கலைக்களஞ்சியம்/அம்பர் மாகாளம்

அம்பர் மாகாளம் தஞ்சாவூர் ஜில்லாவில் பூந்தோட்டம் புகைவண்டி நிலையத்திற்கு 2¾ மைல் தொலைவில் உள்ளது. இதற்குக் கோயில் திருமாகாளம் என்பதும் பெயர். இதற்கு முக்கால் மைல் தொலைவில் அம்பர் என்னும் தலம் இருக்கிறது. இவ்விரண்டு ஊர்களுக்கும் இடையில் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரான சோமாசிமாற நாயனார் வேள்வி செய்த மண்டபம் இருக்கிறது. அம்பன், அம்பாசூரன் என்னும் அரக்கர்களைக் கொன்ற பாவம் தீரக் காளி இங்குப் பூசை செய்தாள் என்பது ஐதீகம். வெளிச் சுற்றில் தென் பக்கத்தில் காளி கோயில் இருக்கிறது. மகாகாள ரிஷி என்பவரும் இங்குப் பூசை செய்தனர். கோவிலில் சோமாசிமாற நாயனார், அவர் மனைவியார், சுந்தரமூர்த்தி நாயனார், பரவை நாச்சியார் ஆகிய இவர்களது உருவச் சிலைகள் இருக்கின்றன. சுவாமி பெயர் மாகாள நாதர். அம்மை அச்சந்தீர்த்த நாயகி. சோமாசிமாற நாயனார் வேள்வி விழா வைகாசி ஆயிலிய நாளில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.