கலிங்கம் கண்ட காவலர்/தோற்றுவாய்

கலிங்கம் கண்ட காவலர்


தோற்றுவாய்


ந்திய வரலாற்றில் சிறப்பிடம் பெறத்தக்க இடங்கள் ஒரு சிலவே என்றால், அவற்றுள் கலிங்கம் தலையாய சிறப்பு வாய்ந்தது. கலிங்கம், ஒருபால், ஒர் அரிய இலக்கியம் தோன்றத் துணை புரிந்துள்ளது. மற்றொருபால், அன்பு நெறி வளர்த்து அறவழி காட்டும் ஒர் அரிய மதம் உலகெங்கும் பரவ உறுதுணை புரிந்துள்ளது. “பரணிக் கோர் சயங்கொண்டான்” என்ற பாராட்டிற்கு உரிய பெரியார், கலிங்கத்துப் பரணி என்ற பெயரால், உயர்ந்த செந்தமிழ் இலக்கியக் கருவுலம் ஒன்றை உருவாக்கக் காரணமாய் இருந்தது கலிங்கநாடு. பெரும் படை துணை செய்யப், போர் வெறி பிடித் தலைந்த அசோகன் உள்ளத்தில், அன்பும் அருளும் சுரக்கப்பண்ணி, அவன் துணையால் புத்தன் வகுத்த புது மதம் பாரெல்லாம் சென்று பரவப் பெருந்துணை புரிந்ததும் அக்கலிங்க நாடே.

கங்கைக்கும் கோதாவரிக்கும் இடையில், வங்கப் பெருங்கடலைச் சார்ந்திருக்கும் கடற்கரை நாடே, பண்டு கலிங்கம் எனும் பெயர் பூண்டுத் திகழ்ந்தது. அது, கலிங்கம் எனப் பொதுவாக அழைக்கப் பெறினும், கோதாவரிக்கும் மகாநதிக்கும் இடையில் கிடப்பதும் இன்றைய கஞ்சம் விசாகப்பட்டின மாவட்டங்களைக் கொண்டதுமாகிய ஆந்திர மாகாணப் பகுதி தென் கலிங்கம் எனவும், மகா நதிக்கும் கங்கைக்கும் இடையில் உள்ளதும், ஒரிசா மாகாணம் என வழங்கப் பெறுவது மாகிய பகுதி வட கலிங்கம் எனவும் இரு கூறாய்ப் பிரிந்து வழங்கப் பெற்றது.

கலிங்கத்தை வென்ற காவலர் இருவர். ஒருவன் வட நாடாண்ட மௌரியப் பேரரசனாகிய அசோகன், மற்றொருவன் தென்னாடாண்ட சோழர்குலப் பேரரசனாகிய குலோத்துங்கன். அசோகன் வென்றது தென் கலிங்கம்; குலோத்துங்கன் வென்றது. வட கலிங்கம். அசோகன் வட நாட்டு வேந்தன்; குலோத்துங்கன் தென்னாட்டுக் காவலன். முன்னவன் மௌரியர் வழி வந்தவன்; பின்னவன் சோழ சாளுக்கியர் வழி வந்தவன். அசோகன் வாழ்ந்த காலத்திற்குப் பின் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகள் கழித்து வாழ்ந்தவன் குலோத்துங்கன்.

இவ்வாறு அவ்விருவர்க்குமிடையே வேற்றுமை பல விளங்கினும், அவ்விருவரையும் ஒருங்குவைத்துக் காண, வல்ல ஒற்றுமைப் பண்புகள் சிலவும் அவரிடையே உள. இருவரும் கலிங்கத்தை வென்றவர்கள். அவர்கள், கலிங்கத்தின் வேறு வேறு பகுதிகளை வேறு வேறு காலத்தில் வென்றனர் என்றாலும், அவரால் வெல்லப்பட்டது கலிங்கம் என்ற பொதுப்பெயர் பூண்ட ஒரே நாடாகும். இருவரும் மணிமகுடம் புனைந்து மன்னர் ஆவதற்கு முன்னர், இளங்கோப் பட்டம் பூண்டு, போர் வேட்கை மேற்கொண்டு நாடெங்கும் அலைந்து திரிந்தவராவர். தம் ஆட்சி உரிமையைப் பெற, நாட்டில் அரசியல் குழப்பத்தைத் தோற்றுவித்து, ஆட்சிக்கு முறைப்படி உரிமையுடையாரைக் கொலை புரிந்தவர் என்ற பெரும்பழி அவ்விருவர்க்குமே சூட்டப்பட்டுள்ளது. இருவருமே பாராட்டத்தக்க பேராண்மையும் பெரும் படையும் உடையவர். இருவருமே தம் ஆட்சியின் பிற்பகுதியை நாட்டு மக்களின் நல்வாழ்விலே நாட்டம் செலுத்தி, நல்ல பல அரசியல் செப்பங்களை ஆக்கியவர்.

இவ்வாறு அவ்விருவரிடையேயும் இத்தகைய ஒருமைப் பாடுகள் சில உளவாதல் கண்டு, அவ்விருவரையும் ஒருங்கு காண விழைந்தேன். கண்டேன். அடியேன் கண்டதை உங்களுக்கும் காட்ட முனைந்தேன். அதன் பயனே "கலிங்கம் கண்ட காவலர்" என்ற இச்சிறு நூல்.