கலைக்களஞ்சியம்/அபினி

அபினி கசகசாச் செடியின் இளங்காயைக் கீறி, அதிலிருந்து வடியும் பாலைக் காற்றில் உலர்த்தியதாகும். இதை முக்கியமாக இந்தியா, பாரசீகம், துருக்கி, யூகோஸ்லாவியா, மாசிடோனியா, பல்கேரியா, சீனா, ஆசியா மைனர் என்னும் நாடுகளில் எடுக்கிறார்கள். பூப்பூத்து,

கசகசாச் செடி

1. பூ 2. காய் 3. காயின் குறுக்கு வெட்டு

இதழ்கள் உதிர்ந்து இரண்டு வாரமானதும், மெதுவாக இருக்கும் காயை, நீளவாட்டில் கூரிய பற்க ளுள்ள கருவியினாலே மாலை நேரத்தில் கீறிவிடுவார்கள். மறுநாள் காலையில் வடிந்து தோய்ந்த பாலைச் சுரண்டி யெடுத்துச் சாய்வான ஒரு ஏனத்தில் வைப்பார்கள். அதிலிருந்து கறுப்பான நீர் கசிந்து வழிந்து போய்விடும். மீதியிருப்பதைக் காற்றில் முதிர வைப்பார்கள். அப்பால் அதை உண்டை அல்லது சதுர வில்லையாக்கிக் கசகசா இலையில் மடித்து, எண்ணெய் தடவிய காகிதத்தில் சுருட்டி வைத்துக்கொள்ளுவார்கள்.

அபினியிலிருந்து பல ஆல்கலாயீடுகள் எடுக்கிறார்கள். அவற்றுள் சில முக்கியமான மருந்துகள். எல்லாவற்றுள்ளும் மிக முக்கியமானது மார்பீன் (Morphine) என்பது. இது அபினியில் 4-21% இருக்கிறது. கோடீன் (Codeine). பாப்பவெரீன், நார்க்கோட்டீன், தீபெயின் (Thebaine), நார்சியீன், புரோட்டோப்பீன் முதலியவையும் இருக்கின்றன.

அபினி முக்கியமாக மத்திய நரம்பு மண்டலத்தில் வேலை செய்கிறது; அதைத் தூண்டவும் செய்கிறது; சோர்வுறவும் செய்கிறது; குடைச்சல், வலி முதலியவற்றிற்கு மேலுக்குத் தடவும் மருந்தாகப் பயன்படுகிறது. கண்ணுக்கு வரும் கண் வலி முதலிய சில நோய்களுக்கும் இது மருந்து. வயிற்றுப்போக்குக்குக் கொடுத்தால் பேதியைக் கட்டும். சீதபேதிக்கும் இதைக் கொடுக்கிறார்கள். இதைத் தூளாகவும், டிங்சராகவும், கர்ப்பூர டிங்சராகவும் கையாளுகிறார்கள். டோவர் சூரணத்தில் இப்பிகாகுவானாவும் அபினியும் சேர்ந்திருக்கின்றன. இவற்றிலெல்லாம் முக்கியமாக வேலைசெய்வது மார்பீன்.

அபினியை லாகிரிப் பொருளாக உட்கொள்ளுகின்றனர். இதன் புகையைப் பிடிக்கின்றனர். இவை கொடிய பழக்கங்கள். அபினி வியாபாரம், புழங்குதல் முதலியவற்றைக் குறித்து எல்லா நாடுகளிலும் கண்டிப்பான சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. பார்க்க: கசகசா. கே. எஸ். ஸ்ரீ.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அபினி&oldid=1453847" இலிருந்து மீள்விக்கப்பட்டது