கலைக்களஞ்சியம்/அபுல் பசல்
அபுல் பசல் (1551-1602) மொகலாயப் பேரரசனான அக்பருடைய அந்தரங்க நண்பராயிருந்த அறிஞர். இவர் ஷேக் முபாரக் என்பவரின் குமாரர். இவரும் இவர் தமையனாரான அபுல்பெய்சியும் அக்பருடைய நன்மதிப்பைப் பெற்று, அம்மன்னன் அவையில் புகழோடு விளங்கியவர்கள். இவர் 1574-ல் அக்பருடைய அவைக்கு வந்து சேர்ந்தார். பெய்சி ஒரு புலவர். ஆனால் அபுல் பசல் பல கலைகளையும் கற்ற பேரறிவாளர். அவருக்கு அக்பரிடம் மிகுந்த செல்வாக்கு இருந்தது, அபுல் பசல் 4,000 குதிரை வீரர்களுக்குத் தலைவரான மன்சப்தாராக இருந்தார். அவர் பாரசீக மொழியில் அக்பர்நாமா, அயினி அக்பரி என்னும் நூல்களை இயற்றியுள்ளார். அக்பர் நாமா என்பது இரண்டு பாகமாக உள்ள ஒரு பெரு நூல்; அக்பரைப்பற்றி விவரித்துக் கூறுவது. அயினி அக்பரி அக்பருடைய ஆட்சி முறையைப்பற்றியும், சமய இயக்கங்களைப் பற்றியும் விரிவாகக் கூறுகிறது. இந்நூல்களில் இவர் தமது மன்னனைப்பற்றி உண்மையின் எல்லையைக் கடந்து புகழ்ந்துள்ளார் என்று சில வரலாற்றாசிரியர் கூறுவர். ஆயினும் இந்நூல்கள் இல்லாவிடில் அக்பருடைய அந்தரங்க வாழ்க்கையைப் பற்றியும், ஆட்சியைப் பற்றியும் பல விவரங்களை நாம் அறிந்துகொள்ள இயலாது. இவருக்கு நால்வர் மனைவியர். அக்பர் ஆட்சியில் அப்பேரரசனுக்கு அடுத்தபடியாக இவரையே முதன்மையான மனிதராகக் கூறலாம். இவர் அரசாங்க நிமித்தமாக ஒரு முறை தக்காணத்திலிருந்து ஆக்ரா நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது தன் தந்தை அக்பர்மீது இவருக்கிருந்த செல்வாக்கை விரும்பாத சலீம் இளவரசன் (ஜகாங்கீர்) இவரைக் கொன்றுவிட ஏற்பாடு செய்தான். 1602-ல் இவர் சலீமின் ஆளான பீர்சிங் என் பவனால் கொல்லப்பட்டார். தே. வெ. ம.