கலைக்களஞ்சியம்/அங்கமாலை

அங்கமாலை : பிரபந்த வகைகளில் ஒன்று. ஒருவரைப் பாதாதிகேசமாகவாவது கேசாதிபாதமாகவாவது வெளிவிருத்தம் என்னும் செய்யுளாற் பாடுவது. தேவர்களைப் பாடினாற் பாதாதிகேசமாகவும் மக்களைப் பாடினாற் கேசாதிபாதமாகவும் பாடுவது மரபு என்பர். இவ்வாறு இலக்கணங் கூறினும் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய திருஅங்கமாலை நம்முடைய தலைமுதல் அடிவரையில் உள்ள அங்கங்கள் சிவபெருமானுக்கு வழிபாடு நிகழ்த்தவேண்டும் என்னும் முறையிற்பாடியுள்ளார்கள். எனவே, இம்முறையில் உரைப்பதையும் அங்கமாலையின் இலக்கணமாகக் கொள்ளல் வேண்டும்போலும்.