கலைக்களஞ்சியம்/அபினி வர்த்தகம், சீனாவில்
அபினி வர்த்தகம், சீனாவில் : சீனாவில் 9 ஆம் நூற்றாண்டில் அராபியர்களால் அபினி புகுத்தப்பட்டது. அதுமுதல் சீனாவிலும் கிழக்கிந்தியத் தீவுகளிலும் அபினிப் பழக்கம் வளர்ந்து வந்தது. அபினியைப் புகைத்து உட்கொள்ளும் பழக்கம் 17 ஆம் நூற்றாண்டிலிருந்தே சீனாவில் தொடங்கிற்று. சீனாவில். அபினிச் செடியும் மிகுதியாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவிலிருந்து சீனா மிகுதியாக அபினியை இறக்குமதி செய்துவந்தது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பிற நாடுகளினின்றும் இதை வரவழைத்தனர். இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ததால், மிகுந்த பொருளீட்டிவந்த ஆங்கிலேயர், சீனா பிற நாடுகளிலிருந்து அபினி இறக்குமதி செய்யக்கூடாதென்று 1840-ல் கூறினர். இது சீன - ஆங்கில யுத்தத்தில் வந்து முடிந்தது. இந்த யுத்தத்திற்கு 'அபினி யுத்தம்' என்பது பெயர். யுத்தத்தில் வெற்றிகொண்ட பிரிட்டன் ஹாங்காங்கை வசப்படுத்திக்கொண்டதோடு வேறு சில சலுகைகளையும் பெற்றது. 1906-ல் சீனர், அபினி விலக்குச் சட்டம் செய்தனர். ஆயினும் சீன-ஜப்பானிய யுத்தம் தொடங்கிய பிறகு, ஜப்பானியர் அபினிப் பழக்கத்தை மறுபடியும் சீனாவில் பரப்பலாயினர். இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பிறகு அபினிப் பழக்கம் சீனாவில் மிகவும் குறைந்துவிட்டது.