கலைக்களஞ்சியம்/அகப்பொருள்

அகப்பொருள் : உலக வளர்ச்சிக்கு அன்பின் தொடர்பு இன்றியமையாதது. அந்த அன்பானது இரண்டு உயிர்களின் தனித்த நிலையில் உண்டாவதன்று; இரண்டின் கூட்டுறவால் நிகழ்வதாகும். அன்பில்லாத உயிர் வாழ்க்கை வன்னிலத்தில் பட்ட மரத்தை ஒப்பதாகும். மேலும், அறம் நிலைப்பெறுதற்கும் அன்பின் சார்பு வேண்டும். அன்பின் முதிர்ந்த நிலையே அருள், அன்பே கடவுள் என்பர் ஆன்றோர். அத்தகைய அன்பென்னும் நல்வித்தானது முளைத்து வளர்ந்து முழு மரமாகிப் பயன் தருதற்கு நிலைக்களமாயிருப்பது இவ்வாழ்க்கை. இவ்வாழ்க்கை அன்பும் அறமும் உடைய நல்வாழ்க்கையாக நடைபெறுமாயின் அதனைவிடச் சிறந்த பேறு வேறொன்றுமில்லை. இவ்வாழ்க்கை நடைபெறுதற்குக் கணவன் மனைவி இருவரும் ஒத்த அன்புடையராதல் வேண்டும். இல்லையேல். அவ்வாழ்க்கை ஒரு நெறிப்பட்டு நடைபெறாது. இல்லற வாழ்வில் தலைப்படும் ஒருவன் ஒருத்தியென்னும் இருவருடைய உள்ளங்களில் தோன்றும் ஒத்த அன்பின் விளைவாகிய உணர்ச்சிகளையும், அவ்வுணர்ச்சிகள் ஒற்றுமைப்பட்ட நிலையில் அவர்கள் எய்தும் இன்பப் பேற்றினையும், பின்னர் மணஞ் செய்துகொண்டு நடத்தும் மனையறங்களையும், உலகியல் இன்பங்களைத் துய்த்துக் கழித்தபின் அவர்கள் உள்ளத் துறவு மேற்கொண்டு ஒழுகும் இயல்பினையும் உள்ளவாறு எடுத்துக் கூறுவதே அகப் பொருள்பற்றிக் கூறுவதாகும். இஃது உலக நலம் கருதியதாதலின் இறையனார் முதலிய ஆன்றோரும் அகப் பொருள் இலக்கணம் வகுக்க முற்பட்டனர். இக்காதலொழுக்கத்தை இலக்கண நெறியால் வரையறுத்துக் கூறுதல் தமிழர்க்கே உரிய தனிப்பெருஞ் சிறப்பாகும். நல்லிசைப் புலமைத் தொல்லாசிரியர்களும், தெய்வப் புலமைத் திருவள்ளுவரும், திருவருட் செல்வர்களான மெய்யடியார் பலரும் இந்த அக ஒழுக்கமாகிய அன்பு நெறி பற்றி இன்பம் எய்தும் வழி கூறும் இலக்கணங் களும் இலக்கியங்களும் பல இயற்றியுள்ளமையால் இதனை இழிந்த காமமென்று ஒதுக்குதல் பொருந்தாது. பேரின்பத்தைச் சொல்லால் விளக்குதற்கு இதுவே சிறந்த வழி என மெய்யடியார் கொண்டுள்ளனர்.

உலகிற் பிறந்த மக்கள் எய்துதற்கு உரிய உறுதிப் பொருள்கள் நான்கு. அவை அறம் பொருள் இன்பம் வீடு எனப்படும். அவற்றுள், வீடென்பது, துறவாகிய காரணவகையாற் கூறப்படுவதன்றி இலக்கண வகையாற் கூறப்படாதது ஆதலின், ஏனைய மூன்றுமே நூல்களாற் கூறப்படும். அவற்றுள் இன்பத்தை அகமென்றும், ஏனை இரண்டையும் புறமென்றும் அடக்கிக் கூறுதல் தமிழ் மரபு. அவற்றுள் அகமாவது, ஒத்த அன்பினையுடைய ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறக்கும் இன்பமாகும். இஃது, அக்கூட்டத்தின் பின்னர் இவ்வாறு இருந்ததென அவ்விருவராலும் ஒருவர்க்கொருவர் எடுத்துக்கூற முடியாததாய் உள்ளத்து உணர்வாலே நுகர்ந்து இன்பமுறுவதொன் முகலின் அகமெனப்பட்டது. இனி, ஒத்த அன்புடையாராலேயன்றி எல்லோராலும் துய்த்து உணரப்படுவனவாய், இவ்வாறு இருந்தனவெனப் பிறர்க்கு எடுத்துக் கூறப்படுவனவாய், இருத்தலால் அறமும் பொருளும் புறமெனப்பட்டன:

அவ்வகப் பொருளானது கைக்கிளை, (முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்னும்) ஐந்திணை, பெருந்திணை என எழுவகைப்படும். இவற்றுள் கைக்கிளையாவது, ஒருதலைக் காமம்; அஃதாவது இன்ப நுகர்ச்சிக்கு உரிய இருபாலாருள் ஒருவரிடம் மட்டும் தோன்றும் உணர்ச்சியாகும். இது சிறுமையுறவென்றும் கூறப்படும். வடநூலார் கூறும் பிரமம், பிராசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்னும் எண்வகை மணத்துள், ஆசுரம் முதலிய மூன்றும் இக்கைக்கிளையின் பாற்படும். இனி, ஐந்தினையாவது, குலம் குணம் வடிவம் செல்வம் இளமை அன்பு முதலியவற்றால் தம்முள் ஒத்த ஒருவனும் ஒருத்தியும், கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றித் தாமே எதிர்ப்பட்டுக் கூடும் கூட்டம். இது மேற் கூறிய காந்தருவ மணத்துடன் ஒத்த இயல்புடையது. பெருந்திணையாவது, ஒத்த அன்பின்றி மிக்கும் குறைந்தும் உள்ள அன்புடையார் கூடும் ஒழுக்கமாகும். மண மக்களுடைய மன நிலைகளை அறிந்தும் அறியாமலும் அவரவருடைய பெற்றோர்களே உடன்பட்டுச் செய்து வைக்கும் மணமாதலால் இவ்வொழுக்கத்தில் அன்பின் ஏற்றத்தாழ்வுகளுக்கு இடம் உண்டு. மேற் குறித்தவற்றுள் ஏனைய நான்கு மணங்களும் இத்திணையின் பாற்படும்.

அகத்தின் கூறாகிய இவற்றுள் ஒத்த அன்புடையார் கூட்டமாகிய ஐந்திணை மணமே நூல்களாற் பாராட்டப்படுவதாயிற்று. இவ்வைந்திணை, முதற்பொருள், கருப்பொருள் உரிப்பொருள் என்பவை பற்றிக் கூறப்படும். நிலமும் காலமும் முதற் பொருள். தெய்வம், உணவு, மரம், விலங்கு, புள் முதலானவை கருப் பொருள்கள். புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்னும் ஒழுக்கங்கள் ஐந்தும் உரிப்பொருள்களாகும். இவற்றுள், முதற்பொருள் கருப்பொருள்கள் வாராமலும் அகப்பொருட் செய்யுள் பாடப்படலாம். உரிப்பொருளாகிய ஒழுக்கம் கூறாத அகப் பொருட் செய்யுளே இல்லை. ஒருதலையான அன்புடைய கைக்கிளையும், ஒவ்வாத அன்புடைய பெருந்திணையும் இன்பக் குறைபாடு உடைமையால் அகப்புறமெனவும் வழங்கப்படும். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைக்கும் முறையே இருத்தல் புணர்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என்னும் ஒழுக்கங்கள் உரியன. நிலமாகிய முதற்பொருள் மயங்காது. காலமும் கருப்பொருளும் உரிப்பொருளும் தமக்கு உரிய திணைகளை விட்டுப் பிற திணைகளோடு மயங்கியும் வரும். தனக்கென நிலமில்லாத பாலையொழுக்கமும் கைக்கிளை யும் பெருந்திணையும் முல்லை முதலான நான்கு நிலத்தும் நிகழும்.

அகப்பொருளில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களில் முதன்மையிடம் பெறுதற்குரியவர் தலைவன், தலைவி, தோழி என்பவராவர். பாங்கன், செவிலி, நற்றாய், பாணன், அறிஞர், கண்டோர் முதலான பிறரும் ஆங்காங்கு இடம் பெறுவர். இவருள் தலைவன் தலைவி என்னும் இருவர்க்கும் சிறப்பாக இலக்கணங்கள் வகுக்கப்பட்டுள்ளன, அறிவும், ஆற்றலும், ஆராய்ச்சியும், பண்பும், நண்பும், பழிபாவம் அஞ்சுதலும், கடைப் பிடியும், நிறையும், கலங்காது துணிதலும் தலைவனுக்கு உரிய இலக்கணங்கள். அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்பன எப்பொழுதும் தலைவியை விட்டு நீங்காமல் இருத்தற்குரியன. அடக்கம், நிறை, நேர்மை முதலியனவும் தலைவியினிடம் இருக்கவேண்டும் பண்புகள். தோழி என்பவள் செவிலி மகள்; இளம்பருவ முதலே தலைவியைவிட்டு விலகாதிருப்பவள். இவள் குற்றேவல் மகளெனக் கூறப்படினும் காலத்திற்கேற்ற அறிவும், சொல்லாற்றலும் பெற்றிருப்பள்.

ஐந்திணையொழுக்கம் களவு கற்பு என இருவகைப்படும். களவாவது, தலைவனும் தலைவியும் பெற்றோர் அறியாமல் தாமே எதிர்ப்பட்டுக் கூடுவது. இக்களவு பிறர்க்குரிய பொருளை அவர் அறியாமற் கவர்ந்து கொள்ளுங் களவுபோலத் தீயது அன்று. அத்தலை மக்கள் பின்பு மணஞ் செய்துகொண்டு மனையறம் பேணிவருவதால் அறமாகவே கருதப்படும். இக்களவு இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் என நான்கு வகையால் நடைபெறும். இயற்கைப் புணர்ச்சியாவது, ஒத்த அன்புடையார் இருவர், கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றி ஊழ் வகையால் தாமே எதிர்ப்பட்டுக் கூடுவது. இடந்தலைப்பாடாவது, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன், மீண்டும் தலைவியைக் காணலாமென்னும் ஆசை மிகுதியால் அடுத்தநாள் அவ்விடத்திற்குச் சென்று, தன்னைப்போலவே காதல் மீதூரப் பெற்று வந்து நின்ற தலைவியைக் கூடுதல். பாங்கற் கூட்டமாவது, குறியிடத்துத் தலைவி வந்து நின்ற சிலையைப் பாங்கனாலறிந்து சென்று கூடுதல். தோழியிற் கூட்டமாவது, இக்களவொழுக்கத்தை நீட்டித்து நடத்த விரும்பிய தலைவன், தலைவியினுடைய உயிர்த்தோழியாவாள் இன்னாளெனக் குறிப்பாலறிந்து கொண்டு, அவள் தனித்திருக்குமிடத்தும் தலைவியோடு கூடியிருக்குமிடத்தும் சென்று தன் குறையிரந்து கூறி அத்தோழி வாயிலாகக் கூடுதல். இஃது ஒருவகை.

இனி, இந்நான்கும் இம்முறையே நிகழாது இடையீடுபட்டும் வரும். எவ்வாறெனில், ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவிடத்து அவ்விருவரும் ஒத்த காதலராயினும் அப்பொழுதே இயற்கைப் புணர்ச்சி முட்டுப் பாடின்றி நடைபெறுமென்பது உலகியலிற் பெரும்பாலும் அரிது. அது நிகழாதபோது, காதற் குறிப்பு உணர்ந்து பிரிந்த அவ்விருவரும் மீட்டும் ஒருவரையொருவர் காணலாமென்னும் வேட்கையால் அடுத்த நாளில் அவ்விடம் வந்து கூடலாம். அப்பொழுதும் தடை நேர்ந்தால் பாங்கன் உதவியாற் கூட்டம் பெறலாம். அதற்கும் இடையீடு உண்டாயின் தோழிவாயிலாக முயன்று தலைவன் கூடுவன். ஆகவே, முதல்முறை கண்டபோதே இயற்கைப் புணர்ச்சி நடைபெறும் என்ற நியதியில்லை. இவ்வாறன்றி, ஒவ்வொன்று இடையிட்டும் கூட்டம் நடைபெறலாம். இது மற்றொரு வகை,

இனி, ஒரு கூட்டமும் நிகழாமலே, இருவரும் எதிர்ப்பட்ட காலத்து உண்டான வேட்கை தணியாமல் நின்று மணஞ் செய்த பின்னர்க் கூடுதலும் உண்டு. இவ்வாற்றாற் களவொழுக்கம் மூன்று வகைப்படும் என்பர். (தொல். பொரு. களவி. சூ-1. இளம்பூ-உரை)

இனி, கற்பாவது, குலம் முதலியவற்றால் ஒத்தவனாகிய தலைவனுக்குத் தலைவியின் பெற்றோர் வதுவைச் சடங்குகள் நடத்தி அவளைக் கொடுப்ப அவன் கொள்ளுதல். செய்தவொன்றைச் செய்யவில்லையென்று கூறுதலும் தொடக்கத்தில் அன்பினால் மேற்கொண்ட ஒழுக்கத்திலிருந்து தவறுதலும் உலகியலிற் காணப்பட்டமையால், மக்கள் வாழ்க்கை மாசடையாதிருத்தற் பொருட்டுப் பெரியவர்கள் கரணங்களை (சடங்குகளை) வகுத்தனர். களவொழுக்கம் நடத்தி உடன்போக்கை மேற்கொண்ட தலைமக்கள், தாம் சென்றிருந்த வேற்றிடத்திலே மணஞ்செய்து கொள்ளுதலும் அல்லது திரும்பி வந்தபின் தலைவன் இல்லத்திலாவது தலைவியில்லத்திலாவது மணஞ் செய்து கொண்டு கற்பொழுக்கத்தை நடத்துதலும் உண்டு. ஆகவே, மணம் எவ்விடத்து நடைபெறினும் மணச்சடங்குகள் நிகழவேண்டும். முன்பே காதல் கொண்ட இருவர் பின்பு மணந்து கொள்ளுதல் களவின் வழிவந்த கற்பென்றும், மணஞ் செய்யப் பெற்றபின் காதல் வாழ்க்கை மேற்கொள்ளுதல் களவின் வழிவாராக் கற்பென்றுங் கூறப்படும்.

இக்கற்புக் காலத்தில் ஊடியும் கூடியும் இன்பம் நுகர்தலும், விருந்தோம்பல் முதலிய அறஞ் செய்தலும், கல்வி பகை தூது காவல் பொருள் பரத்தை என்னும் இவைபற்றிப் பிரிதலும் நிகழும். மேலும், முதல் மனைவியிருக்கும்போதே தலைவன் மற்றொருத்தியை மணஞ்செய்து கொள்ளுதல் உண்டு. அல்லாமலும், காமக்கிழத்தி காதற்பரத்தை சேரிப்பரத்தை என்னும் பல மாதருடைய தொடர்பும் தலைவர்கள் பெற்றிருப்பர். ஆடவர் நிலை எவ்வாறாயினும், குலமகள் ஒருத்தி, ஒருவனையன்றி மற்றொருவனைக் காதலித்தாள் என்னும் செய்தி அகப்பொருளில் யாண்டும் கூறப்படுதல் இல்லை.

இவ்வாறு, களவின் வழிவந்தும், களவின் வழிவாராமலும், கற்பொழுக்கத்தை மேற்கொண்ட கணவன் மனைவி என்பார் இருவரும், மக்களொடு மகிழ்ந்து மனையறங் காத்து மிக்க காமவேட்கை தீர்ந்தபின் சிறந்த நிலையை அடைய முயலவேண்டும். துறவு மேற்கொண்டு வீட்டின்பம் பெற முயல வேண்டும் என இதற்குப் பொருள் கூறுவர் உரையாளர். இதுவே இல்லறத்தின் முடிந்த பயன் என்று அகப்பொருள் நூல்கள் - அறிவிக்கின்றன. இதனால், பிறப்புப் பிணி மூப்பு இறப்புக்களால் இடர்ப்பட்டு, அத்துன்பங்களினின்றும் விடுதலை பெறும் வழி தெரியாமல் 2.மலும் மக்களை நோக்கி , அவர்கள் இயல்பாக விரும்பும் இன்பத் துறையில் சிறந் ததோர் இன்பம் இதுவெனக் காட்டி, அதனை நுகர்ந்து வையத்துள் வாழ்வாங்கு வாழச் செய்து அதுவும் நிலை யில்லாததேயென அவர்கள் உணர்ந்தபின், ' என்றும் நிலையானதொரு பேரின்பம் உள்ளது, அதனைப் பெற முயலுங்கள்' எனத் தூண்டுவதே அகப்பொருளின் உட்கோள் என அறியலாம்.

அகப்பொருளைக் கூறும் இலக்கண நூல்களிற் சிறந்தவை தொல்காப்பியம், இறையனார் களவியல், நம்பியகப்பொருள் என்பவை.