கலைக்களஞ்சியம்/அடைமானம்

அடைமானம் என்பது ஒருவர் கடனாகப் பெறும் பணத்துக்குப் பொறுப்பாகத் தம்முடைய குறிப்பிட்ட தாவர சொத்திலுள்ள உரிமையைக் கடன் தருபவர்க்கு மாற்றித் தருவதாகும். ஒரு கடமையைச் செய்வதாகக் கூறும் ஒப்பந்தத்துக்குப் பொறுப்பாகவும் அடைமானம் செய்வதுண்டு. எடுத்துக் காட்டாக, ஒருவர் தமது மகன் வேலை பார்க்கும் பாங்கில் உண்மையாக நடப்பதற்குப் பொறுப்பாகத் தமது சொத்து ஒன்றைப் பாங்குக்கு அடைமானமாகத் தரலாம். அடைமானச் சொத்தைக் கடன் தருபவர் வசம் தந்துவிடுவதை ஒற்றி என்றும், கடன் தருபவர் வசம் தராதிருப்பதைப் பந்தகம் அல்லது வெறும் அடைமானம் என்றும் கூறுவர்.

நூறு ரூபாய்க்குக் குறைந்த ஒற்றிக்குப் பத்திரப் பதிவு தேவையில்லை. நூறு ரூபாய்க்கு மேற்பட்ட ஒற்றிக்கும், எல்லாவித பந்தகத்துக்கும் பத்திரப்பதிவு இன்றியமையாதது. பத்திரப்பதிவுக்கு அடைமானம் வைப்பவர் கையெழுத்திடுவதும், இரண்டு சாட்சிகள் கையெழுத்திடுவதும் இன்றியமையாது வேண்டப்படுவனவாகும். ஒவ்வொரு சாட்சியும் அடைமானம் வைப்பவர் கையெழுத்திடுவதையோ அல்லது அடையாளக் குறியீடுவதையோ பார்த்திருக்கவேண்டும். அல்லது கையெழுத்திட்டதாகவோ அடையாளமிட்டதாகவோ எழுத்து மூலம் பெற்றுக்கொண்டிருக்கவேண்டும். அத்துடன் சாட்சி, அடைமானம் வைப்பவர் முன்னிலையிலேயே தமது கையெழுத்தையிட வேண்டும். இவ்வாறு செய்தால்தான் பத்திரம் செல்லுபடியாகும். கல்கத்தா, சென்னை, பம்பாய் ஆகிய நகரங்களிலும் இராச்சிய அரசாங்கம் குறிப்பிடும் நகரங்களிலும் கடன் வாங்குபவர் அடைமானப் பத்திரம் எழுதிக் கொடுக்காமலே. சொத்தின் பாத்தியதைப் பத்திரங்களை மட்டும் கடன் தருபவரிடம் கொடுத்து, அடைமானம் வைக்கலாம்.

1. ஒற்றி: ஒற்றியாயிருந்தால் ஒற்றிபெறுபவர் ஒற்றிப் பத்திரத்தில் கண்டபடி உடைமைபெற உரிமை உடையவர். சொத்தின் வருமானத்திலிருந்து அசலும் வட்டியும் கொடுத்துத் தீரும்வரை உடைமை தருவதாக எழுதியிருந்தால் அவ்வாறு தீர்ந்த பின்னரே அடைமானம் வைப்பவர் தமது சொத்தைத் திரும்பப் பெற முடியும். சொத்தின் வருமானத்திலிருந்து வட்டி மட்டுமே கொடுக்கப்பட எழுதியிருந்தால் தவணை குறிப்பிடாதிருந்தால், எந்த வேளையிலும் ஒற்றி வைத்தவர் அசலைச் செலுத்திச் சொத்தைப் பெறலாம். தவணை குறிப்பிட்டிருந்தால் தவணை கழிந்த பின்னர் கழிந்த நாள்முதல் அறுபது ஆண்டுக் காலத்துக்குள் அசலைச் செலுத்திச் சொத்தை மீட்டுக் கொள்ளலாம். அறுபது ஆண்டுகள் கழிந்துவிட்டால் சொத்தை இழந்துவிடுவார்.

ஒற்றிவாங்குபவர் வருமானம்பற்றிச் சரியான கணக்குகள் வைத்திருக்கவும் ஒற்றி கொடுத்தவர் வேண்டினால் கணக்குகளுக்கு நகலும் உறுதிச்சீட்டுக்களும் கொடுக்கவும் கடமைப்பட்டவர். அத்துடன் அவர் தமது சொந்தச் சொத்தைக் கவனிப்பதுபோலவே ஒற்றிச் சொத்தையும் கவனித்துக்கொள்ளக் கடமைப்பட்டவர். ஒற்றி கொடுப்பவர் பணத்தைக் கொடுக்க வேண்டிய காலத்தில் கொடுத்தால், ஒற்றி பெறுபவர் அதைப் பெற்றுக்கொண்டு சொத்துடைமையை ஒற்றி கொடுப்பவரிடம் கொடுத்துவிட வேண்டும். கொடுக்க மறுத்தால் ஒற்றி கொடுத்தவர் பணத்தை நீதிமன்றத்தில் கட்டிவைத்து உடைமை கோரலாம். இவ்வாறு செய்தால் ஒற்றி பெற்றவர் அந்த நாள்முதல் வட்டிக்காகவோ அல்லது செலவுகட்காகவோ பணம் கழியாமலே சொத்தின் வருமானத்தைக் கொடுக்கக் கடமைப்பட்டவராவர்.

2. பந்தகம்: இது அடைமானம் தருபவர் அசலையும் வட்டியையும் கேட்கும்போதோ அல்லது குறிப்பிட்ட காலத்துக்குப் பின்போ தருவதாக ஏற்றுக் கொள்வதாகும். கொடுக்கத் தவறினால் அடைமானம் வாங்கியவர் சொத்தை விற்று அசலையும் வட்டியையும் தருமாறு, பணம் தரவேண்டிய கெடுவிலிருந்து 12 ஆண்டுக் காலத்துக்குள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். அந்தக்கால அளவுக்குள் வழக்குத் தொடராவிட்டால், பணத்தைப் பெறவுள்ள உரிமையை இழந்து விடுவார். ஆனால் அடைமானம் கொடுப்பவர் தமது பொறுப்பை ஏற்றுக்கொண்டோ அல்லது அசலுக்காவது வட்டிக்காவது ஒரு தொகை தவணைக்காலத்துக்குமுன் கொடுத்தோ இருந்தால் இந்தக் கால அளவு நீட்டிக்கப்படும். பணம் கொடுக்கவேண்டிய தவணையில் அடைமானம் வைத்தவர் பணத்தை அடைமானம் வாங்கியவரிடம் கொடுக்கவோ அல்லது வைத்துக் கொள்ளும்படி கூறவோ அல்லது நீதிமன்றத்தில் கட்டவோ செய்யலாம். அவ்வாறு செய்தால் அந்தநாள் முதல் அவர் வட்டி தரவேண்டியதில்லை.

வேறு சிலவகை அடைமானங்கள் உள்ளன. அவை அருமையானவை. எடுத்துக்காட்டாக, அடைமானம் வாங்குபவர் நீதிமன்றம் செல்லாமல் சொத்தை விற்றுத் தமக்குரிய பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அடைமானம் வாங்குபவர் அரசாங்கமா யில்லாதிருப்பின், இவ்வித அடைமானம் கல்கத்தா, சென்னை, பம்பாய் ஆகிய நகரங்களிலும் இராச்சிய அரசாங்கம் குறிப்பிடும் நகரங்களிலுமே செல்லுபடியாகும். மற்றொரு வகை அடைமானமானது அடைமானப் பணத்தைக் குறிப்பிட்ட தவணையில் செலுத்திச் சொத்தை மீட்காவிட்டால், அடைமானத்தை விற்பனையாகவே கருதிக் கொள்ள வேண்டும் என்று எழுதுவதாகும். இவ்வாறு எழுதினாலும் அடைமானம் வைத்தவர் தவணை கடந்த பிறகும், பணத்தைச் செலுத்திச் சொத்தை மீட்டுக் கொள்ள உரிமையுடையவரே. ஆனால் அடைமானம் என்று எழுதினாலும் அது உண்மையில் விற்பனையாகவே இருக்குமானால், குறிப்பிட்ட தவணைக்குள் பணத்தைச் செலுத்திச் சொத்தைத் திரும்ப விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்று எழுதியிருந்தால், தவணை கடந்த பிறகு பணத்தைச் செலுத்திச் சொத்தை மீட்க முடியாது.