கலிங்கம் கண்ட காவலர்/குலோத்துங்கன் குலமரபு
1. குலோத்துங்கன் குல மரபு
வேங்கடம் முதல் குமரிவரை பரவிய பெரு நிலப் பரப்பைக் கொண்டது பைந்தமிழ் நாடு. வேங்கடம், பொதியம், பறம்பு, கொல்லி என்ற வளங்கொழிக்கும் மலைகளைத் தன்னகத்தே கொண்ட மாண்பும் அதற்கு உண்டு. வான் பொய்ப்பினும் தான் பொய்யாது வந்து பாயும் காவிரி, வையை, பொருநை போலும் பேராறுகளின் பாய்ச்சலைப் பெறும்பேறும் அதற்கு வாய்த்திருந்தது. வேலி ஆயிரம் விளையும் நிலம், ஒரு களிறு படியும் இடம் ஏழு களிறுகளைப் புரக்கவல்ல வளம் தரும் நிலம் என வாயார வாழ்த்தப்பெறும் வளம் மிக்க நிலங்கள் அந்நாட்டு நிலங்கள். மலைபடு பொருள்களாம் அகிலையும், ஆரத்தையும், மிளகையும், கடல்படு பொருளாம் முத்தையும், கைத்தொழில் திறம் காட்டும் நுண்ணிய ஆடை அணிகளையும் கடல் கடந்த நாடுகளுக்குக் கலம் ஏற்றி அனுப்பிக் கடல் வாணிகம் வளர்த்துக் குவித்த செல்வத்தால் செம்மாந்திருக்கும் சிறப்பும் அச் செந்தமிழ் நாட்டிற்கு இருந்தது. அரணும் அகழியும் அரிய காவற் காடும் சூழ்ந்து கிடக்க, அகநகர் புறநகர் என்ற அமைப்பு முறையில் குறைபடாது. கோடை வெயிலுக்கோ, உதிர்க் குளிருக்கோ கலங்காது வாழ்தற்கு வாய்ப்பளிக்கும் வகை வகையான நிலைகளைக் கொண்ட மாடங்கள், வரிசை வரிசையாக விளங்க, வேந்தர்க்கும் வேதியர்க்கும், வணிகர்க்கும், வேளாளர்க்கும் தனித் தனியே அமைந்த அழகிய அகன்று நீண்ட பெருந் தெருக்களைக் கொண்ட மாநகர்களாம் மதுரை, புகார், உறையூர், வஞ்சி, காஞ்சி, தஞ்சை போலும் பேரூர்கள் பல அந்நாடெங்கும் அமைந்து அழகு தந்திருந்தன.
அம்மட்டோ! மேற்கே சிறந்து விளங்கிய கிரேக்க உரோமப் பேரரசுகளோடும், கிழக்கே சிறந்து விளங்கிய சீனப் பேரரசோடும் வாணிகத் தொடர்பும், அரசியல் தொடர்பும் கொண்டு, அந்நாட்டு அரசவைகளுக்குத் தன்னாட்டுத் தூதுவர்களை அனுப்பி அரசியல் வளம் கண்டது அவ்வண்டமிழ் நாடு, புலவர் பேரவை அமைத்து, நாடெங்கும் உள்ள புலவர்களை ஒன்று கூட்டி, ஒரிடத்தே இருக்கப்பண்ணி, உயர்ந்த இலக்கிய இலக் கணப் பெரு நூல்கள் உருவாக வழிகண்டு, தன் மொழிக்கு உயர்தனிச் செம்மொழி எனும் உயர்வை அளித்த பெருமையும் அந்நாடு ஒன்றற்கே உண்டு. அக வாழ்வும் புறவாழ்வும் ஒருங்கே சிறத்தல் வேண்டும். அதுவே ஒரு நாட்டின் நல்லாட்சிக்கு அறிகுறியாம். அகத்தில் காதலும், புறத்தில் வீரமும் வளர வேண்டும். அவை இரண்டும் ஒன்றற்கொன்று உற்ற துணையாய் நிற்றல் வேண்டும் என நினைந்து, அவ்விரு வாழ்வையும் வளர்க்கும் அகப்புற இலக்கியங்களை ஆக்கி அளித்த நாடு, உலக நாடுகளுள் தமிழ்நாடு ஒன்றே.
இவ்வாறு எல்லாவகையாலும் ஈடு இணை இன்றி, இறப்ப உயர்ந்து விளங்கிய தமிழ் நாட்டைத் தொல்லுாழிக் காலம் முதற்கொண்டே சேரர், சோழர், பாண்டியர் என்ற மூவேந்தர் குலத்தவர் ஆண்டு வந்தனர். அதியர், ஆவியர், ஓவியர், மலையர், வேளிர் போலும் வேறு இனத்தைச் சேர்ந்த சிற்றரசர் சிலரும், தமிழகத் தின் சிற்சில இடங்களைச் சிற்சில காலங்களில் ஆண்டு வந்தனர் என்றாலும், அவர்கள் அனைவரும் முற்கூறிய அம்மூவேந்தர்க்கு ஒருவகையால் அடங்கியே ஆண்டு வந்தமையால், தமிழகத்தின் வேந்தர் என வாழ்த்தி வழங்கப் பெற்றவர் அம்மூவேந்தர் மட்டுமே ஆவர்.
தமிழகத்தை ஆளும் உரிமை, இம்மூவேந்தர்க்கு வந்துற்றகாலம் ஏது? அதற்குமுன் அந்நாடு எவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பதை இப்போது அறிந்து கொள்வது இயலாது. வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்ததே. அந்நாடாண்டிருந்தவர் இம் மூவேந்தர்களே. இவர்கள் ஆட்சிக்காலம், இவ்வாறு அளந்து காண மாட்டா. அத்துணைப் பழமை யுடையதாய் விளங்குவதால் அன்றோ, இவர்களைப் பற்றிப் பேசவந்த பேராசிரியர் இருவரும், “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தகுடி", என்றும், “படைப்புக்காலம் தொட்டு மேம்பட்டு வரும் தொல்குடி” என்றும் கூறி, அவர் தம் பழமையைப் பாராட்டிச் சென்றனர். தமிழ் மொழியின் தலையாய இலக்கண முதல் நூலை இயற்றிய ஆசிரியப் பெருந்தகையாகிய தொல்காப்பியனார் காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயே, தமிழ் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை இம்மூவேந்தர் ஏற்றிருந்தனர் என்பதும், அக்காலத்திலேயே அவர்கள் தத்தமக்கெனத் தனித் தனிக் கொடியும் மாலையும் கொண்ட பேரரசப் பெருவாழ்வில் பெருக வாழ்ந்திருந்தனர் என்பதும், ஆசிரியர் தொல் காப்பியனார், இத்தமிழகத்தைக் குறிப்பிடுங்கால் “வண் புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” என்றும், மூவேந்தரைக் குறிப்பிடுங்கால், “போந்தை வேம்பே, ஆர் எனவரும்.உம் மாபெருந்தானையர்” என்றும் குறிப்பிடுதலால் பெறப்படும்.
மூவேந்தர்கள், இராமாயண பாரத காலங்களுக்கு முன்பிருந்தே நனிமிகச் சிறந்த நாகரிக வாழ்வினராய் வாழ்ந்து வந்துள்ளனர். சீதையைத் தேடித், மதன் திசைச் செல்லும் அநுமனுக்குத் தென்திசை நாடுகளின் வரலாற்றினை உணர்த்தும் வானரத் தலைவன் வாயில் வைத்து, கடல் கொண்ட பாண்டி நாட்டின் தலைநகராம் கபாடபுரத்தையும், முத்துக்கள் இழைத்துப் பண்ணிய பொற்கதவுகள் பூட்டிய மாடமாளிகைகளைக் கொண்ட அந்நகரமைப்பின் அழகையும், வால்மீகியார் வாயார வாழ்த்தியுள்ளார். பாரதப் பெரும் போரில் இரு திறத்துப் படை வீரர்க்கும், அப்போர் முடியுங்காரும் சோறு அளித்துக் காத்தான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என்ற சேரர் குலத்தான் எனச் செப்புகின்றன. சங்கத் தமிழ்ச் செய்யுள்கள். கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் மகதநாட்டில் தோன்றி, வட நாடு முழுவதிலும் தன் ஆணைசெல. ஆண்ட அரசர்குல அடலேறாகிய அசோகனால் “என் ஆணைக்கு அடங்காது தனியரசு செலுத்தும் பேரரசர் இத்தமிழரசர்” எனப் பாராட்டப் பெற்றுள்ளனர் இம்மூவேந்தர் என்பது, அவ்வசோகன் கல்வெட்டுக்களினாலேயே நன்கு புலனாகிறது. மேலும் தமிழகத்தில், தமிழ் அரசை அழித்துத் தம் அரசை நிலை நாட்டும் நினைப்பினராய் நெடிய தேர்ப்படையோடு தமிழ் நாட்டுள் நுழைந்த மௌரியப் பெரும் படையைத், தமிழகத்து வீரர்கள் முறியடித்த வீரத்தைப் பழந்தமிழ்ப் பாக்கள் பாராட்டிப் பரணி பாடுகின்றன. அம்மட்டோ! கி. பி. முதல் நூற்றாண்டில் நம்நாடு மேலை நாடுகளோடு கொண்டிருந்த வாணிக உறவின் விளைவால், நம் நாட்டிற்கு வந்து சென்ற தாலமி, பிளைனி போன்ற நில நூல் பேராசிரியர்களாலும், அவர் போலும் ஆசிரியர்கள் ஆக்கிய பெரிப்புளுஸ் போன்ற நூல்களாலும் தமிழ் அரசர்கள் மிக மிக உயர்ந்தோராகப் பாராட்டப் பெற்றுள்ளனர்.
சேர, சோழ, பாண்டியர் என்ற அத்தமிழ் அரசர் மூவரும் ஒரு தாய் வயிற்றில் தோன்றிய மூவரின் வழி வந்தவர் என்றும், பண்டு, அவர்கள் நாகரிகத்தின் பிறப்பிடம் எனக் கருதப்படும் பொருநை ஆற்றங்கரையில் வாழ்ந்திருந்தனர் என்றும், பிற்காலத்தில் யாதோ ஒரு காரணத்தால் அவர்களிடையே ஒற்றுமை குலைந்து வேற்றுமை தலை தூக்க, மூத்தோன் வழி வந்தவர் மேற்கு மலைத் தொடர்ச்சியைக் கடந்துபோய் மேலைக்கடற் கரையை வாழிடமாகக் கொண்டனர் என்றும், நடுப்பிறந்தோனாகிய சோழன் வழி வந்தவர் வடக்கு நோக்கிச் சென்று, கீழ்க்கடற்கரைக் கண்ணதாகிய காவிரி நாட்டைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும், இளையோனாகிய பாண்டியன் வழி வந்தவர் மட்டும், தாங்கள் தொன்று தொட்டு வாழ்ந்துவந்த வாழிடமாகிய பொருநை ஆற்றங்கரையிலேயே தங்கிவிட்டனர் என்றும் வரலாற்றாசிரியர் சிலர் கூறுகின்றனர்.
இவ்வாறு பலரும் பாராட்டப் பாராண்ட பேரரசர் மூவருள் நடுவண் நிறுத்திப் பாராட்டப்பெறும் பேற்றினைப் பெற்றவர் சோழர். சோழர்குல முதல்வர், ஆட்சி முறையின் அரிய உண்மைகளை உள்ளவாறு உணர்ந்த உயர்ந்தோராவர். மக்களின் தேவைகளுள் நனி மிகச் சிறந்தது உணவு. உடையிலும், உறையுளிலும் குறை நேரினும் அவர்கள் தாங்கிக்கொள்வர். ஆனால் உணவில் குறை நேரின் அதை அவர்களால் தாங்கிக்கொள்வது இயலாது. அந்நிலை உண்டாயின் அவர்கள் அமைதி இழந்து போவர். ஆத்திரம் அவர்கள் அறிவை அழித்துவிடும்; சிந்திக்கும் ஆற்றலை இழந்து நிற்கும் அந்நிலையில் அவர்கள் எதையும் செய்யத் துணிந்து விடுவர். அழிவுத் தொழில் ஒன்றைத் தவிர்த்து, வேறு எதையும் அறியாதவராகி விடுவர். அரசியலின் இப்பேருண்மையைச் சோழர் குலப்போரசர்கள் அறிந்திருந்தனராதலின் அவர்கள் தம் நாட்டு உணவுப் பெருக்கத்தைத் தலையாய கடமையாகக் கருதினார்கள். உணவுப் பெருக்கம் உண்டாக வேண்டு மேல், அதற்குக் குறையா நீர்வளம் என்றும் தேவை என்பதை நெஞ்சில் நிலை நிறுத்தினார்கள் . அதனால் பெரியவும் சிறியவுமாய நீர் நிலைகள் எண்ணற்றனவற்றை நாடெங்கும் அமைத்தனர். ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டிப், பயன் இன்றி ஓடிக் கடலில் விழும் தண்ணீரை வாய்க் கால்கள் வழியே கொண்டு சென்று அந்நீர் நிலைகளை நிரப்பினர். நீர் வளம் பெருகவே நிலம் நிறைய விளைந்தது. ‘வேலி ஆயிரம் விளைக’ என வாழ்த்தினார்கள் ஆன்றோர்கள். வயல்களும் அவ்வாறே விளைந்தன. “ஒரு களிறு படியும் சீறிடம் எழு களிறு புரக்கும் நாடு கிழவோய்” என அந்நாடாள் அரசனை அவன் நாட்டு வளம் காட்டிப் பாராட்டினார்கள் புலவர்கள். “நெல்லுடையான் நீர்தாடர்கோ” எனச் சோழரும், “மேதக்க சோழவள நாடு சோறுடைத்து”, “தஞ்சை, தென்னாட்டின் தெற் களஞ்சியம்” எனச் சோழநாடும் பாராட்டப் பெற்றன. மூவேந்தர்களுள், சோழர்கள் மட்டுமே, இவ்வாறு வளத்தில் சிறந்து விளங்கினமையால், அவர்களுக்கு “வளவர்” எனப் பெயர் சூட்டிப் பாராட்டிற்று அன்றைய உலகம்.
சோழர் பேரரசின் இப்பாராட்டுதலுக்குப் பெரிதும் காரணமாய் விளங்கியவன் கரிகாற்பெருவளத்தான். இமயம் முதல் ஈழம்வரை சென்று பரவியது போதாது, என் வெற்றிப் புகழ் இமயத்துக்கு அப்பால் உள்ள நாடுகளிலும் சென்று பரவவேண்டும் என்றும், பருவ மழை பொய்யாது பெய்தலால் உளவாகும் வளம் மட்டும் போதாது, காவிரியாற்று நீர் என் ஆணைக்கு அடங்கி, நான் அமைக்கும் அணையில் தேங்கியிருந்து பாய்வதால் பெறலாகும் பெருவளமும் உண்டாதல் வேண்டும் என்றும், உள்நாட்டு வாணிகத்தின் வளர்ச்சி மட்டும் போதாது, நான் அமைக்குப் புகார்த்துறையில் பல்வேறு நாட்டுக் கலங்களும் வந்து காத்துக் கிடக்குமளவு கடல் வாணிகத்தின் வளர்ச்சியும் வேண்டும் என்றும் விரும்பி, விரும்பிய அனைத்தையும் விரும்பியவாறே பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்தான் திருமாவளவன். ஆனால் அந்தோ! அவன் கண்ட அப்பேரரசு அவனுக்குப் பின் வீழ்ந்து விட்டது. அவனுக்குப் பின் அரியணை ஏறிய சோழர் குலத்தவர் ஆட்சியைக் கைப்பற்ற நிகழ்த்திய உள்தாட்டுப் போர்களால், சோழர் பேரரசு சிறிது சிறிதாக உரம் இழந்து கொண்டிருந்தது. இருநூறு ஆண்டுகளுக்குள் இருபதுக்கும் மேற்பட்டோர் அரியணை ஏறி இறங்கிவிட்டனர். இந்நிலையில் களப்பிரர் என்ற வடநாட்டுக் கொள்ளைக் கூட்டத்தவர் வேறு, தமிழகத்தில் நுழைந்து தமிழரசுகளை அலைக்கழிக்கத் தொடங்கினர். இயல்பாகவே உரம் இழந்திருந்த சோழ நாடு, களப்பிரரின் வெறியாட்டத்திற்கு இடனாகி இடர் உற்றது. சோழர் தாழ்நிலை உற்றனர். காவற் சிறப்பு அமைந்த உறையூரையும், கடல் வாணிக வளம் கொழிக்கும் காவிரிப்பூம் பட்டினத்தையும் கைவிட்டுப் பழையாறை நகர் புகுந்து நலிவெய்திக் கிடந்தனர் பல நூறு ஆண்டுகள் வரை.
சங்ககாலச் சோழர் பேரரசின் தொடக்கக் காலத்திற்கும், விசயாலயன் வழிவந்த பிற்காலச் சோழர் பேரரசின் தொடக்கக் காலத்திற்கும் இடையில் எழுநூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்நீண்டகாலம் முழுவதும் சோழர் தலைமறைவாகவே வாழவேண்டியவராயினர். தமிழகத்தின் அரசியல் அமைதியைக் குலைத்துக் கொடுங்கோல் புரிந்து வந்த களப்பிரர் ஆட்சி, கி. பி. ஆறாம் நூற்றாண்டு வரையும் அழிக்கலாகா ஆற்றல் பெற்று விளங்கிற்று. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர் ஆட்சியும் அழியத் தொடங்கிவிட்டது. ஆயினும், தம் ஆட்சி அழிவிற்குக் காரணமாய் இருந்த களப்பிரர் அழிந்துபோனதும், சோழர் ஆட்சி தலை தூக்கவில்லை. களப்பிரர் வென்று துரத்தப்பட்டனர் என்றாலும், அவரை வென்று துரத்திய அப்பணியை மேற்கொண்டவர் சோழர் அல்லர். அதைப் பல்லவரே முதற்கண் மேற்கொண்டனர். அவரைத் தொடர்ந்து பாண்டியரும் அதை மேற்கொண்டனர். களப்பிரரை வெற்றி கண்ட பல்லவரும் பாண்டியரும் சோணாட்டிற்கு வடக்கிலும் தெற்கிலும் அரசமைத்து வளரத் தொடங்கிவிட்டனர். ஆற்றல் மிக்க அரசன் எவனையும் பெறாமல், நானூறு ஆண்டுகளாக வலியிழந்து வாழ்விழந்து கிடக்கும் சோழரால், புதிய உரத்தோடு பேரரசு அமைத்து வளர்ந்து வரும் பல்லவ பாண்டியர்க்கிடையே வளர்ந்து வாழ்வு பெறுதல் இயலாதாயிற்று. அதனால் மேலும் சில ஆண்டுகள் அடங்கி வாழவேண்டியவராயினர். அவ்வாறே சில நாள் பல்லவ ரோடும் சில நாள் பாண்டியரோடும் உறவும் நட்பும் கொண்டு உயிரோம்பி வந்தனர்.
“காலம் கருதி இருப்பர், கலங்காது ஞாலம் கருதுபவர்” என்றார் வள்ளுவப் பெருந்தகையார். தம் ஆற்றலை நிலைநாட்டித் தனியரசு அமைக்க வேண்டும் என்ற ஆசை சோழர் குலத்தவரின் உள்ளத்தைவிட்டு அகலவில்லை. பல்லவப் பாண்டியப் பேரரசுகளின் புத்தம் புதிய பெருவாழ்வைக் காணும்போதெல்லாம், அவ்வாசை அவர்கள் உள்ளத்தில் ஓங்கி வளர்ந்து கொண்டேயிருந்தது. அதனால் அவ்வாசையை நிறைவேற்றிக் கொள்ளற்கு வாய்ப்புடைய காலத்தை எதிர் நோக்கியிருந்தனர். அதற்கேற்ப, அந்நற்காலம் அவர்களை அணுகுதற்கு ஏற்ற சூழ்நிலையும் மெல்ல உருவாகத் தலைப்பட்டது.
பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் இடையே பேரரசுப் போட்டி எழுந்துவிட்டது. அதன் பயனாய் இரு பேரரசுகளும் ஓயாது போரிடத் தொடங்கிவிட்டன. தமிழ் நாட்டின் தலை எழுத்து எந்தப் பேரரசையும் இருநூறு ஆண்டுகளுக்குமேல் வாழவிடுவதில்லை. அந்நிலை பல்லவ பாண்டிய அரசுகளுக்கும் உண்டாகிவிட்டது. அவர்களும் இருநூறு ஆடுைகள் அரசமைத்து வாழ்ந்து விட்டனர். மேலும் பேரரசுப் போட்டி காரணமாய் மேற்கொண்ட ஓயாப் போர்களால் அவ்விரு பேரரசுகளின் ஆற்றலும் அழிந்து கொண்டே வந்துவிட்டது.
நாடாளும் வேட்கை, நாள்தோறும் ஒவ்வொரு நிலையாக உரம் பெற்று உயர, அதற்கேற்ற காலத்தை எதிர் நோக்கி அடங்கியிருந்த சோழர், இவற்றையெல்லாம் ஊன்றிக் கவனித்துக் கொண்டே வந்தனர். தனியர சமைத்து வாழ வேண்டும் என்பதில் அவருக்குள்ள தளரா ஆர்வம், அதற்கு வாய்ப்புடைய காலமும் நிலையும் தாமாகவே வருக என எண்ணி வாளா இருந்துவிட அவர்களை விட்டிலது. வரும் அவ்வாய்பை விரைந்து வரச்செய்வதற்கு ஏற்றனவற்றை அவர்களும் மேற்கொண்டனர். சூழ்நிலைக்கேற்ப, சிலகாலம் பாண்டியரோடு கூடிப் பல்லவர் ஆற்றலைக் குறைத்தனர். சில காலம் பல்லவரோடு கூடிய பாண்டியரோடு போரிட்டு அவர் ஆற்றலைக் குன்ற வைத்தனர். அதனால் அவர்கள் எதிர்நோக்கியிருந்த நற்காலமும் விரைந்து வந்து சேர்ந்தது. அதைப் பயன்கொண்டு பிற்காலச் சோழர் பேரரசை நிலைநாட்டிய முதல்வன் விசயாலயன் எனும் விழுமியோனாவன்.
விசயாலயன் வழிவந்த பிற்காலச் சோழர் பேரரசிற்குக் கால்கோள் இட்ட காலம், கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும். அக்காலை, சோழர் குலத்தவர் பழையாறை நகரில் வாழ்ந்திருந்தனர் என்றால், அச்சோழர்க்கு உரிமையுடையதான தஞ்சை மாநகரில் முத்தரையர் என்பார் அரசோச்சியிருந்தனர். அவர்களும் சோழரைப் போலவே, ஒருகால் பாண்டியர்க் கும்,மற்றொருகால் பல்லவர்க்கும் படைத்துணை அளித்து வாழ்ந்து வந்தனர். கி. பி. 846-ல் விசயாலன் அம்முத்தரையரை வென்று, பண்டு தன் குல முதல்வர் இருந்து கோலோச்சிய தஞ்சையைக் கைப்பற்றிக் கொண்டான். விசயாலன் முயற்சிக்கு அக்காலை அரியணையில் அமர்ந்திருந்த பல்லவனும் துணை நின்றான். விசயாலயன் முன்னோரின் கனவு நினைவாகிவிட்டது. சோணாட்டின் ஒரு பகுதி மீண்டும் சோழர் உடமை ஆயிற்று. சோழர் பேரரசு மீண்டும் நிறுவப்பட்டது.
பிற்காலச் சோழர் பேரரசு, கி. பி. 846-ல் நிறுவப்பட்டது. எனினும், அழிக்கலாகா ஆற்றல் மிக்க அரசாக அது அந்நாளிலேயே அமைந்துவிடவில்லை; அந்நிலை அதற்குக் கி.பி. 880-லேயே வாய்த்தது. அது, அவ்வாண் டில் கும்பகோணத்திற்கு அணித்தாக உள்ள திருப்புறம்பயத்தில் வெற்றியின் விளைவாகவே வந்து சேர்ந்தது. தம் பெற்ற இரு நாடுகளுக்கு இடைப்பட்ட சோணாட்டைத் தம் ஆணைக்கீழ் வைத்து கொள்ள வேண்டும் என்பதில் பல்லவ பாண்டிய வேந்தர் இருவருமே ஆர்வம் காட்டின்ர்: அதன் பயனாய் அவ்விரு பேரரசர்களும் பெரும் படை துணை செய்யவந்து திருப்புறம்பயத்தில் போரிட்டனர்; அக்காலை விசயாலயன் முதுமை அடைந்துவிட்டானாகவே, அவன் மகன் ஆதித்தன், பல்லவர் பக்கம் நின்று போரிட்டான். போரில் பாண்டியன் தோற்றான். பல்லவன் வெற்றி கொண்டானாயினும், அவன் படைவலி, அறவே அழிந்துவிட்டது. வென்ற நாட்டில் தன் ஆட்சியை நிலைநாட்டும் ஆற்றல் அவனுக்கு இல்லாது போகவே, சோணாட்டு ஆட்சிப் பொறுப்பனைத்தையும் ஆதித்தசோழன் பால் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டான். ஆதித்தன் சோழ மண்டலம் முழுமைக்கும் மன்னனாய் முடி புனைந்து கொண்டான். குலோத்துங்கன் பிறந்த பிற்கால சோழர் பேரரசு பிறந்த வரலாறு இது.
பிற்காலச் சோழர் பேரரசு பிறந்த வரலாற்றைக் கண்டோம். வரலாற்றாசிரியர்களால், அச்சோழர் வரிசையில் வைத்து மதிக்கப் பெறும் குலோத்துங்க அச்சோழர் குடியில் பிறந்தவனல்லன். ஆயினும் அச்சோழர் குலத்தவனாகவே வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். அவர்கள் அவ்வாறு கருதுதற்குரிய காரணம், அவனுக்கு முன் அச்சோழர் அரியணையில் அமர்ந்திருந்தார் வரலாற்றை உணர்ந்தவர்க்கே புலனாகும். ஆகவே, அச்சோழர் குலத்தில் தோன்றி அவனுக்குமுன் நாடாண்டோர் வரலாற்றையும் சிறிது கண்டு செல்வோமாக. .
முதல் ஆதித்தன்: திருப்புறம்பயப் போர்க்களத்தில் மாண்ட பாண்டிய பல்லவ வீரர்களின் பிணங்களை எருவாக இட்டுச் சோழர் பேரரசு என்ற மரத்திற்கு வித்திட்ட
கー2 வன் இவ்வாதித்தன். விதை முளைத்துச் செடியாகி வளரத் தொடங்கிவிட்டது. ஆயினும் அதன் அருகே பல்லவன் என்ற மரம் இன்னமும் பட்டுப் பேகாமல் நிற்பதைக் கண்டான்; செடி வளமாக வளர வேண்டுமேல், அதைத் தடை செய்யும் நிழல் தரும் மரம் எதுவும் அதன் அருகே நிற்றல் கூடாது என்பதை உணர்ந்தான்; உடனே, அப்பல்லவன் மீதே பாய்ந்தான்; ஆண்டு முதிர்ந்து இயல்பாகவே அழிந்துபோகும் நிலையுற்றிருந்த அப்பல்லவனும், ஆதித்தனை எதிர்த்து வெல்லமாட்டாது இறந்தான். சோழ மண்டலத்திற்குத் துணையாயிற்று தொண்டை மண்டலம். ஆதித்தனின் ஆற்றலையும், அவனால் பல்லவப் பேரரசு முடிவுற்றதையும் கண்ட சேர மன்னன் தாணுரவியும், கங்க நாட்டுக் காவலன் பிருதிவிபதியும் ஆதித்தனோடு நட்புறவுபூண்டு நல்லவர்களாக வாழத் தொடங்கினர். சோழ மண்டலமும் தொண்டை மண்டலமும் அடங்கிய ஒரு பேரரசை நிலைநாட்டிய ஆதித்தன், அந்நாட்டின் செல்வவளத்தைப் பெருக்கும் கருத்துடையனாய்ப் பொன் வளம் மிக்க கொங்கு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, அந்நாட்டு அரசர் பலரையும் வென்று, அந்நாட்டில் குவிந்து கிடந்த பொன்னை வாரிக் கொண்டு வந்து சேர்த்தான். ஒரு பெரிய நாட்டையும் கண்டு, அந்நாட்டிற்கு வளத்தையும் அளித்த பின்னர், அவன் உள்ளம் தெய்வத் திருப்பணியில் சென்றது. திருப்புறம்பயப் போரில் பெற்ற வெற்றியே, சோழர் ஆட்சிக்கு அடி கோலிற்று என்பதை அறிந்தவனாதலின், ஆதித்தன், அவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு அழகிய கற்கோயில் ஒன்றைக் கட்டிச் சிறப்பித்தான்; தங்கள் சோழர்குலக் கடவுளாய் நடராசப்பெருமான் வீற்றிருக்கும் தில்லைச் சிற்றம்பலத்தின் முகட்டினைக் கொங்கு நாட்டிலிருந்து கொணர்ந்த பொன்னால் பொன்மயமாக்கினான். அம்மாட்டோ! காவிரியாற்றின் இரு கரையிலும் உள்ள எண்ணற்ற சிவன் கோயில்களெல்லாம் செங்கல்லால் கட்டப்பெற்றுள்ளமையால், கால வெள்ளத்தால் அழிந்து போகும் என அறிந்து, அவற்றுள் பலவற்றைக் கற்றளி களாக மாற்றிக் களி கூர்ந்தான். ஆதித்தனின் இச் சிவத் தொண்டினை, நம்பியாண்டார் நம்பிகள் தாம் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில் பலமுறை பாராட்டியுள் ளார். அவற்றுள் ஒன்று:
“சிங்கத் துருவளைச் செற்றவனை; சிற்றம்பல முகடு
கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன்.'
முதற் பராந்தகன் : ஆதித்தன் மகனாகிய பராந்தகன் அரியனை யேறுங்கால், வடக்கே வேங்கடம் வரை பரவிய தொண்டை மண்டலமும், கொங்கு மண்டலமும், சோழ மண்டலமும் உள்ளிட்ட ஒரு பேரரசு அவன்பால் ஒப்படைக்கப்பட்டது. தன் குல முதல்வர் தனியரசு அமைத்து வாழத் தடையாக இருந்த பல்லவ பாண்டியர் இருவரில், பல்லவர் ஆட்சி அறவே அழிந்து போக, அவர் ஆண்ட தொண்டைநாடு தன் நாட்டோடு இணைந்துவிட்டது. ஆகவே தன்னாட்டின் வடவெல்லை வலுப்பட்டு விட்டது. ஆனால் அந்நிலை தெற்கே ஏற்பட்டிலது. திருப்புறம்பயப் போரில் பாண்டியன் தோற்றுவிட்டான். என்றாலும் அவன் ஆட்சி அறவே அழிந்துவிடவில்லை. என்றேனும் ஒருநாள், அவன், தன் நாட்டின் மீது பாய்தலும் கூடும்; ஆகவே பாண்டிய நாட்டையும் அகப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அப்பொழுதுதான் அமைதியாக இருத்தல் இயலும் என உணர்ந்தான் பராந்தகன். உடனே சோழர் பெரும்படை பாண்டி நாடு புகுந்து மதுரையைக் கைப்பற்றிக் கொண்டது. மதுரை வீழ்ந்து விட்டது; ஆனால் மதுரை மன்னன் பணிந்து விட்டானல்லன். பாண்டியன், ஈழ நாட்டரசனை வேண்டிப் பெற்ற படைத் துணையோடு பராந்தகனை மீண்டும் வந்து தாக்கினான். ஆயினும் அப்பொழுதும் தோல்வியே கண்டான். பராந்தகனை வெல்வது இனி இயலாது என்பதறிந்து கொண்ட கூடற்கோ, தன் குலத்தவர்க்குரிய மணிமுடியையும் வேறு பிற அரசச் சின்னங்களையும் உடன்கொண்டு ஈழ நாட்டிற்கு ஓடி, அவற்றை அந்நாட்டு மன்னன் பால் ஒப்படைத்துவிட்டு மலைநாடு புகுந்து மறைந்து வாழலாயினன். பாண்டி நாட்டில் அமைதியை நிலைநாட்டிவிட்டு, மதுரை மன்னனாய் மணிமுடி புனைய விரும்பியபோது, பராந்தகன் அவற்றைக் கண்டிலன். உடனே அவை போன இடம் அறிந்து அலைகடலைக் கடந்து ஈழநாடு புகுந்து போரிட்டான். ஈழ நாட்டான் போரில் புறமுதுகிட்டான் எனினும், பராந்தகன் கருதி வந்த பாண்டியர் முடி முதலானவற்றோடு, சோழர் படை புகமுடியாத மலைக்காட்டு நாட்டுள் சென்று மறைந்துவிட்டான். பராந்தகன் வெறுங்கையோடு வந்து சேர்ந்தான். ஆனால், “மதுரை யும் ஈழமும் கொண்டகோ” என்ற மக்கள் பாராட்டு மட்டும் இன்றளவும் மறையாததாயிற்று.
பாண்டி மண்டலத்தை வென்றடக்கிய பின்னரும் பராந்தகன் மண்ணாசை மடியவில்லை. அதனால், தொண்டை நாட்டின் பாலாற்றின் வடகரைமுதல் சித்துார் மாவட்டம் வரை பரவிய நாட்டில் பாராண்டிருந்த வாணர் குலத்தவரை வென்று துரத்திவிட்டு அங்கும் தன் புலிக்கொடியைப் பறக்கவிட்டான். அம்மட்டோ! வாணரோடு தான் மேற்கொண்ட போரில் அவ்வாணர்க்கு வைதும்பராயன் என்ற ஆந்திர அரசன் துணை வந்தான் என அறிந்து, அவனையும் வென்று அவன் நாட்டையும் அகப்படுத்திக் கொண்டான். வடகிழக்கில் கீழைச் சாளுக்கியப் பேரரசிற்கு உட்பட்ட சீட்புலி நாட்டின் மீதும் பராந்தகன் சினம் பாய்ந்திருந்தது. அந்நாட்டிலும் இவன் அரசே நடைபெற்றது. சுருங்கச் சொன்னால், தென்குமரி முதல், நெல்லூர் மாவட்டம் வடபெண்ணையாற்றின் தென்கரை வரையும் பராந்தகன் ஆட்சியே பரவியிருந்தது.
ஆனால், அந்தோ! இப்பெருவாழ்வு நெடிது நாள் நிற்கவில்லை. பராந்தகன் கட்டிய பேரரசு அவன் வாழ் நாட் காலத்திலேயே வலியிழந்துவிட்டது. தெற்கே சோழப் பேரரசு தலை தூக்கத் தொடங்கிய காலத்தில், வடக்கில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் இராஷ்டிரகூடர் என்பவரும் பெருக வாழ்ந்திருந்தனர். வளரும் தன் குலத்தவர்க்கு அவர்கள் பகை ஆகாது என அறிந்தே, ஆதித்த சோழன் அக்குலக் கன்னியொருத்தியை மணந்து அவர்களோடு உறவு கொண்டிருந்தான். அந்த அரசியல் அறிவில் பராந்தகன் குறைந்தவனல்லன். தன் மகள் ஒருத்தியை அக்குல இளவரசன் ஒருவனுக்கு அவனும் மணம் செய்து தத்திருந்தான். ஆனால், அதுவே அவன் அரசழிவிற்கு அடிகோலுவதாய் ஆகிவிட்டது.
பராந்தகன் மகளை மணந்த அம்மன்னன் மதிவலி இழந்து மக்கள் வெறுக்க வாழ்ந்தான். அஃதறிந்த அவன் சிறிய தந்தையும், அவன் மகனும், அவனுக்கு எதிராகப் படையெடுத்து, அவனை அரியணையிலிருந்து வீழ்த்திவிட்டார்கள். அரசிழந்த இளவரசன் சோணாடு வந்து மாமன்பால் அடைக்கலம் புகுந்தான். மருமகனுக்கு நேர்ந்த மானக்கேட்டைப் போக்கி, அவனை மீண்டும் மன்னனாக்கத் துணிந்தான் பராந்தகன். சோழர் படை இராஷ்டிரகூட நாடு சென்று போரிட்டது. ஆனால் முடிவு வேறாயிற்று. சோழர்க்குத் தோற்று நாடிழந்து கிடக்கும் வாணர்களும், வைதும்பர்களும் இராஷ்டிரகூடர் பக்கம் நின்று போரிட்டனர். அதனால் அவர் கை வலுத்தது. சோழர் கை சிறுத்தது. சோழர் தோற்றனர்.
தோல்வியோடு சோணாடு திரும்பிய பராந்தகன், தன் வடவெல்லையில் பகைவர் வலுத்துவிட்டனர்; எந்நேரத்திலும் அவர்கள் தன்னாட்டின்மீது போர் தொடுப்பர் என அறிந்து, திருமுனைப்பாடி நாட்டுத் திருக்கோவலூரில், ஒரு பெரிய படையைத் தன் மக்களுள் ஆற்றல் மிக்கான் ஒருவன் தலைமையில் நிறுத்தி வட வெல்லையைக் கண்காணித்து வந்தான். பராந்தகனின் இப்படை விழிப்பை அறிந்த இராஷ்டிரகூட வேந்தன், தன் படை வலியைப் பெரும் போருக்கு ஏற்பப் பெருக்குமளவும் காத்திருந்தான். அது நிறைவேறியதும் சோணாடு நோக்கிப் புறப்பட்டான். அஃதறிந்த சோழர் படையும் வடநாடு நோக்கிச் சென்றது. தக்கோலத்தில் இரு திறப்படைகளும் எதிர்ப்பட்டு அருஞ்சமர் புரிந்தன. வெற்றி சோழர்க்கு வாய்க்கும் தறுவாயில், யானை மேல் அமர்ந்து கொண்டிருந்த சோழர் குல இளவரசன் அம்பொன்று பாய்ந்து இறந்து போனான். படைத் தலைவன் இறக்கவே படைவீரர் சோர்ந்து போயினர். இராஷ்டிரகூடப் படை வெற்றி பெற்றது. தொண்டை நாடளவும் அவர் ஆட்சிக்கீழ்ப் போய்விட்டது. சோணாட்டெல்லை சுருங்கி விட்டது.
அரும்பாடுபட்டுத் தான் அமைத்த பேரரசு தன் கண் முன்னரே அழிந்தமை கண்டு கலங்கினான் பராந்தகன். பின்னர் ஒருவாறு உள்ளம் தேறி, உள்ள சிறு நாட்டில் நல்லரசு நிலவ வேண்டும் எனும் நினைவினனாய்த் தன் இளைய மகன் கண்டராதித்தனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி ஆட்சிப்பொறுப்பை அவன் பால் ஒப்படைத்தான். தன் இறுதி aநாளை இறையன் பில் கழிக்க எண்ணினான். தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன் ஓடுகளால் மூடி இறவாப் புகழ் பெற்றான். பலரும் அவனைப் புகழ்ந்து பாராட்டினார்கள். அப்புகழ் உரைகளுள் ஒன்று :
“கோதிலாத் தேறல் குனிக்கும் திருமன்றம்
காதலால் பொன்வேய்ந்த காவலன்.”
கண்டராதித்தன் : சோழர் பேரரசு மேலும் சீர் குலைதல் கூடாது எனும் கருத்தையுட்கொண்டே பராந்தகன், கண்டராதித்தனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி, ஆட்சிப் பொறுப்பை அவன்பால் ஒப்படைத்தான்; ஆனால் கண்டராதித்தன்பால் அவன் எதிர்பார்த்த அரசியல் ஆற்றல் அமையவில்லை. அவன் மனம் அரசியல் துறையினும், அறத்துறையிலேயே ஆழப்பதிந்துவிட்டது. நாடாளும் அரசன்பால் இவ்வரசியல் குறைபாடு
இருப்பது நலியும் ஒர் அரசுக்கு நன்றன்று; அதை அறிந்து கொண்டான். அக்காலைப் பாண்டி நாட்டு அரியணையில் அமர்ந்திருந்தோன்; உடனே, அவன் சோணாட்டுத் தலைமையை வெறுத்துத் தனியரசு அமைத்துக் கொண் டான். ஆகக் கண்டராதித்தன் ஆட்சிக் காலத்தில் சோழர் பேரரசு, சோணாட்டு எல்லைக்குள்ளேயே நின்று விட்டது. கண்டராதித்தன் அது குறித்துக் கவலை கொண்டிலன்; அவன் மனம் மன்றாடும் இறைவனிடத் திலேயே இருந்து விட்டது ; அவனைப் பாடிப் பரவிய வாறே தன் வாழ்நாட்களைக் கழித்துவிட்டான்; ஆனால் வானாள் இறுதியில் செய்த அரசியல் முடிவு, சோழர் ஆட்சியை நன்னிலைக்கண் நாட்டுதல் வேண்டும் என்ப தில் அவனுக்கும் நாட்டம் இருந்தது என்பதை உறுதி செய்வதாயிற்று. முதிர்ந்த ஆண்டில் தனக்குப் பிறந்த மகன், ஆட்சிப் பொறுப்பேற்கலாகா இளமைப் பருவத் தனாதல் அறிந்து, ஆட்சியை அவன் பால் ஒப்படைக்காது, தன் இளவல் அரிஞ்சயன் பால் ஒப்படைத்து ஒய்வு பெற் றான். தில்லையாடிபால் உள்ளம் நெகிந்து அவன் பாடிய பாக்கள் பல. அவற்றுள் ஒன்று:
‘சீரான் மல்குதில்லைச் செம்பொன் அம்பலத்து ஆடி
-- தன்னைக்
காரார் சோலைக் கோழிவேந்தன் தஞ்சையர்கோன் கலந்த
ஆராஇன் சொல் கண்டராதித்தன் அருந்தமில்மாலை
- வல்லார்
பேராஉலகில் பெருமையோடும் பேரின்பன் எய்துவாரே.”
அரிஞ்சயன் : முதற் பராந்தகனுக்குக் கேரள அரசன் பழுவேட்டரையன் மகள்பால் பிறந்தவன் இவ்வரிஞ்சயன், பராந்தகன். இராஷ்டிரகூட மன்னானனோடு நடத்திய போரில் இவனும் பங்குகொண்டிருந்தான். இவன் அரியணை அமர்ந்ததும், தக்கோலப் போரில் இழந்த சோணாட்டுப் பகுதியை மீட்பதில் தன் சிந்தையைச்
செலுத்தினான். வலி குன்றியிருக்கும் தன் படையால், வல்லரசாய் வாழும் அவ்வட நாட்டரசை வென்று தன் நாட்டை அகப்படுத்துவது எளிதில் ஆகாது என அறிந்து, அவனோடு போர் தொடுப்பதன் முன், அவன் படை வலியைக் குறைத்துத் தன் படை வலியைப் பெருக்க வழி கண்டான். தொண்டை மண்டலத்தை வென்ற இராஷ்டிரகூட மன்னன், அதன் ஆட்சிப் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்ளாமல் அதைத் தக்கோலப் போரில் தன் பக்கம் நின்று போரிட்ட வைதும்பர்பால் ஒப்படைத் திருந்தான். ஆகவே, தான் போர் தொடுக்க வேண்டு மாயின் அவ் வைதும்பர் மீதே போர் தொடுத்தல் வேண்டும் என்பதை அறிந்த அரிஞ்சயன், முதலில் அத் தக்கோலப் போரில் இராஷ்டிரகூடர் பக்கம் நின்று போரிட்ட மற்றோர் அரச இனத்தவராய வாணர் குல இளவரசன் ஒருவனுக்குத் தன் மகள் ஒருத்தியை மணம் முடித்து, அவர் படைத் துணை, பகைவர்க்குக் கிடைக் காமல், தனக்கே கிடைக்கும் படிச் செய்தான்; இவ்வாறு படை வலியைப் பெருக்கிக் கொண்ட பின்னர், ஒருநாள் தொண்டைநாடு நோக்கிப் படை கொண்டு சென்றான். ஆனால் போரின் முடிவு தெரிவதற்கு முன்பே உயிர் துறந்து போனான். வடார்க்காடு மாவட்டம் திருவலத்திற்கு வடக்கே ஆறுகல் தொலைவில் உள்ள மேற்பாடி என்ற ஊரில் அரிஞ்சயன் இறக்க அவன் இறந்த அவ்விடத்தில், அவன் நினைவாய்க் கோயில் அமைத்து வழிபட்டான். அவன் பெயரன் இராச இராசன்.
இரண்டாம் பராந்தகன் : வடபுறத்துப் பகையைக் குறைத்துக் கொள்ளும் கருத்தோடு வாணர் குலத்தான் ஒருவனுக்குத் தன் மகளைத் தந்தது போலவே, வைதும்பர் குலத்தில் வந்தாள் ஒருத்தியைத் தான் மணம் செய்து கொண்டான் அரிஞ்சயன். அவள் வயிற்றில் பிறந்த மகனே, சுந்தர சோழன் என வழங்கப்பெறும் இவ் விரண்டாம் பராந்தகன். திருமுனைப்பாடி நாட்டையும்,
தொண்டை நாட்டையும், சோணாட்டோடு இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையோடு இறந்து போனான் தந்தை என உணர்ந்து, அதை நிறைவேற்றுவது தன் தலையாய கடமையாகக் கொண்டு, இராஷ்டிர கூடத் தண்டத் தலைவர்கள் பலரோடு, பல்வேறு இடங்களில் பலமுறை போரிட்டுத் தந்தை விரும்பியதை முடித்துத் தந்தான். வடநாட்டில் வெற்றி கண்ட பராந்தகன், பின்னர் பாண்டி நாட்டின்மீது படை தொடுத்தான். அன்று பாராண்டிருந்த பாண்டியன் இயல்பாகவே ஆற்றலில் சிறந்திருந்ததோடு, ஈழநாட்டரசர் துணையையும் பெற்றிருந்தான். அதனால், அவனை ஒரே போரில் வெற்றி கொள்வது பராந்தகனால் இயலாது போயிற்று; ஆயினும் எடுத்த வினையைக் கைவிடக் கருதினானல்லன். பாண்டியனோடு பலமுறை போரிட்டான். அவனுக்குத் துணை வந்த ஈழப் படையை அழித்தான்; ஈழப் படையின் துணை, மீண்டும பாண்டியனுக்கு வாரா வண்ணம் செய்தற் பொருட்டுக் கடல் கடந்து சென்று, அவரோடு அவர் நாட்டிலேயே போரிட்டு மீண்டான். இறுதியில் பாண்டியன் மாண்டான்; பாண்டிநாடு பணிந்து விட்டது; ஆனால், அப்பெருநாட்டைத் தன் நாட்டோடு இணைத்துக் கொள்ளப் பராந்தகன் விரும்பினானல்லன்; அதை அடக்கி ஆளவல்ல பெரும்படை இன்மையாலோ, அவ்வாறு ஆள்வது தன் ஆட்சிக்குத் துணையாகாது எனக் கருதியதாலோ, அந்நாட்டில் வெற்றி கண்டதோடு அமைதியுற்றான்.
பராந்தகனுக்கு மனைவியர் இருவர்; அவருள் ஒருத்தி மலையமானாட்டுச் சிற்றரசன் மகளாய வானவன் மாதேவியாராவர்; அவள் வயிற்றிற் பிறந்த மக்கள் மூவர்; ஆதித்த கரிகாலன், அருண்மொழித்தேவன், குந்தவை இவர்களே அவர்கள். இளவரசுப் பட்டம் சூட்டப் பெற்ற ஆதித்த கரிகாலன் வஞ்சகர் சிலரால் கொல்லப்பட்டான்; அருண்மொழித்தேவனே, பின்னர் இராச இராசன் எனும்
பெயரில் பெருவாழ்வு வாழ்ந்த பெரியோனாவன். குந்தவை, வேங்கி நாட்டில் அரசோச்சி லந்த கீழைச் சாளுக்கிய இளவரசனாகிய வல்லவரையன் வந்தியத் தேவன் என்பானை மணந்து, கீழைச்சாளுக்கிய, சோழர் குலத்தவரிடையே மணவுறவு நிகழ அடி கோலிய மங்கை நல்லாளாவள்; இம்மணமே, சோழர் அரியணையில் குலோத்துங்கன் அமரத் துணை புரிந்த பெருமணமாம்.
உத்தம சோழன் : சிவநேயச் செல்வர்களாகிய கண்டராதித்தருக்கும், செம்பியன் மாதேவியார்க்கும், அவர் ஆற்றிய அருந்தவப் பயனாய்ப் பிறந்தவன் இவ்வுத்தம சோழன். இரண்டாம் பராந்தகனை அடுத்து, அவன் மகன் அருண் மொழித் தேவன் அரியணை ஏறுவதே முறையாகவும், தன் பெரிய பாட்டனாகிய கண்டராதித்தர் விருப்பத்தை நிறைவேற்றுவது தன் தலையாய கடமை என உணர்ந்த அருண் மொழித் தேவனின் நல்லெண்ணத்தின் பயனாய் இவன் அரியணை அமர்ந்தான். ஆதித்த கரிகாலன் கொலைக்கு இவனே காரணமானவன் என்ற கருத்தும் இருந்தது என்றாலும், அக்கால வரலாற்றினை ஊன்றி நோக்குவார் அனைவரும் அதில் உண்மையில்லை என்ற முடிவினையே கொள்வர்; இவன் ஆட்சி புரிந்த பதினைந்து ஆண்டுகளும், அமைதி நிறைந்த நல்வாழ்வே நாடெங்கும் நிலவிற்று; அவன் நல்லாட்சிக்கு அதுவே போதிய சான்றாம்.
முதல் இராசராசன் : விசயாலயன் வழி வந்த பிற்காலச் சோழர்களுள், சோழர் பேரரசின் பெருமையை உலகம் பாராட்டுமளவு உயர்த்திய உரவோன் இம்முதல் இராசராசன். இரண்டாம பராந்தகனுக்கு வானவன் மாதேவியால், ஐப்பசித் திங்கள் சதயத் திருநாளில் பிறந்த இவனுக்குப் பெற்றோர் இட்ட பெயர் அருண் மொழித் தேவன் என்பது. ஒரு பெரிய பேரரசைப் படைத்து, அதை அமைதி நிலவும் நல்லரசாக ஆள்வதற்கேற்ற ஆற்றலும், ஆண்மையும் அரசியல் அறிவும் இவன்பால் குறைவின்றி அமைந்திருந்தன. மேலும், இவனை இளமையில் வளர்த்தவர்களாகிய கண்டரதித்த தேவனின் மனைவியாகிய செம்பியன் மாதேவியும், இவன் தமக்கையாராகிய குந்தவை பிராட்டியாரும், இறையன்புக்கும், இறவாப் பெருங்குணங்களுக்கும் உறைவிடமாகிய பெருந்தகையினராவர். ஆதலின்-அவர் வளர்க்க வளர்ந்த அருண்மொழித்தேவன்பால் ஆன்றோர் போற்றும் அத்துணை ஒழுக்கங்களும் ஒன்றி நின்றன. அதுவே, அவனை உலகப் பேரரசர்களுள் ஒருவனாக வைத்து மதிக்கத்தக்க மாண்பினை அளித்தது.
பிற்காலச் சோழர் வரலாற்றை அறியப் பெரிதும் துணைபுரிவன அச்சோழ அரசர்களின் கல்வெட்டுக்களில் காணும் மெய்க்கீர்த்திகளே. ஓர் அரசன் ஆட்சிக் காலத்தில் நிகழும் அரிய நிகழ்ச்சிகளை, அவை நிகழ்ந்த காலமுறைப்படி விளக்கும் மெய்கீர்த்தியைத் தமிழில், இனிய எளிய அகவற்பாவில் ஆக்கிக் கல்வெட்டின் தொடக்கத்தில் அமைக்கும் அரிய வழக்கத்தை முதலில் மேற்கொண்ட அரசன், நம் அருண்மொழித்தேவனே ஆவன்.
அரியணை ஏறிய நான்காண்டிற்குள்ளாகவே, இவன் பாண்டியனையும், சேரனையும் வென்று அவ்விருவர் நாட்டிலும் சோழர் ஆணையே செல்லும்படிச் செய்துவிட்டமையால், சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர் முடிகளையும் ஒருங்கே சூடிய முதல்வன் எனும் பொருள் தோன்ற, இவனுக்கு மும்முடிச் சோழன் எனும் சிறப்புப் பெயர் சூட்டினார்கள் மக்கள், மன்னர்களுக்கெல்லாம் மன்னன் எனும் பொருள் தரும் இராசராசன் எனும் பெயரைச் சூட்டிக்கொண்டான் இவனும், அன்று முதல், அருண்மொழித்தேவன் எனும் அவன் பிள்ளைப் பெயர் மறைந்துபோக, இராசராசன் என்ற அச்சிறப்பு பெயரே அவன் இயற்பெயராய் அமைந்துவிட்டது. இராசராசன் ஆற்றிய கன்னிப் போர் காந்தளூர்ச் சாலைப் போராம். இராசராசன் அரியணை ஏறியதும், அரசியல் தூதுவன் ஒருவனைச் சேரன் அரசவைக்கு அனுப்பியிருந்தான்; அக்காலை ஆங்கு அரசோச்சியிருந்த அரசன் அத்தூதுவனை யாது காரணத்தாலோ சிறையில் அடைத்துவிட்டான். தூதுவனுக்கு இழைத்த கேட்டினைத் தனக்கு இழைத்துவிட்டதாகவே மதித்தான் இராசராசன்; உடனே அவ்விழிவைத் துடைக்கத் துணிந்து, சோழர் படை சேரநாடு நோக்கி செல்லவிட்டான். சோழர்படை சேரநாடு செல்ல வேண்டுமாயின், அது பாண்டி நாட்டைக் கடந்தே செல்லுதல் வேண்டும்; ஆகவே சோழர் படை முதலில் பாண்டிநாடு புகுந்தது. அப்போது பாண்டி நாட்டில் அரசாண்டு கொண்டிருந்தவன், சேரனின் உற்ற நண்பனாவன். அதனால், அவன் சேரநாடு நோக்கிச் செல்லும் சோழர் படையைத் தடுத்துப் போரிட்டான். பாண்டியன்மீது போர் தொடுக்கும் கருத்து, படை புறப்படும்போது இராசராசனுக்கு இல்லை என்றாலும், பாண்டியன் வலியவந்து எதிர்க்கவே அவனோடு போரிட்டு வெல்வது இன்றியமையாததாயிற்று; அதனால் சோழர் படை பாண்டியப் படைமீது பாய்ந்தது. பாண்டியன் தோற்றுப் புறமுதுகிட்டான்.
பாண்டிநாட்டில் வெற்றிக்கொடி நாட்டிய சோழர் படை, பின்னர்ச் சேரநாடு நோக்கி விரைந்தது. சேரநாடு புகுந்த சோழர் படை, காந்தளூர்ச் சாலை எனும் கடற்கரைப் பட்டினத்தை அடைந்து ஆங்கு நின்றிருந்த சேரரின் பெரிய கடற்படையை அறவே அழித்து வெற்றி கொண்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோயிலுக்கு வடமேற்கேயுள்ள உதகையை அடைந்தது. சேரன், சோணாட்டுத் தூதுவனை அவ்வுதகை நகர்ச் சிறையிலேயே அடைத்திருந்தானாதலின், சோழர்படை அந்நகரைக் காத்திருந்த சேரர் படையைச் சிதறடித்தது. அந்நகரைச் சூழ்ந்திருந்த அரண் மதில்களையும், மாளிகைகளையும் இடித்துட் பொடியாக்கி, எங்கும் எரிஎழப் பாழ் செய்து தன் நாட்டுத் தூதுவனை சிறை வீடுசெய்து பழி தீர்த்துக் கொண்டது. உதகையின் அழிவு கண்டும் இராசராசன் உள்ளம் அமைதியுற்றிலது. சேரர் படை வலியை அறவே சிதைத்தல் வேண்டும் என்று விரும்பினான். உடனே தென்கடற் கோடியில் இருந்த சேரர் படைத் தளமாகிய விழிஞத்தை வளைத்துக் கொண்டு பெரும் போர் புரிந்து சேரர் படை முழுவதையும் பாழ் செய்தான். அம்மட்டோ தான் பிறந்த சதயத் திருநாள் விழாவையும் சேரநாட்டுத் தலைநகரிலேயே சிறப்புறக் கொண்டாடிவிட்டு, அளவிலாப் பொற்குவியல்களையும், எண்ணிலாக் களிறுகளையும் கைக்கொண்டு தலைநகர் வந்தடைந்தான்.
பெரும் பகைவர்களாகிய பாண்டியனையும் சேரனையும் வென்றடக்கிய பின்னர், இராசராசன் படை பிற சிறு நாடுகள்மீது சென்றது, குடகு என இக்காலத்து வழங்கும் குடமலை நாடே அப்படையின் முதற் குறிக்கோளாய் அமைந்தது. அக்காலை அந்நாட்டைக் கொங்காள்வார் மரபில் வந்த ஒருவன் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான். குடமலை நாடு புகுத்த சோழர் குலக்குரிசில், அக்கொங்காள்வானைப் பணசோகே எனும் இடத்தில் போரிட்டு வென்றான். வென்ற அந்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை, அப்போரில் ஆற்றல் காட்டிப் போரிட்ட மனிஜா என்ற வீரன்பால் ஒப்படைத்து வெளியேறினான்.
குடகை வெற்றிகொண்ட நம் கோமகன், பின்னர் அந்நாட்டை அடுத்திருந்த கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி முதலான சிறு நாடுகள் மீது சென்றான். மைசூர் நாட்டின் அகத்திலும் புறத்திலும் இடம்பெற்றிருந்த இச்சிறு நாடுகளுள், தழைக்காடு எனும் ஊரைத் தலைநகராகக் கொண்ட கங்கபாடி மேலக்கர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. நுளம்பபாடியில், பல்லவரின் ஒரு கிளையினரான நுளம்பர்கள் ஆட்சிபுரிந்திருந்தனர். தமக்கு அரணளித்து வந்த இராஷ்டிரகூடப் பேரரசு அக்காலை ஆற்றல் குன்றி அடங்கியிருந்தமையால், அச்சிறு நாடுகள் மூன்றும், இராசராசனுக்கு எளிதில் அடி பணிந்துவிட்டன.
வடமேற்குத் திசை நாடுகளில் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கும்போதே இராசராசன் சிந்தை மற்றொரு திசையில் சென்றிருந்தது. பாண்டியனும் சேரனும் தனக்குப் பணியாது பகைகொண்டு வாழ்ந்தது, அவருக்கு ஈழ நாட்டரசன் அளித்த படைத்துணை வலியால் என்பதை அறிந்து, இராசராசன் அவ்வீழநாட்டான் பால் கடுஞ்சினம் கொண்டிருந்தான். தமிழகத்தில் தன்னை எதிர்த்து நிற்பார் எவரும் இலர் என்ற நிலை ஏற்பட்டவுடனே, இராசராசன், தன் படையை ஈழநாட்டின்மீது போக்கினான். சோழர் பெரும்படை கலம் ஏறிக் கடல் கடந்து ஈழநாட்டு மண்ணில் அடியிட்ட அதே நேரத்தில், ஈழப் படைக்குள்ளாகவே கலகம் தோன்றிற்று; அதையடக்கும் ஆற்றலையும் இழந்துவிட்ட ஈழநாட்டு அரசன், அத்தீவின் தென்கிழக்கு நாட்டிற்கு ஓடிவிட்டான். ஈழ நாட்டில் வடபகுதி எளிதில் சோழர் உடமையாயிற்று. சோழர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்ற, இராசராசன் மகனாகிய இராசேந்திரன், அவ்வட பகுதிக்கு மும்முடிச் சோழ மண்டலம் எனத் தந்தை பெயரால் பெயரிட்டுப் பொலன்னருவா நகரைத் தலைநகராகக் கொண்டு, சோணாட்டாட்சியை நிலைநாட்டித் தாய்நாடு திரும்பினான்.
ஈழநாட்டில் வெற்றிகண்டு வீடு திரும்பிய சோழர் படைக்கு, வடநாடு செல்லவேண்டிய பணி காத்துக்கிடந்தது. இராசராசனால் வென்று அடக்கப்பட்ட நுளம்பபாடி, அது காறும் மேலைச்சாளுக்கியர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. தம் ஆட்சிக்குட்பட்ட அந்நாட்டில் சோழர் புலிக்கொடி பறப்பதைச் சாளுக்கிய வேந்தன் வாளா பார்த்துக் கொண்டிருக்க விரும்பினானல்லன்; ஆங்குச் சோழர் ஆட்சியை அகற்றக் காலம் நோக்கிக் காத்திருந்தான். அதை ஒற்றர் மூலம் அறிந்து கொண்ட இராசராசன், அம்மேலைச் சாளுக்கிய மன்னன் மீது தன் மகனை ஏவினான். இராசேந்திரனும் தன் பெரும்படையோடு அந்நாடு புகுந்து, அந்நாட்டுப் படையை அறவே அழித்துவிட்டுப் பெரும் பொருளோடு தஞ்சை வந்து சேர்ந்தான். இப்படையெடுப்பின் பயனாய்த் துங்கபத்திரை ஆற்றின் தென்கரை வரையுள்ள நாடுகள் அனைத்தும் சோழர் ஆட்சிக்கீழ் வந்துற்றன.
இந்நிலையில், சோணாட்டிற்கு வட கிழக்கில், கிருஷ்ணை, கோதாவரி ஆறுகளுக்கு இடையில் இருந்த வேங்கிநாட்டில் உள்நாட்டுக் குழப்பம் ஓங்கிவிட்டது. அந்நாட்டை அப்போது ஆண்டிருந்தவர் கீழைச்சாளுக்கியவராவர். வாதாபி சாளுக்கியர் வழிவந்த வெற்றி வீரனும், வடநாட்டுப் பேரரசன் அர்ஷனையும், தென்னாட்டு பேரரசன் மகேந்திரவர்ம பல்லவனையும் வெற்றி கொண்டோனும் ஆகிய இரண்டாம் புலிகேசி என்பான், ஆந்திர அரசர்களை வென்று, அவர் ஆண்டிருந்த வேங்கி நாட்டைக் கைப்பற்றிய போது, அதன் ஆட்சிப் பொறுப்பினைத் தன் இளவல் விஷ்ணுவர்த்தனன் என்பவன்பால் ஒப்படைத்தான். வாதாபிசாளுக்கியர்க்கு அடங்கிய அரச குலத்தவராய் ஆண்டிருந்த அவன் வ்ழிவந்தோர், அவ்வாதாபிச்சாளுக்கிய நாடு, இராஷ்டிரகூடர் ஆட்சிக்குட்பட்டதும் தனியரசு அமைத்துக் கொண்டனர்; அன்று முதல் தங்களைக் கீழைச்சாளுக்கியர் என அழைத்துக் கொண்டு, வேங்கிநாட்டின் உரிமை பெற்ற அரச குலத்தவராய் ஆண்டு வரலாயினர்.
இராசராசன் சோணாட்டு மணிமுடியைத் தாங்கிக் கொண்டிருந்தபோது, வேங்கிநாட்டில் தாயத்தாரிடையே ஆட்சி உரிமைப் போர் தலைதூக்கி நின்றது. மூத்தோன் வழிவந்த சக்திவர்மனையும் அவன் தம்பி விமலாதித்தனையும் நாடு கடத்திவிட்டு இளையோன் வழிவந்தவர் நாடாண்டிருந்தனர். ஆட்சியை இழந்து அலைந்து திரிந்த அண்ணனும் தம்பியும் சோணாடு வந்து இராசராசன் பால் அடைக்கலம் புகுந்தனர். சோணாடு வந்து வாழும் அவ்வரசிளங்குமரருள் இளையோனாகிய விமலாதித்தன் பால், இராசராசன் அரும்பெறற்புதல்வியாகிய குந்தவைக்குக் காதல் உண்டாயிற்று: அஃதறிநத இராசராசனும் அவர் இருவருக்கும் மனம்முடித்து மகிழ்ந்தான்; இத்திருமணத்தின் பயனாய், வேங்கிநாட்டு ஆட்சியைத் தன் அரசவை வந்து வாழும் அரசிளங்குமரர் பால் ஒப்படைக்க வேண்டும் என்ற உணர்வு இராசராசன் உள்ளத்தில் ஆழப் பதிந்துவிட்டது.
அந்நிலையில், நெல்லூர் மாவட்டத்திற்கு வடக்கில் விளங்கிய நாடுகளாகிய சீட்புலி நாட்டையும், பாகி. நாட்டையும் ஆண்டிருந்த தெலுங்குச் சோழர்களை வென்று அடக்கவேண்டிய இன்றியமையா நிலை ஒன்று இராசராசனுக்கு ஏற்பட்டது; அந்நாடு நோக்கிச் செல்லும் சோழர் படைக்குத் தலைமை தாங்கிச் செல்லும் தன் தண்டத் தலைவனுக்குத் துணையாகச் சக்திவர்மனையும் இராசராசன் அனுப்பியிருந்தான். அப்போரில் சக்திவர்மன் தன் ஆற்றல் அனைத்தையும் காட்டி அருஞ்சமர் புரிந்து வெற்றி பெற்றான். அதன் பயனாய்ச் சீட்புலிநாடும், பாகிநாடும் சோழர் உடமை ஆயின. அந்நிகழ்ச்சி, சக்திவர்மன்பால் இராசராசன் கொண்டிருந்த அன்பைப் பேரன்பாக்கிற்று. அதனால் அவனை வேங்கி நாட்டிற்கு வேந்தனாக்கும் பணியை அன்றே மேற்கொண்டான்; அவ்வாறே வேங்கி நாட்டின் மீது போர்த்தொடுத்து, இளையோன் வழியினரை அரியணையிலிருந்து அகற்றிவிட்டு, சக்திவர்மனை அரசனாக்கி அன்பு செய்தான்.
வேங்கி நாட்டிற்கு அவன் ஆற்றவேண்டிய கடமை அவ்வொன்றோடு நின்று விடவில்லை. சக்திவர்மனை அடுத்து அரியணையேறிய விமலாதித்தன் காலத்தில், அவ்வேங்கி நாட்டிற்கு வடக்கில் உள்ள கலிங்க நாட்டில் அப்போது ஆட்சியிலிருந்த அரசன், விமலாதித்தனுக்கு அடிக்கடி இடையூறு இழைக்கத் தொடங்கினான். அவன் தொல்லை பொறுக்கமாட்டாத விமலாதித்தன் தன் மாமன்பால் முறையிட்டான். ம்ருகன் குறை தீர்க்கத் துணிந்த இராசராசன், கலிங்கத்தின் மீதுபோர் தொடுத்து அந்நாட்டுக் காவலனை வென்று, அங்குள்ள ஒருமலை முகட்டில் வெற்றித்தூண் ஒன்றைக் நாட்டினான். சோணாட்டுக் காவலன் கலிங்க நாட்டில் பெற்ற இவ்வெற்றிக்கு, அந்நாட்டு மகேந்திரகிரி மலையில், தமிழிலும் வடமொழியிலும் வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களே சான்று பகிர்கின்றன.
இராசராசன் இறுதியாகப் பெற்ற வெற்றி முந்நீர்ப் பழந்தீவு பன்னிராயிரத்தில் பெற்ற வெற்றியேயாகும். சேரநாட்டுக் கடற்கரைக்கு அணித்தாகக் கடலிடையே உள்ள எண்ணிலாச் சிறு தீவுகளில் வாழ்ந்திருந்த கடற்கொள்ளைக் கூட்டத்தார், நினைத்தபோதெல்லாம் சேர நாடு புகுந்து கேடு செய்கின்றனர் என்பதைக் கேள்வியுற்ற இராசராசன் தன் கடற்படையின் துணையால், அத்தீவுகளைக் கைப்பற்றி, அங்குத் தன் படையின் ஒரு பகுதியை நிறுத்தி அத்தீவினரால் தீங்கொன்றும் நிகழாவண்ணம் காவல் மேற்கொண்டான். .
பகையரசர் பலரை வென்று ஒரு பேரரசை நிலை நாட்டிய பெரு வீரனாகிய இராசராசன் சிறந்த அரசியல் அறிவும் உடையவனாய் விளங்கினான்; அப்பேரரசில் ஒரு சிறு குழப்பமும் உண்டாகாவண்ணம் நல்லரசு நடத்தினான்; தன் ஆட்சி அமைதி நிலவும் நல்லாட்சியாக விளங்க அவன் ஆற்றிய அரசியல் பணிகள் பலவாம். பேராற்றலும் பெருவீரமும் படைத்த தன் மகன் இராசேந்திரனுக்கு அவன் இளமைப் பருவத்திலேயே இளவரசுப் பட்டம் கட்டி, அரசியல் அலுவல்களில் கலந்து கொண்டு பல துறையிலும் பயிற்சி பெறப் பண்ணினான். அக்காலை அவன் பெற்ற பயிற்சியே, பிற்காலத்தில் ஒரு
க--3 பேரரசைக் கட்டிக் காக்கும் பெரும் பணியை எளிதில் தாங்கத் துணை புரிந்தது. அறிவும் அன்பும் நிறைந்தவர்களையே அரசியல் அதிகாரிகளாக ஆங்காங்கு நியமித்தான்; ஆற்றலும், ஆண்மையும் அஞ்சாமையும் கொண்டவர்களையே தண்டத் தலைவர்களாகக் கொண்டான். சோணாடு முழுவதையும் அளந்து, நிலங்களின் பரப்பையும் நிலையையும் உணர்ந்து நில வரியை ஒழுங்குபடுத்தினான்; இம்முறையால், ஓர் ஊர் இன்ன நாட்டில் உளது; அந்நாடு இன்ன வளநாட்டில் அடங்கி உளது: அவ்வளநாடு இன்ன மண்டலத்தின் உட்பிரிவு என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் தோன்றும் வகையில் ஒவ்வொரு மண்டலத்தையும் பல வளநாடுகளாகவும், ஒவ்வொரு வளநாட்டையும் பல நாடுகளாகவும் பிரித்து வகை செய்தான். “சோழ மண்டலத்து, உய்யக் கொண்டார் வளநாட்டு, வெண்நாட்டு அமண் குடி” என்ற தொடரைக் காண்க.
இராசராசன் இறந்துவிட்டான்; அவன் அமைத்த சோழர் பேரரசு அழிந்துவிட்டது. ஆனால் அவன் பெயர் மட்டும் இன்றுவரை மறைந்திலது. இனி அது எக்காலமும் மறையாது. அவ்வாறு அவன் பெயரை என்றும் நிலை நிற்கப்பண்ணுவது, அவன் தஞ்சைமாநகரின் நடுவண் எடுத்துள்ள, ஈடும் எடுப்பும் இல்லாப் பெரியகோயிலே. இராசராசன் பெருமைக்கும் புகழுக்கும் கலங்கரை விளக்காக நிற்பது அது ஒன்றே. இராசராசேச்சுரம் எனத்தன் பெயர் இட்டு எடுத்த அக்கற்கோயில் 793 அடி நீளமும் 397 அடி அகலமும் உடையது; அதன்கண் வானளாவ அமைந்துள்ள நடுவிமானம் மட்டும் 216 அடி உயரம் உடையது. அதன் உச்சியில் போடப் பெற்றிருப்பது, எண்பது டன் எடையுள்ள ஒரே, கருங்கல், விமானத்தின் மேல் அமைத்திருக்கும் செப்புக் கலசம் 3083 பலம் நிறையுடையது; அக்கலசத்தை மூடியிருக்கும் பசும்பொன் 926½ கழஞ்சு. கோயிலின் வெளிச்சுற்றில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றைக்கல் நந்தி பன்னிரண்டடி உயரமும், பத்தொன்பதரை அடி நீளமும், எட்டேகால் அடி அகலமும் உடையது. மண்ணல்லது மலைகாணாத் தஞ்சை மாவட்டத்தின் நடுவே, முழுதும் கருங்கல்லால் ஆன இத்துணைப்பெரிய கோயிலைக் கட்டிமுடித்த, இராசராசனின் இறவாப் புகழும் பெருமையுந்தான் என்னே!
முதல் இராசேந்திரன் : பார்புகழும் பேரரசன் இராசராசனுக்கும், அவன் தேவியருள் வானவன் மாதேவி என வழங்கும் திரிபுவனமாதேவியார்க்கும் மார்கழி ஆதிரை நன்னாளில் பிறந்த நற்புதல்வன் இவ்விராசேந்திரன். இராசராசன் கட்டிய சோழப் பேரரசிற்குப் பெரிதும் துணை புரிந்தவன் இவனே. அவன் மேற்கொண்ட போர்கள் பலவற்றிற்கும் படைத்தலைமையேற்றுப் பணியாற்றியவன் இப்பெரு வீரனேயாவான். ஆகவே அவன் பெற்ற வெற்றியனைத்தும் இவன் பெற்ற வெற்றிகளேயாம். சோணாட்டின் ஆட்சிப்பொறுப்பினை இவன் ஏற்றுக் கொள்ளுங்காலத்தில், சோணாடு, இன்றைய சென்னை மாநிலத்தையும், மைசூர் நாட்டின் பெரும்பகுதியையும், ஈழநாட்டையும் தன்னகத்தே கொண்ட ஒரு பெருநாடாகத் திகழ்ந்தது. சுருங்கச் சொன்னால், துங்கபத்திரை ஆற்றிற்குத் தெற்கே இருந்த இந்தியத் துணை கண்டம் முழுவதிலும் சோழர் புலிக்கொடி ஒன்றே ஓங்கிப் பறந்தது. இவ்வாறு பரந்து அகன்ற ஒருபெரிய நாட்டை, அரியணை ஏறும் தன் ஆட்சியின் தொடக்க காலத்திலேயே பெரும்பேற்றினைப்பெற்ற இராசேந்திரன், உள்ளதே போதும் என உளம் அடங்கினான் அல்லன். அவன் ஆற்றலும் ஆண்மையும், அவன் தோளாற்றலைத் தொலை நாட்டில் வாழ்வாரும் அறிந்து பாராட்ட வேண்டும் எனத் துடித்தன. அதன் பயனாய் அவன் மேற்கொண்ட போர்கள் எண்ணற்றனவாம். அம்முறையால் அவன் பெற்ற வெற்றிகளை அவன் மெய்க்கீர்த்தி, கூறும் முறைப்படியே காண்போமாக.
கிருஷ்ணை துங்கபத்திரை ஆகிய இரு பேராறு களுக்கும் இடையில் அமைந்திருப்பதும், இன்று பம்பாய் மாநிலத்தின் ஒரு பகுதியாய் ரெய்ச்சூர் மாவட்டம் எனப் பெயர் பெறுவதுமாகிய நாடு பண்டு இடைதுறை நாடு என அழைக்கப்பெற்றது; அந்நாடே, இராசேந்திரன் வென்றடக்கிய முதல் நாடாக அவன் மெய்க்கீர்த்தி கூறுகிறது.
மைசூர் தனியரசின் வடமேற்குப் பகுதியைத் தன்ன கத்தே கொண்டு, கங்கபாடிக்கு வடக்கிலும், நுளம்ப பாடிக்கு மேற்கிலும் இருந்த வனவாசிப் பன்னீராயிரம் என்ற சிறு நாட்டையும் இராசராசன் வெற்றி கண்டான்.
ஐதராபாத்திற்கு வடக்கிழக்கில் நாற்பத்தைந்து கல் தொலைவிலுள்ள குல்பாக் என்ற ஊர், பண்டைக் காலத்தில் கொள்ளிப்பாக்கை எனும் பெயருடையதாய், அகழியும் மதிலும்சூழ்ந்த அரண்களைத் தன்னகத்தே கொண்டதாய், ஒரு சிறு நாட்டின் தலைநகராய்த் திகழ்ந்தது; இராசேந்திரன் வெற்றிக்கொடி அந்நகரிலும் நின்று பறந்தது!
ஒரு காலத்தில் இராஷ்டிரகூடர்களின் தலைநகராய் இருந்ததும், வழியிடை நகராய் அமைந்து வடநாட்டு வேந்தர்களின் தாக்குதல்களையும், தென்னாட்டுக் காவலரின் தாக்குதல்களையும் ஒருங்கே பெற்று உரு விழந்து போனதும் ஆய, மானியகேடம் என வழங்கும் மண்ணைக் கடக்கத்தின் மண்ணும் இராசேந்திரனின் வெற்றிப்புகழ் பாடிற்று. மேலைச் சாளுக்கியரின் ஆட்சிக்குட்பட்ட இந்நாடுகளில் பெற்ற வெற்றிகள் அனைத்தும் இராசேந்திரன் அரியணை ஏறுவதற்கு முன்னர்ப் பெற்ற வெற்றிகளாம்.
இராசராசன் ஆட்சிக் காலத்தில் அவன் தண்டத்தலைவனாய்ச் சென்று போரிட்ட தனக்குத் தோற்று, ஒடி ஒளிந்து கொண்ட ஈழநாட்டரசன், சில ஆண்டுகள் கழித்து. ஒரு பெரிய படையைத் திரட்டிக் கொண்டுவந்து, ஈழநாட்டில் தான் நாட்டிவந்த சோழ அரசை அழிக்க முனைவது அறிந்து, இராசேந்திரன் அளவிலாச் சினம் கொண்டான். ஈழநாட்டின் மீது மீண்டும் படையெடுத்துச் சென்றான். வெற்றித் திருமகள் இம்முறையும் இராசேந்திரனுக்கே மாலை சூட்டினாள். ஈழத்தரசனை வெற்றி கொண்ட இராசேந்திரன், வெறுங்கையோடு வீடு திரும்பவில்லை, ஈழத்தரசர்கள் வழிவழியாக அணியும் விழுச்சிறப்புடைய மணிமுடியையும், அவர் தேவியர் அரியனை அமருங்கால் அணியும் அழகிய முடியையும் கைப்பற்றிக்கொண்டான். அம்மட்டோ! தன் பாட்டனுக்குப் பாட்டனாகிய முதற்பராந்தகனுக்குத் தோற்று ஓடிய பாண்டியன், ஈழநாட்டில் அடைக்கலமாக அளித்து வைத்தனவும், அப்பராந்தகன் பலமுறை முயன்றும் அவனால் அடைய இயலாது போயினவும் ஆகிய பாண்டியர் மணிமுடியையும், இந்திர ஆரம் முதலாம் பிற அரசச் சின்னங்களையும் கைப்பற்றிய களிப்போடு, அவ்வீழநாட்டுக் காவலனையும் சிறை கொண்டு சோணாடு வந்து சேர்ந்தான்.
தென்னகத்தில் தன்னை எதிர்ப்பவர் எவரும் இலர் என்ற பெருநிலையைப் பெற்றுவிட்ட பின்னர், இராசேந்திரன், கங்கை பாயும் வடநாட்டிலும், கடல்கடந்த கடார நாட்டிலும் தன் புகழ் பரவ வேண்டும் என்று விருமபினான். அவ்வாறு விரும்பியவன், அங்கெல்லாம் சென்று வெற்றி பெற்று வரவேண்டுமாயின், தானும் தன் பெரும் படையும் நெடுநாட்கள் வெளிநாட்டில் வாழவேண்டி வரும்; தான் நாட்டில் இல்லை என்பதைப் பகைவர் உணர்வராயின் உடனே உள்நாட்டில் கலகத்தை மூட்டி உரிமைப் போர் தொடுத்துவிடுவர்; அந்நிலை உண்டாகவிடுவது தன் பேரரசின் ஆணிவேரைப் பறிப்பதுபோலாம்; ஆகவே, அக்காலத்தில் அந்நிலை ஏற்படா வண்ணம் ஆவன புரிந்துவிட்டே நாட்டைவிட்டு அகலுதல் வேண்டும் என அறிந்
தான். உடனே தன் மக்களுள் ஒருவனைப் பாண்டித் தலைநகர்க்கு அழைத்துச் சென்று, ஆங்கு அவனுக்குச் சோழ பாண்டியன் எனும் பட்டப்பெயர் சூட்டிச் சேர பாண்டிய நாடுகளின் ஆட்சிப் பொறுப்பை அவன்பால் ஒப்படைத்து அவனை ஆங்கிருந்து ஆட்சிபுரியுமாறு பணித்தான். சேர நாட்டின் தென்கோடியில் உள்ள கோட்டாற்றில், தன்கீழ்ப்பணிபுரியும் சாளுக்கிய இளவரசன் ஒருவன் தலைமையின் கீழ் பெரிய நிலைப்படை ஒன்றை நிறுத்தி வைத்தான். இவ்வாறு செய்து முடித்த முன்னேற் பாடுகளால், தான் இல்லாக் காலத்தும் நாட்டில் அமைதி நிலவும் நல்லாட்சியே நடை பெறும் என்ற துணிவு வரப் பெற்றான்.
நிலைகுலையா நல்லாட்சிக்குச் செய்யவேண்டுவ அனைத்தையும் செவ்வனே செய்து முடித்த அந்நிலையில் வடவெல்லையில் மேலைச் சாளுக்கியர் விளைத்த சிறு பூசல், இராசேந்திரனின் வெளிநாட்டுப் படையெடுப்பைச் சிறிது காலம் கடத்தப் பண்ணிற்று. மேலைச் சாளுக்கிய மரபில் வந்து அப்போது ஆட்சி புரிந்து கொண்டிருந்த மன்னன், சோழரிடம் தன் முன்னோர் இழந்த நாடுகளைக் கைப்பற்றும் கருத்தினைக் கொண்டான். இராசேந்திரன் சிந்தையும் செயலும் வேறு ஒரு திக்கில் சென்றிருந்த சமயம் நோக்கித், துங்கபத்திரை வடகரைக் கண்ணவாய்ச் சோழர் ஆட்சிக்குட்பட்டிருந்த சிற்சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டான். அஃதறிந்தான் இராசேந்திரன்; உடனே தொண்டை நாட்டுத் தலைநகராம் காஞ்சியில் நிறுத்தி வைக்கப்பெற்றிருந்த வடவெல்லைப் படையோடு சாளுக்கியநாடு நோக்கிச்சென்றான். முயங்கி எனும் இடத்தில் சாளுக்கியரை மடக்கிப் போரிட்டு வென்றான்; அந் நாட்டு மன்னன் அஞ்சிப் புறமுதுகிட்டு அரண் புகுந்து ஒளிந்து கொண்டான். பொன்னையும் நவமணிகளையும் பெருந்திரளாக வாரிக்கொண்டு, இராசேந்திரன் சோணாடு வந்து வெற்றித் திருவிழாக் கொண்டாடினான். வடவெல்லைப் பூசலை ஒருவாறு வாயடங்கப் பண்ணியதும் இராசேந்திரன் கங்கைநாட்டுப் படையெடுப்பைக் கருத்தில் கொண்டான். மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் தான் புதிதாக அமைத்த தலைநகரையும், ஆங்குத் தான் எடுத்த பெரிய கோயிலையும், அத்தலைநகர்க்கு அணித்தாகத் தான் அமைத்துள்ள பெரிய ஏரியையும் கங்கை நீரால் துரய்மை செய்தல் வேண்டும் என்ற வேட்கை, வட நாட்டு படையெடுப்பை விரைந்து மேற்கொள்ளச் செய்தது. ஆனால், கங்கைவரை சென்று மீளக் குறைந்தது இரண்டு ஆண்டு காலமாவது வேண்டியிருக்கும்; அவ்வளவு நீண்ட காலம், தான் தலைநகரின் நின்று நீங்கியிருப்பது நன்றன்று என எண்ணினான். அதனால் அவ்வட நாட்டுப் படையெடுப்பிற்குத் தலைமை தாங்கிச் செல்வதைத் தான் ஏற்றுக் கொள்ளாது, அதைத் தகுதிபலிக்க தன் பெரும் படைத்தலைவன் ஒருவன் பால் ஒப்படைக்கத் துணிந்தான்.
வடநாட்டுப் படையெடுப்பின் பொறுப்பேற்றுக் கொண்ட படைத்தலைவன், சோழர் பேரரசின் வட கிழக்கு எல்லை நாடாகிய வேங்கி நாட்டிலிருந்து வடநாடு நோக்கிப் புறப்பட்டு விட்டான். வேங்கிநாட்டு வடவெல்லையைத் தாண்டிய தண்டநாயகன் வத்சநாட்டில் அடியிட்டான்; நாகர் வழிவந்த குறுநிலத் தலைவர் பலர், அவ்வத்சநாட்டின் பல்வேறு உட்பிரிவுகளாய மதுரை மண்டலம், நாமணைக்கோணம், பஞ்சப்பள்ளி, மாசுணி தேசம் முதலான சிறு நாடுகளை ஆண்டுக்கொண்டிருந்தனர்; இக்காலை சித்திரகோட்டம் என வழங்கும் சக்கரக் கோட்டம் எனும் இடத்தில் அவர்கள் அனைவரையும் ஒரு சேர வெற்றிகொண்ட பின்னர், சோழர் தளபதி மேலும் வடக்கு நோக்கிச் சென்றான். பின்னர் ஆதிநகர் அடைந்து, ஆங்கு அரசாண்டிருந்த இந்திரரதனை வென்று அவன் ஆட்சிக்குட்பட்ட ஒட்டரநாட்டையும் கோசலநாட்டையும் கைக் கொண்டான்; கங்கை நோக்கி விரைந்த சோழர் படை, கங்கை பாயும் வங்காள நாட்டில் பேரரசு செலுத்தும் பால மரபினனான மகிபால மன்னனுக்குக் கீழ்ப்படிந்த குறுநில மன்னர்களாய தன்மபாலன், இரணசூரன், கோவிந்தசந்தன் முதலாயினோரை வென்று, அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட, தண்டபுத்தி, தக்கண லாடம், வங்காளம் முதலாம் நாடுகளில் வெற்றிக் கொடிகளைப் பறக்க விட்டு, இறுதியில் அம்மகிபாலன் இருந்து ஆளும் உத்தரலாட நாட்டில் அடியிட்டது. ஆங்குத் தன்னை வந்தெதிர்த்த அவனை அமரில் வென்று, அடிமை கொண்டான் சோழர் படைத் தலைவன்; அம்மட்டோ! அவன் உரிமைச் சுற்றமும், உடைமைகள் பலவும் சோழர் உடைமைகளாயின. இறுதியில் தன்னோடு போரிட்டுத் தோற்ற பேரரசர் ஒவ்வொருவர் தலை மீதும் கங்கை நீர் நிரம்பிய குடங்களை எற்றித் தமிழ்நாடு நோக்கி முன்னே போக விட்டுப் பின் தொடர்ந்தான், தமிழ்நாட்டுப் படைப் பெருமையை வடநாட்டு மன்னரெல்லாம் மதிக்கும்படிப் பண்ணி, வெற்றித் திருமகளை, வடநாட்டில் வதுவை முடித்து, பொங்கும் பெருவளத்தோடும் கங்கைத் திருநீரோடும் திரும்பி வரும் தன் படைத் தலைவனை வரவேற்க, இராசேந்திரன் கோதாவரி ஆற்றங்கரையில் காத்து நின்றான். வந்த தலைவனை வாழ்த்தி, வரவேற்றுப் பெருமை செய்தான். பின்னர்ப் பகையரசர் தாங்கி வந்த கங்கை நீரால் தலைநகரைத் தூய்மை செய்து, அந்நகர்க்கு அவ்வெற்றியை நினைவூட்டும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் திருப்பெயர் இட்டான்; கங்கை கொண்ட சோழன் எனத் தானும் ஒரு புதுப் பெயர் புனைந்து கொண்டான்; தான் அமைத்த ஏரிக்கும் சோழ கங்கம் என அவ்வடநாட்டு வெற்றியால் பெயர் சூட்டினான்.
வடநாட்டு வேந்தர்களையெல்லாம் வென்று, கங்கை நீரைக் கொணர்தல் வேண்டும் என்ற வேட்கை நிறை வேறியதும், இராசேந்திரன் கடாரப் படையெடுப்பில் கருத்தைச் செலுத்தினான் . கங்கைப் படையெடுப்பில் செய்ததுபோல், படைத் தலைமையை இப்போது பிறர் பால் ஒப்படைக்க கருதினானல்லன், கடாரப் படையெடுப்பு கலங்களின் துணையால் நடைபெறுதல் வேண்டும். ஆகவே, அக்கலங்களைக் காலமும் நிலையும் அறிந்து செலுத்திச் செல்லும் சிறந்த அறிவுடையான் ஒருவனே அப்படையெடுப்பிற்குத் தலைமை தாங்கிச் செல்லுதல் வேண்டும் என உணர்ந்த இராசேந்திரன், அப்பெரும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டான். சோணாட்டின் சிறந்த கடற்றுரையாகிய புகார் நகரை விட்டு, போர் வீரர்களைத் தாங்கிய போர்க்கலங்கள் பல, கீழ்த்திசை நோக்கிப் புறப்பட்டன. பலநாள் கழித்து, கலங்கள், இக்காலை சுமத்ரா என வழங்கும் நாட்டின் மேற்கரையில் இருந்த அந்நாட்டின் தலைநகரும், சிறந்த துறைமுகப் பட்டினமுமாகிய பூரீவிசய நகரில் கரையேறின. கலங்களில் வந்திறங்கிய வீரர்களைத் துணைக் கொண்டு, மலேயா, சுமத்ரா நாடுகளை உள்ளடக்கிய பெருநாடாய், பூரீவிசய நாடு எனும் சிறப்புப் பெயருடையதாய் விளங்கிய நாட்டின் வேந்தனாகிய சங்கிராமவிச யோத்துங்கவர்மனை வென்று அடிமை கொண்ட இராசேநதிரன், அவன் பட்டத்து யானையையும், பெரும் பொருட்குவியலையும், வித்தியாதரத் தோரணத்தையும் கவர்ந்து கொண்டான். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, அந்நாட்டின் சிறந்த பெரிய நகரங்களாய பண்ணை, மலையூர், மாயிருடிங்கம், இலங்காசோகம், மாபப்பாளம், இலிம்பங்கம், வளைப்பந்தூர், தக்கோலம், தமாலிங்கம், இலாமுரிதேசம், கடாரங்களுக்கெல்லாம் சென்று, வெற்றிக் கொடியை நாட்டி விட்டுத் தாய்நாடு திரும்பினான்; வழியில் மாநக்கவாரத் தீவுகளில் தங்கி அங்கும் தன் ஆற்றலை நிலைநாட்டி வந்தான்.
கலம்பல செலுத்திக் கடல் கடந்து சென்று கடாரத்தை வென்ற இவ்வரிய செயலை, இராசேந்திரன்,
வெறும் வெற்றிப் புகழ் ஒன்றையே கருதி மேற்கொண்டானல்லன்; மாறாக, அக்கடாரத்திற்குக் கடல் வாணிகம் கருதிச் சென்று வாழும் எண்ணிலாத் தமிழ் மக்களுக்கு, அந்நாட்டு மன்னனால் நிகழ்ந்த இன்னலைப் போக்கி, அவர்க்கு இனிய வாழ்வளிக்கவே, அவ்வரும் பெரும் பணியை விரும்பி மேற்கொண்டான்.
கடார வெற்றிக்குப் பின்னர், இராசேந்திரன் சிந்தை யும் செயலும் அரசியல் துறைகளில் சென்றில; அரசியற் பொறுப்புக்களையெல்லாம் தொண்டை மண்டலத்தும், பாண்டி மண்டலத்தும், சேர மண்டலத்தும், ஈழ மண்டலத்தும் இருந்து அம்மண்டலங்களின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நிற்கும் தன் அரும்பெறற் புதல்வர்கள்பால், சிறப் பாகத் தன் மூத்த மகனாகிய இராசாதிராசன்பால் ஒப்படைத்துவிட்டு ஒய்வு பெற்றுக் கொண்டான்; அந்நாள் முதல் அவன் சைவசமய வளர்ச்சியும், தமிழ்மொழி வளர்ச்சியுமே தன் தலையாய கடமையாகக் கொண்டு வாழ்ந்தான்.
தன் தந்தை, முதலாம் இராசராசன் உண்டாக்கிய சோழர் சாளுக்கிய உறவு, சோணாட்டின் நல்வாழ்விற்கு நல்லதுணையாம் என்பதை இவனும் எண்ணித் தன் இளையமகள் அம்மங்கைதேவியாரைத் தன் உடன் பிறந்தாள் குந்தவைப் பிராட்டியாருக்கும் கீழைச்சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கும் பிறந்த இராசராச நரேந்திரன் என்பானுக்கு மணம் செய்துவைத்தான்; பிற்காலத்தே, சோழர்குலத்தையும் சாளுக்கியர் குலத்தையும் ஒன்றாக்கி, இருகுலத்தவர்க்கும் ஒருவனே ஆகிக் கோவோச்சிய குலோத்துங்கனைப் பெற்றெடுத்த பெரியாள், இராசேந்திரன் பெற்ற குலக்கொடியாகிய இவ்வம் மங்கை தேவியே ஆவள்.
இராசேந்திரன் பெற்ற வெற்றிகளுள் ஈடும் எடுப்பும் இல்லாப் பெரு வெற்றிகளாய கங்கை வெற்றியையும், கடார வெற்றியையும் புகழ்ந்து பாராட்டும் பாக்கள் பலப் பல. அவற்றுள் ஒன்று:
- “கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு
- சிங்காதனத் திருந்த செம்பியர் கோன்”
முதல் இராசாதிராசன்: பார் புகழும் பேரரசன், கங்கையும் கடாரமும் கொண்ட இராசேந்திரசோழ தேவனின் மூத்த மகன் இவன். தந்தையின் ஆட்சிக்காலத்தில் இருபத்தாறு ஆண்டுகள் வரையில் இளங்கோவாய் உடன் இருந்து, அரசியல் துறையிலும், அருஞ்சமர் முறையிலும் சிறந்த பயிற்சி பெற்றவன். அக்காலத்தில், சேரர், பாண்டியர், சிங்களர், சாளுக்கியப் போர்க்களப் பொறுப்பனைத்தையும் தான் ஏற்றுத் தந்தையின் தோள் சுமையைக் குறைத்துக் துணைபுரிந்தவன் இவனே. தந்தையின் ஆட்சிக்காலத்தில், தன் தம்பியின் ஆட்சிப் பொறுப்பிலிருந்த பாண்டி நாட்டிலும், சேர நாட்டிலும், அரசிழந்து தலை மறைந்து வாழ்ந்திருந்த அவ்வரசர் மரபில் வந்தோர்களும், சோழர்க்கு அடங்கிய குறுநிலத் தவைவர்களாய் ஆங்காங்கு ஆட்சி புரிந்திருந்தோரும், தனியாட்சி உணர்வுடையராகி விட்டனர்; மதுரை மாநகரிலிருந்து தம்மைக் கண்காணித்து வரும் சோழபாண்டியனை வீழ்த்தி விட்டு, விடுதலை பெறுதற்காம் வழிவகைகளை வகுத்துக் கொண்டிருந்தனர்; அதற்கேற்ற சூழ்நிலை உண்டாகும் வண்ணம், ஆங்காங்கு உள்நாட்டுக் குழப்பங்களை உண்டாக்கத் தலைப்பட்டனர். இஃதறிந்தான் சோழர் குல இளங்கோவாகிய இராசா திராசன்; அக்கலகங்களை அடக்கி அமைதியை நிலைநாட்டப் படையோடு புறப்பட்ட அவன், முதலில் பாண்டிய நாடு சென்றான். ஆங்குப் பெருங் குழப்பம் விளைவித்த பாண்டியர் வழி வந்தோராய, மானாபரணனையும், வீரகேரளனையும கொன்று, சுந்தர பாண்டியன் தன் உடைமைகளை எல்லாம் கைவிட்டுக் காட்டுள் சென்று கரைந்துறையும்படி
அவனை வென்று, பாண்டி நாட்டில் மீண்டும் அமைதியை நிலை நாட்டினான். பின்னர்க் கேரள நாடு புகுந்து ஆங்கு அமைதி குலையக் காரணமாயிருந்த மூவருள் வேணாட்டரசனைக் கொன்றான்; கூபகநாட்டு வேந்தனை வென்று நாட்டை விட்டுத் துரத்தினான்; எலிமலைக் கண்மையில் உள்ள இராமகுட நாட்டனை வென்று அடிமைகொண்டான். இவ்வெற்றிகளால் சோழர் ஆட்சி, சேர நாட்டில் மேலும் வலுப்பெற்றது.
சோணாட்டின் தலைமையைச், சேர பாண்டியர் களைப் போலவே ஈழர்களும் வெறுத்தனர்; அதிலும் கடல் கடந்த நாட்டார், தம் நாட்டில் வந்து தம்மை அடிமை கொள்வதா என்ற வெறுப்புணர்வு வேறு, அவர்கள் உள்ளத்தை வாட்டி வதைத்தது; அதனால் சோழர்களின் ஆட்சித் தலைமையை அழிப்பதில், சேர பாண்டியர்களைக் காட்டிலும் பெரிதும் விரைவு காட்டினர். ஈழநாடு முழுவதும் சோழர் ஆட்சியே நடைபெற்றது என்றாலும், அந்நாட்டின் தென் கிழக்குப் பகுதியாகிய ரோகண நாடு மட்டும் சோழர் ஆணைக்கு அடங்காமலே இருந்தது; சோழர் படை புகமாட்டா மலையரணும், காட்டரனணும் சூழ்ந்து கிடந்த அந்நாட்டையே, ஈழநாட்டுக் கலகத் தலைவர்கள் தலைமை நிலையமாகக் கொண்டு வாழ்ந்தனர்; இராசாதிராசன் ஆட்சிக் காலத்தில் மட்டும், சோழர் படை ஐந்து முறை தாக்கப்பட்டது; அவற்றை முறையே, விக்கிரமபாகு, கித்தி, விக்கம பண்டு, வீரசலாமேகன், பராக்கிரம பண்டு எனும்பெயர் பூண்ட, அந்நாட்டு அரசர் மரபில் வந்தோர் தலைமை தாங்கிநடத்தினார்கள். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையிலும் தோல்வியே கண்டார்கள். விக்கிரமபாகு போரில் மாண்டான். முடி முதலாம் அவன் அரசச் சின்னங்கள் இராசா திராசனால் கைப்பற்றப்பட்டன. கித்தி, போரில் தோற்றுப் புறப் புண் பெற்று மானம் பொறாது தற்கொலை புரிந்து கொண்டான். பாண்டிய மன்னன் ஒருவனுக்கும், ஈழ நாட்டு அரசிளங்குமரி ஒருத்திக்கும் பிறந்து, தாய்ப் பாட்டான் நாடாகிய ஈழநாட்டு அரசுரிமையேற்று வாழ்ந்தோனாகிய விக்கம பண்டு போரில் தோற்றான். அவன் மணி மகுடத்தைத் தன் உடைமையாக்கிக் கொண்டான் இராசாதிராசன். சோழர் படையின் தாக்குதலைத் தாங்கமாட்டாது தோற்ற வீரசலாமேகன், தாய், தமக்கை, தன் மனைவி முதலானோரைக் களத்திலேயே கைவிட்டுக் காட்டுள் சென்று மறைந்தான். பின்னர், சோழர் படை வீரர் தன் தமக்கையை மூக்கரிதல் போலும் இழிசெயல் புரிந்தனர் எனக்கேட்டு, மறமும் மானமும் மிகுந்து, மீண்டும் வந்து போரிட்டுமாளவே. அவன் பொன்முடியைச் சோழர் கைக்கொண்டனர். இறுதியாக வந்து போரிட்ட பராக்கிரமபண்டுவும் புறங்காட்டிப் பழியே மேற்கொண்டான். ஈழநாட்டரசர் பலமுறை முயன்றும், சோழர் ஆட்சியை முறியடிக்க முடியவில்லை, ஈழநாட்டில் சோழர் ஆட்சி அத்துணை வலிமையுடையதாக நிலைபெற்றமைக்கு இராசாதிராசனின் பேராற்றலும் போர்ப்பயிற்சியுமே பெரிதும் காரணங்களாம்.
இராசாதிராசன், தன் வாழ்நாட்காலத்தில் மேலைச்சாளுக்கிய மன்னர்களோடு நடத்திய போர்கள் நான்கு. அந்நாட்டில் அவன்பெற்ற முதல்வெற்றி, இளவரசுப் பட்டம் பெற்று, அவன் தந்தையின் ஆட்சிக்கீழ்ப் பணி புரிந்த காலத்தில் ஆகும். சோணாடடிற்கும் சாளுக்கிய நாட்டிற்கும் எல்லையாக விளங்கியது துங்கபத்திரைப் பேராறே. ஆனால் சிற்சில காலங்களில், அவ்வாற்றின் தென்கரை நாடுகள் சிலவற்றைக் கைப்பற்றி ஆளப் சாளுக்கியர் முனைவதும், அஃதறிந்த சோணாட்டுச் படை, சாளுக்கியர்களைத் துங்கடத்திரையின் வட கரைக்குத் துரத்துவதோடுவிடாது, தொடர்ந்து சென்று, அவர்களை அவர்கள் நாட்டிலேயே போரிட்டு வெல்வதும் வழக்கங்களாகிவிட்டன.
இராசாதிராசன் இளவரசனாய் இருக்கும் காலத்தில், ஆகதமல்லசோமேசுவர்ன் என்பான், சாளுக்கிய நாட்டில் அரசு கட்டில் ஏறினான். அரியணையில் அமர்ந்ததும், தன் ஆற்றலை நாட்டவர்க்குக் காட்டவேண்டும் என்ற ஆர்வம் அவனைப் பற்றிக்கொண்டது; சேணெடும் நாட்டினராகிய சோழர் தன் அண்டை நாட்டில் ஆணை செலுத்துவது தன் ஆண்மைக்கு இழுக்காம்; தன் ஆற்றலைப் பழிப்பது போலாம் என்று எண்ணினான்; உடனே சோழர் ஆட்சிக் குட்பட்ட ஊர்கள் சிலவற்றைக் கவர்ந்து தன் காவற்கீழ் வைத்துக்கொண்டான்; அது கேட்டான் சோழர்குலப் பேரரசன் இராசேந்திரன். அவ்வளவே, சோழர் பெரும் படையொன்று இராசாதிராசன் தலைமையின் கீழ்த் துங்க பத்திரை ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டில் புகுந்து விட்டது. பாய்ந்துவரும் சோழர் படையைத் தடுத்து நிறுத்திப் போரிட்டுத் துரத்த, ஆகவமல்லன் மக்கள் இருவரும், படைத் தலைவர் மூவரும் படையோடு விரைந்து வந்தனர். இரு திறம்படையினருக்கும் பெரும் போர் நிகழ்ந்தது; போரில் சாளுக்கியப் படைத் தலைவர் இருவர் களத்திலேயே மாண்டனர்; அஃதறிந்த மன்னன் மக்கள் இருவரும் எஞ்சிய படைத் தலைவனோடு களத்தை விட்டோடி எங்கோ கரந்துகொண்டனர். இராசாதிராசன் சாளுக்கிய படைத் தலைவர் களத்தில் விட்டுச் சென்ற களிறுகளையும், குதிரைகளையும் கணக்கிலாப் பிறபொருள்களையும் கைப்பற்றிக் கொண்டு திரும்பினான். திரும்பும் சோழர் படை வாளா திரும்பாது, வழியிடையுள்ள, கொள்ளிப்பாக்கைடோலும் சாளுக்கிய ஊர்களை எரியூட்டி அழித்தவாறே வந்து சேர்ந்தது.
இரண்டாண்டுகள் கழிந்தன; மேலைச்சாளுக்கிய மன்னன், மீண்டும் மண்ணாசைக்கடியனாகிவிட்டான்; சோழர் ஆட்சிக்குட்பட்ட நிலத்தில் மீண்டும் அடியிட்டான் மேலைச்சாளுக்கியர்களை முற்றிலும் வென்று, அவர்களைத் தமக்கு வழிவழி அடிமையாக வைத்துக்
கொள்ளுதல் வேண்டும் எனும் வேட்கையுடையோராகிய சோழர்குல வேந்தன், இராசாதிராசனுக்குச் சாளுக்கியரின் இச்சிறு செயல் சினத்தியை மூட்டிவிட்டது. அவ்வளவே; சிறிதும் காலங்கடத்தாது, துங்கபத்திரை ஆற்றைக் கடந்து விட்டான், சாளுக்கிய ஆட்சிக்கு அடங்கிய சிற்றரசர் பலரை வென்று துரத்திவிட்டு, அவர் ஆண்ட நாடுகளில் தன் ஆணை நடைபெறப் பண்ணி னான்; சாளுக்கியர்பால் அவன் கொண்ட சினம் அந்த அடிவோடு அமைதியுற்றிலது, சாளுக்கிய மன்னர்களின் வாழிடமாகிய கம்பிலிநகரை அடைந்து ஆங்குள்ள அம் மன்னர் மாளிகைகள் அனைத்தையும் இடித்துப்பாழ் செய்துவிட்டு, அந்நகர் நடுவே, ஆங்குத் தான் பெற்ற வெற்றியை எக்காலத்தவரும் எந்நாட்டவரும் உணர்தல் வேண்டும் என்ற விழைவால், வெற்றித் துரண் ஒன்றை நாட்டிவிட்டு வந்து சேர்ந்தான். -
தன் பேரரசின் வடவெல்லையில், இடைவிடாது குறும்பு புரியும் ஒரு பேரரசை வாழவிடுவது, தன் அரச வாழ்விற்கு அரண வரிப்பதாகாது என்ற உண்மையை உணர்ந்த இராசாதிராசன், அவ்வரசின் வலியழிக்கும் செயலை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனத் துணிந்தான் அதைக் குறைவறச் செய்து முடிக்கவல்ல பெரும்படை துணைசெய்யத் தலைநகர் விட்டுப் புறப்பட்டான்; கம்பிலிப்போர் முடிந்து இரண்டாண்டுகள் கழிவதற்கு முன்பே, சோழர்படை சாளுக்கிய நாட்டில் மீண்டும் புகுந்துவிட்டது. இம்முறை சோழர் படை துங்க பத்திரை ஆற்றங்கரையோடு நின்று விடவில்லை: சாளுக்கிய அரசு நிலவும் அகநாட்டில் நெடிது சென்று, கிருஷ்ணை ஆற்றங்கரையை அனுகிவிட்டது. அவ்வாற்றங்கரை நகராகிய பூண்டுரில் பாடிக்கொண்டிருந்த சாளுக்கியப் படைத்தலைவர் அறுவரையும் அவர்க்குத் தலைமை தாங்கி நின்ற பெரும்படைத் தலைவனாகிய விச்சையன் என்பானையும் வென்று, அவன் தாய்-தந்தை
யரையும் அந்நாட்டு மகளிர் பலரையும் கைப்பற்றிச்சிறை செய்ததோடு அமையாது, அந்நகரைச் சுற்றியிருந்த அரணையும், மதிலையும் அழித்துவிட்டு, அந்நகர்க்கு அணித்தாக இருந்த பேரூரில் உள்ள மன்னர் மாளிகைகளை மண்மேடாக்கிவிட்டு, அச்சாளுக்கியர் சின்னமாம் வராகம் பொறித்த கொடி பறந்த வராகக்குன்றில், அதை அகற்றிவிட்டுப் புலி பொறித்த கொடியைப் பறக்கவிட்டு, பாராட்டத்தக்க பெருமை வாய்ந்த அந்நாட்டுப் பெரு நீர்த்துறைகள் மூன்றிலும் தம் பட்டத்து யானையை நீராட்டி விட்டு இறுதியில் சிறிதே ஒய்வுபெற ஒரிடத்தில் பாடி கொண்டிருந்தது சோழர் பெரும்படை. அவ்வாறு பாடி கோண்டிருக்குங்கால், அப்படையின் நிலையுணர ஆங்கு வந்த ஆகவமல்லன் ஒற்றர்கள், சோழர் படைவீரரின் கையில் சிக்கிக் கொண்டனர். இராசா திராசன் அவர்களைக் கொல்லாது, அவர்கள் மார்பில், ‘ஆகவமல்லன் அஞ்சிப் புறங்காட்டுகின்றனனே யல்லது ஆற்றல் காட்டிப் போரிடப் புறப்பட்டிலன்” என்று எழுதித் துரத்தி விட்டான். சின்னாள் கழித்து, ஆகவமல்லன் அமைச்சன் ஒருவன் மெய்க்காப்பாளர் உடன் வரச் சந்துசெய்து போர் தணிக்கும் கருத்துடையவனாய்ச் சோழன் பாடி கொண்டிருக்கும் பாசறைக்குள் புகுந்தான். சோணாட்டு வீரர்கள், உடன் வந்த மெய்க்காப்பாளருள் ஒருவருக்கு ஐங்குடுமி வைத்து ஆகவமல்லன் என்று பெயர் சூட்டியும், மற்றொருவனுக்குப் பெண்ணுடை அளித்து ஆகவமல்லி என்று பெயர் சூட்டியும் புறத்தே துரத்தினார்கள்.
சோழர் பெரும் படையை வெல்லும் ஆற்றல் தனக்கு இல்லை என அறிந்து அடங்கியிருக்க விரும்பிய ஆகல மல்லன், சோழ வீரர்கள் தன் அமைச்சருக்கும் தன் ஒற்றர்க்கும் செய்த அவ்விழி செயலை எண்ணி எண்ணி வருந்தினான்; இறுதியில் அவமானம் பொறுக்காது, போருக்குப் புறப்பட்டு விட்டான். போரில் சாளுக்கியப் படைத்தலைவர் அனைவரும் புறமுதுகிட்டு ஓடிவிட்டனர்;
துணை வந்த மன்னன் ஒருவனும் மாண்டு போனான். சாளுக்கியப் பேரரசின் தலைநகராம் பெருமைமிக்க கல்யாணபுரம் சோழர் கைப்பட்டது. இராசாதிராசன், அந்நகர் நடுவே அமைந்திருந்த அரண்மனையை அறவே அழித்துவிட்டு, ஆங்குத் தான் பெற்ற வெற்றிக்கு அறிகுறி யாக, அந்நகரிலேயே வீராபிஷேகம் செய்து கொண்டான்; விசயராசேந்திரன் என்ற பட்டத்தையும் குட்டிக் கொண்டான்.
கல்யாணபுர வெற்றிக்குப் பின்னர் எட்டாண்டுகள் கழிந்தது. இராசாதிராசன், மேலைச்சாளுக்கியரோடு மீண்டும் போர்தொடுத்தெழ வேண்டிய நிலைவந்துற்றது. சோழர்கள் சாளுக்கியர்க்கு விளைத்த இழிவை எண்ணி எண்ணித் துன்புற்ற ஆகவமல்லன், அச்சோழரை என்றேனும் ஒருநாள் எவ்வாறேனும் வென்று பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று துணிந்தான்; இந்த எட்டாண்டு காலத்தில், தன் படையை அதற்கேற்ற வகையில் பெருக்கினான்; பிறநாட்டு அரசர்களின் துணையை வேண்டிப் பெற்றான்; ஆகவமல்லன் செய்யும் முன்னேற்பாடுகளை அறிந்தான் சோழ மன்னன் இராசாதிராசன்; மேலும் காலம் தாழ்த்தின் அவன் கை வலுத்துவிடும்; ஆகவே அவன் படைபலம் மேலும் பெருகாத முன்பே அவனை அழித்து விடவேண்டும் எனத் திட்டமிட்டான்; இராசாதிராசன் ஆண்டும் முதிர்ந்துவிட்டது; தன் வாழ்நாள் முழுவதும் ஒயாப்போர் மேற்கொண்டு அலைந்ததால், அவன் உடலும் தளர்ந்திருந்தது. விரைந்து சென்று வீழ்த்தி விடவேண்டும் என்ற நினைவால், பெரும் படையைத் திரட்டிக் காலத்தைக் கழிக்க அவன் விரும்பவில்லை. அதனால் உள்ள படையோடு உடனே புறப்பட்டுக் கிருஷ்ணை ஆற்றங்கரையை அடைந்து விட்டான்; அவ்வாற்றங்கரைப் பேரூர்களில் ஒன்றாகிய கொப்பத்தில் போர் தொடங்கிவிட்டது. இம்முறை இராசாதிராசனே படைத் தலைமையேற்று, பட்டத்து யானைமீது ஏறிப்
க-4
போர்க்களம் புகுந்தான்; அஃதறிந்த ஆகவமல்லன் தன் படைக்குத் தானே தலைவனாகிக் களம் புகுந்தான்,வெற்றி யாருக்கு வாய்க்கும் என்பதைத் துணிந்துகூறஇயலாத வகையில் போர் கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. சாளுக்கியர்களின் தோல்விக்கெல்லாம் இராசாதிராசனே காரணமாம்; ஆகவே அவனைக் கொன்றாலல்லது தமக்கு வாழ்வில்லை எனச் சாளுக்கியப் படைத் தலைவர் அனைவரும் உணர்ந்திருந்தனர். ஆதலின், அவர்கள் எல்லோரும் ஒன்று கூடி வந்து இராசாதிராசனைச் சுற்றி வளைத்துக் கொண்டு ஒருமுகமாகப் போரிட்டனர். தனியொருவனாக நின்று போரிட்ட இராசாதிராசனால், படைத்தலைவர் பலரும் கூடித்தாக்கும் தாக்குதலைத் தாங்க இயலாது போயிற்று. அம்பேறுண்டு அவன் யானையும் இறந்தது; அதன் மீது அமர்ந்தவாறே அவனும் மாண்டான்.
வேந்தன் வீழ்ந்தான் எனக் கேட்டுச் சோழர் படை சிறிதே சோர்வுற்றது என்றாலும், உடன் வந்திருந்த இளவல். அந்நிலையே அக்களத்தில் அரசுரிமை தாங்கி, அஞ்சல் அஞ்சல்! எனக் கூறிவந்து அரும்போர் புரிந்து, சற்றுமுன் பெற்ற தோல்வியைப் பெறுவெற்றியாக மாற்றி விட்டான்.
கொப்பத்தில் சோழர் வெற்றியே பெற்றனர் என்றாலும், சோணாடு சிறந்த பேரரசன் ஒருவனை இழந்த பேரிழப்பிற்கு உள்ளாகிவிட்டது; சோணாட்டு மக்கள் சிந்தை நொந்து வருந்தினர்; ஆனால் சோணாட் டுப் புலவர்கள் ‘கல்யாணபுரமும், கொல்லாபுரமும் எறிந்து யானைமேல் துஞ்சின உடையார் விசயராசேந் திரன்’ என இராசா திராசன் புகழ்பாடி வாழ்த்தினார் கள். - -
இரண்டாம் இராசேந்திரன்: கங்கையும் கடாரமும் கொண் டோன். எனக் கொண்டாடப் பெறும் முதல் இராசேந்திர சோழனின் ஆண் மக்கள் ஐவருள்ளும் நடுப் பிறந்தோன் இவ்விராசேந்திரன் அம்மக்கள் ஐவருள்ளும் நாடாண்ட மக்கள் அவர்; மூவருள்ளும் நடுவில் நிற்போன் இவனே. தன் தந்தை இராசேந்திரனை அடுத்து நாடாண்ட அண்ணன் இராசாதிராசனுக்குப் பெருந்துணையாய் நின்று, ‘தம்பி யுடையான் படைக்கு அஞ்சான்’ என்ற பழமொழிக்கு நல்ல இலக்கியமாய் இருந்து புகழ் பெற்றவன் இவன். தனக்கு இவனாற்றிய துணையின் பெருமையளவை நன்கு அறிந்த இராசா திராசன் தனக்குத் ‘தம்பி துணைச் சோழன்” என்ற ஒரு பெயரைச் சூட்டிக் கொண்டதோடு தொண்டை நாட்டை வளநாடு ஒன்றிற்கும்.அப்பெயரைச் சூட்டி இவனைச் சிறப்பித்துள்ளான் எனில் இவன் அண்ணன் மாட்டுக் கொண்டிருந்த அளப்பரிய அன்பின் பெருமையை என்னவென்பது.
இராசாதிராசன், மேலைச்சாளுக்கிய மன்னன் ஆகவ மல்லனோடு மேற்கொண்ட நாலாவது போரில் அண்ணனோடு உடன் சென்று பெருந்துணை புரிந்து நின்றான் நம் இராசேந்திரன். களிறுமீதமர்ந்து களம்புகுந்த இராசாதிராசன் இறந்தான் என்பதறிந்து செயல் இழந்து சிதறிய சோழர் படைகளை ஒன்று திரட்டி, ஊக்கம் ஊட்டி வெற்றிக்கு வழி செய்தவன் இவனே. இராசாதிராசனைக் கொன்ற சாளுக்கியமன்னனும் படை மறவரும், இவனையும் சூழ்ந்துகொண்டு கடுமபோர் புரிந்தனர் என்றாலும், அவர்கள் அனைவரையும் வென்று அக் களத்தில் வாகை சூடினான்; என்மருக்கும் மேற்பட்ட அவர் படைத்தலைவர்களைக் கொன்றும், ஆகவமல்லனை யும் மற்றுமுள்ள படைத் தலைவர் மூவரையும், களத்தை விட்டுக் கண்காணா இடம் ஒடத் துரத்தியும், சத்துரு பயங்கரன், கரபத்திரன், மூலபத்திரன் என்ற பெயர் சூடிய சாளுக்கியன் பட்டத்து யானைகள் உள்ளிட்ட யானைகள் ஆயிரமும், எண்ணிலாக் குதிரைகளும், ஒட்டகங்களும், மட்டிலாப் பொருள்களும் ஆகிய பெரும் பொருளைக் கவர்ந்தும், சாளுக்கிய குலதேவியர் பலரைச்
சிறைசெய்தும், அந்நாட்டுத்தலைநகர் கொல்லாபுரத்தில் வெற்றித் தூண் நாட்டியும், விஜயாபிஷேகம் செய்து கொண்டும், சோணாட்டுத் தலைநகர்க்குச் செம்மாந்து திரும்பினான், இச்சோழர்குலக்குரிசில்.
ஈழநாட்டு மன்னர்கள், தங்கள் மண்ணுரிமையைப் பெறும் கருத்தோடு அவ்வப்போது செய்யும் கிளர்ச்சி, இரண்டாம் இராசேந்திரன் காலத்திலும் உரம் பெற்று உயிர்த்தெழுந்தது என்றாலும், இறுதியில் இருந்த இடம் தெரியாதவாறு அழிக்கப்பட்டு விட்டது; அதில் பங்கு கொணட ஈழ நாட்டு மன்னன் மானாபரணன் மக்கள் இருவரையும் சிறைசெய்தும், அப்போருக்குத் தலைமை தாங்கி முன்னின்ற வீரசலாமேகனைக் கொன்றும் வெற்றி கண்டான் இராசேந்திரன்.
பேராற்றங்கரைக் கொப்பத்தில் நடந்த போரில், இராசேந்திரனால் தோல்வியுண்டமையை எண்ணி எண்ணி வருந்திய ஆகவமல்லன், ஆங்குதான் பெற்ற பழியைத் தீர்த்துக்கொள்ளத் துணிந்து, மீண்டும் ஒரு பெரும்படையைத் திரட்டிக்கொண்டு வந்து, அந்நாட்டில் முடக்காறு என்னும் இடத்தில் பாடிக் கொண்டிருந்த இராசேந்திரனை எதிர்த்துப் போரிட்டான்; ஆனால் அந்தோ? அங்கும் அவன் தோல்வியே கண்டான்; வெற்றித் திருமகள் இம்முறையும் இராசேந்திரனுக்கே மாலை சூட்டினாள்.
இரண்டாம் இராசேந்திரனுக்கு ஆண்மக்கள் அறுவர்; பெண்மகள் ஒருத்தி. உத்தம சோழன் போலும் பட்டப் பெயர்கள் அளித்து, ஆண்மக்களைப் பெருமை செய்த இராசேந்திரன், பாண்டி மண்டலத்தை வென்று கைப் பற்றிய தன் குலத்தவரின் பெரும்புகழ், பாரெலாம் சென்று பரவும் வகையில், மகளுக்கு மதுராந்தகி எனப் பெயர் சூட்டிப் பெருமை செய்தான். தன் உடன் பிறந்தாள் அம்மங்கைதேவிக்குக் கீழைச் சாளுக்கிய இராச
ராசேந்திரன்பால் பிறந்த வீரத்திருமகனும், பிற்காலத்தில் தன் இருகுலமும் ஒரு குலமாய் உயர்ந்தோங்க உலகாண்ட உரவோனுமாகிய குலோத்துங்கனுக்கு, மகள் மதுராந்தகியை மணம் முடித்து மனம் நிறை மகிழ்வெய்தினான்.
வீரராசேந்திரன். மக்கட் செல்வத்தால் மாண்புற்ற மன்னன், கங்கைகொண்ட சோழன் ஈன்ற கான் முளை களுள், வீரராசேந்திரனும் ஒருவன். ஆவணித் திங்கள், ஆயிலியத்திருநாளில் பிறந்த இவன், அண்ணன் இரண்டாம் இராசேந்திரன் காலத்திலேயே இளவரசுப் பட்டம்பெற்று விளங்கினான், வீரமே துணையாகவும், தியாகமே அணியாகவும் வாழ்ந்த வீரராசேந்திரன், தன் பெயருக்கேற்ப, பேராற்றல் படைத்த பெருவீரனாகவே விளங்கினான். இவன் வாழ்நாள் முழுவதும்; வட வெல்லைப்வ போர்களிலேயே கழிந்து விட்டது.
வடவெல்லையைக் காப்பதில், இவன், தன் தமையன் மார் இருவரினும் பெருவிழிப்புடையவனாய் வாழ்ந்தான்; அதனால் வடவெல்லை வாழ்வோராகிய மேலைச் சாளுக்கியரோடு வாழ்நாளெல்லாம் ஒயாப் போர் மேற் கொண்டிருந்தான்; அவர்களை ஐந்துமுறை வெற்றிக் கொண்டு, ஆங்கு அழிக்கலாகா ஆட்சியை நிலைநாட்ட ஆசைகொண்ட தன் அண்ணன் மார் இருவர் கனவுகளையும் நினைவாக்கினான். வெங்களத்து ஆகவமல்லனை ஜம்படி வெந்கண்டு, வேங்கை நாடு மீட்டுக்கொண்டு. தன்னுடன் பிறந்த முன்னவர் விரதம்முடித்தான்” என அவன் மெய்க்கீர்த்தி அவனைப் பாராட்டுவது அறிக.
வீரராசேந்திரன், சோணாட்டு மன்னனாய் மணிமுடி புனைந்த மகிழ்ச்சியில், வடவெல்லைக் காவலைச் சிறிதே மறந்திருக்கும் காலம் நோக்கி, ஆகவமல்லனின் இளைய மகன் விக்கிரமாதித்தன், சோழர் ஆணைக்கு அடங்கிய கங்கபாடியைக் கைப்பற்ற திட்டமிட்டான். அஃதறிந்த வீரராசேந்திரன், அக்கணமே அமர்மேற்கொண்டு சென்று, ஆகவமல்லன் மகனையும், அவன் படைத்தலைவர்
அனைவரையும் வென்று, துங்கபத்திரை யாற்றிற்கு அப்பால் துரத்தினான்.
சோழர்களோடு மூன்று தலைமுறைகளாகப் போரிட் டும் அவர்களை முறியடிக்க முடியாமையைக் கண்டு குந்தள நாட்டுக் காவலன் ஆகவமல்லன், வடவெல்லைப் போர்களில், வெற்றி சோழர் பக்கமே நிற்பதற்கு யாது காரணம் என்பதை எண்ணிப் பார்த்தான். சோணாட்டின் வடவெல்லையில் சோழரோடு பகைகொண்டு வாழ்வார் ஒருவரும் இலர்; அதுமட்டு மன்று, அவர்க்கு உற்ற துணை புரியும் அரசொன்றையும் ஆங்கு அவர்கள் அமைத்திருக்கின்றனர்; தன்னோடு தாயமுறையினராகிய கீழைச்சாளுக்கியர், தனக்குத் துணைபுரியாது, சோழர்க்கே துணைபுரிகின்றனர்; வடவெல்லையில் படைத் துணை அளிக்கும் ஒரு பேரரசைப் பெற்றுள்ளமையினாலேயே சோழர்களுக்கு வடபுலப் போர்களில், வெற்றி எளிதில் வாய்த்து விடுகிறது என்ற உண்மையை உணர்ந்தான் ஆகவமல்லன். உடனே, வீரராசேந்திரனை வெற்றி கொள்வதன் முன்னர், அவன் படை பலத்தைக் குறைத்துத் தன் படைபலத்தைப் பெருக்கிக் கொள்ளும் வகையில், கீழைச் சாளுக்கிய நாடாகிய வேங்கி நாட்டுத் துணையை அடைவதற்கான ஆக்க வேலைகளில் ஆகவமல்லன் சிந்தை சென்றது. அதற்கேற்ற சூழ்நிலையும், வேங்கி நாட்டில் அப்போது உருப் பெற்றிருந்தது. அக்காலை, அந்நாட்டு அரியணையில் அமர்ந்திருந்த வீரராசேந்திரன் உடன் பிறந்தாள் அம் மங்கை தேவியாரின் கணவனாகிய இராசராசநரேந்திரன் இறந்து விட்டான். சோழர்களோடு மண உறவுகொண்ட மன்னர் வழிவந்த அம்மன்னன் மறைவே, அவர்க்கும், சோழர்க்கும் இடையே ஏற்பட்டிருந்த நட்புறவின் மறைவாதல் வேண்டும் என மனத்துக்கொண்ட ஆகவமல்லன், உடனே, தன் தண்டத் தலைவன் ஒருவனைப் பெரும் படையோடு, வேங்கி நாட்டின் மீது ஏவினான். அதை அறிந்தான் வீர ராசேந்திரன், தன் பாட்டனும், தங்கள்
குலப் பேரரசனுமாகிய இராசராசனின் பரந்தகன்ற அரசியல் அறிவின் பயனாய் ஏற்பட்ட வேங்கி நாட்டுத் தொடர்பு விட்டுப் போவதை, வீரராசேந்திரன் விணே பார்த்துத் கொண்டிருப்பனோ? சோணாட்டு வட வெல்லைக் காப்பிற்கு வேங்கி நாட்டுறவு, எத்துணை இன்றியமையாதது என்பதை உணர்ந்தவனாதலின், வீர ராசேந்திரனும் வேங்கிநாடு நோக்கி விரைந்தான்; சென்று தாக்கும் போரினும் நின்ற தாக்கும் போரிலேயே கருத்து அதிகமாம் ஆதலின், சோழர் படை பேராற்றல் காட்டிப் போரிட்டது சாளுக்கிய தண்ட நாயகன் வேங்கி நாட்டுக் களத்தில் மாண்டு வீழ்ந்தான். வீரராசேந்திரன் வெற்றிகொண்டான், வேங்கி நாட்டுறவை அசைக்க முடியாத தாக்கி அம்மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான்.
வீரராசேந்திரன் வீடு திரும்பினான் என்றாலும், ஆகவமல்லன் ஆசை அடங்கினானல்லன். சோழர் படையைத், துங்கபத்திரையாற்றை விட்டுத் துரத்தும்வரை அவன் கண்கள் துங்கா வாயின. அதனால், மீண்டும் ஒரு பெரும் படையைத் திரட்டிக் கொண்டு வந்து சேர்ந்தான். கிருஷ்ணையும் துங்கபத்திரையும் கூடும் இடமாகிய கூடல் சங்கமத்தில் சோழர் படையை எதிர்த்துப் போரிட்டான்; இம்முறை ஆகவமல்லன் மக்கள இருவரும் தந்தைக்குத் துணையாக வந்திருந்தனர்; பெரும்போர் நடைபெற்றது; முடிவில் ஆகவமல்லன் படைத் தலைவர் அறுவர் கொல்லப்பட்டனர்; அவன் மக்கள் இருவரும் எங்கோ ஒடி ஒளிந்து கொண்டனர், ஆகவமல்லனும் புறங்காட்டினான். வீரராசேந்திரன், ஆகவமல்லன் அரணை வளைத்துக்கொண்டு அவன் மனைவியரையும், புட்பகப்பிடி என்னும் பெயர்பூண்ட பட்டத்து யானை யையும், வராகக் கொடியையும், எண்ணற்ற களிறுகளையும், குதிரைகளையும், கணக்கற்ற பொருள்களையும் கைப்பற்றிக் கொண்டு கங்கை கொண்ட சோழபுரம் அடைந்து வெற்றி விழாக் கொண்டாடினான்.
வீரராசேந்திரன் சிந்தையும் செயலும் வடவெல்லைப் போர்களிலேயே சென்றுள்ளன என்பதை உணர்ந்த, சேர பாண்டிய சிற்றரசர் சிலர், அந்நாடுகளில், அவன் ஆட்சியை எதிர்த்துக் குழப்பம் விளைவித்தனர். வட நாட்டுப் பெரும் போர்களில் ஈடுபட்டிருக்கும் அந்நிலையில், தென்னாடு அமைதி இழப்பது, ஆட்சியின் அரண் அழிவது போலாம் என அறிந்த வீரராசேந்திரன், அக் குழப்பத்திற்குக் காரணமாயிருந்த குறுநிலத் தலைவர்களைக் கொன்றான். அவர்க்குத் துணையாய் நின்று போரிட்ட படைகளையும் கைப்பற்றிக் கொண்டான். உயிர் பிழைத்த ஒரு சிலரும், அவன் ஆணைக்கு அடங்கி வாழ முன்வந்து, அவன் விரும்பும் திறை செலுத்தினார்
தமிழ் நாட்டில் இது நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, ஆகவமல்லன் விடுத்த அறைகூவல் வந்து ஒலித்தது. இம்முறை, மேலைச்சாளுக்கியப் பெரும்படைக்கு, கங்கர்களும், நுளம்பர்களும், காடவர்களும், வைதும்பர்களும் துணையாக வந்து நின்றார்கள். ஆனால், அந்தோ! அவர்கள் ஆரவாரமெல்லாம் வீரராசேந்திரன் களம்புகும் வரையே காட்சி அளித்தன. அவன் களம் புகுந்தான்; ஆகவமல்லன் படைகட்குத் தலைமை தாங்கி நின்ற படைத்தலைவர் அறுவரும்.அப்போதேமாண்டனர்:துணை வந்த அந்நான்கு நாட்டவரும் உயிர் இழந்தனர்; பல நாட்டார் துணை செய்யப் பெரும்படையோடு களம் புகுந்தும் வெற்றி பெறமாட்டாது வீடு திரும்பினான் ஆகவமல்லன்.
ஆகவமல்லன் அரண்மிக்க இடம் புகுந்து ஒளிந்து கொண்டான்; அவன் மனமோ, அவமானத்தால் குன்றி விட்டது: வீரராசேந்திரனை வெற்றிக்கொள்ளாது வாழ்வதைக் காட்டிலும், களத்தில் வீழ்ந்து மண்ணாவதே மேல் எனக் கருதிற்று; உடனே, பண்டு போரிட்டுத் தோற்ற கூடல் சங்கமப் போர்க்களத்திற்குத் தான் வருவதாகவும்,
அங்குத் தன்னோடு போரிட வரும்படியும், அவ்வாறு வராதவர் போரில் புறமுதுகு இட்டவராகவும், புரட்ட ராகவும் கருதிப் பழிக்கப்படுவர் என்றும், வீரராசேந்திரனுக்கு ஒலை போக்கினான். ஒலைவரப் பெற்ற சோழர் குலப் பெருவீரன், உள்ள மகிழ்ச்சியால், உருண்டு திரண்ட தோள்கள் இரண்டும் பருத்துக்காட்ட விரைந்து களம் அடைந்து, ஆகவமல்லன் வரவுக்காகக் காத்துக் கிட ந்தான்.
ஆனால் ஒலைபோக்கிய ஆகவமல்லனால் கூடல் சங்கமக் களத்திற்கு வர இயலவில்லை. அவன் உடல்நலம் திடுமெனக்குன்றிவிட்டது; வாடாவெப்புநோய் அவனைப் பற்றி வாட்டிற்று, மருத்துவர் பலமுயன்றும் தணிக்க மாட்டா அக்கொடு நோயால், தாங்கலாகாத துன்பம் அடைந்த ஆகவமல்லன், துங்கபத்திரை ஆற்றில் வீழ்ந்து உயிர் துறந்து போனான்; ஆகவமல்லனுக்கு நேர்ந்த இக் கதியை வீரராசேந்திரன் அறியான்; அதனால் ஒரு திங்கள் வரையும் ஆங்குக் காத்துக்கிடந்த அவன் ஆகவமல்லன் ஆட்சிக்கு அடங்கிய அவன் சிற்றரசர் பலரை வென்று துரத்தினான்; அவர் நாடுகளை எரியூட்டினான்; துங்க பத்திரைய்ாற்றின் கரையில் வெற்றித்துண் ஒன்றை நாட்டினான். ஆகவமல்லனைப் போன்ற சிலை ஒன்று செய்து, அவனும், அவன் மக்களும் தன் பால் ஐந்துமுறை தோற்ற செய்தி பொறிக்கப் பெற்ற ஒரு பலகையை அதன் மார்பில் மாட்டி மானபங்கம் செய்தான்.
வீரராசேந்திரன், இவ்வாறு கூடல்சங்கமக் களத்தில் வெற்றிக் களியாட்டங்களில் மூழ்கியிருந்த அதேநேரத்தில், ஆகவமல்லனுடைய இரண்டாம் மக னாகிய விக்கிரமாதித்தன் கீழைச் சாளுக்கியரை வென்று வேங்கி நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்: அஃதறிந்த விர ராசேந்திரன், கூடல் சங்கமத்திலிருந்தே வேங்கிநாடு நோக்கிப் புறப்பட்டான்; இடையில் ஆங்காங்கே வந்தெதிர்த்த மேலைச்சாளுக்கியப் படைகள் அனைத்தையும்
வெற்றி கொண்டவாறே, கோதாவரியைத் தாண்டி, கலிங்கநாட்டைக் கடந்து, சக்கரக்கோட்டத்திற்கு அப்பாலும் சென்று,வேங்கிநாட்டை மீளவும் வெற்றி கொண்டான், வென்ற வேங்கிநாடடு அரியணையில், மாண்டு போன அந்நாட்டு மன்னனின் இளவலாகிய விசயாதித்தனை அமர்த்தி, ஆங்கு அமைதியை நிலைநாட்டி விட்டுச் சோணாடு திரும்பினான்.
தாய்நாடு திரும்பிய வீரராசேந்திரன் வாழ்நாள் அமைதியாகக் கழிந்திலது, அவன் தலைநகர் வந்து சேர்வதற்கு முன்னரே, ஈழத்திற்கும், கடாரத்திற்கும் செல்ல வேண்டிய பணிகள் காத்துக் கிடந்தன. ஆட்சி உரிமை பெறும் கருத்தோடு அமர் தொடுத்து எழுந்த ஈழநாட்டரசனைத் தன் படைத்தலைவனை அனுப்பி வெற்றிகொண்டான் வீரராசேந்திரன். தன் ஆட்சி உரிமையைத் தாயத்தார் கைப்பற்றிக்கொள்ளவே. தமிழகம் புகுந்து, தன்பால் அடைக்கலம் புகுந்த கடாரத்தரசனை, அவன் அரியணயில் அமர்த்தும் கருத்துடையனாகிக் கடற்படையோடு கடாரம் சென்று, வெற்றிகொண்டு, வந்த நண்பனை அந்நாட்டு வேந்தனாக்கிவிட்டு, அவ்விழுச்சிறப்போடு வந்து சேர்ந்தான்.
மேலைச் சாளுக்கிய நாட்டில் ஆகவமல்லன் இறந்த பின்னர், அவன் மூத்தமகன் சோமேசுவரன் என்பான் அரியணை ஏறினான். ஆனால் அவனோ அறநெறி மறந்து ஆட்சி புரியத் தலைப்பட்டான். அதனால் அவன் குடிகள் அவன் ஆட்சியை வெறுத்தனர். அண்ணன் ஆட்சி முறையால், நாடு நலிவெய்துவதைக் கண்ணுற்ற, ஆகவமல்லனின் வீரத்திருமகனாகிய விக்கிரமாதித்தன், அவனுக்கு அறிவுரை பல கூறினான். ஆனால் அதற்குப் பலனாக, அவன் பகைமையைப் பெற்றான். தம்பியோடு தாய் நாட்டைவிட்டு வெளியேறித், துங்கபத்திரை ஆற்றங்கரையில் தங்கியிருந்தான். சிலநாள். மேலைச்சாளுக்கிய மன்னர் களுக்கிடையே உருப்பெற்றஇப்பகைமையை உணர்ந்தான் வீரராசேந்திரன், அதைப் பயன்கொண்டு, அம்மேலைச் சாளுக்கிய நாட்டில் தன் ஆணைசெல் வழி காண்பதில் கருத்தைப் போக்கியிருந்தான். அந்நிலையில், அண்ணன் பகைத்து நிற்கும் இந்நிலையில், அவ்வண்ணன் பகைவர்களுள், பெரும் பகைவனாகிய வீர ராசேந்திரன் நட்பைப் பெறுவது நல்லது என்று விக்கிரமாதித்தனுக்கு அரசியல் நெறி காட்டினான் கடம்பர் குலக் காவலன் சயகேசி. சோணாடு புகுந்து வீர ராசேந்திரனுக்கு, விக்கிரமாதித்தன் விருப்பத்தை அறிவித்தான். அதை எதிர் நோக்கியிருந்த சோணாட்டு மன்னன், தன் மகள் ஒருத்தியை, மேலைச் சாளுக்கிய மரபில் வந்தானுக்கு மணம் முடிக்க மனம் இசைந்தான். இரு குலத்தவரையும் ஒன்று படுத்தும் அப்பெருமணம், அவ்விருநாடுகளுக்கும் எல்லையாக ஒடும் துங்கபத்திரை ஆற்றங்கரையில் இனிது நடைபெற்றது. மணம் முடிந்த மறு கணமே, வீரராசேந்திரன், சோமேசுவரன் மீது போர் தொடுத்து வென்று மேலைச் சாளுக்கிய அரியணையில் சோழர் குல மருமானை அமர்த்தி அகம் மகிழ்த்தான்.
சோழர்குலப் பேரரசனாகிய இராசராசன் தன் மகளை விமலாதித்தனுக்கு மணம் செய்து தந்து, கீழைச்சாளுக்கியர் உறவினைப் பெற்றுச் சோணாட்டின் வடகிழக்கு எல்லைக் காப்பிற்கு வழி கண்டான் என்றால், அப்பேரரசன் பெயரனாகிய வீர ராசேந்திரன், தன் மகனை விக்கிரமாதித்தனுக்கு மணம் செய்து தந்து, மேலைச் சாளுக்கியர் உறவினைப் பெற்று வடவெல்லைக் காப்பிற்கு வழி கண்டான். வாழ்க அவன் அரசியல் அறிவு!
அதிராசேந்திரன் : விசயாலயன் வழி வந்த சோழர் குலத்தவருள் இறுதியாக அரசாண்டவன் இவ்வதிராசேந்திரன். வீர ராசேந்திரன் மகனாகிய இவன் ஆட்சி, ஒரு சில திங்கள் அளவே நடை பெற்றது. அதன் பிறகு, கீழைச் சாளுக்கியர் குலத்தில், சோழர் குலத்து வந்தாளுக்குப் பிறந்து, சோழர் குலக் காவலனாய் நாடாண்ட குலோத்துங்கன், சோணாட்டு அரியணையில் அமர்ந்து விட்டான்.