கலைக்களஞ்சியம்/அசுவ லட்சணம்
அசுவ லட்சணம் : பண்டை அறிஞர் குதிரைகளை அவற்றின் நிறம், உடலமைப்பு, இயல்பு முதலியவற்றை வைத்துப் பாடலம், கோடகம், இவுளி, வன்னி, குதிரை, வரி, கந்துகம், புரவி என எட்டு வகையாகப் பிரிப்பர். குதிரைகள் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, மிசிரம் என ஐந்துவித நிறங்கள் உடையனவாம். முகம், மார்பு, உச்சி, வால், கால்கள் வெளுத்திருப்பது அட்டமங்கலம்; முகமும் கால்களும் வெளுத்திருப்பது பஞ்சகல்யாணி; வயிறும் மார்பும் வெளுத்திருப்பது வாரணம். அண்டவர்த்தம் முதலிய எட்டுச்சுழிகள் ஆகாவாம். சிரசில் இரண்டு சுழியும், நாபியில் நான்கும், மார்பில் இரண்டும், நெற்றியில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாகப் பத்துச்சுழிகள் குறையாது இருத்தல் நலமாம். மூக்கின் நடுவில் ஒன்று அல்லது மூன்று சுழிகளையுடையது குதிரைகளுள் சக்கரவர்த்தி எனப்படும். இதன் விரிவைச் சுக்கிரநீதியிலும் திருவிளையாடற் புராணத்திலும் காண்க.