கலைக்களஞ்சியம்/அதிகாரப் பிரிவினை

அதிகாரப் பிரிவினை : மக்கள் சுயேச்சையும் சுவாதீனமும் அனுபவிக்கும் ஜனநாயகக் குடியரசாட்சிக்கு அதிகாரப் பிரிவினை அடிப்படையானது என்று முதன் முதலில் தெளிவாக விவரித்தவர் மான்டெஸ்க்யூ (1689-1755) என்னும் பிரெஞ்சு அறிஞர். 1789-ஆம் ஆண்டில் தொடங்கிய பிரெஞ்சுப் புரட்சியின் முதல் அறிகுறிகள் அப்போதே தோன்றத் தொடங்கின. அத்தகைய புரட்சியினாலுண்டாகும் தீங்குகள் நாட்டை குழப்பத்தில் ஆழ்த்திவிடும் என்று தோன்றவே, புரட்சியில்லாமல் சமாதான முறைகளிலேயே மக்களுக்குச் சுதந்தரம் கிடைக்கவேண்டுமென்ற நோக்கத்தோடு ஆராய்ச்சி செய்ததன் பயனாக, இவர் 1748ஆம் ஆண்டில் சட்டங்களின் சாராம்சம் (Spirit of the Laws) என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

இங்கிலாந்தின் அரசியலைப் பாராட்டி, அவ்வரசியலின் முக்கியமான அமிசமானது நிருவாகம், சட்டமியற்றும் ஸ்தாபனம், நீதி இலாகா என்ற மூன்று பகுதிகளுக்குள் அதிகாரப் பிரிவினை தான் என்று விளக்கினார். 18 ஆம் நூற்றாண்டு பிரெஞ்சு மக்களின் நிலைமை 17ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து மக்களின் நிலைமை மாதிரிதான் என்றும், எப்படி ஆங்கிலேயர்கள் அதிகாரப் பிரிவினையால் சுயேச்சை யடைந்தார்களோ, அம்மாதிரியே பிரெஞ்சு மக்கள் அம்முறையையே கையாண்டு அரசியலைத் திருத்தி அமைத்துச் சுயேச்சையடைய முயல வேண்டுமென்றும் கூறினார். இவரைப்போலவே 20 ஆண்டுகளுக்குப் பின் வந்த ஆங்கிலப் பிரபல சட்ட நிபுணரான பிளாக்ஸ்டன் என்பவரும் இங்கிலாந்தின் அரசியலை மதிப்பிட்டார். ஆயினும், அவர் காலத்திய இங்கிலாந்து அரசியலில் கொள்கைக்கும் நடைமுறைக்கும் வேறுபாடு இருந்தது. அரசாங்கத்தின் மூன்று பகுதிகளுக்குள் அதிகாரப் பிரிவினை தான் முக்கியமாகக் கருதப்படினும், நடைமுறையில் மூன்று பகுதிகளுக்குமிடையே வெளிப்படையாகத் தோன்றாத ஓர் இணைப்பு இருந்து வந்தது. அதனால் இவ்வறிஞர் அதிகார உறைவிடங்களுக்குள்ளே பூரணமான பிரிவினை இருக்க வேண்டுமென்று கருதினாரா, அல்லது சில கட்டுப்பாட்டுக் குட்பட்ட பாகுபாடு வேண்டுமென்று கருதினாரா என்பது ஒரு முக்கியப் பிரச்சினை. அவர் எழுதியிருப்பதிலிருந்தும், எடுத்துக்காட்டும் உதாரணங்களிலிருந்தும் பூரணமான அதிகாரப் பிரிவினையையே ஆதரித்தார் என்று நினைக்க ஆதாரமில்லை.

மான்டெஸ்க்யூ தம் கொள்கையைத் தாமே பின் வருமாறு விளக்கியிருக்கிறார்: சட்டமியற்று மதிகாரமும் நிருவாக அதிகாரமும் ஒருவரிடத்திலோ, ஒரு குழுவினிடத்திலோ (Body of Persons) சேர்ந்திருந்தால், சுதந்திரம் (Liberty) இல்லாமற்போகும். நீதி வழங்கும் அதிகாரமும் சட்டம் இயற்றும் அதிகாரத்துடன் சேர்க்கப்பட்டிருந்தால், மக்களின் உயிர்நிலையும் சுயேச்சையும் யதேச்சாதிகாரத்துக்குட்பட்டுவிடும். நீதி வழங்கும் அதிகாரம் நிருவாக அதிகாரத்துடன் இணைக்கப்பட்டிருந்தால் நீதிபதி கொடுமையான முறையில் நடந்துகொள்ளக்கூடும் என்ற அச்சம் ஏற்படும். முக்கியமாக நிருவாக அதிகாரமும் சட்டமியற்றுமதிகாரமும் பிரிக்கப்படவேண்டுமென்பதே அவருடைய போதனை. சட்டமியற்றும் ஸ்தாபனம் இரண்டு சபைகளடங்கியதாக இருக்கவேண்டும். இக்கொள்கை அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியல் திட்டத்திலும் புரட்சிக்குப் பிறகு நிறுவப்பட்ட பிரெஞ்சு அரசியல் திட்டத்திலும் முக்கியமான அடிப்படையாகக் கொள்ளப்பட்டது. ஆனால், பிரான்சில் 1875ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் திட்டத்தில் இக் கொள்கை கைவிடப்பட்டது.

அமெரிக்க அரசியலமைப்பின் முக்கியமான அமிசம் இன்றும் இக்கொள்கையைப் பின்பற்றியே யிருந்து வருகிறது. சட்ட சபைகள் சட்டங்கள் இயற்றுகின்றன; அரசாங்கத்தை நடத்தும் நிருவாகப் பகுதி சட்டங்களை நிறைவேற்றுகின்றது. நீதி இலாகாச் சட்டங்களுக்கு உரை செய்து, அதன்முன்னே வரும் வழக்குக்களைத் தீர்த்துவைக்கின்றது. அரசாங்கத்தின் மூன்று பகுதிகளும் தனித்தனியானவை. ஒவ்வொரு பகுதிக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம், எந்தப் பகுதியும் மற்ற இரு பகுதிகளையும் யதேச்சாதிகாரமாக ஆள முடியாமல் பாதுகாக்கிறது. ஒரு பாகம் மற்றப் பாகத்தை வரம்புமீறி நடந்து கொள்ளாமலிருக்கும்படி இந்தச் சம அந்தஸ்து தடை செய்கிறது. ஜனாதிபதியும், அவருக்கு ஆலோசனை கூறுகிற மந்திரிகளும் சட்ட சபை அங்கத்தினர்களாக இருக்கக் கூடாது. பார்லிமெண்டுப் பொறுப்பாட்சி முறையைப் பின்பற்றும் நாடுகளில் மந்திரி சபைக்கும் சட்டமியற்றும் நிலையத்திற்கும் உள்ள தொடர்பை இங்குக் காணமுடியாது. நிருவாகப் பகுதிக்குச் சட்ட சபையைக் கலைக்க அதிகாரம் கிடையாது. அரசியலமைப்பின் 20 வது திருத்தப்படி, காங்கிரசு ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி பிற்பகலில் கூடவேண்டும். அதனுடைய அங்கத்தினர்கள் கூட்டத்தை ஒத்திப் போட்டாலொழிய, காங்கிரசு தொடர்ந்து நடந்துகொண்டே வரும். நீதி இலாகாவும் அம்மாதிரியாகவே பிரிக்கப்பட்டிருக்கிறது. சட்ட சபை ஜனாதிபதியின் நிருவாக அதிகாரத்திற்குட்பட்டதன்று. ஆனால், அமெரிக்க நாட்டில்கூட இம்மூன்று பகுதிகளுக்கும் பழக்கத்தில் இணைப்பு ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதி காங்கிரசுக்குச் செய்திகள் அனுப்புகிறார். இச்செய்திகள் மூலமாய் மக்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றும்படி சிபார்சு செய்ய முடியும். சட்டங்களை நிராகரிக்கிற அதிகாரம் ஜனாதிபதிக்குண்டு. அவருடைய நிராகரிப்பை ஒவ்வொரு சட்ட சபையும் மூன்றில் இரண்டு பங்கு அங்கத்தினர்கள் மூலம் ரத்து செய்யாவிட்டால், மசோதா சட்டமாகாது. நிருவாகத் தலைவர்களைத் தங்களுக்கு முன்னால் ஆஜராகச் சொல்லிச் சட்டங்களைப் பற்றியோ, அவர்களது இலாகாக்களைப் பற்றியோ விசாரணை செய்ய, இரண்டு சட்ட சபைகளுக்கும் அதிகாரம் உண்டு. ஜனாதிபதி செய்யும் நியமனங்களுக்கும் உடன்படிக்கைகளுக்கும் செனட் சபை முன்பாக ஜனாதிபதியைத் துரோகக் குற்ற விசாரணைக்குக் கொண்டுவரலாம். காங்கிரசு சட்ட சபை யியற்றும் சட்டங்கள் அரசியல் அமைப்பு ஷரத்துக்களுக்கு முரண்படுகின்றனவா அல்லது கட்டுப்பட்டிருக்கின்றனவா என்று தீர்ப்புக் கூறும் அதிகாரம் நீதி இலாகாவுக்கு உண்டு.

இணைப்பே அடிப்படையாயுள்ள இங்கிலாந்தின் பார்லிமென்டு பொறுப்பாட்சி முறையில்கூட ஒருவிதமான அதிகாரப் பிரிவினை இருக்கிறது. சட்டமியற்றும் அதிகாரம் பிரத்தியேகமான சட்ட நிலையத்திற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அது அரசாங்கத்தின் ஒரு தனிப் பகுதி. நிருவாகமும் தனி உறுப்பாகவே அமைக்கப் பட்டிருக்கிறது. சட்ட சபை நிருவாக அதிகாரத்தை மேற்கொள்ளவில்லை. நீதி இலாகாவானது நிருவாகம், சட்டமியற்றும் ஸ்தாபனம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டுக்குட்படாமல், சுயேச்சையாய் இருப்பதற்கு வேண்டிய முறைகளிருக்கின்றன. பிரான்சு அரசியலமைப்புத் திட்டத்தைப் பரிசீலிப்போமானால், மூன்று பகுதிகளுக்குள் சில அமிசங்களில் இணைப்பும், மற்றும் சில அமிசங்களில் பாகுபாடும் காணப்படுகின்றன.

ஆகவே, உலகத்திலுள்ள சில முக்கியமான நாடுகளின் அரசியலமைப்புத் திட்டங்களில் ஓர் அரசியலமைப்பிலாவது பூரணப் பிரிவினையாவது, பூரண இணைப்பாவது இருப்பதாகத் தெரியவில்லை. அரசியலை அமைக்கும்போது இரண்டு முக்கியமான இலட்சியங்களை அடிப்படையாக நாம் மனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். முதலாவதாக அரசாங்கத்தின் மூன்று அதிகாரங்களும் தனித்தனிப் பகுதிகளில் ஒப்படைக்கப்படவேண்டும். ஒவ்வொரு பகுதியும் தன்னுடைய முதன்மையான கடமைகள் எவையோ அவைகளைக் கவனிக்கவேண்டும். இரண்டாவதாக, எந்த ஒரு பகுதியும் தானாகவாவது மற்றொரு பகுதியுடன் சேர்ந்தாவது மூன்றாவது பகுதியின் மீது யதேச்சையான கட்டுப்பாடு செய்யாமலிருக்கத்தக்க முறைகள் அரசியல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இவைதான் மான்டெஸ்க்யூ பொதுவாக வற்புறுத்தின அதிகாரப் பிரிவினையைப் பற்றிய உண்மைகள். வீ. வெ.