கலைக்களஞ்சியம்/அருள் யாத்திரை

அருள் யாத்திரை(Pilgrimage of Grace) இங்கிலாந்தில் VIII-ம் ஹென்ரி மன்னன் ஆட்சியில் லிங்கன்ஷயர், யார்க்ஷயர்களில் இருந்த பொதுமக்களின் ஒரு கிளர்ச்சி. இக்கிளர்ச்சி சீர்திருத்தங்களை வேண்டி எழுந்ததன்று; சமயச்சீர்திருத்தங்களை எதிர்த்துக் கிளம்பியது. இது முக்கியமாகத் தாமஸ் கிராம்வெலின் போக்கைக் கண்டித்து எழுந்த ஒரு கிளர்ச்சி. லௌத் என்னுமிடத்தில் 1536 அக்டோபர் முதல் நாள் தொடங்கிய இக்கிளர்ச்சி விரைவில் நாடு முழுவதும் பரவிற்று. சபோக் (Suffolk) பிரபுவும், VIII-ம் ஹென்ரியும் சில நாட்களில் இக்கிளர்ச்சியை அடக்கிவிட்டனர். 1537 மார்ச்சில் இக்கிளர்ச்சிக்குக் காரணமாயிருந்த தலைவர்கள் மரண தண்டனை அடைந்தனர். ராபர்ட் ஆஸ்க் என்பவர் யார்க்ஷயரில் தொடங்கிய கிளர்ச்சி சிறிது அதிக வலுப்பெற்றிருந்தது. இதைப் 'பொது நன்மை அருள் யாத்திரை' என்று அவர்கள் கூறினர். இக்கிளர்ச்சியும் விரைவில் அடக்கப்பட்டுத் தலைவர்கள் மரணதண்டனை அடைந்தனர்.