கலைக்களஞ்சியம்/அபெர்டீன்

அபெர்டீன் (Aberdeen) வட ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு முக்கியமான துறைமுகப்பட்டினம், பரப்பு: 17 சதுரமைல். மக் : 3,08,055 (1951). இதைக் 'கருங்கல் நகரம்' என்றும் கூறுவர் ; 'கடலையடுத்த வெள்ளி நகரம்' என்று இதை வருணிப்பர். இங்குள்ள ஒருவகைக் கல்லால் கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பதாலும், அவை வெயிலில் ஒளியோடு விளங்குகின்றன ஆகையாலும், இப்பெயர்கள் பெற்றது. இந்நகரில் பல அழகிய பூங்காக்கள் இருக்கின்றன. இங்கு ஒரு பல்கலைக் கழகம் உண்டு. இதைச் சார்ந்த கல்லூரிகள் சென்ற 4 நூற்றாண்டுகளாக இருந்துவருகின்றன. மீன்பிடித்தல், காகிதம் செய்தல், கயிறு செய்தல், வேலைக்கான மரம் அறுத்தல் முதலியவை முக்கியமான தொழில்கள் : 12ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்நகரம் வரலாற்றுப் பெருமை வாய்ந்ததாக இருந்து வருகிறது. 12, 13, 14 ஆம் நூற்றாண்டுகளில் ஸ்காட்டிஷ் மன்னர்கள் இந்நகரை இருப்பிடமாகக் கொண்டிருந்தனர். அவர்களில் ராபர்ட் புரூஸ் தான் இழந்துவிட்ட சிம்மாசனத்தைத் திரும்பவும் கைப்பற்றச் செய்த முயற்சிகளுக்கு இந்நகரினர் மிகவும் உதவினர். இப்பெயருள்ள நகர்கள் அமெரிக்காவிலுள்ள வடகிழக்கு மிசிசிபியில் ஒன்றும் (மக் : 5,000), தென் டக்கோட்டாவில் ஒன்றும் (மக்: சு. 17,000), சிரேஸ் ஹார்பரில் ஒன்றும் (மக்: சு. 19,000) இருக்கின்றன.