கலைக்களஞ்சியம்/அதிகார வரம்பு
அதிகார வரம்பு என்பது ஒரு குறிப்பிட்ட வழக்கை விசாரித்துத் தீர்ப்புக்கட்ட ஒரு குறிப்பிட்ட நீதிமன்றத்துக்குள்ள அதிகாரமாகும். அந்த நீதிமன்றம் அந்த வழக்கை விசாரித்து முடிவு செய்யத் தகுதி பெற்றதாயிருந்தாலும், அது விசாரிக்க வேண்டுமானால் அந்த வழக்கு அதன் அதிகார வரம்புக்கு உட்பட்டதாக இருந்தாக வேண்டும்.
இந்த அதிகார வரம்பு இடம், நபர், பணம், பொருள் பற்றியதாக இருக்கும். ஒரு நீதி மன்றம், குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிகழும் வழக்குக்களை மட்டும் விசாரிக்கலாம் என்றால், அந்த அதிகார வரம்பு இடம் பற்றியதாகும். இதற்காக இராச்சியத்தை மாவட்டங்கள், தாலுகாக்கள் போன்ற பல பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பகுதியில் எழும் வழக்குக்களை அப்பகுதியிலுள்ள மன்றங்களே விசாரிக்கலாம். அப்படிச் செய்வதால் ஒரே வழக்கைப் பல மன்றங்கள் விசாரணை செய்யும் குழப்பம் ஏற்படாது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்பவரோ அல்லது தொழில் நடத்துபவரோ கொண்டுவரும் வழக்குக்களை மட்டும் விசாரிக்க அதிகாரம் உண்டு என்று கூறும்போது, அது நபர் அதிகார வரம்பாகும். ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் கீழ்ப்பட்ட தொகை சம்பந்தமான வழக்குக்களை மட்டுமே விசாரிக்க அதிகாரம் உண்டு என்று கூறும்போது, அது பண அதிகார வரம்பாகும். பெருந்தொகை வழக்குக்களை விசாரிக்கும் நீதிபதிகள் மிக்க அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பர். அத்துடன் பெருந்தொகை அப்பீல் வழக்குக்களை அத்தகைய பெரிய நீதிபதிகள் விசாரிக்க இடம் ஏற்படுத்தியிருப்பதால் நியாயம் வழங்குவது திறமையாக நடைபெற இடமுண்டாகின்றது. ஒரு குறிப்பிட்ட நீதிமன்றம் இத்தகைய விஷயம் பற்றிய வழக்குக்களைத்தான் விசாரிக்க அதிகாரம் உடையது என்று கூறும்போது, அது பொருள் அல்லது விஷய அதிகார வரம்பாகும்.
எல்லாவித விஷயங்களையும் விசாரித்துத் தீர்மானிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது. அதனால் உத்தியோகத்துக்குச் சம்பந்தமில்லாத தனி நபர் உரிமைகள், கௌரவங்கள்-எடுத்துக்காட்டாக மடாதிபதிகளுக் குரிய உரிமைகள், கோவில்களில் முதலில் தீர்த்தம் பெறும் உரிமை, முனிசிபல் வரிவிதிப்புரிமை போன்ற பல விஷயங்கள், நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்குட்பட்டனவாகா என்று சட்டங்கள் கூறுகின்றன. அதனால் உத்தியோகத்துக்குச் சம்பந்தமில்லாத கௌரவங்கள் போன்ற பல விஷயங்கள் நீதிமன்றங்களின் அதிகார எல்லைக்குட்பட்டனவாகா என்று சட்டங்கள் கூறுகின்றன.
தல சுயாட்சியும் கூட்டுறவுச் சங்கங்களும் ஏற்பட்டிருப்பதால், சில குறிப்பிட்ட வழக்குக்களை விசாரிப்பதற்காக விசேஷ விசாரணை மன்றங்களும் அவை போன்றவைகளும் அமைக்கப்படுகின்றன. இவைகள் கூறும் தீர்ப்புக்கு அப்பீல் செய்யவும் ரிவிஷன் செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சில வேளைகளில் குறிப்பிட்ட விஷயங்கள் பற்றிய காரியங்கள் விரைவாக நடைபெறவேண்டியிருக்குமாதலால், மேற்கூறிய விசேட மன்றங்கள் செய்யும் தீர்ப்புக்களைப் பற்றி விசாரிக்கச் சாதாரண நீதிமன்றங்கட்கு அதிகாரம் கிடையாது என்று சட்டம் செய்யப்பட்டிருக்கிறது. வீ. டி. ர.