கலைக்களஞ்சியம்/அரசியற் கட்சிகள்
அரசியற் கட்சிகள்: பண்டை நாட்களிலிருந்து ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் கட்சிகள் இருந்துவந்திருக்கின்றன ; எனினும், அவற்றைத் தம் கால அரசியல் கட்சிகளுடன் ஒப்பிட முடியாது. அவை தலைமை ஸ்தானத்திற்காகப் போட்டியிட்ட சில குடும்பங்களையும் தலைவர்களையும் ஆதரித்துவந்த கூட்டங்களே. தற்கால அரசியல் கட்சிகள், கொள்கை வேறுபாட்டால் எழுபவை. பிரதிநிதித்துவ அரசியல் தோன் றிய பின்னரே அவை ஏற்பட்டன. சட்டசபைகளில் ஒரேவிதமான கருத்துக்களையும் கொள்கைகளையும் கொண்ட அங்கத்தினர் கள் ஒத்துழைக்கத் தொடங்கின போது கட்சிகள் தோன்றின எனலாம். பொதுமக்கள் வாக்குரிமையைப் பெற்றதும்; அவர்களிடையும் கட்சிகள் அமைக்கப்பட்டன. அரசியல் கட்சிகள் 19-20 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றி வளர்ந்தவையே - எனலாம்.
அரசியல், மத வேறுபாடுகளால் காவலியர்ஸ் (Cavaliers), ரவுண்ட் ஹெட்ஸ் (Round Heads) என இரு கட்சிகள் 17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தோன்றின. 1688-ல் நிகழ்ந்த அரசியல் புரட்சிக்குப்பின் அவை டோரி (Tory), விக் (Whig) என்ற புதுப் பெயர்களைப் பெற்றன. 19ஆம் நூற்றாண்டில் அவை கன்சர்வெட்டிவ், லிபரல் கட்சிகளாக மாறின. தொடக்கத்தில் இரு கட்சிகளும் பார்லிமென்டு அங்கத்தினர்களை மட்டும் கொண்டிருந்தன. 19 ஆம் நூற்றாண்டில் பொதுமக்கள் வாக்குரிமை பெற்றபின் அவை தேசம் முழுவதிலும் பரவின. வார்டுகளிலும், தேர்தல் தொகுதிகளிலும், முக்கிய நகரங்களிலும், ஜில்லாக்களிலும் ஒவ்வொரு கட்சியும் சிறு கமிட்டிகளை நிறுவி, வாக்காளர்களின் ஆதரவைத் தேட ஆரம்பித்தது.
பிரிட்டிஷ் தொழிற் கட்சியின் ஆரம்பம் வேறு வகையானது. பார்லிமென்டுத் தேர்தல்களில் தொழிற் கட்சி தனிக்கட்சியாகப் போட்டியிட ஆரம்பித்தது. சென்ற ஐம்பது ஆண்டுகளில் இக்கட்சியின் பலம் அதிகரித்து, இன்று தேசத்தின் முதலிரண்டு கட்சிகளில் ஒன்றாய் விளங்குகின்றது. 'பிரிட்டிஷ் வரலாற்றில் இருகட்சி முறையே பெரும் பாலும் வழங்கி வருகின்றதெனினும், அப்போதைக்கப்போது மூன்றாம் கட்சிகளும் இருந்திருக்கின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் ஆரம்பத்திலிருந்து ரிப்பப்ளிக்கன், டெமகிராடிக் கட்சிகள். மூன்றாம் கட்சிகள் அமெரிக்கச் சரித்திரத்தில் , அப்போதைக்கப்போது தோன்றி மறைந்துள்ளன. எனினும் - இரு கட்சி முறை நிலைபெற்றிருக்கிறது. கானடா, ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து, தென் ஆப்பிரிக்கா முதலிய ஆங்கிலேயக் குடியேற்ற நாடுகளும் இருகட்சி முறை யையே அனுசரித்து வருகின்றன.
இருகட்சி முறை வழங்கிவரும் நாடுகளில் பிரதிநிதித்துவ அரசியல் பலம் பொருந்தி, நீண்ட காலமாக ஒழுங்காய் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் குறைபாடுகளை எடுத்துக்காட்டுவதற்குச் சம்பலம் பொருந்திய கட்டுப்பாடுடைய கட்சி இருப்பதால், அரசாங்கம் திறமையோடு நடைபெறும் நாட்டில் யதேச்சாதிகாரம் தோன்ற முடியாது. பொறுப்புள்ள ஆட்சி இயலுகிறது. பார்லிமென்டுத் தேர்தல்களில் அதிக வாக்குக்களையும் ஸ்தானங்களையும் பெறும் கட்சியே அரசாங்கத்தை நடத்துமாகையால் மக்களே நேராக அரசாங்கத்தை ஏற்படுத்துகிறார்கள் எனலாம். அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை அறிந்து, அதை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ மக்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. தேர்தல் காலத்தில் வாக்களித்த காரியங்களை அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் அதற்குப் பொறுப்பாளி யார் என்பதை எளிதில் தெரிந்துகொள்ள முடியும். ஏனைய ஐரோப்பிய நாடுகளில் 1850க்குப் பின்னரே அரசியல் கட்சிகள் தோன்றின. முதலில் பொது மக்களிடையே அமைக்கப்பெற்றுப் பின்னர்ச் சட்டசபைகளில் புகுந்த கட்சிகளும் உள்ளன. தொழிலாளர் கட்சிகள் எல்லாம் இவ்வாறு எழுந்தவையே. சென்ற முப்பதாண்டுகளில் சில நாடுகளில் ஒரே கட்சியின் ஆதிக்கம் தோன்றியது. இவற்றுள் முக்கியமானவை ஜெர்மனி (1932-1945), இத்தாலி (1922-- 1945), துருக்கி (1921-1949), போர்ச்சுகல், ஸ்பெயின், சோவியத் சோஷலிஸ்டு ஐக்கிய நாடுகள் என்பவை. இறுதியில், குறிப்பிட்ட மூன்று நாடுகளில் மட்டும் தனிக்கட்சி ஆதிக்கம் இன்னும் நிலைத்திருக்கிறது. தனிக் கட்சிகள் பாசிஸ்டு, கம்யூனிஸ்டு என்று இருவகையின. பாசிசம் (Fascism) முதல் உலக யுத்தத்தின் பின் இத்தாலியில் தோன்றியது. அதன் உதவியால் 1922-ல் முசொலினி அரசாங்கத்தைக் கைப்பற்றினார்; பின்னர் பிற கட்சிகளை எல்லாம் ஒழித்து, நாட்டின் சர்வாதிகாரியானார். ஜெர்மனியில் நாஜிக் கட்சி என்னும் தேசிய சோஷலிஸ்டுத் தொழிலாளர் கட்சியும் இவ்வாறே எழுந்தது. இக்கட்சியின் வளர்ச்சிக்கு ஜெர்மனியின் அப்போதைய சீர்கேடான நிலைமையே காரணம். பொருளாதார நிலைகெட்டு, நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருந்தது. 1932-ல் பார்லிமென்டுத் தேர்தல்களில் நாஜிக் கட்சிக்கே பெரும்பாலான வாக்குக்கள் கிடைத்தன. ஹிட்லர், இராச்சியத்தின் முதன் மந்திரியாக நியமிக்கப்பட்டார். அவர் பார்லிமென்டையும் இதர கட்சிகளையும் ஒழித்து, 1933-ல் தம் சர்வாதிகாரத்தை நிறுவினார். மற்ற நாடுகளிலும் ஒருகட்சி ஆதிக்கம் இவ்வாறுதான் எழுந்தது. அரசியல் கட்சிகளைப் பலவகையாகப் பிரிக்கலாம். அவற்றிற்கு ஆதரவளிப்போர்களைக்கொண்டு, நடுத்தர வகுப்பினர் கட்சிகள் (Bourgeois), தொழிலாளர் கட்சிகள் எனவும், அமைப்பு வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு, ஒருமுகப்படுத்திய கட்சிகள் (Centralised parties), பன்முகப்படுத்திய கட்சிகள் (Decentralised p.), தனி அங்கத்தினர் கட்சிகள் (Direct p), கூட்டு அங்கத்தினர் கட்சிகள் (Indirect p.), வடிவ அமைப்புக் கட்சிகள் (Cadre p.), பொதுமக்கட்கட்சிகள் (Mass p.) எனப் பல வழிகளில் வேறுபாடு செய்யலாம். கொள்கைகளை அனுசரித்து முதலாளித்துவ, சோஷலிஸ்டு, பாசிஸ்டு, கம்யூனிஸ்டுக் கட்சிகள் எனவும் கட்சிகளைப் பாகுபாடு செய்யலாம். அவை ஈடுபட்டுள்ள வேலைகளை அனுசரித்துப் பூரண ஆதிக்கக் கட்சிகள் (Totalitarian p.) எனச் சிலவற்றைத் தனிப்படுத்தலாம். கட்சிகள் அமைப்பின் சில முக்கியக் கூறுகளையே இங்குக் குறிப்பிடமுடியும். அரசியல் கட்சிகள், கமிட்டி, செக்ஷன், ஸெல் (Cell), குடிப்படை(Militia) என்னும் நான்கு வகையான அமைப்பைக் கொண்டுள்ளன. முதன் முதலில் தோன்றிய கட்சிகள் கமிட்டிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. தேர்தல் காலத்தில் மட்டும் அவை தீவிரமாக வேலைசெய்கின்றன. ஒருசில தலைவர்களே கட்சியை நிருவாகம் செய்கிறார்கள். கட்சி வேலைக்கு அவசியமான நிதி உதவியை ஒருசில பணக்காரர்களிடமிருந்து இக்கட்சிகள் பெறுகின்றன. அரசியல் துறையில் மட்டும் இவை வேலை செய்கின்றன. இங்கிலாந்தில் கன்செர்வெடிவ், லிபரல் கட்சிகள், அமெரிக்காவில் ரிப்பப்ளிக்கன், டெமகிராடிக் கட்சிகள், பிரான்சில் ராடிகல் சோஷலிஸ்டுக் கட்சி, இந்திய நாட்டில் காங்கிரசு, முஸ்லிம் லீக், லிபரல் கட்சிகள் இவ்வகுப்பினைச் சேர்ந்தவையே. ஐரோப்பிய நாடுகளில் சோஷலிஸ்டுக் கட்சிகள் செஷன்கள் என்னும் பகுதிகளைக் கொண்டுள்ளன. செஷன்கள் ஆயிரக்கணக்கான அங்கத்தினர்களை உடையவை. தேசத்தின் பல பாகங்களிலும், ரெயில்வே முதலிய முக்கியத் தொழில்களிலும் செக்ஷன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கம்யூனிஸ்டுக் கட்சிகள் ஸெல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஸெல் மூன்று முதல் பத்துப் பதினைந்து அங்கத்தினர்களைக் கொண்டது; ஒரே தொழிற்சாலை அல்லது காரியாலயத்தில் வேலை செய்வோரையே அங்கத்தினர்களாகக் கொண்டது. ஸெல்கள் தம்முள் தொடர்பில்லாமல் நேர் மேலுள்ள ஸ்தாபனங்களுடன் மட்டிலும் இணைக்கப்பட்டிருக்கின்றன. பாசிஸ்டுக் கட்சிகள் படை அமைப்பைக் கொண்டிருக்கின்றன. பொறுக்கி எடுத்த சிலரே கட்சியில் அங்கம் பெறுகிறார்கள். இக்கட்சிகளுக்கு ஒருநிற உடுப்பு, கொடி முதலிய படைச் சின்னங்கள் உண்டு. கட்சிக்கு ஒரே தனித் தலைவர். பலாத்கார முறைகளால் அரசியலைக் கைப்பற்றுவது பாசிஸ்டுக் கட்சியின் நோக்கம். தேர்தல்களில் கலந்து கொள்வதுகூடப் பிரதிநிதித்துவ அரசியலை ஒழிக்கும் பொருட்டே, 1932 பார்லிமென்டுத் தேர்தல்களில் நாஜிக் கட்சி, பார்லிமென்டில் அதிக ஸ்தானங்களைப் பெற்றதும், ஹிட்லர் அதை ஒழித்துத் தம் யதேச்சாதிகாரத்தை ஸ்தாபித்தார். கம்யூனிஸ்டுக் கட்சிகளும் பாசிஸ்டுக் கட்சிகளும் பல பொது அமிசங்களை உடையன. இரண்டும் பூரண ஆதிக்கக் கட்சிகள், மக்களின் வாழ்க்கை முழுவதையும் கட்டுப்பாடு செய்கின்றன; அவர்கள் வாழ்க்கையையும் கருத்தையும் அடிமைப்படுத்துகின்றன. பார்லிமென்டு முறையில் அவற்றிற்கு நம்பிக்கை இல்லை. எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவான ஓர் அமிசத்தை இங்கே குறிப்பிடலாம். வெளிப்படைக்குக் கட்சிகள் எல்லாம் ஜனநாயக முறையில் அமைந்தவையாகக் காணப்படுகின்றன. ஆனால், உண்மையில் கட்சிகளை நிருவகிப்போர் தம்மைத்தாமே தேர்ந்துகொள்ளும் ஒருசிலரே (Oligarchy). ‘ராபர்ட் பிஷெல்ஸ் என்ற பேரறிஞர் எடுத்துக் காட்டியதுபோல் ஜனநாயகக் கட்சிகளிலும் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ ஒருசிலரே கட்சி நிருவாகத்தைச் செய்கிறார்கள்.’ முன் கூறியவற்றிலிருந்து பிரதிநிதித்துவ அரசியலை நடத்தக் கட்சிகள் இன்றியமையாதன என்பதும், பல கட்சிகள் இல்லாவிடில் ஜனநாயக அரசியல் உலகில் இருக்க முடியாதென்பதும் விளங்கும். நா. ஸ்ரீ.
இந்திய அரசியற் கட்சிகள் : 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே இந்தியாவில் அரசியற் கட்சிகள் தோன்றத் தொடங்கின. 1885-ல் பம்பாயில் முதல் காங்கிரசு கூடியபோது, மேனாட்டுக் கல்வி கற்றுத் தேசியக் கொள்கைகளை மேற்கொண்டு, நாட்டு நன்மையைக் கருதிப் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரிடம் வேண்டுகோள் விடுக்கும் அறிஞர்கள் குழுவாகவே அக்காங்கிரசு இருந்தது. திலகர் முதலிய தீவிரவாதிகள் காங்கிரசிற் புகும்வரையில் அது மிதவாத சபையாகவே இருந்தது. கோகலே முதலியவர்களே அக்காலத்தில் காங்கிரசின் பிரதிநிதிகளாயிருந்தனர். அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் சிறைக்குச் செல்லும் வழக்கம் அன்னி பெசன்ட் அம்மை ஆரம்பித்த 'ஹோம் ரூல்' இயக்கத்தின்போது ஏற்பட்டது. 1920-ல் காந்திஜி காங்கிரசைப் பலாத்காரமற்ற சத்தியாக்கிரக முறைகளை மேற்கொள்ளச் செய்து, அரசியலில் ஒத்துழையாமையைப் புகுத்தினார். அக்காலத்தில் காங்கிரசு தன்னை ஒரு தேசியப் பிரதிநிதித்துவ சபை என்று கூறிக்கொண்டது; ஓர் அரசியல் கட்சி என்னும் கருத்தை அது ஏற்றுக்கொள்ளவில்லை. பிறநாட்டு அரசாங்கம் அரசு செலுத்தி வந்ததாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அரசாங்கத்தில் கலந்துகொள்ள இடமில்லாதிருந்ததாலும், அரசாங்கத்தில் கலந்துகொள்ளும் ஜனநாயக அரசியல் கட்சிகள் அக்காலத்தில் இந்தியாவில் தோன்றவில்லை. முஸ்லீம் லீகும், தீவிரக் கட்சியும், லிபரல் கட்சியும் 1920க்கு முன்பே ஏற்பட்ட அரசியல் கட்சிகள். வெளிநாட்டார் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் கட்சிகளாகவே இவை இருந்தன. போராடும் முறையில் கருத்து வேறுபாடுகள் சில இருந்தமையால் அவை வெவ்வேறு கட்சிகளாகப் பிரிந்திருந்தன. 1935-ல் இந்திய அரசியல் சட்டம் வந்தபிறகு, காங்கிரசு சட்டசபைத் தேர்தல்களில் கலந்துகொண்டபோது அது அரசியல் கட்சியின் அலுவல்களைச் செய்யத் தொடங்கிற்று.
அரசியல் துறையில் சுயராச்சிய உரிமை பெறுவதில் எல்லாக் கட்சிகளுக்கும் கருத்து ஒன்றாயிருந்தபோதிலும், பொருளாதார, சமூகத் துறைகளில் செய்யவேண்டிய சீர் திருத்தங்களைப்பற்றிய கருத்து வேறுபாடுகள் தோன்றின. தொழிற்சாலைகளும் தொழிலாளிகளும் மிகுந்துள்ள இடங்களில் கம்யூனிஸ்டுக் கட்சி தோன்றி,அதன் கோட்பாடுகள் வேரூன் றலாயின. இவர்கள் கம்யூனிஸ்டு முறையில் இந்தியப் பொருளாதார அமைப்பையும் அதற்குத் தேவையான அளவு அரசியல் அமைப்பையும் மாற்றவேண்டும் என்று கருதுகின்றனர். இவர்களினின்றும் சிறிது வேறுபட்ட சோஷலிஸ்டுகள் காங்கிரசினின்றும் பிரிந்து வந்தவர்கள். எம். என். ராய் ஆரம்பித்த தீவிர ஜனநாயகக் கட்சியும், சுபாஷ் சந்திர போசின் முன்னேற்றக் கட்சியும் (Forward Bloc) பெரிய இலட்சியத்தோடு தொடங்கினவாயினும் விரைவிலேயே பலம் குன்றின. 1951-ல் ஆச்சாரிய கிருபளானி காங்கிரசிலிருந்து விலகிப் 'பிரஜாக் கட்சி' என்ற புது அரசியல் கட்சியை நிறுவினார். 1952-ல் இக் கட்சியும் சோஷலிஸ்டுக் கட்சியும் இணைந்து பிரஜா-சோஷலிஸ்டுக் கட்சி தோன்றியது. 1953-ல் இக்கட்சியுடன் சுபாஷ் போசின் முன்னேற்றக் கட்சியும் இணைந்தது.
இந்தியாவில் மக்கள் தொகையில் முஸ்லிம்களைவிட இந்துக்கள் மிகுதியாயிருப்பதால் சிறுபான்மையோரான முஸ்லிம்களின் நலன்களைக் காக்கும் எண்ணத்தோடு முஸ்லிம் லீகு தோன்றியது. காங்கிரசிடம் இக்கட்சிக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை 1947-ல் இந்தியப் பிரிவினைக்குக் காரணமாயிற்று. இக்கட்சிக்கு ஆதாரமாயிருந்தவர் ஜனாப் ஜின்னா. பெருவாரியான முஸ்லிம்கள் இக்கட்சியை யாதரித்தனர். முஸ்லிம் லீகின் கொள்கைகளை நேரடியாக எதிர்க்கும் அரசியற் கட்சி இந்துமகா சபையேயாகும். சவார்க்கரும், சியாம பிரசாத் முக்கர்ஜியும் இக்கட்சியின் முக்கியத் தலைவர்கள்.
இந்தியா அரசியல் சுதந்திரம் எய்திய பிறகு, பார்லீமென்டு ஜனநாயகக் கட்சி அரசாங்க முறையை (Parliamentary Democratic Party Government) ஏற்றுக்கொண்டது. தற்போது டெல்லியிலும், இராச்சியங்களிலும் சட்டசபைகளில் கட்சிமுறை அரசாங்கம் நடைபெறுகிறது. பெரும்பான்மைக் கட்சியின் தலைவரே பிரதம மந்திரி. இந்திய அரசியலில் இரு பெருங்கட்சிகள் இல்லாமை பூரண ஜனநாயகத்திற்குத் தடையாக இருக்கிறது. தான் விழிப்போடு இல்லாவிடில் எதிர்க் கட்சி தன்னைக் கவிழ்த்துவிடும் என்னும் அச்சம் இல்லாத அளவிற்குப் பலமுள்ள ஒரு பெரும்பான்மைக் கட்சி ஆளும்போது பிரிட்டிஷ் முறையில் பார்லிமென்டு ஜனநாயக மரபு ஏற்படுவது கடினம்.
பெரிய கட்சிகளைத் தவிரத் தேர் தல்களை முன்னிட்டு ஆங்காங்குத் தோன்றுகிற சிறிய தலக் கட்சிகளுக்கு அரசியல் தேசிய முக்கியத்துவம் மிகுதியாக இல்லை யெனினும், வருங்காலத்தில் நாட்டில் பல அரசியல் கட்சிகள் நிலைக்கக்கூடும் என்பதற்கு அறிகுறிகள் போல் இவை தோன்றுகின்றன.