கலைக்களஞ்சியம்/அம்பர்
அம்பர் (Ambergris) கடல்படு திரவியம் ; ஓர்க்கோலை எனவும்படும் ; திமிங்கில வகையில் ஒன்றான ஸ்பெர்ம் திமிங்கிலத்தின் குடலிலிருந்து வரும் மெழுகு போன்ற பொருள். இது வாசனைத் திரவியங்கள் செய்வதற்குப் பயன்படுகிறது ; அவற்றின் மணம் நெடு நாளைக்கு நிலைத்திருக்கச் செய்கிறது. சில சமயங்களில் திமிங்கிலத்தின் உடலிலிருந்து கழிவுப் பொருளாக வெளியே வந்து, நீரில் கட்டிக்கட்டியாக மிதந்து கொண்டிருக்கும்; கரையிலும் ஒதுங்கும். செத்துப்போன திமிங்கிலத்தின் உடலிலிருந்தும் இதை யெடுப்பார்கள். இது திமிங்கிலத்துக்குக் குடல் நோயினால் உண்டாவது என்கிறார்கள். குடலுக்குள் இருக்கும்போது இது கெட்ட நாற்றமுள்ளது ; காற்றுப்பட்டபிறகு நல்ல மணமுடையதாகிறது.