கலைக்களஞ்சியம்/அரசியற் கருத்துக்கள்
அரசியற் கருத்துக்கள் : கிரேக்க அரசியற் கருத்துக்கள்: முற்காலத்தில் கிரேக்கர்கள் சிறு நகர இராச்சியங்களில் வசித்து வந்தனர். அவர்களுடைய அரசியல் மலர்ச்சி ஹோமருடைய பெருங்காப்பியக் காலங்களில் தோன்றியதாகக் கொள்ளலாம். நாளடைவில், அங்கிருந்த 'முடியாட்சிகள்' மறைந்து, ஆலிகார்க்கி என்னும் 'சிலராட்சிகள் ' தோன்றிப் பொது மக்களைப் பகைத்துக் கொண்டன. கி.மு. 7ஆம், 6ஆம் நூற்றாண்டுகளில் பொதுமக்களின் சார்பாகச் சிலர் கிளம்பிச் 'சிலராட்சிக்'காரர்களை நீக்கிவிட்டுத் தாங்களே அதிகாரத்தைக் கைப்பற்றினர். இவர்களை 'இராச்சிய அபகாரிகள்' (Tyrants) என்பர். இவர்களில் சிலர் நல்ல முறையில் ஆட்சி புரிந்தனராயினும், படைப் பலத்தையே நம்பி ஆண்டு வந்ததால், இவர்களும் மக்களுடைய வெறுப்பிற்கு ஆளாயினர். பிறகு வந்த ஆட்சி கிரேக்க ஜனநாயக ஆட்சி ; அதில் கி. மு. 5ஆம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்த பெரிக்ளீசின் நிருவாகம் மிக்க புகழ்பெற்றது. கிரீசின் தென் பகுதியில் இருந்த ஸ்பார்ட்டர்கள் தமக்கு ஒருவகைக் கம்யூனிசச் சமத்துவத்தையும், அச்சமூகத்திலிருந்த தாழ்த்தப்பட்டோரிடம் அடக்குமுறையையும் கையாண்ட இருவகைப் போக்குக்கள் காணப்பட்டன.
கிரேக்க அரசியல் அறிஞர்களுடைய பொதுவான கருத்துக்களாவன : 1. மனிதனுடைய வாழ்க்கை இயற்கைக்கும் அறிவுக்கும் பொருத்தமானதா யிருக்க வேண்டும். 2. எல்லா மனிதருக்கும் அறிவு உண்டாகையால், அறிவுக்குட்பட்ட மிக உயர்ந்த முறையில் வாழ்க்கை அமையவேண்டும். 3. இல்வாழ்க்கை சாத்தியமாவதற்கு மனிதர்கள் ஒன்றாக வாழ்ந்து ஒன்றாகப் பொது அலுவல்களில் ஈடுபடவேண்டும். 4. ஆதலால் தனி மனிதனின் நலங்கள் இராச்சியத்தோடு இணைந்து நிற்கின்றன. 5. இவ்விணைப்பு இயலுமாறு தனி மனிதர்கள் தங்கள் தனித்துவத்தை இராச்சியத்தின் தன்மைக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வித ஐக்கியம் முற்காலத்தில் கிரீசில் இருந்த இராச்சியங்களில்தான் இயலும்; அந்நகர நகர இராச்சியங்களின் அரசாங்கத்தில் மகளிரும், அடிமைகளும் நீங்கலாக ஏனைய குடிமக்கள் யாவரும் கலந்து கொள்ள முடியும். இவ்வித ஜனநாயகத்தை நேர்முக ஜனநாயகம் என்று இப்போது கூறுகிறார்கள். கிரேக்கர்களுடைய கருத்துப்படி தனி மனிதர்கள்மீது இராச்சியம் செலுத்தக்கூடிய ஆதிக்கத்திற்கு அளவில்லை. அக்கால அரசாங்கங்களுடைய அலுவல் சட்டத்தை அமல் செய்வதேயன்றித் தற்கால இராச்சியங்களைப் போலச் சட்டத்தை உண்டாக்குவது அன்று.
கி.மு. 5ஆம் நூற்றாண்டில் பொதுமக்களின் உள்ளக் கிளர்ச்சியைத் தூண்டித் தங்கள் விருப்பம்போல் அரசியலில் ஆதிக்கம்பெறச் சில தலைவர்கள் தோன்றினார்கள். தனி மனிதர்கள் தங்கள் நலங்களைத் தாங்களே ஆராய்ந்து அறியவேண்டும் என்றும், இயல்பில் மனிதன் சுயநலமுடையவன், இராச்சியத்தின் சட்டங்கள் மனிதனுடைய அறிவின் போக்கிற்கு முரணாகக் கூடும். ஆயினும் அறிவே உண்மைக்கு வழிகாட்டி என்றும் இவர்கள் கூறினர். இவர்கள் சோபிஸ்டுகள் (Sophists) என்றழைக்கப்பட்டனர்.
சோபிஸ்டுக் கொள்கைகளைப் பின்பற்றிய பெரிய அறிஞர் சாக்ரட்டீஸ் (கி.மு. 469-399) என்பவர். ஐயம், வினா, விடை, அறிவுரை என்னும் முறையைப் பின்பற்றி, அதீனிய இளைஞர்கட்கு அறிவு புகட்டிவந்த சாக்ரட்டீஸ் அரசியல் கருத்துக்களுக்கு அற அடிப்படை ஒன்றைக் கற்பித்தார். “ஜனநாயகம் மக்களிடையே பொய்ம்மையான சமத்துவத்தையே நாட்டுகின்றது; திருவுளச்சீட்டு முறையில் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பது நல்ல முறையன்று; திறமைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் இராச்சிய நிருவாகம் நடத்தப்பெறுவதே நல்லது“ என்பவை அவருடைய கருத்துக்கள்.
டயஜினஸ் என்பவரைப் போன்ற சினிக்குகள் (Cynics) “வாழ்க்கையின் மேற்போக்குக்களையும் அர சியல் பிணக்குக்களையும் மறக்கவேண்டும்” என்றனர். டயஜினஸ் தம்மை 'உலகக்குடி' என்று கூறிக் கொண்டார்.
சாக்ரட்டீசின் மாணவரான பிளேட்டோ (கி.மு. 427-347) பொதுவாகச் சாக்ரட்டீசைப் பின்பற்றுபவராயினும், மிகுந்த திறமைசாலிகளே உண்மையையறியமுடியும் என்று கருதினார். அவருடைய குடியரசு என்னும் நூலில் மிகுந்த அறிவும் திறமையும் படைத்த தத்துவ சாஸ்திரிகள் அரசாங்கத்தை நடத்துபவர்களாயிருக்கவேண்டும் என்றார். அறிவின் எல்லையைக் கண்ட அவ்வறிஞர்களே அரசியலறிஞர்களாகவும் இருத்தல் வேண்டும் என்றார்.
ஜனநாயகம் என்பது பாமரர் ஆட்சி என்று பிளேட்டோ கருதினார் ; சிலராட்சியும், இராச்சிய அபகாரிகளின் ஆட்சியும்கூட நேர்முறைக்குப் புறம்பானவை என்பது அவர் கருத்து. அவர் பிற்காலத்தில் இயற்றிய பிறநூல்களில் குடியாட்சி, பிரபுக்களாட்சி, மித ஜனநாயகம் ஆகிய ஆட்சிமுறைகளை ஓரளவு அங்கீகரித்தார். நேர்முக ஜனநாயகம் அவரால் ஒதுக்கப்பட்டது. இராச்சியத்தின் அடிப்படை நீதியாதல் வேண்டும் என்பதே பிளேட்டோவின் முக்கியமான கருத்து.
பிளேட்டோவின் மாணவரான அரிஸ்டாட்டில் (கி.மு. 384-322) ஆசிரியரைப் போல அவ்வளவு இலட்சியவாதியல்லர் ; அரசியல் ஸ்தாபனங்களின் வளர்ச்சியையே அவர் முக்கியமாகக் கருதினார்; அரசியல் அமைப்புக்களின் ஒப்பு-ஆராய்ச்சி வேண்டும் என்றார். அவருடைய அரசியல் என்னும் நூல் இம்முறையையே கூறுகிறது. “சமுதாயம் என்பது குடும்பம், கூட்டம் என வளர்ந்து வரும் ஒரு ஸ்தாபனம்; மனிதன் சமூகமாகக் கூடி வாழ்பவன் ; தனி மனிதன் தன்னுடைய விருப்பங்களையும் இலட்சியங்களையும் எய்தி, நல்வாழ்வை அடைவதற்கு உதவவேண்டியதே இராச்சியத்தின் கடமை ; அந்நல்வாழ்க்கையை அடைய மனிதர்கள் கல்வி பயின்றிருக்க வேண்டும்; அதற்குப் போதிய ஒழிவு வேண்டும்; அடிமைகள் ஏனைய அலுவல்களைக் கவனித்தால் குடிகளுக்கு ஒழிவு கிடைக்கும்; ஆகவே அடிமைகள் என்போர் இருக்கவேண்டும்“ என்பவை அவருடைய கருத்துக்கள். அவர் அரசாங்க அமைப்புச் சமநிலையுடையதாயும், புரட்சிக்கு இடம் கொடாததாயும் இருக்கவேண்டும் என்று கருதினார்; அதற்குத் திருப்தியோடு வாழ்க்கை நடத்தும் நடுத்தர வகுப்பினர் வேண்டும் என்றும் கூறினார். தனி மனிதர்களின் முன்னேற்றம் பெரிதேயன்றி, மன்பதையின் மொத்த முன்னேற்றத்தைப் பண்பளவில் கூறுவது வேண்டுவதன்று என்றார். அவருடைய கருத்துக்கள் தற்காலம் வரையில் அறிஞர்களுடைய கருத்துக்களை ஊக்கியிருக்கின்றன என்பதே அவருடைய பெருமைக்குச் சான்றாகும். இராச்சியம் நிலைபெற்றிருப்பதும், மிதக் கொள்கைகளை மேற்கொள்வதும், இராச்சியத்தின் இரு நோக்கங்களாயிருக்கவேண்டும் என்று கூறினார். இவருடைய கருத்துக்களின் பெருமையால் இவரை 'அரசியல் நூலின் தந்தை' என்று உலகம் புகழும். நகரச் சுயாட்சியும், நல்வாழ்க்கை அமையும், தனி மனிதரின் சுதந்திரமும் முக்கியமானவை என்று கிரேக்கர்கள் பொதுப்படக் கருதினர் என்று கூறலாம்.
எபிக்யூரஸ் (கி.மு. 312-270) என்பவர் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் எந்த ஆட்சியையும் ஏற்றுக்கொள்ளலாம் என்றும், திறமை வாய்ந்த யதேச்சாதிகாரமும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே என்றும் கூறினார். அறிஞர்கள் அரசியலில் தலையிடக் கூடாதென்றும், அநீதியைத் தடுப்பதற்கு மக்கள் தமக்குள்ளே செய்து கொள்ளும் ஏற்பாடு சட்டம் என்றும் அவர் கூறினார். அவர் தத்தம் தேவைகளை ஒவ்வொருவரும் பூர்த்தி செய்துகொள்ள முயலவேண்டும் என்றார். எபிக்யூரியர்களுக்குப் பிறகு வந்தவர்கள் ஸ்டோயிக்குகள். ஜூனோ (சு.கி. மு.336 -சு. 264) என்பவர் இவர்களின் தலைவர். எல்லா மனிதர்களையும் எல்லாக் காலத்திலும் உட்படுத்தும் இயற்கைச் சட்டம் ஒன்று உண்டு என்பது அவர் கருத்து. பின்னர் இத்தகைய அரசியற் கருத்துக்கள் ரோமானிய அறிஞர்களிடையே பரவலாயின.
ரோமானிய அரசியற் கருத்துக்கள் : தொடக்கத்தில் ஒரு நகரராச்சியமாக இருந்த ரோம் முதலில் இத்தாலி மீதும், பிறகு நாளடைவில் கடல்கடந்தும் படையெடுத்துப் பெரிய சாம்ராச்சியம் ஒன்றை கி.மு. முதல் நூற்றாண்டில் நிறுவிக்கொண்டது. சாம்ராச்சியப் பளுவினால் நகரராச்சியம் மறைந்துபோய் ஜூலியஸ் சீசரின் ராணுவ பலத்தை அடிப்படையாகக்கொண்ட ஆட்சி ஓங்கிற்று. இதன் விளைவாக ரோமானியக் குடிமை சாம்ராச்சிய மக்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டது. சாம்ராச்சிய ஐக்கியத்தின் சின்னமாக விளங்கியவர்கள் ரோமானியச் சக்கரவர்த்திகள்; இவர்கள் தங்கட்கு ஒரு தெய்விக ஆட்சி உரிமை யுண்டென்று கருதலாயினர். இக்கருத்து நீண்ட நாள் நிலவி வந்தது. ரோமானியச் சாம்ராச்சியக் காலத்தில் அரசியல் ஒற்றுமை, அமைதி, உலகக் குடிமை, வாழ்க்கையின் எல்லாவற்றையும் உளப்படுத்திய சட்டம் முதலிய கருத்துக்கள் தோன்றின. கிரேக்கர்களுடைய ஜனநாயக அரசியல் சுதந்திரக் கருத்துக்கள் சிறிது பின்னடைந்தன. ரோமானியர்கள் அரசியலையும் அறநிலையையும் வேறுபடுத்தினர். சமுதாயம் வேறு, இராச்சியம் வேறு என்னும் கருத்தும் அவர்களால் உருவாயிற்று. இராச்சியத்தினுள் அடங்கிய தனி மனிதர்கள் வேறு, இராச்சியம் வேறு என்பதும் அவர்களுடைய கருத்து. தனி மனிதனின் உரிமைகளைக் காப்பது இராச்சியத்தின் கடமையேயன்றி, அவ்வுரிமையில் தலையிடுவதன்று என்று அவர்கள் கண்ட முடிவிலிருந்து ரோமானிய தனிநபர்ச் சட்டம் தோன்றிற்று.
ஸ்டோயிக்குகளுடைய கருத்தான இயற்கைச் சட்டமும் இவர்கள் கருத்துக்களில் தோன்றிற்று. மனிதர்களிடையே சமத்துவத்தைப்பற்றிய கொள்கை ரோமானியர்களால் உருவாக்கப்பட்டதேயாம்.
ரோமானிய அரசியல் அறிஞர்களில் சிசரோ (கி. மு. 106-43) குறிப்பிடத்தக்கவர். இவர் பெரிய நாவலர் ; சட்ட அறிஞர் ; குடியரசு ஸ்தாபனங்களை நிலைபெறச் செய்வதில் ஊக்கம் கொண்டவர். அரிஸ்டாட்டில் கருதியது போலவே இவரும் மனிதனுடைய சமுதாய இயல்பூக்கமே இராச்சியம் அமைவதற்குக் காரணமாயிருக்கிறது என்று கூறினார். இராச்சியத்தின் கருத்துக்களை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் அலுவல் என்றார். இயற்கையறிவையும் அற நெறியையும் ஒட்டியே அரசியல் செயல்களும் சட்டங்களும் அமைய வேண்டும் என்றார். இவர் வற்புறுத்திய உலக ஐக்கியக் கொள்கையும், உலகப் பொதுச்சட்டக் கொள்கையும் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
பாலிபியஸ் (சு. கி. மு. 205-சு. .122) என்னும் கிரேக்க அறிஞர் இத்தாலியில் வாழ்ந்து வந்தவர். கிரேக்கக் கருத்துக்களாகிய அரசாட்சிப் பாகுபாட்டு முறைகளையும், அரசியல் ஸ்தாபனங்கள் நிலைத்து இருக்கவேண்டியதன் அவசியத்தையும் இவர் வற்புறுத்தினார். கிரேக்க இராச்சியத்தை ரோமானியர் வென்று ஆண்டது நியாயம் என்று காட்டுவதே அவர் இயற்றிய வரலாறு என்னும் நூலின் நோக்கம்.
உலகப் பொதுமையுணர்ச்சியே (Cosmopolitanism) ரோமானியர்களால் உருவாக்கப்பட்ட முக்கியமான அரசியல் கருத்தாகும். ஸ்டோயிக்குகளின் கருத்துக்களையும் ரோமானியர்கள் ஏற்றுக்கொண்டு மேலும் வளர்த்தனர். முழுப்பலம் பொருந்திய சாம்ராச்சியக் கோட்பாடுகளும், அரசுத் தலைமைக் கோட்பாடும், சட்டத்தலைமைக் கோட்பாடும் ரோமானியர்களால் உருவாக்கப்பட்ட முக்கியமான அரசியல் கோட்பாடுகளாம். சி. எஸ். ஸ்ரீ.
ஐரோப்பிய அரசியற் கருத்துக்கள் : கி. பி. 1 ஆம் நூற்றாண்டு-கி. பி. 15 ஆம் நூற்றாண்டு : ரோமானியச் சாம்ராச்சியம் சிதைந்த காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவ மதம் பரவிற்று. கிறிஸ்தவ அறிஞர்களுடைய அரசியல் கருத்துக்கள் செனிக்கா (Seneca சு. கி. மு. 4-கி. பி. 65) என்னும் ரோமானிய அறிஞர் ஸ்டோயிக்குகளுடைய அரசியற் கருத்துக்களை மாற்றி வகுத்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அரசாங்கமும் சட்டமும் வேண்டப்படுவதற்குக் காரணம் மனிதனுடைய தீக்குணமே என்றும், இயற்கைச் சட்டம் என்று ஒன்று உண்டு என்றும், மனிதனுடைய அறிவை அடிப்படை யாகக் கொண்டு இயங்கும் இச்சட்டமே அரசாங்கச் சட்டத்துக்கு அளவுகோலாகக் கொள்ளத்தக்கது என்றும் இவர் கூறினார்.
ஆயினும், கிறிஸ்தவ அறிஞர்கள் வேறொரு முக்கியமான கருத்தையும் கூறினர். அதாவது, இயற்கைச் சட்டமும் இறைவன் சட்டமும் ஒன்று; அச்சட்டத்தை மனிதனுடைய அறிவு ஒன்றைமட்டும் கொண்டு தெரிந்து கொள்ள முடியாது; அது இறைவனால் வெளிப்படுத்தப்படுவது; அவ்வெளிப்பாட்டினை ஆகமங்கள் வாயிலாக மக்கள் உணர்வர் என்பதாம். இடைக்காலம் முழுவதிலும் இயற்கைச் சட்டமும் தெய்வீகச் சட்டமும் ஒரு பொருளின் இரு முகங்களாகக் கருதப்பட்டன. கிறிஸ்தவ மதக்கோட்பாட்டின்படி மனிதன் ஆதியில் குற்றமறியாத நிலையிலிருந்து இழிந்து பாவியானான். அவ்விழிவும், அவன் பாவங்களும் அரசாங்கம் தோன்றுவதற்கும் அதன் இன்றியமையாமைக்கும் காரணங்களாயின. குற்றமில்லாத மனிதனுக்கு இலௌகிக அரசாங்கம் வேண்டுவதில்லை. மனிதன் இழிந்துவிட்டதால் அரசாங்கம் தேவையாயிற்று. இது உலகியற் சட்ட அடிப்படையில் தோன்றிய பல ஸ்தாபனங்கள் ஏற்பட்டதற்குத் தக்க காரணமாயிற்று. இவ்வீழ்ச்சிக் கொள்கையைக்கொண்டு இவர்கள், இறைவன் திருமுன்பில் எல்லா மக்களும் சமம் என்னும் மதக் கோட்பாடும், உலகில் நாம் கண்ணாற் காணும் பல வேறுபாடுகளும் ஒன்றோடொன்று முரண்படாதவாறு, தம் சித்தாந்தத்தை அமைத்துக்கொண்டனர். கிறிஸ்தவ சமயக் கருத்துக்கள் மனிதனது இயல்பிலுள்ள இருமையை எடுத்துக் கூறின ; இவ்விருமை யானது மனிதனுடைய ஆன்மாவிற்கும் உடலிற்கும் உள்ள வேறுபாடு. இவ்வேறுபாடு அரசியல் துறையிலும் புகுந்தது. தெய்விகப் பொருள்களுக்கும் இலௌகிகப் பொருள்களுக்கும் வேறுபாடு காணப்பட்டது ; தெய்விகத்துறையில் திருச்சபை தன்னைப் பிரதிநிதி என்று கருதிற்று. இலௌகிகத்துறையில் புனித ரோமானிய சாம்ராச்சியம் தன்னைப் பிரதிநிதியென்று கருதிற்று. திருச்சபைத் தலைவர்கள் தெய்விக விஷயங்களில் தங்களைவிட உயர்ந்த அதிகாரிகள் இல்லை என்று கருதினர். ஆயினும் சாம்ராச்சியத்தின் மீதும் திருச் பைக்கு அதிகாரம் உண்டு என்று யாரும் கருதவில்லை.
கிறிஸ்தவ மதக்கோட்பாடு இந்நிலையில் இருக்கும் போது செயின்ட் அகஸ்டினுடைய இறை நகர் (Civitas Dei) என்னும் நூல் வெளியாயிற்று. அவர் மண்ணகருக்கும் விண்ணகருக்கும் வேறுபாடு கண்டார். ஆயினும் அவர் கூறிய மண்ணகரும் விண்ணகரும் முறையே சாம்ராச்சியத்தையும் திருச்சபையையும் குறிப்பதாகக் கொள்ளமுடியாது. அவர் அவ்விரு நகர்களுக்குமிடையே எடுத்துக்காட்டிய வேறுபாடு ஸ்தாபன முறையையோ சமுதாய வாழ்க்கையையோ பின்பற்றியதன்று; அது தனியொருவருடைய அறக்கோட்பாடுகளையும் சமயக்கோட்பாடுகளையும் பற்றியது. ஆயினும் செயின்ட் அகஸ்டினுடைய கோட்பாடுகள் பிற்காலத் திருச்சபையின் கருத்துக்களை யுருவாக்கப் பெரிதும் வழி கோலின. திருச்சபை இலௌகிகர்களைவிட உயர்ந்தது என்றும், சக்கரவர்த்தி திருச்சபைக்குக் கீழ்ப்படிந்து தனது அதிகாரத்தைச் செலுத்தவேண்டும் என்றும் அக்காலத்திற் கூறப்பட்டதேயன்றி, இலெளகிக வைதிக அதிகாரங்கள் இரண்டும் இறைவனிடமிருந்தே பெறப்படுவன என்பதை ஒருவரும் மறுக்கவில்லை.
இடைக்காலம் முழுவதிலும் இவ் விவாதம் தொடர்ந்து நடந்து வந்தது. இதனின்றும் போப்பின் அதிகாரமே உயர்ந்தது என்பாரும், சக்கரவர்த்தியின் அதிகாரமே உயர்ந்தது என்பாரும், இவ்விருவகைப்பட்ட அதிகாரங்களுக்கும் அடங்கியே மக்கள் வாழவேண்டும் என்பாரும் ஆக மூவகையினர் கருத்துக்களுக்கும் இடமேற்பட்டது.
பாடுவாவைச் சார்ந்த மார்சிலியஸ் (1270-1342) என்பவர் 1324-ல் டிபென்சார் பாசிஸ் (Defensor pacis) என்னும் நூல் ஒன்றை இயற்றினார். இந்நூலில் மார்சிலியஸ் திருச்சபைக்கு முழு அதிகாரம் உண்டு என்னும் கொள்கையை மறுத்து, இலௌகிக அதிகார எல்லையைக் குறுக்கி நிருணயிப்பதையே கருதினார். அச்சபைக்கு அதிகாரமே இல்லை என்று கூற ஒருவரும் துணியவில்லை. டான்டே (1265-1361) என்னும் இத்தாலிய அறிஞர் இயற்றிய டி. மானர்க்கியா (De Monarchia) என்னும் நூலிலும், இலௌகிக விஷயங்களில் சாம்ராச்சியத்திற்கு முழு அதிகாரம் உண்டு என்று கூறப்பட்டுள்ளதாயினும், அவ்வதிகாரம் இறைவனிடமிருந்தே நேரடியாகப் பெறப்படுவது என்றும், இந்த இலௌகிக அதிகாரத்திற்கு இணையாகப் போப்பாட்சிக்கு வைதிக விஷயங்களில் பூரண அதிகாரம் உண்டு என்றும் கூறப்பட்டுள்ளன.
இலௌகிக அதிகாரத்திற்கு ஒரு சின்னமாக விளங்கிய புனித ரோமானிய சாம்ராச்சியம் அழிவுற்ற பிறகு, ஒரு புதுப்பிரச்சினை பிறந்தது. போப்பாட்சிக்கும் சாம்ராச்சியத்திற்கும் இடையே தோன்றிய முரண்பாடு, போப்பாட்சிக்கும் பல சிறு தேசிய இராச்சியங்களுக்கும் இடையே உள்ள முரண்பாடாக மாறிற்று. அன்றியும் போப்பாட்சிக்கும் ஒவ்வொரு தேசிய ராச்சியத்திலுமிருந்த தனித்தனித் திருச்சபைகளுக்கும் இடையேயும் ஒரு முரண்பாடு தோன்றலாயிற்று. பல நாடுகளில் இருந்த திருச்சபைகளும் போப்பின் தனியதிகாரத்திற்குட்பட்டே இருந்தன. மதத்தினின்றுந் தள்ளுகை, அரசுரிமை நீக்கம் முதலிய முறைகளைக் கையாண்டு, போப் மன்னர்களை மருட்டி வந்தார்.தேசிய இராச்சியங்கள் தோன்றிய பிறகு திருச்சபைக்கு இவ்வளவு அதிகாரங்கள் உண்டு என்பது மறுக்கப்பட்டது ; மன்னர்கள் தங்கள் அதிகாரத்தை இறைவனிடமிருந்து நேரடியாகப் பெற்றார்கள் என்னும் தெய்விக உரிமைக் கோட்பாடும் (Divine Right of Kings) உடன் தோன்றிற்று. அன்றியும், போப்பின் அதிகாரத்திற்குப் புறம்பான தேசியத் திருச்சபைகளும் இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. அதாவது அரசியல் துறையில் தேசியம் ஒரு கோட்பாடாக உருக்கொள்ளத் தொடங்கிற்று.
இடைக்கால அரசியற் கருத்துக்கள் பெரும்பாலும் சமயச்சார்பாகவே இருந்தன. சிசரோ, செனிக்கா என்னும் இரு அறிஞர்களுடைய கருத்துக்கள் இடைக்காலக் கருத்துக்களை யுருவாக்கப் பெரிதும் காரணமாயிருந்தன. சாலிஸ்பரியைச் சார்ந்த ஜான் என்பவர் 1159-ல் பாலிக்கிராட்டிகஸ் (Polycraticus) என்னும் நூல் ஒன்றை இயற்றினார். போப்பாட்சி கொண்டாடிய உரிமைகளின் சார்பாகக் கூறப்பட்ட கூற்றுக்களையெல்லாம் தொகுத்து இந்நூலில் அவர் கூறினார்.
1260-ல் இடைக்கால அரசியற் கருத்துத்துறையில் முக்கியமான நிகழ்ச்சி ஒன்று நேர்ந்தது; அதாவது அவ்வாண்டில் அரிஸ்டாட்டிலின் அரசியல் (Politics) என்னும் நூல் லத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டது. அச் சிறந்த நூல் அக்வைனஸ் (1227-1274) என்னும் அறிஞரின் நூலுக்குக் கருத்தூட்டியது. அரிஸ்டாட்டிலை நன்கு கற்ற அக்வைனஸ் இறையியற் களஞ்சியம் (Summa Theologica) என்னும் நூலை இயற்றினார். அந்நூலில் ஒழுங்கான ஆட்சிக்கும் கொடுங்கோலுக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துக் காட்டிச் சட்டம். ஆள்பவனினும் உயர்ந்தது என்று கூறினார். ஆயினும் மனிதர்களால் இயற்றப்படும் சட்டங்கள் தெய்விகச் சட்டங்களினின்றும் தோன்றுபவை என்றும் அவர் கூறினார். அவர் கருத்துப்படி, எல்லாச் சமூகங்களுக்கும் பொதுவான ஓர் இயற்கைச் சட்டம் உண்டு. ஆதிபத்தியம் இறுதியில் மக்களிடம் காணப்படுவதே யன்றி, ஆள்வோரிடமில்லை என்னும் கருத்தும் ஓரளவுக்கு அவருக்கு உண்டு என்றே காண்கிறது. ஆயினும் இக் காரணத்தைக் கொண்டு, சாலிஸ்பரி ஜான் கூறியது போல் கொடுங்கோலனைக் கொல்லுவதில் குற்றமில்லை என்று அவர் கருதவில்லை. அரிஸ்டாட்டிலின் நூலைக் கற்றிருந்ததால் போப்பின் தனியாட்சியை அவரால் ஆதரிக்க முடியவில்லை; ஆயினும் இராச்சியம் இலௌகிக நிலையிலேயே அமையும் ஒரு ஸ்தாபனம் என்னும் கருத்தையும் அவரால் முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இடைக்கால அரசியற் கோட்பாடுகளுக்கும் தற்கால அரசியற் கோட்பாடுகளுக்கும் இடையில் நீக்கோலா மாக்கியவெலி (1469-1527) என்னும் இத்தாலிய அறிஞருடைய கருத்துக்கள் இலங்குகின்றன. இவர் இயற்றிய முக்கியமான நூல் அரசன் (The Prince) என்பது. இந்நூலைக் கொடுங்கோலர்களின் வேதம் என்று சிலர் பழித்தனர். ஆயினும் தற்காலத்தில் இராச்சியத்திற்குப் பூரணமான இலௌகிகப் பண்புகளை ஏற்றிக் கூறியவர்களில் இவரே முதல்வர். இவர் கருத்துக்கள் அரசியல் துறையில் தேசியம் என்னும் கருத்து வளர்வதற்கு மிகவும் துணைபுரிந்தன. டைட்டஸ் லிவியசின் முதற்பத்துப் பகுதிகளைப்பற்றிய ஆராய்ச்சி (Discourses on the First Ten Books of Titus Livius) என்னும் நூலில், குடியரசு ஸ்தாபனங்களை மாக்கியவெலி பெரிதும் போற்றினார். ஆயினும் அவர் பூரண அதிகார இலௌகிக - அரசாங்கத்தால்தான் தேசிய ஐக்கியத்தை நிறுவ முடியும் என்று கருதினார். இக்கருத்தைக் கொண்டவர் போப்பாட்சியை எதிர்த்ததில் வியப்பில்லை. பயன்களை எய்த வழிகளை எவ்வாறு கையாளவேண்டும் என்று மாக்கியவெலி கூறும்போது, அறநெறியென்றும் மறநெறியென்றும் உள்ள வேறுபாட்டினை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் அவர் அறநிலையே தேவையில்லாதது என்று கருதியதாகக் கூறமுடியாது. அவர் கூற்று அறத்தை மறுத்ததன்று ; அறத்தினின்றும் வேறுபட்டதேயாம். தனியொருவரின் ஒழுக்கங்கள் அறநிலைக்கு ஒத்திருக்க வேண்டும் என்பதே அவருடைய கருத்தும். அவர் கூற்றுக்கள் இராச்சியத்திற்குப் பொருந்துவனவே யன்றித் தனி வாழ்க்கையைக் கருதிக் கூறப்பட்டவையல்ல. " அரசனுடைய கடமை, வலிமை பொருந்திய இராச்சியத்தை நிறுவுவதேயன்றி, நல்ல இராச்சியத்தை நிறுவுவதன்று" என்பது அவர் கோட்பாடு. பிரபுக்கள் ஆட்சியும், கூலிப்படைகளும் விரும்பத்தகாதவை என்று அவர் கருதினார். தேசிய நன்மைக்கு விரோதமாகக் கூறப்படும் எந்தப் பற்றுக்களும், அறக்கோட்பாடுகளும் பயனற்றவை என்பது அவர் எண்ணம்.
மாக்கியவெலி சமயச் சீர்திருத்தக் கொள்கைகள் உருவாவதற்கு முன்பே தமது நூல்களை இயற்றிவிட்டார். அவரது கருத்துக்கள் முழுவதும் இலௌகிக முறையில் அமைந்தவை. சமயச் சீர்திருத்தம் ஏற்பட்டதும், தேசிய இராச்சியத்தைப்பற்றிச் சமயக் கருத்துக்களும் தோன்றலாயின.
ஆக்காமைச் சார்ந்த வில்லியம் (சு.1300-1349), கியூசாவைச் சார்ந்த நிக்கலஸ் (1401-1464) என்பவர்கள் போப்பின் அதிகாரத்தை மிக உயர்ந்ததாக ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, எல்லாக் கிறிஸ்தவர்களுடைய மொத்தக் கருத்துக்களையும் அறிந்து தேரவேண்டும் என்றனர். இடைக்காலப் போப்பாட்சியிற் புகுந்த பிளவு (Schism) 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தீர்ந்ததும் இக்கருத்துக்களும் வலிவிழந்தன. 16ஆம் நூற்றாண்டில் தோன்றிய அறிஞர்கள், "கருத்து வேறுபாடுகளுக்கு முடிவுகாணப் போப்பின் அதிகாரத்தைவிட உயர்ந்த கிறிஸ்தவப் பொது மக்களுடைய கருத்தை நாட வேண்டியதில்லை. சீர்திருத்தவாதிகளின் ஆன்மார்த்தக் கருத்துக்களே உண்மைக்கு வழிகாட்டி" என்று கருதினர்.
16 ஆம் நூற்றாண்டு: 16ஆம் நூற்றாண்டின் அரசியற் கொள்கை அந்நாளில் ஐரோப்பாவில் தோன்றிய சமயச் சீர்திருத்தத்தை ஒட்டியதே ஆகும். இவ்வியக்கத்தைத் துவக்கிய மார்ட்டின் லூதர் (1483-1546) மன்னர்களின் ஆதரவை நாடினதால், யாவரும் அரசாங்கத்திற்கு அடிபணிந்து நடக்கவேண்டியது அவசியமென்று வற்புறுத்தினார். அத்துடன் நாட்டரசாங்கங்கள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட முறையில் அரசியல் நடத்துவதுதான் முறையென்று கருதினார். பற்பல நாடுகளை இணைத்து, ஒரு சக்கரவர்த்தியின் ஆட்சியோ, போப்பின் அதிகாரமோ ஏற்படுத்துவது நல்லதன்று என்பது அவர் நோக்கம். மேலும், ஒவ்வொரு நாட்டிலும் திருச்சபையின் அதிகாரமும், அரசியல் ஆட்சியும் தனிப்பட்ட முறையிலே வேறுபட்டிருக்க வேண்டுமென்று வற்புறுத்தினார். இவ்விதம் சில ஆழ்ந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தபோதிலும், மார்ட்டின் லூதருக்கு அரசியலில் ஈடுபாடு மிகுதி எனக் கூறமுடியாது. மதச் சீர்திருத்தமே அவரது முக்கிய நோக்கம். மேலும் அவர் கொள்கைகள் சில ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகக் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மக்கள் அரசாங்கத்திற்கு எக்காலத்திலும் அடிபணிந்து நடக்கவேண்டுமென்று முதலில் வற்புறுத்தினார். ஆனால் பின், கொடுங்கோல் மன்னனை எதிர்க்கலாமென்று கூறினார்.
லூதரின் மாணாக்கர் மெலாங்தான் என்பவர் அரசியல் கொள்கையில் தலைசிறந்த ஒரு இடம்பெற உரிமையுள்ளவர்; புகழ்பெற்ற பேரறிஞர். அரிஸ்டாட்டிலின் கொள்கையில் பற்றுடையவர். முக்கியமாக இயற்கைச் சட்டத்தைத் தழுவியே அரசியலையும், மத ஸ்தாபனங்களையும் நடத்த விரும்பினார். லூதரைப் போல் மன்னனாட்சியையும் தனிநாட்டு உரிமையையும் ஆதரித்தார். ஆனால் இறுதியில் பிரபுக்களாட்சியையும் போற்றினார்.
சமயச் சீர்திருத்தக் காலத்தில் ஐரோப்பாவில் பல தலைவர்கள் தோன்றினர். ஸ்விங்லி, கால்வின் என்பவர்கள் இவர்களுள் தலைசிறந்தவர்கள். ஸ்விங்லி (1484-1531), "அரசியலும் சமயமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை; இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே அமைப்பில் இருக்கவேண்டுபவை" என்று கருதினார். சுவிட்ஸர்லாந்தில் நடப்பிலிருந்த குடியரசு அவர் உள்ளத்தைக் கவர்ந்தது. அதுபோன்ற குடியரசைப் பரவச் செய்வதே அவர் குறிக்கோளாயிற்று. சமயச் சீர்திருத்தத்தில் மிகவும் ஈடுபட்டவர் கால்வின் (1509-64). இவரது போதனைகள் அரசியல் கொள்கைகளை மிகவும் பாதித்தன. நுண்ணிய வழக்கறிஞராகிய இப்பிரெஞ்சுத் தலைவர் திருச்சபைக்குப் புதிய அமைப்பு வகுத்தார். சட்டத்திற்கு அடிபணிந்து மக்கள் வாழவேண்டுமென்பதை நன்கு வற்புறுத்தினார். சமய வழியிலும் அரசியல் துறையிலும் நிபந்தனைக்குட்பட்ட வாழ்வின் பெருமையை எடுத்துக் காட்டினார். இவர் மதமும் அரசியலும் ஐக்கியப்பட்டு ஒன்றாக இருக்கவேண்டுமென்ற கருத்துடையவரல்லர்; இரண்டும் தனித்தனியாக அவ்வவற்றின் நிபந்தனைக்குள் அமையவேண்டுமென்ற கொள்கையைப் பின்பற்றினார். இவர் தாமே ஜெனீவாவில் ஒரு தேவப் பேராட்சியை அமைத்து, அந்நகர மக்களை அவ்வாட்சிக்குட்படச் செய்து, சிலகாலம் அங்கு வசித்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும். அரசியலமைப்புப் பற்றித் தனிப்பட்ட கருத்துக்களொன்றும் வற்புறுத்தவில்லையாயினும், பிரபுக்களாட்சிதான் அவருக்குப் பிடித்திருந்ததாகத் தெரிகிறது. அரசாங்கம் கொடுங்கோல் நடத்தத் துணிந்தால், அதைக் கண்டித்து அகற்ற மக்களுக்கு உரிமையுண்டென அவர் வாதாடினார். கால்வினின் கொள்கைகள் ஐரோப்பாவில் பல நாடுகளில் பின்பற்றப்பட்டன. சுதந்திர வளர்ச்சிக்கும் இவர் கொள்கைகள் மிகவும் ஊக்கமளித்தன. ஒடுக்கப்பட்ட சிறுபான்மையோர் பல நாடுகளிலும் இவரது கருத்துக்களை மேற்கொண்டதால் அவர்களுடைய வீடுதலைக் கிணங்க, இவர் கொள்கைகளை அமைத்துக் கொண்டார். மேலும் கால்வின் திருச்சபையில் மக்களாட்சியை ஆதரித்தார். இக்கருத்து அரசாங்கத் துறையிலும் பரவியது.
16ஆம் நூற்றாண்டில் பொதுவுடைமைக் கருத்துக்கள் ஐரோப்பாவில் தலைதூக்கின. 'ஆனபாப்டிஸ்டுக்கள்' எனும் வகையினர், ஜெர்மனி, நெதர்லாந்து முதலிய நாடுகளில் இக்கொள்கையைக் கையாண்டு வந்தனர். அரசாங்கம் இவர்களை அடக்கிவிட்டமையால் மொரேவியாவில் குடிபுகுந்து, ஒரு நூற்றாண்டு வரையில் இவர்கள் தம் கருத்துப்படிப் பொதுவுடைமை அமைத்து ஆண்டு வந்தனர். மக்களின் பிரதிநிதிகளாக, முதியோர்களடங்கிய குழு ஒன்று ஆட்சி நடத்தியது. ஆங்கிலேயரான மோர் என்பவர் (1480-1535), பொதுவுடைமையை மேற்கொண்ட ஒரு புதுநாடு எவ்விதம் நடக்கலாமென்று தம் நூலில் எழுதினார்.
16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மன்னனின் அதிகாரத்தைக் குறைக்கும் பொருட்டுச் சில கொள்கைகள் தோன்றின. இதற்கு டச்சு மக்களின் கிளர்ச்சி ஆதரவாயிருந்தது. இதன் பயனாகத் தேசிய சுதந்திரம், மதச்சுதந்திரம், தனி மனிதன் சுதந்திரம், இவைபற்றிய கொள்கைகள் தலையெடுத்தன. அரசாங்கத் துறையில் கூட்டுறவுக் கொள்கையை டச்சுக்காரர்கள் ஆதரித்தனர். ஆகவே, ஒடுக்கப்பட்ட சிறுபான்மையோருக்கு ஒரு அடைக்கலமாக ஹாலந்து விளங்கியது.
மன்னனின் ஆதிக்கத்தைக் குறைக்கக் கருதி வாதாடியவருள் இராஸ்மசு என்பவர் (1466-1536) ஒரு பேரறிஞர். தலைமுறையாய் வரும் மன்னனாட்சியால் நிகழும் தீங்கையும், மக்களின் பிரதிநிதிச் சமூகங்களால் கிட்டும் நன்மைகளையும்பற்றி இவர் எடுத்து விளக்கினார். மேலும், அரசியல் ஒப்பந்தக் கொள்கைகள் 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பரவின. ஹாட்மென் (1524-90) போன்றவர் இக்கொள்கையைக் கையாண்டுவந்தனர். மன்னனாட்சியைக் கண்டித்து எழுதிய அறிஞர்களில் புகழ் பெற்றவர் ஆல்தூசியசு (1557- 1638) என்பவர். அவர் அரசியல் ஒப்பந்தக் கொள்கையை நன்கு விளக்கினார். “மக்களுக்கும் மன்னனுக்கும் ஒப்பந்தம் உண்டு. அன்றியும் நாட்டின் ஒவ்வொரு பகுதியும் ஒப்பந்தத்தின்மேல்தான் அமையவேண்டியது” என்று கருதினார். இது கூட்டுமுறைக் கொள்கையை வலுப்படுத்தியது. மேலும், மன்னனின் அதிகாரம் மக்களிடமிருந்து வருவதேயன்றிக் கடவுளிடமிருந்தன்று என்று ஊக்கமாய் வற்புறுத்தினார்.
மன்னன் நிலைக்குப் பாதகமாக 16ஆம் நூற்றாண்டில் தோன்றியவர்களுள் மிக்க ஊக்கமுடையவர்கள் சமயச்சீர்திருத்த எதிரியக்கக்காரர்கள் என்ற ரோமன் கத்தோலிக்கர்களாவர். இவர்கள் மதஸ்தாபனங்களின் ஊழல்களையும் பூசல்களையும் அகற்ற முயன்றதோடு, மன்னனின் ஆட்சி நிபந்தனைக்குட்பட்டிருக்க வேண்டுமென்றும் வற்புறுத்தினர். இயேசு சங்கம் அமைத்து ஊழியஞ் செய்த இக்னேஷியஸ் லயோலா (1491-1556) அரசாங்கம் மனித அமைப்பென்றும், இலௌகிக நன்மையைக் கருதியே தோன்றியுள்ளதென்றும் கூறினார். ஆனால், மத விஷயத்தில் கிறிஸ்தவர்கள் யாவரும் ஒன்று சேர்ந்தவரென்றும், ஒவ்வொரு நாட்டுச் சட்டத்தைவிட உயர்வுற்றது இயற்கைச் சட்டந்தானென்றும், ஈசன் உள்ளத்தில் தோன்றியதென்றும் இவர் விளக்கினார்.
இந்த இயக்கத் தலைவர்களிடையே சில நுண்ணிய அரசியல் அறிஞர்கள் தோன்றினர். அவர்களுள் ஜூவான் மரியானா (Juan Mariana 1536-1624),சூவாரஸ் (Suaraz 1548 - 1617), ராபர்ட் பெல்லார்மின் (Robert Bellarmin 1542-1621) ஆகியோர் முக்கியமானவர்கள், சில கருத்துக்களில் வேற்றுமை இருந்த போதிலும் இயற்கைச் சட்டம், அரசியல் ஒப்பந்தம், மன்னனின் அதிகாரத்தைக் குறைப்பது முதலான விஷயங்களில் இவர்கள் யாவரும் ஒரே கொள்கையைத் தான் கையாண்டனர். கே.க.
17ஆம் நூற்றாண்டு : 17ஆம் நூற்றாண்டில் பல்வேறு துறைகளிலும் ஒப்பற்ற அறிவு வளர்ச்சி தோன்றிற்று. முதன் முதலாக மக்கள் எதையும் தீர ஆலோசித்து முடிவுக்குவரும் விஞ்ஞான ஆராய்ச்சி முறையை மேற்கொண்டனர். ஹாப்ஸ், லாக், மில்ட்டன் போன்ற புகழ் பெற்ற அரசியல் அறிஞர்கள் மனித வருக்கத்தின் அரசியல் அறிவு வளர்ச்சிக்கு உதவி செய்திருந்தபோதிலும், அவர்களும் சிறிது ஒருசார்பானவர்களே. ஸ்பினோசா (Spinoza 1632-77) என்னும் அறிஞர் ஒரு தனி முறையில் அரசியல் கொள்கைகளை ஆராய்ந்தார். ஸ்பினோசா எழுதிய அரசியற் கட்டுரைகள் என்னும் நூலில் அரசியற் கலையைச் சமநோக்குடன் ஆராயவேண்டுமென்று கூறியுள்ளார். 17ஆம் நூற்றாண்டில் அரசியல் துறையில் இம்மாதிரியான கொள்கையைக் கையாண்டவர்கள் ஹாரிங்டன், ஸ்பினோசா, பூபண்டார்ப் (Pufendorf) என்னும் மூவர்.
இங்கிலாந்தில் 17 ஆம் நூற்றாண்டில் அரசியல் நிலையில் போர் நீடித்து நடந்தது ஸ்டூவர்ட் மன்னர்களின் வரம்பிலா ஆட்சியைத் திருச்சபைகளும், பார்லிமென்டும் எதிர்த்தன. ஐரோப்பாவிலிருந்ததுபோல் இங்கிலாந்திலும் இதன் விளைவாக மதச்சிறுபான்மையோர், பொது மக்களுக்கே ஆதிக்கமும், உரிமைகளும் இருக்க வேண்டுமென்று வாதாடினர். இதற்கு நேர்மாறாக I - ம் ஜேம்ஸ், "மன்னனே வரம்பிலா அதிகாரி; எவருக்கும் அவனை எதிர்க்க உரிமை இல்லை" யென்று கூறினான். மன்னன் கடவுளுக்கும் மனச்சாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டவனென்றும், மக்களுக்கும் நீதிக்கும் புறம்பானவன் என்றும் கருதினான். மற்றும் மன்னனுக்கும் மக்களுக்குமிடையே ஒருவித ஒப்பந்தமும் இல்லையென்றும், மக்களுக்குக் கடமைகள் உண்டேயன்றி உரிமைகள் இல்லையென்றும் கூறினான். அரசன் தனது முடிசூட்டு வாக்குறுதிக்கு மட்டுமே கட்டுப்பட்டவன். இதற்குத்தான் தெய்விக உரிமைக்கொள்கை (Divine Right Theory) என்று பெயர். இக்கொள்கைகளை ஆங்கிலிகத் திருச்சபை (Anglican Church) முழு மனத்துடன் ஆதரித்தது.
பேக்கன் (1561-1626) டியூடர் (Tudor) அரசாட்சியைப் போற்றியுள்ளார். ஹாப்ஸ் (1588-1679) எழுதிய லெவையதன் (Leviathan) என்னும் நூல் இங்கிலாந்தில் ஒரு பெருங்கிளர்ச்சியை உண்டுபண்ணிற்று. திருச்சபை அரசாங்கத்தின் ஒரு பகுதி. அரசாங்கமே சமூக ஒப்பந்தத்தினால் உண்டாயிற்று. சமூகமும், அரசாங்கமும் உண்டாவதற்கு முன்னால் மனிதன் இயற்கை நிலையில் இருந்தான். இந்நிலையை ஹாப்ஸ் எல்லோரும் எல்லோரோடும் செய்யும் போர்நிலை (State of war of all against all) என்றும், அந்நிலையில் நீதிமுறையின்மையால் மனிதனுடைய வாழ்க்கையே தனிமையாகவும், கேவலமாகவும் இருந்ததென்றும் கூறுகிறார். இக்கொடுமையான நிலையிலிருந்து விடுபட மக்கள் ஒன்று கூடித் தங்கள் இயற்கை உரிமைகளை நாடாளும் அதிபதியிடம் கொடுத்து அரசியல் ஆட்சிக்குட்பட்டனர். இப் வொப்பந்தத்தைத் தனிமனிதன் மீறினால், முன்போல் அராஜகமும் அதன் தீய விளைவுகளுமே உண்டாகும் என்று விளக்கினார். பலமான ஆட்சிமுறைக்கு ஹாப்ஸின் கொள்கை ஊன்றுகோலாயிற்று.
இச்சமயத்தில் ஜனநாயகக் கொள்கைகளை ஆதரித்தவர்களில் மில்ட்டனும் (1608-74), லாக்கும் (1632- 1704) தலைசிறந்தவர்கள். இவர்களின் தத்துவங்கள் மக்களிடையே மிக்க செல்வாக்குப் பெற்றிருந்தன. மதத்திற்கும் அரசாங்கத்திற்குமிடையே தொடர்பு இருத்தல் கூடாது. சுதந்திரம் மக்களின் பிறப்புரிமையாதலால், மில்ட்டன் பொதுமக்கள் ஆதிக்கத்தை ஆதரித்தார். மில்ட்டனுக்குப் பொதுமக்கள் சபைகளின் உபயோகத்தில் நம்பிக்கையில்லை. அவர் பிரதிநிதி ஆட்சியைவிட ஜனநாயக ஆட்சியே மேன்மையானதென்று கருதினார். பொதுமக்கட்குச் சுதந்திரம் இருத்தல் வேண்டுமென்பதும், தகுதியுடையவர்களுக்கே அதிகாரம் இருக்க வேண்டும் என்பதும் அவர் கொள்கைகள். லாக் எழுதிய முக்கிய நூல் சிவில் அரசாங்கத்தைப் பற்றிய கட்டுரை (Essay on Civil Government) என்பது. சமூக ஒப்பந்தம். இயற்கைச் சட்டம், இயற்கைநிலை, அரசாங்கத்தைச் சில சமயங்களில் எதிர்க்கும் உரிமை போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது அவர் அரசியல் இலட்சியம். இயற்கை நிலையில் மக்கள் சமாதான உள்ளமும், பரோபகார எண்ணமும் கொண்டவர்களாக இருந்தனர். ஆனால் அந்த நிலையில் எது இயற்கைப்படி நியாயம் என்பதில் ஐயம் தோன்றியபோது, அதைத் தீர்க்க ஒரு பொது அமைப்பு இல்லாமையால், மக்கள் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளும்படி நேர்ந்தது. இவ்வொப்பந்தத்தினால் மக்கள் தங்கள் இயற்கை உரிமைகளை நிலைநாட்டிக்கொண்டனர். அவ்வரசாங்கம் நீதி தவறி, மக்கள் உரிமைகளைச் சிதைக்குமாயின், மக்களுக்கு அதை எதிர்க்க உரிமையுண்டு என்று லாக் நம்பினார். லாக் அரசியல் இலாகாக்களின் அமைப்பைப் பற்றியும், அவைகளின் பிரிவினை, அதிகாரம் முதலிய வற்றைப் பற்றியும் ஆராய்ந்துள்ளார்.
17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மன்னர்களின் வரம்பிலா ஆட்சிக்கு ஏற்றதாக இருந்தது. இந்தச் சூழ்நிலை பொதுவாக அரசியல் கருத்துக்கள் உருப்பெற உதவாத போதிலும் ஸ்பினோசா, பூபண்டார்ப் போன்ற அறிஞர்கள் இக்காலத்தில் சிறந்த நூல்களை இயற்றினர்.
ஸ்பினோசா ஒரு போர்ச்சுகேசிய யூதர். தாய்நாட்டில் மதக் கொடுமையும், அரசாங்கக் கொடுமையும் தாங்காமல் ஹாலந்தில் குடிபுகுந்தார். தம் தாய்நாட்டில் அனுபவித்த கொடுமைகள் ஸ்பினோசாவின் கொள்கைகளை உருவர்க்கின. சமய விஷயத்தில் அறநோக்கத்தையும், அரசியலில் பிரபுக்கள் ஆட்சியையும் இவர் ஆதரித்தார். சமூக ஒப்பந்தம், அரசியல் ஆதிக்கம், தனி மனிதனின் சுதந்திரம் போன்ற விஷயங்களில் ஹாப்ஸுக்கும் இவருக்கும் சில ஒற்றுமைகள் இருப்பினும், பல வேற்றுமைகள் இருந்தன.
பூபண்டார்ப் (1632-94) ஒரு ஜெர்மானிய அறிஞர். அவர் இயற்கை நிலையைப் பற்றியும், சமூக ஒப்பந்தத்தைப் பற்றியும், ஹாப்ஸ் போலவே கருத்துக் கொண்டவர். அவர் அரசியல் ஆதிக்கம், சர்வதேசத் தொடர்பு, இவற்றைப் பற்றிச் சிறந்த ஆராய்ச்சிகள் செய்தார்.
18ஆம் நூற்றாண்டு: இந்நூற்றாண்டின் முற்பகுதியில் தலைசிறந்த அரசியல் நூல் எதுவும் இயற்றப்படவில்லை. ஐரோப்பாவில் சர்வதேசச் சட்டத்திலும், இங்கிலாந்தில் சமூக ஒப்பந்தக் கொள்கையை எதிர்ப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது. பொதுவாக மன்னனும் அரசாங்கமும் ஒன்றாக எண்ணப்பட்டதால் ஆதிபத்தியத்தின் தன்மையும் அதன் இருப்பிடமும் இந்நூற்றாண்டின் முற்பகுதியில் ஆராயப்படவில்லை. ஆனால் இந்நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய புரட்சிகரமான கொள்கைகள் இப்பொழுதே விதைக்கப்பட்டன. 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருச்சபையையும், பிற்பகுதியில் அரசாங்கத்தையும் பிரெஞ்சு ஆசிரியர்கள் எதிர்த்தெழுதினர். பிற்பகுதியில் ஆங்கிலேய அரசியல் முறைகளும் கொள்கைகளும் ஐரோப்பாவில் செல்வாக்குப் பெற்றன.
18ஆம் நூற்றாண்டில் இயற்கைச் சட்டத்திற்குத் தனிப்பெருமை ஏற்பட்டது. இக்காலத்து அரசியல்வாதிகளுக்கு வரலாற்று உணர்ச்சி இல்லை. புராதனப் பழக்க வழக்கங்களிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டுமென்ற ஆர்வம் ஓங்கியதால், ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல அரசியல் சட்டங்களைவிடப் பொதுவான இயற்கைச் சட்டமே மேல் எனப் பலர் வற்புறுத்தினர். அரசாங்கம் தனி மனிதனின் சுதந்திரத்தில் தலையிடுதல் தவறென்றும், மக்களின் இயற்கை உரிமைகள் பராதீனப்படுத்தப்படாதவை என்றும் கூறினர்.
இந்நூற்றாண்டில் கிறிஸ்தியன் தாமசியஸ் (Christian Thomasius 1655-1728), கிறிஸ்தியன் வால்ப் (Christian Wolff 1679-1754) என்னும் இரண்டு ஜெர்மானிய ஆசிரியர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் சர்வதேசச் சட்டத்தின் வளர்ச்சிக்கு உதவினர். இத்தாலிய சட்ட நிபுணராயிருந்த வீக்கோ (Vico 1668-1744) என்பவர் இயற்கைச் சட்டங்கள் எக்காலத்திற்கும் எவ்விடத்திற்கும் ஏற்றவை என்பதையும், பகுத்தறிவுக்கேற்றவை என்பதையும் ஒப்பவில்லை. இதற்கு மாறாக அரசியல் கருத்துக்களும் ஸ்தாபனங்களும் ஒரு நாட்டு மக்களின் பண்புகளுக்கு ஏற்பவும், தேவைகளுக்கேற்பவும், சூழ்நிலைக்கேற்பவும் மாறுதலடையுமெனக் கருதினார். வீக்கோவின் கருத்துக்களைப் பிறகு மான்டெஸ்க்யூ (1689-1755) ஏற்றுக்கொண்டார். வரலாற்று வாயிலாகச் சமூகப் பிரச்சினைகளைக் கருதும் பழக்கம் முதன்முதலில் வீக்கோவால் துவக்கப்பெற்றது.
இங்கிலாந்தில் போலிங்புரோக் பிரபு (Viscount Bolinghroke 1678-1751) என்பவரும் டேவிடு ஹியூம் (David Hume 1711-1776) என்பவரும் அரசியல் துறையில் நூல்கள் செய்தனர். போலிங் புரோக்கின் கொள்கைகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருந்தன. மேலும் அவர் தாம் கூறிய கொள்கைகளை நடைமுறையில் கையாளவில்லை. அவர் ஜனநாயகக் கொள்கைகளை ஆதரித்ததுமல்லாமல், மக்களுக்கும் மன்னனுக்கு மிடையே ஓர் ஒப்பந்தம் இருப்பதாகவும் நம்பினார்.
ஹியூம் ஒரு சிறந்த அறிஞர்; அன்றியும் அக்காலத்து அரசியற் கொள்கைகளில் பெருங்கிளர்ச்சியையும் உண்டாக்கினவர். அவர் சமூக ஒப்பந்தக் கொள்கையையும் மதமே அரசியலைவிடச் சிறந்ததென்ற கொள்கையையும் மறுத்து, அரசியற் கொள்கைகள் வரலாற்றையும், உளவியலையும் அடிப்படையாகக்கொண் டிருக்க வேண்டுமென்று கூறினார். மக்கள் இயற்கையாகத் தந்நலமும் பொறாமைக்குணமு முடையவர்களாதலால் அவர்களுக்குக் கட்டுப்பாடு தேவையாக இருக்கிறது. இக்கட்டுப்பாடு, சட்டங்கள் மூலமாகவும் நீதிபதிகள் மூலமாகவும் நிறைவேற்றப்படுமாதலால், இவற்றிற்கெல்லாம் அரசாங்கம் இன்றியமையாதது. எனவே அரசாங்கம் மக்கள் நன்மைக்குப் பயன்படுவதால் அவசியமானதேயன்றி, ஒப்பந்தத்தினால் ஏற்பட்டதில்லை என்றும், அரசாங்க அதிகாரம் நாட்டின் செல்வப் பங்கீட்டைப் பொறுத்தது என்றும் ஹியூம் கூறினார். இங்கிலாந்தில் காமன்ஸ் சபையின் அதிகாரம் பெருகுவதைக் கண்டு, அரசியல் சங்கங்களின் அவசியத்தையும், பத்திரிகைச் சுதந்திரத்தின் அவசியத்தையும் பற்றி அவர் விளக்கினார்.
இச்சமயம் ஆங்கிலேயர்களிடையே ஜனநாயகக்கொள்கைகள் பரவி, அவர்கள் தங்கள் சட்டசபைப் பிரதிநிதிகளை அடக்கவும் ஆரம்பித்தனர். தனித்துவம் (த.க.) என்றும், பயன் முதற்கொள்கை (த.க.) என்றும் இரண்டு முறைகளில் இயற்கை உரிமைகள் பற்றிய கருத்து இங்கிலாந்தில் கையாளப்பட்டது.
இவ்விரண்டாவது முறையை மேற்கொண்டவர்களில் பெந்தாம் (1748-1832), ஆஸ்ட்டின் (1790-1859), ஜான் ஸ்டூவர்ட் மில் (1806-73) என்பவர்கள் சிறந்தவர்கள். இவர்கள் இயற்கை நிலை, சமூக ஒப்பந்தம், இயற்கைச் சட்டம், இயற்கை உரிமைகள் என்பவற்றைப் பற்றிக் கூறினார்கள்; அரசாங்கம் சமூக நலத்திற்காக ஏற்பட்டதால் அதற்கு முழு அதிகாரமும் இருக்கவேண்டும் என்றும், அதை எதிர்ப்பது சட்டப்படி முறையன்று என்றும் சொன்னார்கள். பெந்தாம் அரசியலையும் சட்டங்களையும் சீர்திருத்தும் வழிகளைத் தாம் இயற்றிய பல நூல்களில் விரிவாகக் கூறுகிறார். அவருக்குப் புராதனப் பழக்க வழக்கங்களிலும் தனி இனப் பண்பாடுகளிலும் பற்றில்லை. அரசாங்கத்திற்கு அளவிறந்த அதிகாரம் கொடுக்க வேண்டுமென்றும், அரசியல் அமைப்பு எழுதப்பட வேண்டியது அவசியமாயினும் அதைத் திருத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இருக்கவேண்டும் நம்பினார். தனி மனிதனின் உரிமைகளைக் காப்பது அரசாங்கத்தின் கடமையன்று. ஒவ்வோர் உரிமைக்கும் ஏற்ற கடமை இருக்கின்றது. அக்கடமையின் அளவை அதனுடைய பயனேயன்றி வேறெதுவுமில்லை. தனி மனிதனின் உரிமைகள் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டவை. அவை சட்ட உரிமைகள், அற உரிமைகள் என இரண்டு வகை. தனி மனிதனுக்கு மூன்று வகைக் கடமைகள் உள்ளன. அவை அரசியல், சமய, அறக்கடமைகளாம். அவனுக்குச் சட்டப்படி அரசாங்கத்தை எதிர்க்க உரிமையில்லை; சட்டப்படி அரசியலுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவே கடமைப்பட்டவன் என்று பெந்தாம் கூறினார். மேலும் ஜனநாயக ஆட்சியை மிகவும் போற்றி, அதற்குத் தேவையான ஆண்டுப் பிரதிநிதி சபை, வாக்குச் சீட்டு முறையில் தேர்தல், வயதுவந்தோர் வாக்குரிமை என்பவைகளை அமலுக்குக் கொண்டுவர வேண்டுமென்றும் கூறினார். பெந்தாம் கொள்கைகள் பலவற்றை அனுசரித்த ஆஸ்ட்டின் சட்டத்தைத் தெய்விகச் சட்டம், மானிடச் சட்டம் என்று இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளார். ஆதிபத்தியத்தைப் பற்றி இவர் வகுத்த முடிவுகள் அரசியல் கலைக்கே அடிப்படையாக அமைந்துள்ளன. பெந்தாமும், ஜேம்ஸ் மில், ஜான் ஸ்டூவர்ட் மில் போன்ற அவர் சீடர்களும் இங்கிலாந்தில் நிகழ்ந்த பிரதிநிதிச் சபைச் சீர்திருத்தங்களுக்கும் ஆங்கிலேயப் பேரரசின் பல பகுதிகளிலும் தோன்றிய பல நிருவாகச் சீர்திருத்தங்களுக்கும் காரணமாவர்.
18ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு அரசாங்கத்தின் தனி ஆட்சியைப் பலமாக எதிர்த்தவர்களில் வால்ட்டேர் (Voltaire 1694-1778) சிறந்தவர். அவர் மதாதிபத்தியத்தை எதிர்த்தார். சட்டசபை, தேர்தல்கள், பத்திரிகைகள் முதலியவைகட்குச் சுதந்திரமும் இடைத்தர வகுப்பினருக்கு அரசியல் உரிமைகளும் கொடுக்கப்படவேண்டுமென்று வால்ட்டேர் வாதாடினார். "ஏழைகளின் குடியரசைவிடக் காருணிய முடியரசே மேல்; ஆனால் மன்னர் பொறுப்பின்றி ஆளக்கூடுமாதலால் ஜனநாயகமே விரும்பத் தக்கது' என்பவை அவர் கொள்கைகள்.
18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் வெளியான அரசியல் நூல்களில் மான்டெஸ்க்யூ (1689-1755) இயற்றிய சட்டங்களின் சாரம் (Spirit of the Laws) என்னும் நூலே பலநாட்டு மக்களின் அரசியற் கொள்கைகளைப் பாகுபாடு செய்யவும், அரசியல் சீர்திருத்தங்களைத் தூண்டவும் உதவிற்று. மான்டெஸ்க்யூ வரலாற்றுக் கொள்கையினரைச் (Historical School) சார்ந்தவர். அவர் பலநாட்டு அரசாங்கங்களையும் ஆராய்ந்து, ஒப்பிட்டுப் பார்த்துப் பிறகே தம் கருத்துக்களை வெளியிட்டார். மான்டெஸ்க்யூவின் கொள்கைகளில் மிகச் சிறந்தது அதிகாரப் பிரிவினைக் கொள்கை. அரசாங்க அதிகாரம் நிருவாகப் பகுதி, சட்ட மியற்றும் பகுதி, நீதிப்பகுதி என மூன்றாகப் பிரிக்கப்பட வேண்டும் என்றும், அவை வெவ்வேறு இலாகாக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டுமென்றும், அவ்வாறு பிரிக்கப்படாமலிருந்தால் அரசாங்கம் தனி ஆட்சிக்கு உள்ளாகும் என்றும் அவர் கருதினார். மான்டெஸ்க்யூ சுதந்திரத்தின் தன்மை, வகைகள் முதலியனவற்றைப் பற்றித் தீர ஆராய்ந்தார். அரசியல் சுதந்திரம் கட்டுப்பாடுள்ள அரசாங்கத்திலேதான் இயலுமென்று அவர் நம்பினார்.
பிரெஞ்சு ஆசிரியரான ரூசோவை (1844-1910) 18ஆம் நூற்றாண்டிலேயே மிகவும் சிறந்த அரசியல் அறிஞர் எனக் கூறலாம். அவர் இயற்றிய சமூக ஒப்பந்தம்(Social Contract) என்னும் நூலில் சமூக ஒப்பந்தம், இயற்கைநிலை முதலிய கருத்துக்கட்குப் புத்துயிர் அளித்துப் புதிய முறையில் ஆராய்ந்ததின் மூலம் குடியரசே மேன்மையான அரசியல் முறையென விளக்கியுள்ளார். ஹாப்ஸ், லாக் ஆகியோரைப் போலல்லாமல் ரூசோ இயற்கை நிலையை மிகவும் புகழ்ந்துள்ளார். சமூக அரசியல் ஒப்பந்தங்கள் செய்யப் பட்டதால் மக்கள் தங்கள் பூரண சுதந்திரத்தை இழந்து, தாங்களே தங்களுக்கு விலங்குகளை மாட்டிக்கொண்டனராம். ரூசோ, கிரேக்க, ரோமானிய ஜனநாயக நகரராச்சியங்களை (Democratic City States) மிகவும் விரும்பினார். ரூசோவின் கொள்கைகள் பிரான்சில் நேர்ந்த புரட்சிக்கு மூலம் என்பர்.
பிரெஞ்சுப் புரட்சி நடந்த சமயம் ஜெர்மனியில் இமான்யுவல் கான்ட் (1724-1804) என்னும் புகழ்பெற்ற அரசியல் அறிஞர் இருந்தார். அவர் கருத்துக் கொள்கையை (Idealism) நிறுவியவர். இது லாக், ஹியூம் போன்றவர்கள் போதித்த கொள்கைகட்கு எதிரிடையான கொள்கைகளைக் கொண்டது. இவருடைய முக்கியக் கொள்கை. அரசியற்கலை நீதிநெறியைத் தழுவியது என்பதுதான். இவர் உரிமை, சொத்து, சட்டம், இராச்சியம் முதலிய கருத்துக்கட்குப் புதுப் பொருள் கற்பித்தனர். இராச்சியம் மக்களின் ஒப்பந்தத்தினால் ஏற்பட்டதென நம்பினர். அரசியல் விஷயங்களில் ரூசோவையும் அதிகாரப் பிரிவினையில் மான்டெஸ்க்யூவையும் கான்ட் பின்பற்றினார். கான்டின் கருத்துக்கொள்கைகளை 19 ஆம் நூற்றாண்டில் பிக்டே (Fichte), ஹேகல், கிரீன், போசன்கிட் (Bosanquet) என்பவர்கள் வளர்த்துப் பரப்பினர். ஏ. கே. வ,
தற்காலம்: பிரெஞ்சுப் புரட்சி, 'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்ற முழக்கங்களோடு தொடங்கியது. பிரத்தியேக உரிமையைக் கொண்டாடியவர்களுக்கு எதிராகச் சட்டப்படி நாட்டு மக்கள் யாவருக்கும் சம உரிமை உண்டு என்னும் கருத்துப் பரவிற்று. பிரெஞ்சுப் புரட்சியை அடக்க அயல் நாடுகள் முயன்றபோது, சகோதரத்துவம் தேசியமாக மாறிற்று. நெப்போலியன் ஐரோப்பிய யுத்தங்களில் வெற்றிபெறவே, ரூசோ கூறிய பொதுமக்கள் கருத்து (General will) தேசத்தலைவரிடம் விளங்குவதாகக் கொள்ளப்பட்டது. இராச்சியத்தை மதத்துக்கு மேலாக மதிக்கும் முறை தோன்றியது.
இராச்சியத்திற்குப் பூரண அதிகாரம் உண்டு என்னும் கொள்கையை இக்காலத்தில் ஆதரித்தவர் ஹேகல் (1770-1831). " பல நாடுகள் ஒன்றோடொன்று சண்டையிடுவது உலக வரலாற்றின் போக்கு; இது இயற்கை முறை ; போர் புரிய வலிமை வேண்டும்; வலிமை நாட்டிற்கு இலட்சணம். போரில் வெற்றி பெறும் இராச்சியமே கடவுள் தன்மை கொண்டது. அவ்வித இராச்சியத்திற்குப் பணிவது உண்மையான சுதந்திரமாகும். அவ்விராச்சியம் செய்வது அனைத்தும் நியாயமாகும் " என்று அவர் கருதினார். அவருடைய கொள்கையைப் பின்பற்றிய பிஸ்மார்க் ஜெர்மானிய ஏகாதிபத்தியத்தை அமைத்தார். இரண்டு உலக யுத்தங்களுக்கும் ஹேகலின் கொள்கைகள் ஒரு முக்கியமான காரணம் என்று கருதலாம்.
ஹேகலின் கொள்கையை ஆங்கில நாட்டில் பின்பற்றியவர்களில் முக்கியமானவர்கள் கிரீன் (1836-1882) போசன்கிட் (1848-1923) ஆகிய இருவர். கிரீன் பூரண அதிகார இராச்சியத்திற்குப் பதிலாகப் பூரண அதிகார சமூகத்தை ஏற்றுக்கொண்டார் ; அவர் கொள்கைப்படி, இராச்சியம் சமூகத்திற்கு உட்பட்டது ; தனி மனிதருடைய உரிமை சமூகத்திலிருந்து பெறப்படுவது; அதுவே உண்மையான இயற்கை உரிமை; அவ்வுரிமையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் அது சட்டப்படியுள்ள உரிமையாகும். சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் வேறுபாடு உண்டாயின் சமூகம் அரசாங்கத்தை மாற்றலாம். தனி மனிதன் சமூகத்தின் ஒரு பகுதியாகையால் சமூகத்திற்கு முரணான எதையும் அவன் செய்யலாகாது.
போசன்கிட் ஹேகலை அதிகமாகப் பின்பற்றினார். "அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய அறநெறி ஒன்றுமில்லை. அரசாங்கம் குற்றம் செய்ய முடியாது. எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி யிருப்பதால், அரசாங்கத்திற்கு எதிராகவோ, புறம்பாகவோ எதுவும் இருக்க முடியாது" என்பது அவர் கருத்து.
பிரெஞ்சுப் புரட்சியின் பயனாகத் தேசியம் அரசியல் துறையில் தோன்றிற்று. தொழிற்புரட்சியின் பயனாகத் தேசியம் பொருளாதாரத் துறையிலும் புகுந்தது. கச்சாப்பொருள்களைச் சேகரிப்பதிலும், விற்பனைப் பொருள்களாக மாற்றுவதிலும், விற்பனை செய்வதிலும் நாடுகள் ஒன்றோடொன்று போட்டி யிட்டுக்கொண்டு புதுப் பிரச்சினைகளை எழுப்பின.பொருளாதார விஷயங்களில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்னும் தலையிடாமைக் (Laissez faire) கொள்கையை ஆதம்ஸ்மித் தமது பொருளாதார நூலிற் கூறினார். இவைகளை எதிர்த்து முக்கியமான கொள்கைகளை வெளியிட்டவர் மார்க்ஸ் (1818-83)- 'மனித வரலாறு பரிணாம முறையில் சமூகம் வளர்வதைக் காட்டும்' என்ற கொள்கையுடையவர் மார்க்ஸ். இயற்கையை மனிதன் எந்திர சக்தியால் ஆட்கொள்வதால் இம்முன்னேற்றம் இயலும் என்று அவர் கருதினார். தொழிலாளிகளின் ஆட்சி நிறுவப்பட்ட பிறகு இராச்சியம் என்னும் ஸ்தாபனமே மறைந்துவிடும், அதற்குத் தேவையிராது என்பது அவர் கொள்கை. "வருக்கமில்லாத சமூகத்தில் இராச்சியம் மறைந்துவிடும்; வரலாற்றுமுன் காலம் முடிந்து வரலாறு தொடங்கும்" என்றார் மார்க்ஸ். இவரும் எங்கெல்சும் (1820-95) சேர்ந்து இயற்றிய கம்யூனிசப் பிரகடனம் (Communist Manifesto) என்னும் நூலுள் இக்கொள்கை முதன் முதல் விரித்துரைக்கப்பட்டது. கம்யூனிஸ்டு ரஷ்ய ஆட்சியை நிறுவிய லெனின் இக்கொள்கைகளை முழுவதும் ஏற்றுக்கொண்டார்; ஆயினும் ஸ்டாலின் உலக நிலையை ஒட்டி முதலாளித்துவமும் கம்யூனிசமும் அடுத்தடுத்து வாழ முடியும் என்று தம் கொள்கையை மாற்றிக்கொண்டார்.
செயின்ட் சைமன் (1760-1825) என்பவர் விஞ்ஞான முன்னேற்றத்தால் அரசியலைவிடப் பொருளாதாரமே அதிக முதன்மை பெறுவதாகக் கூறினார். "சொத்தைத் தனியுரிமையாகக் கொள்ளாமல் ஒப்படைத்த பொருள் போலக் காத்துப் பயன்படுத்தவேண்டும்" என்று அவர் கருதினார். ஓகஸ்ட் காம்ட் (Auguste Comte 1798-1857) என்னும் பிரெஞ்சு ஆசிரியர் செயின்ட் சைமனால் கருத்தூட்டம் பெற்றவர். இயற்கையை ஆராயும் விஞ்ஞானக் கலைகளைப்போலச் சமூகவியலொன்றை ஏற்படுத்தி, விஞ்ஞான முறையில் சமூகப் பிரச்சினைகளை யாராய வேண்டுமென்றார். இவருடைய கருத்துக்களால் பாதிக்கப்பட்டவர் ஜான் ஸ்டூவர்ட் மில் என்ற ஆங்கில அறிஞர். இவர் பெந்தாமின் பயன்முதற் கொள்கையைப் புது முறையில் அமைக்க முயன்றார். எல்லா மனிதர்களும் சமம் என்னும் தீவிர ஜனநாயகத்திற்கும், மக்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் தலையிட இராச்சியத்திற்கு உரிமையுண்டு என்னும் கொள்கைக்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் தனிமனிதன் சுதந்திரத்தையும், பிரதிநிதி சபை மூலம் இயங்கும் ஜனநாயகத்தையும் தகுந்த காரணங்களோடு ஆதரித்துப் பல நூல்கள் எழுதினார். பொருளாதார நூல் ஒன்றும் இயற்றினார். அங்கும் முதலாளித்துவத்திற்கும் பொது உடைமைக்கும் இடையே நடுநிலை கண்டு கூறியிருக்கிறார்.
கடவுளால் நியமிக்கப்பட்டு, அந்த நியமனப்படி உலகு இயங்குகிறது என்னும் கொள்கைக்குப் பதிலாக, இயற்கையின் செயலாக யாவும் நடைபெறுகின்றன என்னும் கொள்கை இன்று மேலிட்டு வருகிறது. டார்வின் இனங்களின் தோற்றம் (Origin of Species) என்னும் நூலில் பரிணாமக் கொள்கையைக் கூறியதிலிருந்து மானிட இயல் அறிஞர்களும் அப்பரிணாம முறையையொட்டித் தங்கள் கருத்துக்களையும் கூறிவந்தனர். தனி மனிதரேயன்றி, சமூகங்களும் பரிணாம முறையில் வளர்கின்றன என்று ஹெர்பர்ட் ஸ்பென்சர் (1820-1903) கூறினார். உயிரியல் முறையில் தனிமனிதனைப்போல உறுப்புக்களோடு இயங்குவது சமூகம் என்று அவர் கூறினார். அங்கங்கள் மறையினும் முக்கியமான உடல் இருப்பதுபோலத் தனிமனிதர் தோன்றி வளர்ந்து மறையினும், இராச்சியம் நிலைபேறாக இருக்கும் என்பது அவர் கருத்து. இதனை உறுப்புக் கொள்கை (Organic Theory) என்பர். இதை ஓர் உவமையளவிலேயே கருதுவது நல்லது என்பர் பலர்.
பாஜட் (Bagehot) என்பவரும் பரிணாமத்தைத் தழுவியே மானிடவியலை வருணித்தார். சமூகத்தில் கூடி வாழ்வதும் போரிட்டுக்கொள்வதும் மனிதனுடைய இயற்கைப் பண்புகள் என்று இவர் சொன்னார். கம்ப்ளொவிக்ஸ் (Gumplowicz) என்னும் மற்றொரு மானிடவியல் அறிஞர், “மனிதன் கூடிவாழும் இயல்பீனனாதலின் சமூகம் ஏற்பட்டது; ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை ஆக்கிரமிப்பதிலிருந்து அரசாங்கம் ஏற்படுகிறது. வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்கள்மீது செலுத்தும் ஆதிக்கமே சட்டமாகும்” என்று கூறினார்.
மானிடவியலின் பகுதியாக இனத்துவம் (Racism) என்னும் கொள்கை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வளர்ச்சியுற்றது. இந்தக் கொள்கையை நிறுவினவர் கோபினோ (Gobineau). சேம்பர்லேன், "யூதர்கள் இனத்தூய்மைக்கு இடையூறாக இருத்தலால், அவர்களை நாட்டினின்றும் வெளிப்படுத்தல் வேண்டும்" என்னும் கொள்கையை வெளியிட்டார்.
புறவழி யுண்மைக் கொள்கையை (Pragmatism) ஏற்படுத்திய வில்லியம் ஜேம்ஸ் என்பவர் அனுபவத்தில் கண்டறிந்ததே உண்மை என்றார். இதைப் பின்பற்றிய ஆன்ரீ பெர்க்சன் (Henri Bergson 1859-1941) "அறிவைக் காட்டிலும் இயற்கை உணர்ச்சியே மேலானது" என்று கூறினார். மனிதன் பெரும்பாலும் உணர்ச்சியால் தூண்டப்படுகிறானேயன்றி அறிவால் தூண்டப்படுவதில்லை என்று கூறிய மக்டூகல் (McDougall 1881-1938) மனிதனுடைய அடிப்படையான உணர்ச்சிகளைப் பலவகையாகப் பிரித்துக் கூறினார். "மனிதன் எண்ணமிடுவதாக நினைக்கும்போது எந்தத் தொகுதியைச் சேர்ந்தவனாயிருக்கிறானோ அந்தத் தொகுதியின் சிந்தனை வரம்பிற்குட்படுகிறான். அவன் பல தொகுதிகளைச் சேர்ந்தவனாக இருப்பினும், எல்லாத் தொகுதிகளுக்கும் மேலான அரசாங்கத்தின் பகுதியாக உயர்ந்த எண்ணங்கள் பூர்த்தியாகின்றன" என்பவை அவர் கருத்துக்கள். நீச்செ (Nietsche 1844-1900) என்பவர், "மேன்மக்களே ஆளப்பிறந்தவர்; நன்மையும் உண்மையும் பிறரை மேற்கொள்வதில் அடங்கி யிருக்கின்றன " என்றார். இவர் யுத்தங்களைத் தீமை யாகக் கருதவில்லை.
அரசாங்கம் இன்றியமையாத ஒரு ஸ்தாபனம் அன்று என்றும், அதை முற்றிலும் நீக்கிவிடலாம் என்றும் கூறுவது ஆட்சிவேண்டாக் கொள்கை (Anarchism). அரசாங்கத்திற்குத் தனிப்பண்பு இல்லை என்றும், அது மற்ற ஸ்தாபனங்களைப்போல் ஒரு சாதாரண ஸ்தாபனந்தான் என்றும் கூறும் பன்மைவாதம் (Pluralism) ஆஸ்ட்டினுடைய (1790-1859) ஆதிபத்தியக் கோட்பாட்டிற்கு எதிராகத் தோன்றியது. ஆஸ்ட்டின் சட்ட முறைப்படி (Juristic method) ஆதிபத்தி யத்தை விவரித்தார். “ ஒருவனுடைய கட்டளைக்கு ஏனையவர்களில் பெரும்பான்மையோர் வழக்கமாகப் பணிந்து நடந்தால், அந்தக் கட்டளை சட்டமாகும்; கட்டளையிடுபவன் அதிபதியாவான்; அவனது அதிகாரம் ஆதிபத்தியமாகும்" என்று ஆஸ்ட்டின் கூறினார். பன்மைவாதியாகிய துகுயி (Duguit), " சட்டம் அர சாங்கத்தினால் ஏற்படுவதில்லை; மக்களின் பொதுத்தேவையினால் ஏற்படுகிறது“ என்று கூறினார். அவர், “சட்டத்திற்கு உறுதி அளிப்பது அதன் உற்பத்தியன்று, அதன் நோக்கமே“ என்றார். அரசாங்கத்தை வேறு எந்தத் தொகுதியும் கட்டுப்படுத்த முடியாது என்று கருதுபவர்கள் சர்வதேசிய வாதிகள். அக ஆதிபத்தியம் (Internal Sovereignty), புற ஆதிபத்தியம் (ExternalS) என்று இருவகையாக ஆதிபத்தியத்தைப் பிரித்துக் கூறிச் சர்வதேசிய வாதிகளுக்கும் தேசியவாதிகளுக்கும் உள்ள வேறுபாடு குறைக்கப்பட்டது.
18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சில அமெரிக்க அறிஞர்கள் கூறியவை சுதந்திரப் போருக்கு வழிகாட்டின. ஜேம்ஸ் ஓட்டிஸ் (James Otis). “மக்கள் சம்மதமின்றி வரி வசூலிக்கக்கூடாது ; அவ்விதம் வரி வசூலிக்கும் ஆட்சி நேர்மையற்றது“ என்று கூறினார். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் அமைப்பை நிறுவிய ஜெபர்சன், ஆதம்ஸ் முதலானோர் கூட்டாட்சி முறையைப் பற்றிய பல கருத்துக்களை வெளியிட்டனர். மேற்கூறிய இரு அறிஞர்களும், ஒப்பந்தம் செய்து கொள்ளும் மாகாணங்கள் ஒன்றுக்கொன்று சமமாக இருப்பதுமன்றி, அவை எவ்வளவு சுதந்திரம் பெறக்கூடுமோ அவ்வளவும் அவற்றிற்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் கருதினர். மற்றும், மக்கள் ஆட்சியின் குறைபாடுகள் நீங்க, இன்னும் அதிக மக்கள் ஆட்சியே வழி என்கிறார்கள். ஹாமில்ட்டன், மாடிசன் முதலியவர்கள், இராச்சியங்களின் சுதந்திரம் கூட்டாட்சி நாட்டின் ஐக்கியத்திற்கு முரண்படாதவாறு இருக்கவேண்டும் என்றும் வாதாடினர். அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியல் அமைப்பை நிறுவிய அறிஞர்கள் பிரெஞ்சு அறிஞரான மான்டெஸ்க்யூ என்பவரிடமிருந்து அதிகாரப் பிரிவினை என்னும் கொள்கையை மேற்கொண்டனர். இதன்படி நிருவாகத் தலைவரான ஜனாதிபதிக்கும், சட்டசபைப் பகுதியான காங்கிரசுக்கும், மீதிப்பகுதியான உச்ச நீதிமன்றத்திற்கும் ஒன்றையொன்று கட்டுப்படுத்தாத முறையில் தனி அதிகாரம் உண்டு. இக்கொள்கையை அ. ஐ.நா. அரசியலமைப்பில் காணலாம். “நியாயத்திற்குக் கட்டுப்பட்டுப் பொதுமக்கள் கருத்திற் கிசைந்து நடக்கக்கூடிய பெரும்பான்மையோர் ஆட்சியே சுதந்திர மக்களின் உண்மையான ஆதிபத்தியமாம்“ என்று அமெரிக்க ஜனாதிபதியான லின்கன் கூறினார்.
கம்யூனிசத்திற்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும் கொள்கை வேறுபாடு ஒரு புறமிருக்க, இவ்விரண்டிற்கும் எதிராக இத்தாலியிலும் ஜெர்மனியிலும் பாசிச, நாசிசக் கொள்கைகள் உருவாயின. முசொலீனியால் விளக்கப்பட்ட பாசிசக்கொள்கை மாக்கியவெலியைப் பின்பற்றி நாட்டுத் தற்பெருமையை அடிப்படையாகக் கொண்டது. ஹேகலின் பூரண அதிகார இராச்சியக் கொள்கையும், சிண்டிகலிசக் கருத்துக்களும் கலந்து, முசொலீனியின் கார்ப்பரேடிவ் இராச்சியம்தோன்றிற்று. ஜெர்மானிய நாசிசத்தில் கார்ப்பரேடிவ் கருத்தில்லை ; ஆனால் தலைமைக் (Leadership) கொள்கை பாசிசத்தைவிட அதிகமாக நாசிசக்கொள்கையில் காணப்படும். இங்கு நாட்டுப் பெருமையைவிட இனப்பெருமை பெரிதாகக் கொண்டாடப்பட்டது. இவ்விரண்டு அரசியல் வாதங்களும் ஒரு கட்சிச் சர்வாதிகாரமே யாம். அரசியல் அதிகாரத்தை ஒரு கட்சியிடம் குவிப்பது என்னும் முறையில் இவ்விரு கொள்கைகளும் கம்யூனிசத்துக்கு ஒப்பாயினும், கம்யூனிசத்தில் மக்களிடம் பொருளாதார சக்தி ஒப்படைக்கப்படும் என்பதும், பாசிச, நாசிசக் கொள்கைகளில் கட்சியும் தலைவருமே முக்கியம் என்பதும் இவற்றுள் வேறுபாடாம்.
பார்லிமென்டு ஆட்சி, கம்யூனிசம், பாசிசம் ஆகிய மூவகைக் கோட்பாடுகளையும் எதிர்ப்பது ஆட்சிவேண்டாக் கொள்கையாம். ஆதிபத்தியக் கோட்பாட்டை எதிர்த்துப் பன்மைவாதத்தை மிகுதியும் வளர்த்து, இராச்சியமே வேண்டாம் என்னும் கொள்கைகளுடையவர்களே ஆட்சிவேண்டாக் கோட்பாடுடையவர்கள். ஜோ. அ.
இந்திய அரசியற் கருத்துக்கள் : பண்டைக் கால, இடைக்கால : ராஜ்ய,ராஷ்டிர, க்ஷத்ர முதலிய சொற்கள் ரிக்வேதத்தில் மிகப் பழமைவாய்ந்த பகுதிகளில் காணப்படுகின்றன ; ஆனால் அதில் அரசியலைச் சார்ந்த தொடர்பான கருத்துக்கள் ஒன்றும் இல்லை. பிராமணங்களில் இக்கருத்துக்கள் மிகுதியாக இருக்கின்றன. உதாரணமாக, ஐதரேயப் பிராமணம் பகைவர்களைப் போரில் வென்று, நாட்டின் அமைதியைக் காப்பதற்காக அரசன் ஏற்பட்டானென்று கூறுகிறது; அதில் பல அரசரை வென்று, சாம்ராச்சியம் பெற்றுச் சிறப்பாக மகாபிஷேகம் நடத்திக்கொண்ட மன்னர்கள் பலருடைய பெயர்களும் குறிக்கப்பட்டிருக்கின்றன.
முதன் முதல் அரசியல் கருத்துக்கள் ஆராயப்பட்டது கி.மு.600-300-ல் எழுதப்பெற்ற பெள தாயன, கௌதம, ஆபஸ்தம்ப தரும சூத்திரங்களில் என்று சொல்லலாம். இந்நூல்களில் க்ஷத்திரியர்களுடைய தருமங்களைக் கூறுமிடத்து, அரசர்களுடைய கடமைகளும், அவர்களுக்கும் அவர்களுடைய குடிகளுக்கும் இருக்கவேண்டிய உறவுமுறைகளும் தனியே எடுத்துக் கூறப்படுகின்றன. அறிவு, கல்வி, நன்னடக்கை முதலிய நற்குணங்கள் வாய்ந்த ஓர் அந்தணனைப் புரோகிதனாகத் தேர்ந்தெடுத்துப் பிறகு அவன் வழிப்படி நடக்கவேண்டியது அரசன் கடமை என்பது இந்நூல்களின் முக்கியக் கருத்துக்களில் ஒன்று ; இது பிராமணங்களில் குறிக்கப்பட்டுள்ள பிராமம், க்ஷத்ரம் என்ற இரண்டு பகுதிகளும் ஒன்றோடொன்று ஒத்து அரசியல் நடத்த வேண்டுமென்ற கொள்கையை மேற்கொண்டு வரையப்பெற்ற ஏற்பாடாகும். ஆபஸ்தம்ப தரும சூத்திரம், ஓர் அரசன் தன் நாட்டில் தட்ப வெப்பத்தின் கொடுமையாலோ, பசி பிணி முதலிய துன்பங்களாலோ, ஒருவராவது வருந்த நேரிடாமல் காக்கவேண்டுமென்று கூறுகிறது. பூமியின் விளைவில் ஆறிலொரு பங்கு அரசனைச் சார்ந்ததென்றும், மற்ற வரிகள் குடிகளுக்குக் கேடின்றி ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் தரும நூல்களில் காண்கிறோம்.
இராமாயணத்தில் இராம ராச்சியத்தின் செம்மையும் அராஜகத்தின் கொடுமைகளும் விவரமாக எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. மகாபாரதத்தில், அதிலும் முக்கியமாக சாந்தி பருவத்தில், அரசநீதி மிகவும் விரிவாக நூற்றுக்கணக்கான அத்தியாயங்களில் பீஷ்மரால் யுதிஷ்டிரனுக்கு எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ அதேகாலத்தில் எழுதப்பெற்ற மனுஸ்மிருதி, கௌடிலிய அர்த்த சாஸ்திரம் ஆகிய நூல்களிலும் அத்தகைய கொள்கைகள் காணப்படுகின்றன. கௌடிலியனுடைய நூலில் சிற்சில விசேஷப் பகுதிகளுண்டு. இராச நீதி அல்லது தண்ட நீதி பிரமனால் செய்யப்பட்ட ஒரு பெரு நூலாயிருந்து, பிறகு பல கடவுளராலும் முனிவராலும் பலமுறை சுருக்கப்பெற்று, மானிட உலகத்தில் வழங்கப்பட்டு வருவதாகப் பாரதம் கூறும். “முற்காலங்களில் அரசே ஏற்படவில்லை; தாமாகவே மனிதர் நன்னடக்கையில் ஈடுபட்டிருந்தனர். நாளடைவில் காமமும் வெகுளியும் தோன்றிச் சண்டை சச்சரவுகள் ஏற்படவே, எல்லோரும் ஒருங்கு கூடித் தங்கள் வாழ்க்கையை நியாயமாக நடத்தித் தரவேண்டி அரசன் ஒருவனை ஏற்படுத்தி, அவனுக்குக் கூலியாக நிலவரியும் வேறு வரிகளும் கொடுக்க ஒப்புக்கொண்டார்கள். அப்பொழுதே அரசனுடைய உதவிக்காகப் பிரமன் தன் ஒளியினின்று தண்டம் (செங்கோல்) ஒன்றைப் படைத்து, அதை நடத்தும் முறையை விளக்கும் தண்டநீதி என்னும் நூலையும் இயற்றினான். இந்தத் தண்டம் தருமத்தின் உரு ; உபநிஷத்துக்களில் எங்கும் நிறைந்ததாகக் கூறப்பட்ட பிரமத்தின் அமிசம்; இதன் வலியே அரசன் வலி; இதற்கிணங்கியே குடிகள் சமாதானமாக வாழ்கிறார்கள். ஆனால், அரசன் முறை தவறினால், தண்டம் அவனுக்கு உதவாமல் போவதன்றி, அவனைக் குடும்பத்துடனே நாசமாக்கிவிடும்; வேனன் என்னும் கொடிய அரசன் பிராமணர் மந்திரங்களால் ஏவப்பட்ட புல் ஆயுதங்களால் இறந்துபட்ட கதையும் இக்கருத்தையே வற்புறுத்துவதாகும்.“
பொதுவாக இராச்சியங்கள் அரசராலேயே ஆளப்பட்டுவந்தபோதிலும், சில காலங்களிலும் சில நாடுகளிலும் அரசனில்லாத குடியரசு நிலவியிருந்தது. இவைகளைச் சங்கம், கணம், அரட்டம் என்னும் பெயர்களால் குறிப்பிடுவர். இவை முக்கியமாக வட இந்தியாவில் இமயமலைச் சாரல்களிலும், கோசல நாடு, மிதிலை நாடு, பஞ்சாப், சிந்து முதலிய பகுதிகளிலும் நிறைந்திருந்தன. இவைகளைக் குறித்து ஒரு தனி அத்தியாயம் சாந்தி பருவத்தில் உண்டு. இவைகளின் முக்கியக் குறைகள் ஒற்றுமைக் குறைவும், முக்கியமான ஆலோசனைகளையும் உபாயங்களையும் இரகசியமாக வைத்துக்கொண்டு நிறைவேற்ற இயலாததுமே என்று இந்த அத்தியாயம் குறிக்கும். கௌடிலியன் தனது நூலில் அரசர்கள் இந்தக் கணராச்சியங்களைச் சீர் குலைத்துத் தம் வசப்படுத்திக்கொள்வதற்கான பல சூழ்ச்சிகளைக் குறிப்பிட்டிருக்கிறான்.
அரசன் தனது பட்டாபிஷேக சமயத்தில் எல்லோரையும் சமமாகக் காப்பாற்றுவதாகவும், வருணாச்சிரம தருமங்களையும், சாதி, குலம், தொழில், ஊர் முதலியவற்றின் பரம்பரை வழக்கங்களையும் காப்பாற்றுவதாகவும் வாக்களிப்பதுண்டு. இதற்கேற்பத் தமிழ்நாட்டுச் சாசனங்கள் பலவற்றில் அரசன் தரும மகாராஜன் எனப்படுகிறான். மனு முதலிய பண்டையோர் வகுத்த தருமத்திற்கு முரண்பட்ட சட்டம் யாதொன்றும் அரசன் இயற்றக்கூடாது; அப்படித் தவறாக இயற்றினால் குடிகள் அந்தச் சட்டங்களை அவமதிக்கலாம். ஆனால், கௌடிலியனுடைய நூலில் மட்டும் அவசியமானபோது அரசனுடைய ஆணை பழைய வழக்கங்களையும் மாற்றலாம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது; இதற்குக் காரணங்கள் மௌரிய சாம்ராச்சியத்தின் புதுமையும், அதன் விசேஷ் ஆட்சித்திறனும், அக்காலத்தில் சிரியா, எகிப்து முதலிய நாடுகளில் கிரேக்க அரசர்கள் நடத்திவந்த ஆட்சிமுறைகளுமே என்பது ஊகிக்கப்படுகிறது. கௌடிலியன் பழைய இந்திய சாஸ்திரங்களையும் தன் காலத்து வேற்றுநாட்டுப் பழக்கங்களையும் சேர்த்து ஆராய்ந்து தன் நூலை யியற்றியதாகக் கூறி யிருப்பதும் இதையே வற்புறுத்தும்.
இராச்சியமென்பது ஏழு உறுப்புக்கள் அடங்கியது. அவையாவன: அரசு, அமைச்சு, நட்பு, பொக்கிஷம், நாடு, அரண்,படை என்பன. “படைகுடி கூழமைச்சு நட்பரணாறு முடையா னரசரு ளேறு“ என்பது திருக்குறள் (381). அரசன் சிறுவயதில் கல்வி பயின்று, நன்னடை வாய்ந்து, பெரியோரையும் கற்றாரையும் மதித்து, நீதிமுறை தவறாது அரசியல் நடத்தவேண்டும். தன் உதவிக்காகத் தகுந்த அமைச்சரை வேண்டிய அளவில் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அமைச்சரில் அக்காலத்திலும் இரு திறத்தாருண்டு. முதலாவது மந்திரிசபையின் அங்கத்தினர், தற்காலம் காபினெட் (Cabinet) மந்திரிகளெனப்படுவர். முக்கியக் காரியங்களில் அவர்கள் யோசனைப்படியே அரசன் நடப்பது நல்லது; ஊரில் இல்லாமல் வெளி வேலையில் அமர்ந்திருக்கும் மந்திரிகளின் கருத்தைக் கடித மூலம் அறிய வேண்டுவது அரசன் கடமை என்பது கௌடிலியன் கருத்து. மற்றொருவகை அமைச்சர் மந்திரிசபையின் தீர்மானங்களை நிறைவேற்றுபவர். இவ்விருதிறத்தாரையே மந்திரி சசிவர், கரும சசிவர் என்று முறையே கி.பி.150-ல் ஒரு சாசனம் குறிப்பிடுகிறது. பொதுவாக அரசனுக்கு அண்டைநாட்டரசன் பகைவனாகவும், அவனுக்கு அடுத்த அரசன் நட்புப் பூண்டவனாகவும் இருப்பானென்பது நீதிநூற் புலவரின் கருத்து. இதற்கிணங்கவே, அயல்நாட்டரசனுடன் உறவு முறைகள் பொதுவாக நடத்தப்பட்டு வந்தன. ஓர் இராச்சியமும் அதைச் சூழ்ந்து அதனுடன் இவ்வாறு உறவாடிக்கொண்டிருக்கும் நாடுகளும் சேர்ந்தது ஒரு மண்டலமெனப்படும். மேலும் ஓரரசன் எப்பொழுதும் பிற நாடுகளை வெல்லும் நோக்கத்துடனே இருத்தல் நலமெனக் கருதப்பட்டது. இதனால் விளைந்த போர்கள் பல. எப்போதும் குறையாத பொக்கிஷமே அரசனுக்கு முக்கிய வலி; குடிகளுக்குத் துன்பமின்றி எளிதாக வரி வசூலிப்பது சிறந்தது. கௌடிலியன் காலத்தில் அரசாங்கமே வரி வசூலிப்பதைத் தவிரப் பல தொழில்களையும் வர்த்தகத்தையும் நடத்தி லாபமடைந்ததாகக் கூறலாம். வரி ஏற்படுத்தி வசூலிக்கும் அதிகாரம் அரசனுக்கு மட்டுமல்லாமல், ஊர்ச்சபைகள், தொழிற் சங்கங்கள் முதலிய ஸ்தாபனங்களுக்கும் உரித்தாகும். நாட்டின் வளமும், குடிகளின் செல்வமுமே அரசனுடைய மேன்மைக்கும் செல்வாக்குக்கும் அடிப்படையாம். ஆகையால், நீர்வளம், நிலவளம் முதலியவற்றைப் பெருக்கும் வழிகளை அரசன் கையாளவேண்டும்; தொழில்களும் வாணிபமும் ஓங்கி வளரவேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்கவேண்டும். உள் நாட்டின் அமைதிக்கும், வெளிப்பகை தன்னை மிஞ்சாதிருப்பதற்கும் வேண்டிக் கோட்டை கொத்தளங்களை அமைத்து, அவைகளைக் காத்து, வேண்டியபொழுது போர் புரியவும் வேண்டிய படைகளை ஏற்படுத்திக் கொள்ளுவதும் அரசனுடைய முக்கியக் கடமை. கோட்டைகளின் வகைகள், படைகளின் விதங்கள், படைக்கலங்கள், படைவகுக்கும் வழிகள் முதலிய பல பொருள்களைப்பற்றி நீதிநூல்கள் விரிவாகக் கூறுகின்றன.
முற்கூறப்பட்ட பழைய நூல்களைத் தவிர, பிற்காலத்தில் ஏற்பட்ட நூல்கள் பல உண்டு. புராணங்களில் நீதி விஷயங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. சிறப்பாக அக்கினி புராணத்தில் இவற்றைக் காணலாம். பஞ்ச தந்திரமும் இதோபதேசமும் நீதிகளைக் கதைகள் வழியாக எளிதில் விளக்கிச் செல்கின்றன. காமந்தகீய நீதிசாரம் பொதுவாகக் கௌடிலிய அர்த்த சாஸ்திர முறையைத் தழுவிய நூல். சோமதேவ சூரி கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இயற்றிய 'நீதி வாக்கியாமிருதம்' என்ற நூல் சமண முறையில் அரசியல் வழிகளை விவரிக்கும். பிற்கால நீதி நூல்களில் மிக்க பேர் பெற்றுள்ளது சுக்கிர நீதி சாரம்.
சங்க காலந்தொட்டு உள்ள தமிழ் நூல்கள் பலவும் இதேமாதிரியான கருத்துக்களையே பலவாறாக எடுத்துக் கூறுகின்றன.
தமிழ்நாட்டின் சிறப்புக்களில் ஒன்று ஆதிகால முதலே இங்கு நன்றாக நிலைபெற்றிருந்த கிராம ஆட்சி. மன்றமும் பொதியிலும் புறநானூறு முதலான நூல்களில் பலவாறாகச் சிறப்பிக்கப்பெற்றிருக்கின்றன. அக்காலத்திலும் பார்ப்பாருக்கு அரசியல் துறைகளில் ஏற்பட்டிருந்த அனுபவமும் பெருமையும், "பார்ப்பார்த் தப்பிய கொடுமை" (புறம் 34), "நின் முன்னோரெல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர்" (புறம் 43) என்பன போன்ற பல அரிய சொற்களா லறியக்கிடக்கின்றன. இனி அரசனைச் சார்ந்துள்ள ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் அரசியலங்கங்கள் என்பது சிலர் கருத்து. ஆனால், அவை அரசனுடைய பதவியைக் குறிக்கும் பரிவாரங்களைத் தவிர வேறல்ல என்பர் மற்றொரு சாரார். திருக்குறளில் பொருட்பால் என்னும் பகுதியின் அரசியல் அங்கவியல் என்னும் இருபிரிவுகளிலும் நீதிமுறைகளைத் திருவள்ளுவர் விளக்கிச் செல்கிறார். சிறு நீதி நூல்கள் பல தமிழில் உண்டு. தவிரவும், சங்க நூல்களிலும், கம்பராமாயணம்போன்ற பேரிலக்கிய நூல்களிலும், அரசியல் துறைகளைக் குறித்த பல கருத்துக்களை ஆங்காங்கு நுணுகி ஆராய்ந்து அறிந்துகொள்ளவேண்டும். உதாரணமாகப் புறநானூற்றில் காணப்படும் ஒரு சிறு பாடல் பின்வருமாறு: "நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே - மன்னன் உயிர்த்தே மலர் தலை யுலகம் - அதனால், யானுயிரென்ப தறிகை - வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே" (புறம்.186).
இந்தியாவில் முகம்மதியர் அரசாட்சி யேற்பட்டபின் அரசருக்கும் குடிகளுக்குமுள்ள தொடர்பு பல இடங்களில் அற்றுப்போயிற்று. இஸ்லாமிய அரசியல் கொள்கை, "இராச்சியம் முஸ்லிம்களுக்கே உரியது : ஏனையோர் ஐசியா என்னும் தனி வரியைச் செலுத்தித் தாழ்மையுடன் நடக்கவேண்டும்" என்பது. அதனாலேதான் விஜயநகர அரசர்கள் தலைமுறை தலைமுறையாக அவர்களுடன் போராடித் தென்னாட்டில் இந்து தருமம் தலைசாயாமல் காத்து வந்தனர். இத் தொழிலில் ஈடுபட்ட மன்னருள் பேர்பெற்ற கிருஷ்ணதேவராயர் தம்முடைய ஆமுக்தமால்யத என்னும் நூலில் ஸ்ரீ ஆண்டாள் கதையை விரித்துக் கூறுவதோடு தமது அரசியல் முறைகளையும் விவரமாக எடுத்துக் கூறியிருக்கிறார். மொகலாய சக்கரவர்த்தி அக்பர் மட்டுமே முஸ்லிம் கொள்கையை மாற்றி, இந்துக்களும் முஸ்லிம்களும் இராச்சியத்தில் சம உரிமைகளைப் பெறவேண்டுமென்ற முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அவருடைய எண்ணம் நிறைவேறவில்லை. கே.ஏ.நீ.
13ஆம் நூ. முதல் 18ஆம் நூ.வரை: கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் முகம்மதியரது படையெடுப்பால் வட இந்தியாவில் நிறுவப்பட்ட ஆட்சிக் காலத்தில் தனிச்சிறப்புள்ள அரசியல் கோட்பாடுகள் ஒன்றும் வளரவில்லை. குழப்பமான அரசியல் நிலையொன்று இருந்தமையால்,பிற நாட்டவர்கள் இந்தியாமீது படையெடுப்பது எளிதாயிருந்தது. வெளிநாட்டாருடைய ஆக்கிரமிப்பினால் தங்களுடைய நலன்கள் கெடக்கூடுமே என்று அஞ்சிய ஆட்சியாளர்களே வெளிநாட்டுப் படையெடுப்புக்களை எதிர்த்தவர்கள். இப்போர்களில் பொது மக்களுக்கு எவ்விதமான அக்கறையும் இருந்ததாகக் கருத இடமில்லை.
முகம்மதியர் ஆட்சியில் சமய அடிப்படையில் மக்கள் பாகுபாடு செய்யப்பட்டுப் பிரித்தாளப்பட்டனர் என்பதற்கு ஐசியா என்னும் வரி ஓர் எடுத்துக்காட்டாகும். அக்பர் ஒருவர் தாம் இலௌகிக முறையில் ஆட்சி நடத்தியவர். அவருடைய பேரன் மகனான ஔரங்கசீப் மறுபடியும் சமயச் சார்பான ஆட்சியை நிறுவி, இந்துக்களின் பகைமையைத் தேடிக்கொண்டார். அலாவுதீன் கில்ஜி (1296-1316) தாம் செய்ததெல்லாம் மக்களுடைய நன்மையைக் கருதியே என்று கூறிக்கொண்டார். ஆனால் அவர் தமது அரசியல் அதிகாரத்திற்கு எல்லைவிதிக்கக் கூடியவர்கள் உண்டு என்று ஒப்புக்கொள்ளவில்லை. தாம் II-ம் அலெக்சாந்தர் என்றும், முகம்மது நபியென்றும் கூறிக்கொண்ட அலாவுதீன் தம் நண்பர்களுடைய அறிவுரைக் கிணங்கியே அப்பட்டங்களை நீக்கினார். முகம்மது பின் துக்ளக் (1325- 51) முதலிய எதேச்சாதிகாரிகளுடைய ஆட்சியினால் மக்கள் வருந்தி மடிந்தனரேயன்றிக் கொடுங்கோலுக்குப் பரிகாரம் காணவேண்டும் என்னும் விருப்பமோ, வலிமையோ, கொள்கையோ இல்லாமலே இருந்தனர்.
மொகலாயர் ஆட்சியில் அரசனுடைய அதிகாரங்களைப் பற்றியும் இராச்சியத்தின் கொள்கைகளைப் பற்றியும் புதுக்கருத்துக்கள் அக்பருடைய ஆட்சிக் காலத்தில்தான் தோன்றின (1556-1605). அக்பர் சமய அடிப்படையில் மக்களைப் பிரிக்காமல், இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஐக்கியப்படுத்துவதில் ஈடுபட்டார். ஆசியர்களையும் ஐரோப்பியர்களையும் ஐக்கியப்படுத்த விரும்பிய அலெக்சாந்தரைப்போல அக்பர் இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஐக்கியப்படுத்த விரும்பி, மான்சிங், டோடர்மால் முதலிய இந்துக்களைப் பெரிய பதவிகளில் அமர்த்தினார்; இந்துக்களுடைய பழக்க வழக்கங்களையும் மேற்கொண்டார்; எக்காரணத்தால் அவர் இக்கொள்கைகளைக் கையாண்டபோதிலும், இந்து-முஸ்லிம் ஐக்கியம் பெரியதோர் அளவில் அவர் காலத்தில் ஏற்பட்டது என்பதில் ஐயமில்லை. தாமே கடவுளின் பிரதிநிதி என்று அக்பர் கூறிக்கொண்டது இந்து முஸ்லிம் கொள்கைகள் இரண்டிற்கும் பொருத்தமாயிருந்தமையால் அக்கூற்றில் மறுக்கத்தக்கதாக அக்காலத்தவர்களுக்கு ஒன்றும் தோன்றவில்லை.
வட இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி பரவி வந்த காலத்தில் இஸ்லாமின் ஆதிக்கம் மாலிக்காபூரின் படையெடுப்புக்குப்பின் தென்னாட்டிலும் புகுந்து, இந்துக்களுக்குத் தாங்க முடியாத ஒரு நிலைமையை உண்டாக்கவே, இந்துக்களில் சிலர் விஜயநகர இராச்சியத்தை அமைத்தனர். விஜயநகர மன்னர்கள் இஸ்லாமிற்கு எதிராகவோ, அவ்விராச்சியத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு விரோதமாகவோ ஆட்சி நடத்தவில்லை என்று கூறப்படுமாயினும், அகமத்நகர், பாமினி முதலிய முஸ்லிம் இராச்சியங்களை அவர்கள் எக்காலத்திலும் எதிர்த்துக்கொண்டே வந்தனர் என்பதும், சுற்றியிருந்த முகம்மதிய இராச்சியங்களைத் தங்களுடைய இயற்கை எதிரிகள் என்று கருதினர் என்பதும் வரலாற்று உண்மையாம். விஜயநகர மன்னர்களில் தலைசிறந்தவரான கிருஷ்ணதேவ ராயர் தாம் இயற்றிய ஆமுக்தமால்யத என்னும் நூலில் பல அரசியல் கருத்துக்களையும் கூறியுள்ளார். இயற்கையாகவே ஒன்றற்கொன்று பகைமை கொண்டாடி வந்த இந்து - முஸ்லிம் இராச்சியங்களுக்கிடையே தலைக்கோட்டையில் நிகழ்ந்த போர் (1565) முஸ்லிம்களின் போர்க்கள வெற்றியை நிலைநாட்டிற்று.
அக்பருடைய அரசியல் நன்னோக்கம் அவருடைய பின் தோன்றல்களிடம் காணப்படவில்லை. ஔரங்கசீப் தமது ஆட்சியில் சமயப் பிரச்சினையை அளவிற்கு மிஞ்சிப் புகுத்தியது மொகலாய இராச்சியமே அழிவடையக் காரணமாயிற்று. நாட்டின் பல பகுதியினரும் முஸ்லிம்களுடைய ஒருதலைச் சார்பான ஆட்சியை எதிர்க்கத் தலைப்பட்டனர். இவ்வாறு மொகலாய ஆட்சியை எதிர்த்தவர்களில் மகாராஷ்டிரர்கள் முக்கியமானவர்கள்.
சிவாஜியின் (1664-80) தலைமையின் கீழ் மகாராஷ்டிரர்கள் அரசியல் நோக்கத்தால் மொகலாய இராச்சியத்தை எதிர்த்தார்கள் என்று கருத இடமில்லை. சிவாஜி இந்து மதத்தில் தீவிரமான பற்றுடையவர். இராமதாஸ் என்னும் அவருடைய குரு இந்து மதத்தைக் காப்பாற்றும் நோக்கத்தோடு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டியதன் அவசியத்தை விளக்கித் தம் நூல்களிற் கூறியுள்ளார். சிவாஜியின் சமயப்பற்றே அவரது அரசியல், போர்க்கள வெற்றிகளுக்கு அடிப்படை என்பது தெளிவு. சீக்கியர்கள் அரசியல் உலகில் முன்னேறியதும் அவர்களுடைய சமய அடிப்படையினாலேயாம்.
இந்தியப் பேரரசர்களில் தலைசிறந்தவர்கள் என்று கருதப்படுபவர்களில் அக்பர் நீங்கலாக அசோகர், ஔரங்கசீப், கிருஷ்ணதேவராயர், சிவாஜி ஆகிய பலரும் ஓரளவேனும் சமயச் சார்புடையவர்களாகவே இருந்திருக்கின்றனர். அரசி பேரறிக்கையோடு (1858) அம்மரபு மறைந்து, புதியதொரு இலௌகிக மரபு தோன்றிற்று.
தற்காலம் : அரசியற் கருத்துக்களை ஆராயுங்கால் தற்கால இந்தியா என்பது 1800 லிருந்து 1950 வரையுள்ள ஒன்றரை நூற்றாண்டுகளைக் குறிக்கும் என்று கொள்வோம். இக்காலத்தில் இந்தியாவில் நிகழ்ந்த முக்கியமான அரசியல் நிகழ்ச்சி ஆங்கிலேயர்கள் இந்நாட்டில் தங்கள் ஆட்சியை நன்கு நிலைப்படுத்திக் கொண்டதேயாகும். இந்த ஆட்சி தொடங்குவதற்கு முன்பு மொகலாயர் ஆட்சியும், அவர்கட்கும் முன்பு முகம்மதியர்கள் ஆட்சியும், அதற்கும் முன்பு இந்துக்களில் பலவகை உட்பிரிவுகளைச் சார்ந்தவர்கள் ஆட்சியும் இந்தியாவில் நடைபெற்று வந்திருக்கின்றன. இவ்வாட்சி வேறுபாடுகள் எல்லாம் அரசாங்க நிலையில் மட்டும் நிகழ்ந்து வந்தனவேயன்றி மக்களுடைய வாழ்க்கை முறை ஏறத் தாழ ஒரே வகையாக இருந்து வந்திருக்கிறது. இந்தியாவில் சமூக வாழ்க்கையும், மக்களுக்கு அரசாங்கத்தைப்பற்றிய கொள்கைகளும் ஆட்சிமுறை வேறுபாடுகளால் சிறிதும் மாறுபடவில்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சி தொடங்கிய பிறகும் இந்தச் சமூக வாழ்க்கைமுறை மாறுபடாமல் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களுடைய சமூக சமயக் கோட்பாடுகளிலோ, பயிற்சிகளிலோ தலையிடுவதில்லை என்று 1858-ல் விக்டோரியா அரசியின் பேரறிக்கை கூறிற்று. அதனால் அரசாங்கம் தலையிடாமலே மக்கள் தங்கள் நாட்டுப் பழக்க வழக்கங்களினின்றும் வழுவாது வாழ்ந்துவர இயன்றது.
ஆயினும் ஆங்கில ஆட்சிக்கும் அவர்கட்கு முன்பு இந்தியாவில் நடந்த ஆட்சிக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. அதாவது 19 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற் புரட்சியின் விளைவுகள் ஆங்கிலேயர்களோடு இந்தியாவில் வந்தடைந்தன. தொழிற் புரட்சியினால், பொருளாதார நிலைமையும், கைத்தொழில் முன்னேற்றமும், வாழ்க்கைத் தரமும், ஒன்றை யொன்று ஒட்டி மாறுபடுவனவாகையால், இந்திய சமூக, சமய வாழ்க்கைகளில் மாறுபாடுகள் ஏற்படவில்லையாயினும் பொருளாதார அரசியல் நோக்கங்களும் கோட்பாடுகளும் இந்தியர்கள் அதுவரை யறிந்திராத புதுமுறையில் ஏற்படத் தொடங்கின. தங்களுடைய நன்மைக்காகத் துபாஷிகளைப் பயிற்சி செய்யும் நோக்கத்தோடு ஆங்கிலக் கல்வியை மேனாட்டு முறைகளில் இந்தியாவிற் புகுத்தத் தலைப்பட்ட ஆங்கிலேயர்கள் தாங்கள் எதிர்பாராத சில விளைவுகள் அக்கல்வியால் ஏற்படக்கூடும் என்று அறியவில்லைபோலும். இந்தியர் மேனாட்டு முறையில் குடிமை உரிமைகளையும் கடமைகளையும் ஆட்சித் தத்துவத்தையும் பற்றி ஆராயத் தலைப்பட்டனர். மேனாட்டுச் சமூக அமைப்பும், ஜனநாயகக் கருத்துக்களும், சமத்துவம், சுதந்திரம் முதலிய சொற்களின் உட்கோளும் இந்திய நாட்டு மக்களின் மனத்தில் பதியலாயின. இந்திய சமூக அமைப்பு, அதிலும் இந்து சமூக அமைப்பு, பிறப்பை யொட்டிய நால்வகைப் பாகுபாடாக இயங்குகின்றது. இவ்வமைப்பிற்கும் சமத்துவக் கொள்கைக்கும் தொடர்பில்லை. உண்மையில் ஆங்கில ஆட்சியுள்ளும் சமத்துவம் என்பது கொள்கையளவிற்கே யிருந்ததாயினும், பொதுமக்களுக்கு அக்கொள்கையே வாழ்க்கையின் விரும்பத்தகாத சில அமிசங்களை எதிர்க்கப் போதுமான கருவியாயிருந்தது. அரசியல் துறையில் ஆளுவோருக்கும் ஆளப்படுவோருக்கும் பெரிய அளவில் வேற்றுமையிருந்தது; சமத்துவத்திற்கு இடமில்லை; சுதந்திரம் அன்னியர் ஆட்சியில் இருக்க முடியாது. இக்கருத்துக்கள் மக்கள் மனத்தில் கிளர்ச்சியுண்டாக்கின.
மேனாட்டுக் கல்வியின் விளைவாக இந்தியாவில் பலர் சமூகச் சீர்திருத்தங்களை வேண்டுவராயினர். ராஜா ராம் மோகன்ராய் போன்றவர்கள் இந்தியர்களுடைய முன்னேற்றம் ஆங்கிலக் கல்வியை ஏற்பதினாலேயே உண்டாகக்கூடும் என்று கருதினர். "வடமொழிக் கல்வியால் இந்தியர்களுக்கு அறியாமையும் குறுகிய நோக்கங்களும் வளரும்" என்று ராம்மோகன்ராய் போன்றவர்கள் கூறினர். இவர்கள் மேனாட்டார்களைக் காட்டிலும் ஒருபடி முன்னேறிச் சென்று, மேனாட்டுப் பழக்கவழக்கங்களையும் கருத்து முறைகளையும் போற்றினர். இவர்களுக்கு நாட்டுப்பற்று இல்லை என்பது இதன் பொருளன்று. ஆரிய சமாஜம், பிரம சமாஜம் முதலியவற்றை நிறுவியவர்கள் இக்கருத்தால் ஊக்கப்பட்டவர்களே. ஆங்கிலேயர்களும் தாங்கள் அறிந்த அரசியற் கருத்துக்களும் வாழ்க்கை முறைகளும் ஏனையவற்றைக் காட்டிலும் சிறந்தவை என்று கருதுமியல்பினர். தாமஸ் மன்ரோ என்பவர், "முஸ்லிம்கள் மத விஷயங்களில் எவ்வளவு பிடிவாதமுள்ளவர்களோ அவ்வளவு ஆங்லேயர்கள் அரசியல் விஷயத்தில் பிடிவாதமுள்ளவர்கள்" என்று கூறினார். இது பெரும்பாலும் உண்மையே. ஆங்கிலக் கல்வியும் ஆங்கில மரபும் புகுந்துதான் இந்தியாவை நன்னெறியில் செலுத்த முடியும் என்று அவர்கள் கருதினர். சமூகச் சீர்திருத்தம் என்பது இந்தியச் சமூக அமைப்பில் இருப்பதாக அவர்கள் கண்ட சில குறைபாடுகளை யகற்றுவதற்காகச் சிலர் மேற்கொண்ட முயற்சியே. ஆனால் விரைவில் இதனினும் பெரியதொரு இயக்கம் தோன்றலாயிற்று. அதுவே தேசிய இயக்கம்.
1857-ல் உண்டான சிப்பாய்க் கிளர்ச்சி யாதொரு பெரிய அரசியல் கோட்பாட்டினின்றும் எழுந்ததில்லையாயினும் நாட்டிற் சில பகுதியினர்க்கு ஆங்கிலேயர் மீது வெறுப்பு ஏற்படுவதற்கு அது வழிகாட்டிற்று. ஆயினும் 1858ஆம் ஆண்டுப் பேரறிக்கை, பொதுமக்களுக்கு ஆங்கில ஆட்சியில் நம்பிக்கை ஏற்படுத்திற்று. ஏராளமான மக்கள் வாழ்ந்துவரும் பெரிய நாட்டைச் சிலரைக் கொண்டு ஆளவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டதால், போக்குவரத்துச் சாதனங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தோடு சாலை, ரெயில், தபால், தந்தி முதலியனவெல்லாம் ஏற்பட்டது இந்நாட்டு மக்களுக்கும் நன்மைசெய்வதாயிற்று. ஆதலால் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி மக்களால் பொதுவாக விருப்பத்தோடு ஏற்றுக்கொள்ளப்பட்டதென்றே கூறலாம்.
ஆயினும் சிறிய அளவில் தோன்ற ஆரம்பித்த தேசிய உணர்ச்சி விரைவில் பரவலாயிற்று. ஆட்சியில் நாட்டு மக்களையும் கலந்து ஆலோசிக்கவேண்டும் என்றும், ஆணையாளர்கள் எதேச்சாதிகாரம் செலுத்துவதைச் சிறிது தளர்த்திக்கொள்ள வேண்டும் என்றும் முறையிட்டுக் கொள்வதற்குக் காங்கிரசு ஸ்தாபனம் முதன் முதலில் ஏற்பட்டது. இந்த ஸ்தாபனத்தை ஏற்படுத்துவதற்கு ஹியூம், வெடர்பர்ன் முதலிய மேனாட்டார் சிலர் பெருமுயற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் தேசிய காங்கிரசு கமிட்டி நாட்டாருடைய கருத்துக்களை எடுத்துப் பல ரறியக் கூறி, ஆட்சியாளருடைய குறைபாடுகளை அம்பலப்படுத்தும் தொழிலாற்றி வந்தது. அன்றியும் தாதாபாய் நௌரோஜி போன்ற சிலர் இங்கிலாந்திலேயே இருந்துகொண்டு, அங்குப் பார்லிமென்டு அங்கத்தினர் பதவியையும் பெற்று, இந்தியாவின் சார்பில் மிதமான கிளர்ச்சிகள் செய்து வந்தனர்.
இந்திய தேசிய காங்கிரசு முதல் உலக யுத்தம் தொடங்கும் வரையில் பெரும்பாலும் ஒரே கருத்துடைய மக்களது ஸ்தாபனமாக இருந்துவந்தது. சூரத் காங்கிரசில் ஏற்பட்ட பிளவுகள் பிற்காலத்தில் அந்த ஸ்தாபனத்தில் ஏற்படவிருந்த பிளவுகளுக்கு ஒரு முன்னோடியாக அமைந்தன. அந்த ஸ்தாபனம் அழியாமல் அன்னியர் ஆட்சியை எதிர்த்து வந்தது பல திறப்பட்ட அரசியற் கருத்துக்களை யுடையவர்களுக்கும் காங்கிரசு இடங்கொடுத்தது என்பதைக் காட்டுகிறது.
கர்சன் பிரபு வைசிராயாக இருந்த காலத்தில் அவர் எதிர்பாராத விதத்தில் இந்தியாவில் தேசிய உணர்ச்சி வளர்வதற்கு உதவி புரிந்தார். அவருடைய சொற்பொழிவுகளும் அரசியற் செயல்களும் மக்களின் மனத்தை வருத்தும் முறையில் அமைந்தன. அவர் செய்துவைத்த வங்காளப் பிரிவினை வருந்தத்தக்க விளைவுகளை உண்டாக்கிற்று. ஆங்கிலேயர்கள் எல்லோரையும் கர்சன்களாகவே இந்தியர்கள் கருதும் நிலைமை வந்தது. வங்காளப் பிரிவினையால் ஏற்பட்ட மனக் கசப்பே ஆங்கில ஆட்சிக்கு முதற்பகை என்று கூறலாம். மேனாட்டார்களுடைய முறைகளில் நம்பிக்கை மறைந்து, தேசியம் தலையெடுக்கத் தொடங்கிய தருணத்தில் ஏற்பட்ட ரஷ்யா - ஜப்பான் யுத்தம் ஜப்பானுக்கு வெற்றியாக முடியவே, அந்நிகழ்ச்சி மேனாட்டார்கள் தோல்வியறியாதவர்கள் என்னும் ஐதிகத்தை மாற்றிவிட்டது. மேனாட்டாரை அவர்களுடைய ஆயுதங்களைக் கொண்டே வெல்ல முடியும் என்பது தெளிவானவுடன் பொதுவாகக் கீழ்நாட்டுப்பற்று மிகலாயிற்று.
அக்காலத்தில் அரவிந்தர் போன்ற அமிதவாதிகளுடைய, அதாவது புரட்சிக்காரர்களுடைய இயக்கங்களும், கோகலே போன்றவர்களுடைய மிதவாதச் சொற்பொழிவுகளுமே அரசியல் அரங்கில் தென்பட்டன. வங்காளத்தில் புரட்சி இயக்கம் ஓரளவு பரவியிருந்தது; ஹார்டிஞ்சு பிரபுவைக் கொல்ல எத்தனித்தது (1910) இவ்வியக்கத்தின் வேகத்தைக் காட்டும். 1916-ல் அன்னி பெசன்டம்மை ஆரம்பித்து நடத்திய ஹோம்ரூல் இயக்கம் சிறிது ஊக்கமாக நடந்ததாயினும் மக்களின் உள்ளத்தைப் பிணிக்காமல் விரைவில் தளர்ந்தது. பெரும்பான்மை மக்களுடைய ஆதரவின்மையால் அவ்வியக்கங்களும் கருத்துக்களும் எளிதில் அரசாங்கத்தால் அடக்கப்பட்டன.
யுத்தம் முடிந்த பிறகு அரசியல் துறையில் பல நன்மைகள் உண்டாகும் என்று கருதிய மக்கள் 1919 ஆம் ஆண்டு மான்டெகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களால் ஏமாற்றமடைந்தனர். அப்போது ஏற்பட்ட கிலாபத் இயக்கமும் காந்திஜியின் புது அரசியல் கொள்கையைப் பரப்புவதற்கு வசதியளித்தது.
காந்திஜியின் அரசியல் கோட்பாடுகளுக்கும், அவருக்கு முன் அரசியல் துறையில் இந்தியாவில் இருந்தவர்களுடைய கோட்பாடுகளுக்கும் வேறுபாடு அடிப்படையானது, இந்திய அரசியலில் காந்திஜியின் கோட்பாடுகளுக்கு இருந்த ஆதரவு வேறு எந்தக் கோட்பாடுகளுக்கும் எப்போதும் இருந்ததில்லை. ஏனெனில் காந்திஜி எடுத்து விளக்கிய சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை என்னும் எதிர்மறை இயக்கம் முதலியவையும், அவற்றை நடைமுறையில் கொண்டுவருவதற்கு அவர் கையாண்ட நெறிகளும், அவர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை யாவும் இந்தியப் பண்பாட்டிற்கும், இந்தியப் பொதுமக்களின் மனநிலைக்கும் ஏற்ப அமைந்திருந்தன. ஆகையால், பெரும்பான்மைப் பொது மக்களுடைய ஆதரவு அவருடைய இயக்கத்திற்கு ஏற்பட்டதில் வியப்பில்லை. 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பரவியிருந்த லிபரல் கொள்கையை அந்நாட்டு நூல்களைப் படித்துக் கொள்கையளவில் ஆதரித்து வந்தவர்கள் ஆங்கிலப் படிப்புப் படித்த சிலர் மட்டுமே. ஆங்கில மொழியும், ஆணையாளர்களுடைய அரசியல் சமூகக் கோட்பாடுகளும் பொதுமக்கள் வாழ்க்கையில் கலக்கவில்லையாதலின் ஆங்கிலக் கல்வி கற்று, நாட்டுப் பண்பாட்டை மறந்தவர்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் தொடர்பற்றுப் போயிற்று. இது இவ்வாறாக, காந்திஜி நாட்டு மக்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இந்நிலையில் மற்றக் கோட்பாடுகள் எல்லாம் மறைந்து, காந்திஜியின் செல்வாக்கு அரசியலில் ஓங்கியது இயற்கையே. எளிய வாழ்க்கை, கதர்த்திட்டம், கிராம முன்னேற்ற இயக்கம், வார்தாக் கல்வி முறை, அஹிம்சை முதலியவை இந்தியாவிற்கு உகந்த திட்டங்கள் ; வரி கொடாமை, ஒத்துழையாமை, சட்ட மறுப்பு முதலிய இயக்கங்களிலும் மக்கள் சிறிதும் சலியாமல் அவரைப் பின்பற்றியது அவரிடம் மக்களுக்கு இருந்த நம்பிக்கையினாலேயே. அவர் மேனாட்டுப் பிரசார முறையையும் இயக்க முறைகளையும் ஸ்தாபன முறைகளையும் கையாண்டு, ஜனநாயகம், சமத்துவம்,அரசியற் சுதந்திரம், தீண்டாமை யொழிப்பு குழந்தை மண ஒழிப்பு, கைம்பெண் மறுமணம் முதலிய பிற கருத்துக்களையும் மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும்படி செய்தது அவரது வெற்றியின் காரணத்தை விளக்கும். சுருங்கக் கூறின், காந்திஜியின் இயக்கங்கள் மேனாட்டு முறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட உண்மையான இந்திய இயக்கங்களாக அமைந்தன; சமூகத்தின் மேற்புறணியை மட்டும் கீறிவிடாமல், சமூகம் முழுவதிலும் அவர் கருத்துக்கள் பரவலாயின.
ஆயினும் இரண்டு உலக யுத்தங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் காந்திஜியின் கருத்துக்களேயன்றி வேறு சில அரசியற் கோட்பாடுகளும் இந்திய அரசியலில் தோன்றின. ஆஸ்திரியா, ஜெர்மனி முதலிய நாடுகளில் பன்னாள் தங்கி, மார்க்ஸ் முதலிய ஆசிரியர்களுடைய தத்துவங்களில் ஈடுபட்டு நின்ற சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களுடைய மார்க்சிசக் கொள்கைகளும், ரஷ்யாவில் பன்னாள் வாழ்ந்துவந்த எம். என். ராயின் மார்க்சிசக் கொள்கைகளும் இந்திய அரசியலிற் புகுந்த காலம் அதுவே. வகுப்புவாதத்தின் மூலம் அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் மரபு முஸ்லிம் லீக், இந்து மகாசபை முதலியவற்றின் தலைவர்களால் வலுப்பெற்றது. தென்னாட்டில் தோன்றித் தழைத்த பார்ப்பனரல்லாதார் இயக்கம் சமத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு, சமூகச் சீர்திருத்தம் என்னும் நிலையில் இயங்கிற்றாயினும் அதுவும் வகுப்பு வாதத்தை முக்கியக் கருவியாகக் கொள்ளவேண்டியிருந்தது. ஆயினும் பெரும்பான்மை மக்களுடைய ஆதரவு காந்தியத்திற்கே இருந்தது குறிப்பிடத்தக்கது.
1930க்குப் பிறகு இந்திய அரசியலில் தோன்றிய முக்கியமான கருத்துக்கள் சோஷலிசமும் கம்யூனிசமும் ஆம். இவற்றினிடையே கொள்கையளவில் வேறுபாடு இருக்க முடியாதாயினும் செயல் முறையில் வேறுபாடு உண்டு. உலகயுத்த காலத்தில், ஜெர்மனி, இத்தாலி முதலிய நாடுகளில் பரவியிருந்த பாசிசம், ரஷ்யக்கம்யூனிசம், அமெரிக்க முதலாளித்துவ ஜனநாயகம், மேற்கு ஐரோப்பிய நாடுகளின் ஏகாதிபத்தியக் கொள்கை, அக்கொள்கையை எதிர்த்துக் கீழ்நாடுகளில் எங்கும் தோன்றிய தேசியக் கிளர்ச்சி முதலிய கருத்துக்கள் எல்லாம் இந்திய அரசியல் வாதிகளின் மன நிலையை ஊக்கின. யுத்தத்தால் ஏற்பட்ட பொருளாதார நிலைமையும் சோஷலிசக் கருத்துக்களுக்கு ஓரளவு ஆதரவு தேடிற்று. 1947-ல் ஆங்கில ஆட்சி நீங்கியபிறகு காங்கிரசின் முக்கியத் திட்டமாகிய அன்னியராட்சி ஒழிப்புக்கு அவசியமும் நீங்கிற்று; சமூக, பொருளாதாரத் துறைகளில் அரசியல் கட்சிகளின் நாட்டம் சென்றமையின், பொருளாதாரத் திறமையை வற்புறுத்திக் கூறும் சோஷலிசக் கருத்துக்கள் அதிகமாக நிலவத் தொடங்கின.
1948-லிருந்து 1950 வரையில் இந்திய அரசியலமைப்பை நிருணயிக்கப் பணி செய்துவந்த அரசியல் நிருணய சபையார் பிரிட்டிஷ் பார்லிமென்டின் ஜனநாயக முறையைப் பின்பற்றி இந்திய அரசியல் நிருவாகத்தை அமைக்க முற்பட்டமை, பார்லிமென்டு முறையில் அவர்களுக்கிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்திற்று. இவ்வரசியலமைப்புச் சட்டத்தில் சமூக, பொருளாதார அடிப்படை உரிமைகளைப்பற்றிக் கூறியிருப்பது சென்ற ஒரு நூற்றாண்டாகவே இந்தியாவில் ஏற்பட்டுவந்த அரசியற் கோட்பாட்டு வரலாற்றின் பரிணாம் முடிவு என்று கூறலாம்.
அரசாங்க நிலையில் பார்லிமென்டு ஜனநாயக முறை நடைமுறையில் இருந்து வருகிறதென்பது உண்மையேயாயினும், இட சாரிக் கருத்துக்கள், வல சாரிக் கருத்துக்கள் என இருவகை அரசியற் கருத்துக்கள் நிலவத் தொடங்கியுள்ளன. பெரிய அளவில் இப்பிளவு உருக்கொள்ளவில்லையாயினும், 1952 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலை ஓர் அளவையாகக் கொண்டு காண்போமாயின் இப்பிளவு நன்கு ஊன்றியிருப்பது தெரிய வரும். வே.தி.
தமிழ் அரசியற் கருத்துக்கள்: தமிழ் நாட்டில் முற்காலத்தில் நடைபெற்றது முடியரசு. நாட்டில் வாழும் குடிகளுக்கு அரசனே உயிர் என்னும் கருத்தைப் பழைய தமிழ் நூல்களிற் காணலாம். பசியும் பிணியும் பகையும் நீக்கிக் குடிகளைப் பாதுகாக்கும் பொறுப்புடையவன் அரசன். குடிகளைத் துன்புறுத்தும் பகைவர் நாட்டின் உள்ளேயும் இருப்பர்; வெளியேயும் இருப்பர். நாட்டின் உள்ளேயிருந்துகொண்டு, கொலையுங் கொள்ளையுங் கொடுமையும் புரிவோரை அடியோடு அழித்தல் அரசன் கடமை. பசும்பயிர் செழித்து வளர்வதற்காக அதனிடையே முளைக்கும் களையைப் பறித்தெறிதல் போன்று, நாட்டிலே குடிகள் நலமுற்று வாழ்வதற்காக அரசன் கொடியவர்களைக் கொன்று ஒழித்தல் வேண்டும் என்பது வள்ளுவர் கருத்து (திருக் குறள் 550). கள்வர்க்குக் கொலைத்தண்டனை விதித்தல் முறையாகக் கருதப்பட்டது.
இவ்விதம் பகைவரது கொடுமையாலும் பசிநோய் முதலியவற்றாலும் குடிகள் வருந்தாமற் பாதுகாப்பவன் அரசனே யாதலால் காவலன் என்னும் பெயர் அவனுக்கு அமைவதாயிற்று. காவலன் என்பவன், தன்னாலும் தன் பரிசனத்தாலும் பகைவராலும் கள்வராலும் பிறவுயிர்களாலும் உண்டாகும் அச்சத்தை நீக்கி, அறத்தைக் காப்பவன் என்று சேக்கிழார் கூறுகின்றார். (பெரிய. திருநகரச் சிறப்பு: 36). எனவே, மற்றப் பகையைப் போக்கி, அறப்பயனை நாட்டில் விளைப்பவனே காவலன் ஆவான். 'அரசன் அன்று கேட்பான்; தெய்வம் நின்று கேட்கும்' என்பது பழமொழி. மன்னன் அறநெறி தவறாமல் ஆண்டால் மழை தப்பாமல் மழை பெய்யும் என்பது தமிழ் நாட்டார் கொள்கை. மழை பொய்த்தாலும், விளைவுகுறைந்தாலும், அரசனை உலகம் பழிக்கும் என்று புறநானூறு (35) கூறும்.
நீதி செலுத்தும்பொழுது இன்னான் இனியான் என்று அரசன் பார்ப்பதில்லை ; குலத்தையும் குடிப்பிறப்பையும் கருதுவதில்லை. சோழ நாட்டை ஆண்ட மனுச் சோழன் ஒரு பசுவின் கன்றைக் கொன்ற அரசிளங் குமரனைத் தன் அருமை மைந்தன் என்றும் பாராமற் கொன்று நீதியின் செம்மையை நிலைநிறுத்தினான். இச்சோழனைப்போலவே பாண்டியன் நெடுஞ்செழியனும் தான் ஆராயாமற் கோவலனைக் கொன்றதற்காகத் தன்ணுயிரை விட்டான். பாண்டி நாட்டில் "வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோலாக்கியது" என்று புகழ்ந்தான் சேரன் செங்குட்டுவன்.
இத்தகைய மன்னருக்கு நன்னெறி காட்டும் பொறுப்புடையவர்கள் அமைச்சர்களே யாவர். அமைச்சரை உள்ளிட்ட ஐம்பெருங்குழுவினர் அரசாங்கத்தில் பணி செய்தனர். மன்னரே தமக்கேற்ற அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். நாட்டில் வாழும் குடிகளுள் நல்லறிவும் நல்லொழுக்கமும் வாய்ந்தவர்களே பெரும்பான்மையாக அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார்கள் என்பது தெரிகிறது. "அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்" என்று பாண்டியன் நெடுஞ்செழியன் (புறம்.183) கூறுகிறான். இவ்வாறு அரசன் ஆராய்ந்தெடுத்த அமைச்சர்கள், எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருளை ஆராய்ந்து, தெளிந்து, நேர்மையாக மன்னனிடம் எடுத்துரைப்பார்கள் ; அரசன் தம் கொள்கையைக் கொள்ளுவானோ அன்றித் தள்ளுவானோ என்று ஐயுற்று நெஞ்சம் குலைய மாட்டார்கள். இவ்வாறு இடித்துரைக்கும் அமைச்சரைத் துணைக்கொண்ட மன்னனை எவரும் கெடுக்க முடியாது என்றும், அன்னாரைத் துணைக்கொள்ளாத அரசன் நெறியல்லா நெறிச் சென்று கெடுவான் என்றும் வள்ளுவர் கூறுகிறார் (447, 448) அறத்தை அடிப்படையாகக்கொண்ட அரசு நல்லமைச்சரை நாடும்; மறத்தை அடிப்படையாகக் கொண்ட அரசு போலி அமைச்சரைப் பொறுக்கிக் கொள்ளும்.
குடிகளைக் காப்பாற்றும் மன்னனைக் கடவுளுக்கு ஒப்பாகக் கருதினர் தமிழ் நாட்டார். இறைவன் என்ற சொல் கடவுளையும் குறிக்கும், அரசனையும் குறிக்கும். "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்" என்றார் வள்ளுவர். எல்லோருக்கும் அரசனே தெய்வம் என்றார் குமரகுருபர அடிகள்."நாடாளும் அரசனிடம் தெய்வ ஒளி உண்டு; உலகத்தைக் காப்பது அவ்வொளியே" என்பது தமிழ் நாட்டார் கொள்கை. நம்மாழ்வாரும் " திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே " என்றுரைத்தனர். ஆகவே, "அரசனே அச்சந் தீர்ப்பவன்; அறங்காப்பவன்; முறை செய்பவன் ; குறைதீர்ப்பவன்;
அவனே இறைவனாகும்" என்பவை பண்டைத் தமிழர் அரசியற் கொள்கைகள்.தமிழ் நாட்டு அரசியலை அடைவுபடக் கூறும் நூல் திருக்குறளாகும். பொருட்பால் என்னும் பகுதியில் அரசியல், அமைச்சியல், குடியியல் ஆகிய மூன்றும் கூறப்படுகின்றன. முற்காலப் போர் முறைகள் தொல்காப்பியப் புறத்திணை இயலானும் புறப்பொருள் வெண்பா மாலையானும் புலனாகும். சங்க இலக்கியங்களிலும், காவியங்களிலும் அரசியற் கருத்துக்களைப் பரக்கக் காணலாம். ரா. பி. சே.
சீன அரசியற் கருத்துக்கள்: சீனர்களுடைய அரசியற் கருத்துக்கள் அந்நாட்டு அறிஞர் இயற்றிய நீதி நூல்களில் ஆங்காங்கு அடங்கியுள்ளவையே. மேனாட்டு அரசியல் தத்துவத்தைப்போல நன்கு உருவாக்கப்பட்ட ஒரு அறிவுத் துறையாக அக்கருத்துக்கள் அந்நாட்டில் வளரவில்லை. சீனாவில் தோன்றிய கன்பூஷியஸ் (கி.மு. 551-478) சில அறநெறிகளை உறுதி செய்துகொண்டு, அவற்றை அடிப்படையாக வைத்துச் சமூக ஸ்தாபனங்களை நிலை நிறுத்துவது நேரிது என்று கருதினார்; ஆனால் அவர் அரசியற் கோட்பாடுகள் என்று வரையறுத்துக் கூறக்கூடிய கொள்கைகள் ஒன்றையும் வெளியிடவில்லை. இது ஓரளவிற்கு உண்மையே யாயினும், சூத்திரம்போற் செய்யப்பட்ட சிறு வாக்கியங்களில் பொதிந்து கிடக்கும் சீன அறிஞர்களுடைய கருத்துக்கள் முன்பே பாகுபாடு செய்து வகைப்படுத்தப்பட்ட ஒரு தத்துவத்துடன் ஒன்றி இணைந்து நிற்பது தெளிவு. சமூகப் பிரச்சினைகளைத் திருப்திகரமாகவும், அறிவோடும் தீர்த்துவைப்பதே அரசியல் என்று கொள்வோமாயின், சீனாவில் அரசியல் தத்துவத்தைப்பற்றிய கருத்துக்கள் பல காணக்கிடைக்கின்றன.
கி.பி. 1898க்கு முன்பு, லௌட்ஸு (Lao-tse), கன்பூஷியஸ் முதலியவர்கள் சட்டம், அரசாங்கம் என்பவற்றைப்பற்றிக் கூறியுள்ளவையே சீன அரசியல் கருத்துக்கள் எனத்தக்கவையாம். லௌட்ஸுவின் முக்கியமான கொள்கைகளைத் திரட்டித் தாவோக் கொள்கை (Taoism) என்பர். அவர் கொள்கைப்படி. இராச்சியம் குடிகளுடைய விவகாரங்களில் தலையிடக் கூடாது; பலாத்காரத்திற்கு அடிப்படையான போர்ப்படைகளை அமைக்கக்கூடாது. "பெரிய யுத்தங்களுக்குப் பிறகு பஞ்சங்கள் ஏற்படுகின்றன ; நல்ல மனிதன் உறுதியாகச் செயலாற்றுவானே யன்றிப் பலாத்காரத்தால் எக்காரியத்தையும் சாதித்துக்கொள்ள முற்படமாட்டான்" என்னும் கருத்துக்களை அறிவு, ஒழுக்கவிதிகள் (Canons of Reason and Virtue) என்னும் தமது நூலில் அவர் கூறியுள்ளார். ஆயினும் அவர் அடிமைத்தனமோ அன்றி அடக்கமான பழக்கமோ உள்ளவரல்லர். சாத்துவிக எதிர்ப்பு முறையை அவர் ஆதரித்தார். போரிட மறுப்பவனைத் தோற்கடிக்க முடியாதன்றோ? ஆதலால், படைக்கலங்களைக் கொண்டு போரிடாமலிருப்பதே வெற்றிக்கு வழி. மனிதன் இயற்கையிலேயே நற்பண்புடையவன் ; நன்மை மேலோங்கி விளங்கும் ஆட்சி மூலமாகச் சமூக, அரசியல் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்னும் விருப்பம் அவர் கூற்றுக்களில் காணப்படுகின்றது. இதே கருத்தை கன்பூஷியசின் கூற்றுக்களிலும் காணலாம். அரசாங்கம் மக்களை அடக்கி ஒரு வழியில் செலுத்துவதை இவரும் விரும்பவில்லை. சட்டங்களால் ஆட்சி புரிவதிலும் ஒழுக்கத்தால் சீர்திருத்துவதே சிறந்தது ; 'நல்லொழுக்கமுள்ள மந்திரிகள் சொற்கேட்டு ஆளும் நல்லரசனுடைய குடிகள் உதாரணத்தால் சீர்திருந்துவர்' என்றார். லௌட்ஸுவின் கொள்கைகளை மேற்கொண்ட தை-சுங் (Tai-suhg- 627-50) என்னும் அரசர் கொள்ளைகளைத் தடுப்பதற்கான சட்டங்களை இயற்ற மறுத்தார் வரிகளையும் செலவையும் குறைத்து, யோக்கியமான உத்தியோகஸ்தர்களை நியமித்தால் மக்களுக்கு உணவும் உடையும் குறைவின்றிக் கிடைக்கும்; கொள்ளைக் குற்றத்தை அகற்றுவதற்குத் தண்டனைகளைவிட இம்முறையே சிறந்தது என்று அவர் கருதினார். மக்கள் வாழ்க்கையில் அரசாங்கம் தலையிடலாகாது என்ற கருத்து கன்பூஷியஸ் கூற்றுக்களில் காணப்படுகிறது. சமூகக் குறைபாடுகளை நீக்கத் தற்காலத்திலும் இவற்றினும் வேறு சிறந்த வழிகளைக் காண்டல் அரிது.
சீனர்கள் தனித்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். அரசாங்கம் என்னும் ஸ்தாபனத்தில் அவர்களுக்குச் சிரத்தை இல்லை ; தேசிய அரசாங்கம் என்னும் கோட்பாட்டை அவர்கள் முற்றிலும் புறக்கணித்தனர். பொது மக்களின் கருத்து(Public Opinion) என்பது 1912-ல் நடந்த புரட்சிக் காலத்தில் சீனா அதுவரை கேட்டிராத ஒரு கூற்று.அவர்களுடைய தனித்துவத்தில் தனி மனிதனுடைய முயற்சியைப் பற்றிய கருத்து இல்லை; அவர்கள் அரசாங்கத்தின் தலையீட்டையும் மேற்பார்வையையும் வெறுத்தனரேயன்றித் தனி மனிதர்களின் முயற்சியைத் தனி வழிகளில் புதுமுறைகளில் செலுத்த எண்ணவில்லை. குடும்ப நிலையும், மரபும் முக்கியமாகக் கருதப்படும் நாடுகளில் ஆட்சியாளர்களின் மேற்பார்வையில் வெறுப் பேற்படுவது இயல்பு.
சீர்திருத்தக் காலத்திற்கு முன்பு அரசாங்கத்தின் வேலைகளைக் குடும்பம்போன்ற சமூக ஸ்தாபனங்களே செய்தன. குடும்பமும் பல குடும்பங்கள் சேர்ந்த குழுக்களும் சீன சமூகத்தின் அடிப்படையாயிருந்தன. குடும்பத் தலைவர்களும், குழுத் தலைவர்களும் நீதி, பாதுகாப்பு முதலிய அலுவல்களைச் செய்துவந்தனர். குடும்பம், குழு முதலியவற்றின் நன்மைக்காகத் தியாகம் செய்யும் குணம் தனி மனிதர்களிடையே மிகுந்து இருந்ததால் இவ்வித ஆட்சி சாத்தியமாயிற்று. பேச்சு, தொழில் முதலிய சுதந்திரங்கள் அவர்களுக்குமிருந்தன. ஆயினும் அவை அரசியல் அமைப்பின் மூலம் நிறுவப்படவில்லை.
1898-க்குப் பிறகு சீன அரசியற் கருத்துக்களில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. காங்க் -யூ-வேயூ (Kang-Yu- Wei 1858-1927) என்பவர் சட்டங்கள் தேவையில்லை என்னும் பண்டைய கருத்தை மாற்றி, இலவசக் கட்டாயக் கல்வி, 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கெல்லாம் வேலை தருதல், நிலம், ரெயில்வே, தொழிற்சாலை முதலியவற்றைத் தேசிய மயமாக்குதல் முதலிய சோஷலிசக் கருத்துக்களைக் கூறினார். அடுத்தபடியாக அரசியற் கருத்துலகில் முக்கியமானவர் சுன் யாட் சென் (Sun Yat Sen 1867-1925). சீர்திருத்தக்காரரா யிருந்த இவர் அரசன் சீர்திருத்தம் செய்ய மறுத்ததால் புரட்சிவாதியாக மாறினார். இவர் இயற்றிய முக்கியமான அரசியல் நூல்கள் மூன்று ஜனநாயகக் கருத்துக்கள், நாற்பகுதியாட்சி முறை என்பவையாம். பிறர் ஆதிக்கத்தினின்றும் பூரண விடுதலையடைவதும், திபெத்து மக்கள், மங்கோலியர்கள் போன்ற சிறுபான்மையோரின் நலன்களை யுணர்வதும் முதல் ஜனநாயகக் கொள்கையாம். இந்த இன ஜனநாயகம் (Racial Democracy) ஏகாதிபத்தியத்தையோ (Imperialism), குடியேற்ற முறையையோ (Colonialism) பின்பற்றியதன்று; மக்களுடைய சம்மதத்தைப் பொறுத்தது. அரசியல் ஜனநாயகம் இரண்டாவது கோட்பாடாம் ; இது குடியொப்பம், பிரதிநிதி மீட்டல் முதலிய நேர்முகமாகவுமிருக்கலாம், வாக்களிக்கும் உரிமையான மறைமுகமாகவு மிருக்கலாம். அரசியல் ஜனநாயகம் மக்களுடைய சுதந்திரத்தைப் பிற நாட்டாரோ அல்லது நாட்டுமக்களிற் சிலரோ ஆக்கிரமிப்பதிலிருந்து காப்பாற்ற முயலவேண்டும். மூன்றாவது பொருளாதார ஜனநாயகக் கொள்கை. எல்லாருக்கும் நிலத்திற்கு உரிமையுண்டு என்பதும், அரசாங்கம் பல பொருளாதாரச் செயல்களை மேற்கொள்வதன் மூலம் மூலதனத்தை நேர்முறையில் வினியோகிக்கும் என்பதும் இக்கொள்கையாம். நிலங்களைப் பற்றியும் நிலவரியைப் பற்றியும் அரசாங்கம் சட்டங்கள் இயற்றவேண்டும். நிலத்தின் தரத்தை நிருணயித்த பிறகு அதன் மதிப்பை ஒவ்வொரு நிலச்சுவான் தாரும் அரசாங்கத்திற்கு அறிவிக்கவேண்டும். பிறகு அரசாங்கம் விகித முறையில் வரி விதிக்கும். ஏக உரிமையான (Monopoly) தொழில்களை யெல்லாம் அரசாங்கமே எடுத்து நடத்தவேண்டும். திறமையுள்ளவன் புரட்சியைத் தலைமை தாங்கி நடத்தவேண்டுமாயினும் புரட்சிக்குப்பின், சட்ட அடிப்படையிலே ஆட்சி அமையவேண்டும். அவருடைய நாற்பகுதி ஆட்சி முறைப்படி மற்ற அரசாங்க முறைகளில் உள்ளவாறு நிருவாகப் பகுதி, சட்டசபைப் பகுதி, நீதிப் பகுதி என்று மூவகைப் பாகுபாடு இல்லாமல் நிருவாகப் பகுதி, சட்டசபைப் பகுதி, விசாரணை நீதிப் பகுதி, மேற்பார்வை நீதிப் பகுதி என நால்வகைப் பாகுபாடு. இருக்கும். 1920க்குப் பிறகு சீனாவில் கன்பூஷியக் கொள்கைக்குப் பதிலாகச் சுன்யாட்சென் கொள்கை நிலைபெறலாயிற்று. சுன்யாட்செனைச் சீனக் கம்யூனிசத்தின் தந்தை என்று கூறலாம். நவ சீனத் தலைவரான மௌ ட்சு - துங் (MaoTse-Tung) 1940-ல் தாம் வெளியிட்ட புது ஜனநாயகம் என்னும் நூலில் சீனக் கம்யூனிசக் கொள்கைகளை விளக்கிக் கூறியுள்ளார். அவர் கருத்துப்படி சீனக் கம்யூனிசம் புது ஜனநாயகம், சோஷலிசம் என்னும் இரு நிலைகளைக் கடந்து வந்துள்ளது. முதற்படி ஏகாதிபத்தியம், படைமானியம், அதிகாரி ஆட்சி ஆகியவற்றை எதிர்த்துத் தொழிலாளிகளும் விவசாயிகளும் நடத்திய போராட்டம். அரசாங்கம் சாமானிய மக்களுடைய சர்வாதிகாரமன்று; மேற்கூறிய வகுப்பினருடைய ஆட்சியேயாகும். பெரிய பாங்குகளும், கைத்தொழில்களும் இராச்சியத்தின் உடைமையாயிருக்கும். ஏனையவை தனிமனிதர்கள் உடைமையாயிருக்கும். உழுபவர்களுக்கு நிலம் உடைமையாகும் வகையில் நில உரிமை மாற்றியமைக்கப்படும். சீனாவின் நிலைமைக் கேற்ப, மார்க்சிசம் சில மாறுதல்களோடு ஏற்றுக்கொள்ளப்படும். குடும்பம், கல்வி முதலியவற்றின் பெருமையைக் கூறிய கன்பூஷீயசின் கொள்கைக்கு மறுதலையாக தொழிலாளி - விவசாயிச் சர்வாதிகாரத்தை மேலாக்கும் கம்யூனிசம் நிலைபெற்று வருகிறது. பண்டைய கொள்கைகளில் நம்பிக்கை வைத்திருந்த மௌ ட்சு - துங் நாட்டில் ஏற்பட்டுவிட்ட, தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களையொட்டித் தமது கொள்கைகளை அமைத்துக் கொண்டுள்ளார். வீ.வெ.
முஸ்லிம் அரசியற் கருத்துக்கள்: இஸ்லாம் மார்க்கத்தில் காணப்படும் ஆட்சித் தத்துவத்தில் லௌகிகக் கொள்கை, வைதிகக் கொள்கை என்கிற வேறுபாடு இல்லை. இஸ்லாமிய மனித வாழ்க்கையில் எல்லாப் பகுதிகளும் ஒரே துறையாகக் கருதப்படுகின்றன. ஆதலால், இஸ்லாமிய நெறி சமய, அரசியல், சமூக, குடும்ப நிலைகளையெல்லாம் ஒருவழிப்படுத்துவதற்கான விதிகளைக் கூறியுள்ளது. இந்நெறிக்கு 'ஷரியத்' என்று பெயர். அச்சொல் வழி அல்லது நெறி என்று பொருள்படும். ஷரியத் என்னும் சொல் குர் ஆனிலேயே கூறப்பட்டிருக்கிறது. "உங்கள் ஒவ்வொருவருக்கும் நாம் ஒரே தெளிவான வழிகாட்டியுள்ளோம்" என்று குர் ஆன் கூறுகிறது. ஆதலால், ஷரியத் என்பது உலகத்தில் மனிதன் தன் உரிமைகள் என்ன, கடமைகள் என்ன என்று அறிந்து, அதன்படி ஒழுகுவதால் மறுமைக்கான உணர்வைப் பெறுவதற்கு. உதவும் மார்க்கம் என்று ஆகிறது. ஷரியத்தின் விவரங்கள் குர் ஆனில் கூறப்பட்டுள்ளன. அதன்படி இறைவனே உண்மையான அதிபதி ; மனிதன் இறைவனுடைய பிரதிநிதியாகப் பூவுலகத்தில் இருப்பவன். கடவுள் கூறும் ஒழுக்கங்கள் உலகத்திலுள்ள ஜீவராசிகளின் நன்மைகளைக் கருதியவை. அந்த நோக்கங்களை நிறைவேற்றிவைக்கும் தருமகர்த்தாவே மனிதன். ஆகவே, தன் கடமையை நிறைவேற்றுவதுதான் முக்கிய நோக்கமே ஒழியத் தன் உரிமைகளைக் கொண்டாடுவது முக்கிய நோக்கமன்று. “இறைவனே உங்களைத் தன்னுடைய பிரதிநிதியாகப் பூவுலகில் நியமித்துள்ளான் ; உங்களில் சிலர் உயர்வாகவும், சிலர் தாழ்வாகவும் இருப்பது அவன் உங்களைப் பரிசோதிப்பதற்காகவே. அவன் உங்கள் தகுதியை விரைவாகக் கணக்கிட்டுக்கொண்டே யிருப்பான்” என்னும் குர்ஆன் வசனம் மேற்கூறிய கருத்தைத் தெளிவாக்குகின்றது.
இஸ்லாமிய அரசியற் கொள்கைப்படி நிருவாகத் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். அத்தேர்தல் வழியாகத்தான் அவர் தமது அரசுரிமையைப் பெறுகிறார். இவரைக் 'கலிபா' என்பர். சிலர் சமுதாயத்திலுள்ள குறிப்பான ஒருசில முக்கியஸ்தர்களால் நியமிக்கப்பட்டுப் பிறகு பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். இஸ்லாமிய அரசியற் கொள்கைப்படி ஒவ்வொரு முஸ்லிமும் கலிபா ஆதற்கு உரியர். கலிபா சட்டப்படியும், நீதி தவறாமலும் அரசாளும்வரையில் குடிமக்களின் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கலாம். ஆயினும் அவர் கொடுங்கோலராய்விட்டால், அவரை நீக்கிவிடும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு.
இஸ்லாமியக் கொள்கைப்படி, குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஷரியத் விதிகளுக்கு விரோதமாக நடந்துகொள்ள நபிநாயகம் உட்பட யாருக்கும் அதிகாரமில்லை. நிருவாக முறையில் எழும் சில சிறு விவரங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் ஷரியத்தில் விளக்கம் இல்லாமலிருக்கலாம்; இவற்றை இஸ்லாமிய மார்க்க நிபுணர்கள் ஆராய்ந்து முடிவு செய்வர். இஸ்லாமிய விதிகளுக்குப் பொருள் கூறுவதற்கும், அவற்றை நிருணயிப்பதற்கும் இஸ்லாமியநெறியில் தேர்ந்த ஒவ்வொரு முஸ்லிமிற்கும் உரிமை உண்டு.
ஆகையால், இஸ்லாமிய அமைப்பு ஒரு ஜனநாயகமாக ஆயிற்று எனலாம். அதில் சாதி, மதம், இனம், இடம், மொழி முதலிய வேறுபாடுகள் இல்லை. ஆதலால் இஸ்லாமிய அரசியல் நிலைமை ஒரு தீர்க்கமான நிலைமையாய் இருப்பதுடன் இதற்கு மாறான விஷயங்களுக்கு இடம் கொடுக்காது. இவ்வித சமத்துவ ஜனநாயக்மாய் இருப்பதனால் ஒருவரை ஒருவர் மோசம் செய்வதைத் தடுப்பதோடுகூட நீதியையும், அறநிலையையும், ஒழுக்க நெறியையும் அது கற்பிக்கிறது. இவ்வித அரசியல் நிலை உலகமெங்கும் பரவ இடம் இருக்கிறது. ஆனால், அது பலவந்தமாகச் சர்வாதிகார ஆதிக்கத்தைப்போல இருக்க முடியாது. ஏனெனில், மனித வாழ்க்கையில் எல்லாப் பகுதியையும் அது சீர்திருத்தம் செய்ய முயல்கிறது. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்கும் அவனுடைய உரிமையைப் பூரணமாக அளிக்கும்படி செய்கிறது. கருத்து வேறுபாடுகளையும் தாராளமாகத் தெரிவிக்க இடம்
கொடுக்கிறதினால் சர்வாதிகாரத்திற்கு அறவே இடம் கொடுப்பதில்லை. மேலே சொன்ன கருத்துக்களை முதற் கலிபாவான அபூபக்கர் கீழ்க்கண்டவாறு நன்கு விளக்குகிறார் :" மக்களே, நான் உங்கள் எல்லோரையும் விட மேலானவனாக இல்லாவிட்டாலும், எனக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். நான் நல்லவனாக நடந்து கொண்டால் எனக்கு உதவி செய்யுங்கள். நான் தவறாகச் செய்வேன் என்று தெரிந்தால், நல்ல வழியைக் காட்டுங்கள். உங்களிடையே தளர்ச்சியுள்ளவன் என் கண்முன் பலசாலியாகத் தெரிகிறான்; கடவுளின் சம்மதம் இருக்குமேயானால் அவனுடைய உரிமையை அவனுக்குச் செலுத்துவேன். உங்களிடையே பலசாலியாகவுள்ளவன் என் கண்முன் தளர்ச்சியுள்ளவனாகத் தெரிகிறான். கடவுளின் சம்மதம் இருக்குமானால் அவனிடமிருந்து கிடைக்கவேண்டியதை நான் கட்டாயமாக எடுத்துக்கொள்ளுவேன். நான் இறைவனுடைய கட்டளைகளுக்கும், நபி அவர்களின் உபதேசங்களுக்கும் கீழ்ப்படிந்து நடக்கும் காலம்வரை எனக்கும் நீங்கள் கீழ்ப்படியுங்கள். நான் இவற்றிற்கு விரோதமாக நடந்தேனேயானால் எனக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டிய அவசியம் இல்லை" (ஆமீர் அலியின் சாரசன் வரலாற்றுச் சுருக்கம் பக். 21-29). சை. அ. வா. பு.