கலைக்களஞ்சியம்/அப்பினைன் மலைத்தொடர்
அப்பினைன் மலைத்தொடர் இத்தாலியின் முதுகெலும்பு என்று கூறப்பெறும்; ஜெனோவா வளைகுடாவுக்கருகில் தோன்றி, இத்தாலி முழுவதும் சென்று சிசிலி வழியாகக் கடலடியில் ஊடுருவி, வட ஆப்பிரிக்க மலைகளுடன் தொடர்புடையது ; 800 மைல் நீளமுடையது. மிக உயரமான கார்னோ சிகரம் 9,580 அடி பல இருப்புப் பாதைகள் இம் மலையைக் குடைந்து செல்லுகின்றன. புகழ் வாய்ந்த சிகரம் வெசூவியஸ் என்னும் எரிமலையாகும். கராரா அருகில் தூய வெண்சலவைக் கல் கிடைக்கிறது. ஆர்னோ, டைபர் என்பவை இதில் தோன்றும் முக்கிய ஆறுகள். இத்தாலி நாட்டில் மூன்றில் இரண்டு பாகம் இந்த மலைத் தொடரே. இதுவே ஐரோப்பிய மலைகளுள் மிகத் தாழ்ந்தது. காற்றும் மழையும் கரைத்துத் தாழ்த்தி விட்டதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். சாலன்மாரினோ என்னும் சின்னஞ்சிறு குடியரசு இந்த மலையின்மீது உள்ளது.