கலைக்களஞ்சியம்/அரக்கு

அரக்கு: அரக்கு என்பது ஓர் இயற்கைப் பிசின் லாக்கிபெர் லாக்கா (Laccifer Lacca) என்ற ஒரு வகைச் சிறு பூச்சியின் உடலிலிருந்து கசியும் திரவம் உறைந்து அரக்காகிறது. அரக்குப் பூச்சிகள் இலட்சம் இலட்சமாகக் குடியேறுவதிலிருந்து இதன் வடமொழிப் பெயர் லட்சம் அல்லது லாஹ் என்று தோன்றியதாகக் கருதுகின்றனர்.

அரக்குப் பூச்சி (Lac insect) : அரக்குப் பூச்சிகள் மூட்டைப் பூச்சி வரிசையில் காக்சிடீ குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை குஞ்சுகளாயிருக்கும்பொழுது சுமார் 1/50 அங்குலம் நீளமும், 1/150 அங்குலம் குறுக்களவும் உள்ளவையாக இருக்கும். நன்றாக முதிரும் பொழுது 1/8 அங்குலம் குறுக்களவுள்ள உருண்டை வடிவாகவோ, முட்டை வடிவாகவோ இருக்கும். இப்பூச்சிகள் சிலவகை மரங்களிலேயே குடியேறி உயிர்வாழ்கின்றன. தாவரங்களுள் பூவன், இலந்தை, பலாசு,காசுக் கட்டி, ஜாலாரி, துவரை முதலியவை முக்கியமானவை.

பயிரேற்றுதல் : அரக்குப் பூச்சிகள் இம்மரங்களில் இயற்கையாகவே குடியேறலாம். அல்லது செயற்கையில் குடியேற்றப்படலாம். பர்மாவிலும் சயாமிலும் இயற்கையாகவே அரக்குப் பயிராகிறது. இம்முறையில் அரக்குச் சேகரிப்பவர் தேவையானபொழுது பயிரைவெட்டி எடுப்பதைத் தவிர வேறு ஒருவித முயற்சியும் எடுத்துக்கொள்வதில்லை. இந்தியாவில் இரண்டுமுறைகளும் கையாளப்படுகின்றன. அரக்குப் பூச்சிக் குஞ்சுகள் மிகச்சிறியவை யாகையாலும், தமது முயற்சியாலேயே ஊர்ந்து செல்லவேண்டி இருப்பதாலும் வெகு தூரம் செல்ல இயலுவதில்லை. இதனால் இயற்கையாகக் குடியேறும்பொழுது ஏற்கனவே பயிரான மரக்கிளைகளிலேயேதான் மீண்டும் குடியேறுகின்றன. தக்க வசதியுள்ள கிளைகள் கிடையாமல் பல பூச்சிகள் மடிந்தும் போகின்றன. இதைத் தவிர இப்பூச்சிகளின் பகைகள் இவற்றை அழிக்கலாம். மரங்களின்மேல் ஒட்டுண்ணிகளாக வாழும் இப்பூச்சிகள் ஒரே இடத்தில் பொருந்தியிருப்பதால் மரங்களுக்கு விரைவில் நாசம் விளைகிறது. இக்காரணங்களினால் இயற்கை முறையைவிடச் செயற்கைக் குடியேற்ற முறையே சிறந்தது. இம்முறையில் அரக்குப் பயிர் செய்வோர் குஞ்சுகள் வெளிவர நான்கைந்து நாட்களுக்குமுன் அரக்கைத் தாங்கி நிற்கும் கிளைகளை வெட்டி எடுத்து, இவற்றுள் நல்ல நிலையில் உள்ளவற்றைத் தேர்ந்தெடுத்து, முன்கூட்டியே தயார் செய்திருக்கும் மரங்களின்மேல் தேவையான அளவுக்கு ஆங்காங்கே கட்டுவார்கள். குஞ்சுகள் வெளிவந்தவுடன் அருகிலுள்ள இளங்கிளைகளில் குடியேறும்.

அரக்குப் பூச்சிகளின் வாழ்க்கை : இப்படிக் குடியேறும் குஞ்சுகளில் சராசரி 70% பெண்ணும், 30% ஆணுமாக இருக்கும். இவை ஊர்ந்து சென்று, இளங்கிளைகளின் மேல்தோலில் குழாய் போன்ற தமது வாயினால் குத்தி, அவ்விடங்களில் ஒட்டிக்கொண்டு, அக்கிளைகளின் வழியே வரும் மரச்சாற்றை உறிஞ்சி உயிர் வாழ்கின்றன. தமது பாதுகாப்பிற்காக இவை உடலிலிருந்து பிசின் போன்ற பொருளை வெளிவிட்டுத் தம்மைச் சுற்றிலும் கூடுபோல் கட்டிக்கொள்கின்றன. குடியேறிய சில மாதங்களில் ஆண் பூச்சிகள் மீண்டும் வெளிக்கிளம்பிப் பெண்பூச்சிகளைச் சினைப்படுத்திவிட்டு, மூன்று நான்கு நாட்களில் இறந்து போகின்றன. பெண் பூச்சிகள் முதலில் குடியேறிய இடங்களிலிருந்து நகருவதே இல்லை. ஆண் பூச்சிகள்

மடிந்தபின் பெண் பூச்சிகளின் உடல்களிலிருந்து இன்

அரக்குப் பூச்சி

1. அரக்குப் பூச்சிக் குஞ்சு 2. அரக்குப் பூச்சி, ஆண் (இறகுடையது) 3. அரக்குப் பூச்சி, ஆண் (இறகில்லா தது) 4. அரக்குப் பூச்சி, ஆண் (இளம்பருவம்) 5. ஆண் அரக்குக் படு 6, பெண் அரக்குக் கூடு 7. அரக்குப் பூச்சி, பெண்-முதிர்ந்தது 8. பெண் அரக்குக் கூடு - முதிர்ந்தது. மெழுகுக் கம்பிகளைக் கவனிக்கவும் 9-10. குஞ்சுபொரிக்கும் தருலத்தில் பெண் அரக்குக் கூட்டின் தோற்றம் 11. மரக்கிளையில் ஆண் பெண் அரக்குக் கூடுகள் 12. இலந்தை மாக்கிளையில் முற்றிய அரக்கு.

உதவி : இந்திய அரக்கு ஆராய்ச்சி யைம், ராஞ்சி.

னும் அதிக அளவில் அரக்குக் கசியும். உற்பத்தியாகும்

அரக்கில் பெரும்பாகமும் பெண் பூச்சிகளின் உடல்களிலிருந்துதான் கிடைக்கிறது. இவ்வாறு உண்டாகும் அரக்குக் கூடுகள் நாளடைவில் ஒன்றோடொன்று இணைந்து, ஒரே பொருக்காகவோ, அநேக சிறு சிறு பொருக்குக்களாகவோ மாறுகின்றன. பெண் பூச்சிகள் பருவமடைந்ததும் தங்களைச் சுற்றியுள்ள அரக்குக் கூண்டிலிருந்து தங்கள் பின் பாகங்களை முன்னுக்குச் சுருக்கிக் கொண்டு, அவ்விடம் உண்டாகும் இடத்தில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. இந்தத் தருணத்தில் ஒவ்வொரு கூடும் பாதி மஞ்சள் நிறமாகவும் பாதி சிவப்பு நிறமாகவும் தோன்றும். இந்தச் சமயத்திலேதான் இக்கிளைகளை வெட்டி எடுத்து, மறுபடி பயிர் செய்வதற்கு விதையாகப் பயன்படுத்தவேண்டும். தாய்ப்பூச்சிகள் தங்கள் குஞ்சுகளெல்லாம் வெளியேறும் வரை உயிருடனிருந்து பின்னர் இறக்கின்றன.

அரக்குப் பயிர் : இந்தியாவில் பீகார், மத்தியப்பிரதேசம், ஒரிஸ்ஸா, திருவிதாங்கூர், வங்காளம், பஞ்சாப், அஸ்ஸாம், மைசூர், சென்னை ஆகிய இடங்களில் அரக்குப் பயிராகிறது. உற்பத்தியில் சுமார் 60% பீகாரிலும், 15% மத்தியப் பிரதேசத்திலும் கிடைக்கிறது. பொதுவாக ஆண்டிற்கு இரண்டு விளைச்சல்களைப் பெறலாம். சென்னை, மைசூர் பகுதிகளில் மட்டும் 13 மாதங்களில் மூன்று விளைச்சல்களைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு வகை மரத்திலும் பயிராகும் பூச்சிக்குத் தனிப்பட்ட பண்புகள் உண்டு. மரத்திற்கேற்றவாறு அதில் பயிராகும் அரக்கின் பண்பும் வேறுபடும். இத்தகைய அரக்கு வகைகளில் பூவன்மர (Schleichera trijuga) அரக்கு உயர்ந்தரகமானது.

கொம்பரக்கு (Stick lac) : அரக்குச் சேகரிப்போர் மேல் விவரித்தபடி அரக்கு வளர்ந்திருக்கும் கிளைகளை வெட்டி எடுத்து, அரக்கைக் குச்சிகளிலிருந்து கையினால் ஓடித்தோ, கத்தியால் சீவியோ எடுப்பார்கள். இவ்விதம் கிடைக்கும் அரக்கிற்குக் கொம்பரக்கு என்பது பெயர்.

அரக்குச் சாயம்: கொம்பரக்கை ஒன்றிரண்டாய்ப் பொடித்துச் சலித்துத் தண்ணீரில் கழுவினால் அரக்குச் சாயம் நீரிற் கரைந்து பிரியும். இச்சாயம் பிராணிகளிடமுண்டாகும் பட்டு, கம்பளிபோன்ற இழைகளில் கெட்டியாக ஏறும் தன்மை வாய்ந்தது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்வரை இதுவே முக்கியச் சாயப் பொருளாக விற்கப்பட்டு வந்தது. செயற்கைச் சாயங்கள் வழக்கத்திற்கு வந்தபின், அரக்குச் சாயத்திற்குக் கிராக்கி அநேகமாக அற்றே போய்விட்டது.

மணி அரக்கு (Seed lac) : கொம்பரக்கைத் தண்ணீரால் கழுவிச் சாயத்தை அகற்றிய பின், சுத்தி செய்து கிடைப்பது மணி அரக்கு. வெள்ளை அரக்குச் செய்வதற்காக இது அயல்நாடுகளுக்குச் சிறிதளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அவல் அரக்கும் மணி அரக்கின் ஒருவகையே.

தகடரக்கு (Shellac) : மணி அரக்கை மேலும் தூய்மையாக்கி, 2 அங்குலம் அகலமும் 40 அடி வரை நீளமுமுள்ள துணிப்பைகளில் நிரப்பிப் பைகளைச் சூடாக்கி முறுக்கினால் அரக்கு இளகி வெளிவரும். இதையும், அரக்கு மெழுகையும் நன்றாகக் கலந்து, வெந்நீர் நிறைத்த ஜாடிகளின்மேல் கொட்டிப்பரப்பி, ஜாடிகளின் மேலிருந்து அரக்கை உரித்தெடுத்து, அதை மெல்லிய படலங்களாக இழுப்பார்கள். இப்படலங்கள் குளிர்ந்தபின், இவற்றைச் சிறு தகடுகளாகப் பொடிக்கலாம். இது தகடரக்கு எனப்படும். இது அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் வாணிபப் பொருளாகும்.

தட்டை அரக்கு (Button lac) மேல் விவரித்தபடி இளக்கிப் பிழிந்தெடுத்த அரக்கைப் படலங்களாக இழுக்காமல்,3" X¼" அளவுகொண்ட தகடுகளாகவும் தயாரிப்பதுண்டு. அதற்குத் தட்டை அரக்கு என்று பெயர். இவ்வுருவத்திலும் அரக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தகடரக்கு, தட்டை அரக்கு இவைகளில் அரக்குப் பிசினுடன் சுமார் 5% அரக்கு மெழுகும் கலந்திருக்கும்.

அரக்குத் தொழிலின் உடன்விளைபொருள்கள்: மணி அரக்கிலிருந்து கிடைக்கும் மொலம்மா (Molamma) என்ற அரக்குத்தூளையும், அரக்கைப் பிழிந்த பைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் தூளையும் மணி அரக்குடன் கலந்து, மட்டரகத் தகடரக்கைச் செய்யப் பயன்படுத்துகிறார்கள். பையிலிருந்து வெளிவராமல் தங்கிவிடும் பொருளை ஆல்கஹாலில் கரைத்துக் கல்லரக்கு (Garnet lac) என்ற பொருளைத் தயாரிக்கிறார்கள்.

அரக்கு உற்பத்தி: உலகில் ஓராண்டில் உற்பத்தியாகும் அரக்கின் அளவு,விலையையும் கிராக்கியையும் பொறுத்து 25,000 டன்னிலிருந்து 40,000 டன்வரை வேறுபடும். இதில் சுமார் 90% இந்தியாவிலேயே உற்பத்தியாகிறது. இந்தியாவைத் தவிர, பர்மாவிலும் சயாமிலும் அரக்கு உற்பத்தி நடைபெறுகிறது. அங்கு உற்பத்தியாகும் அரக்கில் பெரும்பகுதி இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு, பண்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அரக்கின் தன்மைகளும் பயனும் : அரக்கு மிருதுவாகும் சூடு 65-70°; உருகும் சூடு 80-85°. தூய அரக்கு பழுப்பு மஞ்சள் நிறமானது. இது ஆல்கஹாலிலும் காரக்கரைவுகளிலும் கரையும்; நீரிலும், எண்ணெய்களிலும் கரைவதில்லை. இசைத் தட்டுக்கள் செய்வதில் இது மிக அதிகமாகப் பயனாகிறது; அடுத்தபடி முக்கியமாக மின்சாரக் கருவிகளில் பயன்படுகிறது. மரம், ரப்பர், தோல், உலோகத் தகடுகள் முதலானவற்றில் பூசுவதற்கேற்ற மெருகெண்ணெய் செய்ய இது பயன்படுகிறது. உலக உற்பத்தியில் சுமார் 10% தொப்பிகளுக்கு விறைப்புக் கொடுக்க உபயோகிக்கப்படுகிறது. இவை தவிர வார்ப்புச் சாமான்கள், ரப்பர்ச் சாமான்கள், வர்ணக் குச்சிகள் (Lacquering sticks), விளையாட்டுச் சாமான்கள், முத்திரை அரக்கு (Sealing wax), சாணைக்கல் முதலான அநேக சாமான்கள் செய்யவும் பயனாகிறது. கொம்பரக்கும் மணி அரக்கும் மருந்தாகப் பயனாகின்றன. யெ. ச.

நூல்கள் : P.M. Glover, Lae Cultivation in India; Lac in India (Bcoklet No. 9, Govt. of India).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அரக்கு&oldid=1454254" இலிருந்து மீள்விக்கப்பட்டது