கலைக்களஞ்சியம்/அப்பிரகம்

அப்பிரகம் இந்தியாவில் மிகுதியாகக் கிடைக்கும் கனியங்களில் ஒன்று. மஸ்கோவைட்டு, பயோட்டைட்டு, பிளாகோபைட்டு, லெப்பிடோலைட்டு ஆகிய பல கனியங்கள் அப்பிரகம் எனப்படும். கருங்கல், நைஸ் போன்ற பாறைகளின் இடையில் படிக வடிவான மஸ்கோவைட்டுப் பெருந் தகடுகளாகக் கிடைக்கிறது. இது இந்தியாவில் சென்னை, பீகார், வங்காள இராச்சியங்களிலும், அமெரிக்காவில் தென் டக்கோட்டா, கொலராடோ முதலிய பகுதிகளிலும், இலங்கையிலும் கிடைக்கிறது. நெல்லூர்ச் சுரங்கங்களில் 10 அடி அகலமுள்ள தடிப்பான கட்டிகளாகவும் இது கிடைப்பதுண்டு, ஒரு தகட்டின் அளவு 30" x 24" வரையும் இருக்கும். 1948-ல் இந்தியாவில் சுமார் 6 கோடி ரூபாய் பெறுமானமுள்ள அப்பிரகம் உற்பத்தியாயிற்று. அப்பிரகம் ஒரே திசையில் வெகு எளிதில் பிளவுறும் தன்மை வாய்ந்தது. இது நெகிழ்வும், மீள் சக்தியும் உடைய திண்மம் ; உறுதியான மிக மெல்லிய தகடுகளாகுந் திறனுள்ளது. இதன் படிகங்கள் அறுகோண அல்லது சாய் கன சதுர வடிவுள்ளவை, அப்பிரகத்தைப் பிளந்து பெறப்படும் தகட்டை முனை மழுங்கிய ஊசியால் அடித்தால் அறுமுகங்களுள்ள நட்சத்திரம் போன்ற வடிவத்தில் அது உடையும். அப்பிரக வகைகளில் மஸ்கோவைட்டு ஒளியைப் புகவிடும். லெப்பிடோமெலேன் என்ற வகை ஒளியைப் புகவிடாது. மஞ்சள், பச்சை, சிவப்பு, பழுப்பு, கறுப்பு ஆகிய நிறங்களையுடைய வகைகள் உண்டு.

அப்பிரகம் சிக்கலான ரசாயன அமைப்புள்ளது. அப்பிரகக் கனியங்கள் கார உலோகங்களையும், ஹைடிரஜனையும் கொண்ட ஆர்தோ சிலிகேட்டுகள். பையோட்டைட்டுப் போன்ற சிலவகை அப்பிரகங்களில் மக்னீசியமும், இரும்பும் இருப்பதுண்டு.

பயன்கள் : ஒளியைப் புகவிடுந் தன்மையும், தீயை எதிர்க்கும் திறனும் வெப்பநிலை மாற்றங்களால் பாதிக்கப்படாத தன்மையுமுள்ள அப்பிரகம் அடுப்புக்களிலும், விளக்குக்களிலும், சன்னல் கதவுகளிலும் மோட்டார் வண்டியின் முன்திரைகளிலும் பயன்படு அப்பிரகத் துண்டங்களை நகைகளில் பயன்படுத்துவதுமுண்டு. அப்பிரகத்தூள் வர்ணங்கள், காகிதம், உயவு ஆகியவற்றின் தயாரிப்பில் பயன்படுகிறது. போட்டோத் தட்டு, படவிளக்கு நழுவம் (Slide), படங்களைப் பாதுகாக்கும் சட்டம் முதலியவற்றிற்கும் இது பயன்படுகிறது.

ஆனால் இது மிக முக்கியமாக மின்சாரத் தொழிலில் பயன்படுகிறது. மின்சாரத்தைக் கடத்தாத காப்புறையாக இது பல கருவிகளில் இன்றியமையாது விளங்குகிறது.