கலைக்களஞ்சியம்/அரக்கான்

அரக்கான் பர்மாவில் ஒரு மாகாணம் ; வங்காளக் குடாக்கடலின் வடகிழக்கு ஓரத்தில் உள்ளது. இது அக்கியாபு, வட அரக்கான் மலைப்பிரதேசம், சாண்டோவே, கியாக்ப்யூ என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டது. பரப்பு: சு. 16,000 மைல். 1826-ல் 1 இலட்சம் மக்கள் தொகையே யிருந்தது; 1941-ல் 11.86 738 ஆக மிகுந்துவிட்டது. இங்குள்ள யோமா மலைகள் முக்கியமானவை.நன்செய்ச் சாகுபடியே பெரும்பாலும் நடைபெறுகிறது. பழங்கள், மிளகாய், புகையிலை முதலியவை சிறு அளவில் கிடைக்கின்றன. அரக்கான் மக்கள் தங்கள் நாட்டு வரலாறு மிகப் பண்டையது என்று கூறிக்கொள்கிறார்கள்; இதற்கு வேறு சான்று இல்லை. இப்பிரதேசம் முதலில் போர்ச்சுகேசியர்களுக்குச் சொந்தமாயிருந்தது; பிறகு 1826 லிருந்து ஆங்கிலேயர் வசமிருந்தது. இந்நாட்டு மக்களுக்குத் தனி மொழியும் பழக்கவழக்கங்களும் உண்டு. பெரும்பான்மையோர் பௌத்த மதத்தினர். அரக்கான் என்னும் நகரம் முதலில் தலைநகரமாயிருந்தது; பிற்காலத்தில் அக்யாபு முக்கிய நகரமாயிற்று.