விளையாட்டுத் தனமாய் இருந்தால் 'வினை' நேர்ந்து போகும் என்னும் கருத்தை ‘விளையாடிய’ என்னும் சொல் அறிவித்துக்கொண்டிருப்பது சுவைத்தற்கு இன்பமா யுள்ளது.

தன்னுறு பெடை:

அடுத்து, ‘தன்னுறு பெடை’ என்னும் தொடரை நோக்குவாம்: ‘தனக்கு உற்ற மனைவி’ என்பது அதற்குப் பொருளன்றோ? உற்ற மனைவி என்பதில், மனையாளுக்கு இருக்க வேண்டிய பேரிலக்கணங்கள் அத்தனையும் அடங்கிவிட வில்லையா? மக்களுக்குள் ஒருவர்க்கு உற்றவர் ஒருவரே-பலரல்லர் என்னும் கற்புடைமை போல அன்னங்களுக்குக் குள்ளும், ஒன்றுக்கு உற்றது ஒன்றேதனக்குத் தனக்குஉரிய ஆணையோ அல்லது பெண்ணையோ  தவிர, வேறொன்றை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்னும் ஒழுங்கு நெறிக் கட்டுப்பாடு உண்டு என்பதை இந்தத் தன்னுறு பெடை’ என்னும் தொடர் அறிவிக்கின்றது,

அடக்க:

தொடர்ந்து, 'தாமரை அடக்க' என்பதிலுள்ள அடக்க என்னும் சொல்லைக் காண்க. ‘ஒருவனுக்கு உரியதை இன்னொருவன் அகப்படுத்தி அடக்கிக் கொண்டான்’ என்னும் உலக வழக்குப் பேச்சு ஈண்டு நினைவுக்கு வருகின்றது.சேவலுக்கு உரிய பெடையைத் தாமரை தனக்கு உரியதாக அடக்கிக் கொண்டது என்பது போன்ற குறிப்பு ஈண்டு நயமாயுள்ளது.

சிதையக் கிழித்து:

உடனே சேவல் என்ன செய்தது? இங்கே, 'பூம் பொதி சிதையக் கிழித்து’ என்னும் தொடர் பொருள் பொதிந்தது. ஒருவன் மனைவியை இன்னொருவன் அகப்படுத்திக் கொண்டு ஒரு கூரைக்குள்ளே-ஒரு கூடாரத்திற்குள்ளே பூட்டி அடைத்துவிடின், கணவன், பூட்டைத் திறப்பது எப்படி யென்று பொறுமையாகக் காத்துக் கொண்டா இருப்பான்? கூரையை-கூடாரத்தைக் கண்டபடி விரைந்து பிய்த்து இழுத்து எறிந்துவிட்டு மனைவியை மீட்கவே முயல்வா னன்றோ? அவ்வாறே, அன்னச் சேவலும், குவிந்து மூடிய தாமரை மலரின் ஒவ்வோர் இதழையும் பொறுமையாகத் திறந்துவிட்டுக்கொண் டிராமல், அம் மலர் கண்டபடி சிதைந்து அழியும் படியாக விரைந்து கிழித்துப் பிய்த்தெறிந்து விட்டுப் பெடையை மீட்டதுஎன்னும் பொருள் பொதிந்த அந்தத்தொடர் மிகவும் நயத்தற் குரியது. பெடை கொண்டு :

அடுத்து, 'பெடை கொண்டு' என்னும் தொடரை நோக்க வேண்டும், ஏதோ மூட்டை முடிச்சையோ -அல்லது சிறு குழந்தையையோ எடுத்துக் கொண்டு -தூக்கிக் கொண்டு செல்வதைப் போல, சேவலன்னம் பெடையன்னத்தைக் கொண்டு சென்றது என்னும் குறிப்புப் பொருள் இத்தொடரில் புலப்படுகின்றதன்றோ? உண்மையில் அப்படியா நடந்திருக்க முடியும்? பெண் அன்னமும் பறந்துதான் சென்றிருக்கும். ஆயினும், நெடுநேரம்வரை இதழ்களுக்குள் அடைபட்டுக்கிடந்து பெடை நொந்துபோயிற்று என்னும் பரிவால்-பற்றுணர் வால் அதனை ஏந்தி எடுத்துக்கொண்டு செல்வதுபோல் சேவலன்னம் நெருங்கித் தாங்கினாற்போல் சென்றுள்ளது என்னும் நயத்தைப் 'பெடைகொண்டு’ என்னும் தொடர்நல்குகின்றது.

உயிர்களின் இயற்கை:

அடுத்தபடியாக, 'ஒங்கிருந் தெங்கின் உயர் மடல் ஏற’ என்னும் நயஞ் செறிந்த தொடரை நன்கு நோக்க வேண்டும். தண்ணிரிலே-தாமரையிலே பொழுது போக்கிக் கொண்டிருந்த அன்னங்கள் தாமரை மலரால் ஏற்பட விருந்த உயிரிழப்பினின்றும் தப்பிப் பிழைத்தபிறகு யாது செய்தன? நாம் என்ன செய்வோம்? அஞ்சத்தக்க இடர்ப் பாடான இடத்தில் சிக்கித் தவித்து உயிருக்குப் போராடிய எந்த உயிரினமும் அவ்விடத்தை விட்டு நெடுந் தொலைவிற்கு அப்பால் அகல முயல்வது இயற்கைதானே! அவ்வாறே இந்த அன்னங்களும், தங்களைத் தவிக்கச் செய்த தாமரையை விட்டு-அந்தத் தாமரை இருக்கும் தண்ணிரில் நீந்தியும் மிதந்தும் வாழ்வதையும் விட்டு, அத் தண்ணிரின் அருகிலுள்ள தரையையும் விட்டு, அத்தரைமட்டத்தில் தாழ்ந்து குறுகியுள்ள சிறுவகை மரஞ் செடி கொடிகளையும் விட்டு, ஓங்கி வளர்ந்துள்ள பெரிய தென்னை மரத்தின் உயரமான மடலில் ஏறிக்கொண்ட னவாம். உண்மை தானே! இப்பகுதி சுவைப்பதற்கு.மிகவும் இனியது. சுவைப்பாம்:

ஓங்கு இருந் தெங்கு:

தாமரை மலரின் தகாத செயலால் தவித்துப் போன அந்த அன்னங்கள், தாமரைத் தடாகத்தை விட்டு உயரமான ஓரிடத்தில் ஏறிக்கொண்டன. ஈண்டு காவியப் புலவர் சாத்தனார், அன்னங்கள் ஏறிக்கொண்ட மரத்தின் உயரத்தை மிகுதிப் படுத்திக் கூறல் என்னும் அளவு கருவியின் வாயிலாக, பறவைகள் தாமரைத் தடாகத்தின் மேல் கொண்டிருந்த அச்சத்தின் மிகுதியை நமக்கு அளந்து காட்டியுள்ளார். தெங்கு (தென்னை) என்று சொன்னாலே போதும்-அது மிகவும் உயரமான பொருள் என்பது எல்லாருக்கும் தெரியும். உலக வழக்கில் கூட, மிகவும் உயரமாயிருப்பவனைப் பார்த்து, 'தென்னைமரம்போல் வளர்ந்து விட்டான்’ என்று சொல்கின்றனரல்லவா? சாத்தனாரே, (ஒங்கு தெங்கு-இரும் தெங்கு) ஒங்கு இரும் தெங்கு என இரண்டு அடைமொழிகளின் வாயிலாக அம்மரத்தின் உயரத்தை மேலும் மிகுதிப் படுத்திக் காட்டுகிறார். அதாவது, இயற்கையிலேயே உயரமாயிருக்கிற தென்னை மரங்களுக்குள்ளேயே அந்த மரம் ஓங்கிய மரமாம்- இரும் (பெரிய) மரமாம். 'இரும்’ என்றால் 'பெரிய' என்று பொருளாம். இங்கே பெரியது என்பதும் உயரத்தைக் கொண்டுதானே! எனவே, மிகவும் உயர்ந்த மரம் என்பதுபோதரும். உயர் மடல் ஏற:

அப்படியே என்றாலும், தெங்கில் ஏறிக் கொண்டன என்று கூறுவதோடு புலவர் விட்டாரா? இல்லை யில்லை! தெங்கின் உயர் மடல் ஏறியதாகக் கூறியுள்ளார். தென்னை மரத்தில் அன்னங்கள் ஏறிக் கொண்டன என்றால், அதன் மடலில் (மட்டையில்) ஏறிக் கொள்வதைத்தான் குறிக்கும். தென்னையின் மட்டைகளுக்குள் மிகவும் நாள்பட்ட மட்டைகள் பழுத்துக் கீழ் நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும். எனவே, தொங்கும் மட்டையில் அன்னங்கள் அமர முடியாது. நடுத்தரமான மட்டைகளோ பக்கவாட்டத்தில் நீட்டிக்கொண்டிருக்கும். அத்தகு மட்டைகளிலும் அன்னங்கள் அமர விரும்பவில்லை. ஆனால், புதிய பச்சிளங் குருத்து மட்டைகளோ, மேல் புறமாக விண்ணை நோக்கி நெட்ட நெடுந் தோற்றத்திலே நீண்டு நிமிர்ந் திருக்கும். தென்னை மரத்தின் பகுதிகளுக்குள் இப்பகுதி தான் மிகவும் உயரத்தில் உள்ளதாகும். இந்த மிக மிக உயரமான பகுதியில்தான் அன்னங்கள் தங்கின என்று குறிக்கவே, தெங்கின் 'உயர்மடல்’ என்றார் ஆசிரியர். அஃ.தன்றி, ஒங்கிருந் தெங்கின் உயர் மடல் ‘அமர' என்று பாடா மல், உயர் மடல் 'ஏற’ என்று பாடியிருப்பதிலுள்ள நயத்தையும் நாம் சுவைக்கவேண்டும். ‘அமர' என்று சொல்லி விட்டால், உயரத்தின் எல்லையை வரையறுத்து முடித்த தாய்விடும். ஆனால் 'ஏற’ என்று சொல்லியிருப்பதின் வாயிலாக, அன்னங்கள் இன்னும் உயரத்தில் ஏறு முகத்திலேயே இருக்கின்றன-அதற்குமேல் இன்னும் உயரமான பொருள் ஏதேனும் இருக்குமானாலும் ஏறிப்போகும்-என உயரத்தின் ஏற்றத்திற்குக் கூர் சீவி விட்டிருக்கிறார் மாபெரும் புலவர் சாத்தனார். எத்தனை சொல் நயம்! எத்துணை பொருள் செறிவு!