கலைக்களஞ்சியம்/அறிதிறன்‌

அறிதிறன்‌ (Intelligence) : சூழ்கிலைக்கேற்றவாறு ஓர்‌ உயிர்‌ தன்னைத்‌ தக அமைத்துக்‌ கொள்ளும்‌ திறமையை உயிரியலார்‌ அறிதிறன்‌ எனக்‌ குறிப்பிடுகிறார்கள்‌. தன்னைச்‌ சுற்றிக்‌ கூடு கட்டிக்கொள்ளும்‌ பட்டுப்‌ புழுவானது கூடே தேவையில்லாத சூழ்நிலையிலும்‌ இச்செய்கையில்‌ ஈடுபடுகின்றது. ஆகையால்‌ இயல்பூக்கமே இதன்‌ செயலிற்கு அடிப்படையாக உள்‌ளது எனத்‌ தெளிவாகிறது. ஆனால்‌ ஓரிடத்தில்‌ கூடுகட்டத்‌ தொடங்கும்‌ பறவை தனக்குப்‌ பகை விலங்கு யாதாயினும்‌ அருகில்‌ இருப்பதைக்‌ கண்டு விட்‌டால்‌, அதைவிட்டுத்‌ தீங்கற்ற வேறோரிடத்திற்குச்‌ சென்று, அங்கே கூடுகட்டத்‌ தொடங்குகிறது. இச்‌ செய்கையில்‌ ஆரம்ப நிலையிலுள்ள அறிதிறனைப்‌ பார்க்கிறோம்‌. மனிதனைத்‌ தவிர மற்ற விலங்குகளில்‌ இத்தகைய அறிதிறன்‌ வளர்ச்சியை வாலில்லாக்‌ குரங்கினிங்‌களிடம்‌ மிகுதியாகக்‌ காண்கிறோம்‌. குரங்கு, யானை, நாய்‌, பூனை முதலிய விலங்குகளின்‌ செய்கைகளிலும்‌ ஒரு நோக்கம்‌ இருப்பதை அறிய முடிகிறது. இது அனுபவத்தினாலும்‌ பழக்கத்தினாலும்‌ மட்டும்‌ ஏற்படுவதன்று. இவற்றின்‌ பல நடத்தைகளின்‌ இடையே காணப்படும்‌ தொடர்புகள்‌ இவற்றிற்கு இயற்கையான அறிதிறன்‌ உண்டு எனக்‌ காட்டுகின்றன.

அறிதிறனுக்கு உயிரியலில்‌ வழங்கும்‌ வரையறை உளவியலிற்குப்‌, போதுமானதன்று. மனித உள்ளத்தை ஆராய்கையில்‌ இவ்வளவு தூலமான வரையறை அதிகப்‌ பயன்‌ தராது. உளவியலார்‌ பலரும்‌ அறிதிறனைப்‌ பலவாறு வரையறுத்திருக்கின்‌றனர்‌. கருத்துப்‌ பொருள்‌ (Abstract) சிந்தனையைச்‌ செய்யும்‌ திறமை அறிதிறன்‌. என்‌று டெர்மன்‌ என்பவர்‌ வரையறுத்தார்‌. அறிதிறன்‌ என்பது ஏற்கும்‌ திறன்‌ என்று உட்ரோ விளக்கினார்‌. சூழ்நிலைக்கேற்றவாறு தன்னைத்‌ தக அமைத்துக்‌ கொள்‌ளலே அறிதிறன்‌ என்பது கால்வின்‌ கூறிய வரையறை. சிக்கலான பல தூண்டல்கள்‌ ஒன்றுகூடி. நடத்தையில்‌ ஒருமித்த பயனை விளைவிக்கும்‌ உயிரியல்‌ அமைப்பே இது எனப்‌ பீட்டர்சன்‌ என்‌ற அறிஞர்‌ கருதினார்‌. அறிதிறன்‌ சோதனைகளுக்குக்‌ காரணமாக இருந்த பிளே என்பவர்‌ அறிதிறன்‌ என்பதில்‌ உட்கோள்‌ (Comprehension), ஆக்கத்திறன்‌ (Inventiveness) விடரமுயற்சி, ஆராய்ந்து பகுத்தல்‌ ஆகியவை அடங்கும்‌ என்‌று கருதினார்‌.

இந்த வரையறைகளில்‌ எதுவுமே முழுதும்‌ திருப்திகரமான தன்‌று. இவை தெளிவற்றவையும்‌, முரணானவையும்‌ ஆகும்‌. ஆகையால்‌ இதை வரையறுப்பதையே விட்டுவிட்டு, அறிதிறனை அடிப்படையாகக்‌ கொண்‌டவை எனக்‌ கருதப்படும்‌ சில செய்கைகளினால்‌ அறியப்‌படும்‌ ஓர்‌ அமிசமே என்று இதைக்‌ கொள்வது சிறந்தது. எனக்‌ கருதப்படுறது. ஒவ்வொருவனுக்கும்‌ பலவேறு அளவுகளில்‌ இத்திறமை உள்ளது, சுத்றுப்புறத்திற்கு ஏற்றவாறு அவனிடத்தில்‌ தோன்றும்‌ எதிர்வீனைகளின்‌ தன்மையினால்‌ இத்திறமை வெளிப்படுகறது.

அறிதிறன்‌ சோதனைகளில்‌ ஒருவர்‌ வாங்கும்‌ மார்க்கு வயதையோட்டி மாறுவதால்‌, இது இளமையில்‌ விரைவாகவும்‌, பின்னர்க்‌ குறைவாகவும்‌ முதிர்ச்சி யடைந்த, கடைசியாக மாறாத நிலையை அடைகிறது எனக்‌ கருதப்‌பட்டது. நரம்பு மண்டலத்தின்‌ அபிவிருத்தியாலும்‌ முதிர்ச்சியாலும்‌ கற்கும்‌ திறன்‌ வேறுபடுகிறது. அறிதிறனின்‌ இயக்கத்தை இது பாதிக்கிறது. வயதானபின்‌ மூளையின்‌ புறணி சிதைவடையத்‌ தொடங்கும்‌.வரை இது மாறுவதில்லை. ஆனால்‌ இளமையிலிருந்து முதுமைவரை அறிதிறனில்‌ உண்மையான மாற்றம்‌. நிகழ்வதில்லை என்பதே தற்கால உளவீயலாரித்‌ பெரும்‌பான்மையோரது கருத்து.

அறிதிறன்‌ குறைவான ஒருவனது வாழ்க்கை உடனடியான காலத்தைமட்டும்‌ ஒட்டியதாக இருக்கும்‌. உயர்ந்த அறிதிறன்‌ கொண்டவர்களது வாழ்வு கடந்த காலத்துடனும்‌ வருங்காலத்துடனும்‌ தொடர்புகொண்டிருக்கும். அவர்கள் தமது செய்கையின் விளைவு கடந்த காலத்தையும் வருங்காலத்தையும் ஒட்டித் தம்மையும் தம்முடன் தொடர்புள்ளவர்களையும் எவ்வாறு பாதிக்கும் எனப் பகுத்தறிய முடிகிறது. அறிதிறன் என்பது பாரம்பரியத்தைப் பொறுத்துப் பிறவியில் தோன்றும் அமிசம் என்பதே பெரும்பான்மையோரது கருத்து. அறிதிறனை மூன்று கோணங்களிலிருந்து ஆராய்ந்திருக்கிறார்கள். குழந்தைப் பருவத்திலிருந்து முதுமைவரை அது எவ்வாறு அபிவிருத்தி அடைகிறது என்று சோதனைகளின் வாயிலாக அறிய முயன்றிருக்கிறார்கள், ஒவ்வொருவருடைய திறமைகளிலும் உள்ள வேறுபாடுகளை ஆராயும் சோதனைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளையின் எப்பகுதிகள் அறிதிறனின் சிறப்பான இயக்கங்கள் நடைபெறக் காரணமாக உள்ளன என அறிய முயன்றிருக்கிறார்கள்.

புளௌரன்ஸ் (Flowrens) என்ற அறிஞர் சென்ற நூற்றாண்டில் பெருமுளை முழுதுமே அறிதிறன் இயக்கத்தில் ஈடுபடுகிறது என வாதித்தார். ஆனால் தற்காலத்தில் விலங்குகளைக் கொண்டு செய்யப்பட்ட சோதனைகளிலிருந்து சிந்தனைத் திறன்போன்ற பண்புகள் பெருமூளையின் முன்பகுதிகளுடன் நெருங்கிய தொடர்புள்ளவை எனத் தெளிவாகியுள்ளது. புறணியின் வேறு சில பகுதிகளில் பழுது நேர்ந்தால் மொழியைக் கற்குந்திறன், இடவெளியை மதிப்பிடும் திறன் முதலியவை கெடுகின்றன. ஆகையால் புறணியின் சில பகுதிகளின் தன்மை மானிடனது திறமைகளை முடிவு செய்கிறது என நம்ப இடமுள்ளது.

அறிதிறன் சோதனைகள்: பண்டைக் காலமுதல் மக்கள் ஒருவர்க் கொருவர் அறிதிறனை மதிப்பிட்டே வந்துளர். சிலரை மந்த அறிவினர் என்றும், சிலரைச் சாமர்த்தியசாலிகள் என்றும், சிலரை மேதைகள் என்றும் கூறி வந்திருக்கிறார்கள். இப்பொழுதும் பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களைச் சோதனை செய்து, அவர்களுடைய அறிதிறனை அளவிட்டு வருகிறார்கள். நமக்குத் தோன்றியவாறு மதிப்பிடுவதைவிட இவ்வாறு ஆசிரியர்கள் மார்க்குகள் கொடுத்து மதிப்பிடுவது ஓரளவு மேலானதேயாகும். இவ்வாறு அளந்து அறியும் முறையை மிகவும் துல்லியமானதாகச் செய்கின்றது உளவியற் சோதனை முறை. அது மனிதனுடைய அறிதிறனை அளப்பதற்குப் பல சோதனைகளை வகுத்துள்ளது.

அறிதிறன் என்பது அளந்துபார்க்கக்கூடிய பௌதிகப் பொருளன்றே, அதை எப்படி அளப்பது என்ற ஐயம் எழக்கூடும். அப்படியானால் சூடும் மின்சாரமும் பௌதிகப் பொருள்கள் அல்லவே, அப்படியிருந்தும் அவற்றைப் பௌதிகர்கள் துல்லியமாக அளக்கின்றார்கள் அல்லவா? சூடு என்பதும், மின்சாரம் என்பதும் இவை என்று விஞ்ஞானிகள் அறியார். ஆனால் அவற்றால் ஏற்படும் விளைவுகளைக்கொண்டு அவற்றை அளக்கின்றனர். அதுபோலவே அறிதிறனையும் அதன் விளைவுகளைக்கொண்டு அளக்கலாம். அதாவது அறிவுடன் கூடிய நடத்தையை அளப்பதன் வாயிலாக அறிதிறனை அளந்து வருகிறார்கள். ஆதலால் பௌதிகர் சூட்டையும் மின்சாரத்தையும் அளந்து கூறுவது எத்துணை நம்பத்தக்கதோ, அத்துணை உளவியலார் அறிதிறனை அளந்து கூறுவதும் நம்பத்தக்கதேயாம். காரியத்தை வைத்துக் காரணத்தை அளக்கும் தத்துவத்தையே இருவரும் கையாள்கிறார்கள்.

அறிதிறனை அளப்பதற்கு வேண்டிய சோதனைகளை வகுத்த பெருமை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த பிரெஞ்சு உளவியலரான ஆல்பர்ட்பினே என்பாரைச் சாரும். அவர் பள்ளிச் சிறுவர்களை அவர்களுடைய அறிதிறனுக்குத் தக்கவாறு பிரித்து வைத்துப் பாடம் கற்பிக்க வேண்டியவராக இருந்தார். குழந்தை வளர வளர, அதன் உடல் வலிமையும் வளர்ந்து வருகின்றது என்பது போலவே அதன் அறிதிறனும் வளர்ந்து வரும் என்று எண்ணினார். இந்தக் கருத்தை ஆதாரமாக வைத்து, நூற்றுக்கணக்கான குழந்தைகளை மிகுந்த கருத்தோடு கவனித்துப் பள்ளிச் சிறுவர்களுடைய மூளையை அளப்பதற்கான சோதனைகளை 1905-ல் வெளியிட்டார். அச்சோதனைகள் மிகுந்த பயனுடையவாக இருந்தமையால் அவற்றைப் பல நாட்டு உளவியலார்களும் கல்வியியலார்களும் தத்தம் நாட்டு நிலைமைக்குத் தக்கவாறு மிகுந்த ஆவலுடன் பயன்படுத்திக்கொள்ளலாயினர். அதன்பின் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கிடைத்த அனுபவங்களின் பயனாக அச்சோதனைகள் பல திருத்தங்களைப் பெற்றன.

பிரிட்டிஷ் உளவியலார் சிரில் பர்ட்டு என்பவர் திருத்தியமைத்துக்கொண்ட சோதனைகளுள் சில வருமாறு:

1. மூன்று வயது குழந்தைகட்குரிய சோதனைகள் :
அ. மூக்கு, கண், வாய் இவற்றைக் காட்டல்.
ஆ. இரண்டு நிலை எண்களைப் படிக்கக் கேட்டபின் சொல்லல்.
இ. காட்டப் பெற்ற மூன்று சாதாரணமான பொருள்களின் பெயர்களைக் கூறுதல்.

2. ஆறு வயது குழந்தைகளுக்குரிய சோதனைகள்:
அ. வரிசையாக வைக்கப்பெற்ற 13 நாணயங்களை எண்ணுதல்.
ஆ. வாரத்திலுள்ள கிழமையின் பெயரைக் கூறுதல்.
இ. சாதாரணமான பொருள்களின் பெயர்களுக்கு விளக்கங் கூறுதல்.

3. பன்னிரண்டு வயது சிறுவர்களுக்குரிய சோதனைகள்:
அ. தாறுமாறாக எழுதிய வாக்கியங்களை மனத்திலேயே சரியாக அமைத்தல்.
ஆ. படங்களை விளக்குதல்.

பினே மூன்று வயது முதல் 16 வயதுவரையுள்ள குழந்தைகட்கே சோதனைகள் வகுத்திருந்தார். ஏனையோர் ஒரு மாதக் குழந்தை முதல் 20 வயதுவரையும் கூட வகுத்துளர்.

அறிதிறன் சோதனைகளை விருத்தி செய்யவும் திருத்தி அமைக்கவும் தக்க வாய்ப்புக்கள் கிடைத்தன.

முதலாவது உலகப் போர் சமயத்தில் அமெரிக்கர்கள் எதையும் விரிந்த அளவில் செய்யக்கூடியவர்களா யிருந்தபடியால் ஒரே வேளையில் மிகப் பலருடைய அறிதிறனைச் சோதிக்கத் தகுந்த சோதனைகளை வகுத்தனர். சாதாரணமான காலத்தில் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சோதிக்க முடியும். ஆனால் போர் வேளையில் அவசரமாகப் பலரை ஒரே வேளையில் சோதித்து அறியவேண்டிய நிலைமை உண்டாகும். அதற்குத் தனிச் சோதனைகள் போதா, குழுச் சோதனைகளே (Group tests) தேவை. பினேயின் சோதனைகள் தனிச் சோதனைகள்; அமெரிக்கச் சேனைச் சோதனைகள் குழுச் சோதனைகள்.

சில வேளைகளில் நாம் சோதிக்க விரும்பும் மக்களுக்குச் சோதனைகளை அமைத்துள்ள மொழி தெரியாமலிருக்கலாம். மேலும், கிராம மக்களுக்கு எளிதில் எட்டாத உலக விவகாரங்களைப்பற்றியும் சோதிக்கவேண்டிய தேவை ஏற்படலாம். இத்தகைய வேளைகளில் பயன்படுத்தப்பெறும் சோதனைகள் “செயல் சோதனைகள்” (Performance tests) என்று பெயர் பெறும். இத்தகைய சோதனைகளின் வாயிலாகச் சோதிக்கப் பெறுபவர் எதையும் வாய் மொழியாகச் சொல்ல வேண்டியதில்லை, செய்து காட்டினால் போதும். உதாரணமாகப் பல வடிவக் கட்டைகளை அவற்றிற்கேற்ற துவாரங்களில் இடுதல், ஒரு படத்தின் துண்டுகளைச் சேர்த்து முழுப்படமாக்கல், படப்பிதிர்களுக்கு விளக்கம் காணுதல், மனிதனுடைய உருவத்தை எழுதுதல் போன்ற செயல்களைச் செய்யும் சோதனைகள் நடைபெறும்.

இதுகாறும் கூறிய சோதனைகள் அனைத்தும் பொது அறிதிறன் சோதனைகளாகும். இவை தவிரச் சிறப்பு இயற்கைத் திறமைச் சோதனைகள் என வேறு வகைச் சோதனைகளும் உள : உதாரணமாக இசை, பேச்சு, கணிதம் போன்ற சிறப்பு இயற்கைத் திறமைகளைக் காணக்கூடிய சோதனைகள். இந்த இருவகைச் சோதனைகளும் பிறவித் திறத்தையே அளந்து கூறக் கூடியவை. கல்வி வாயிலாகப் பெறும் அறிவை அளந்து கூறக்கூடிய சோதனைகளையும் உளவியலார் வகுத்துளர். இவை அறிவுச் சாதனைச் சோதனைகள் (Achievement tests) எனப் பெயர்பெறும்.

அறிதிறன் சோதனைகள் எழுத்து வாசனையுள்ளவர்க்குரியவை யாயினுஞ்சரி, எழுத்து வாசனையில்லாதவர்க்குரியவை யாயினுஞ்சரி, அவற்றிற்குப் பல கிளைச் சோதனைகள் (Sub-tests) உண்டு.

எழுத்து வாசனையுடையவர் சோதனைகளுள் சில:
1. கீழ்க்கண்ட சொற்களை வாக்கியமாக அமைத்து, அதன் பொருள் சரியா தவறா என்று கூறுக:
முட்டைகள் வாழ்கின்றன கிளிகள் உண்டு. சரி-தவறு.
2. கீழ்க்கண்ட இணைச் சொற்கள் ஒரே பொருளுடையனவா அல்லது வேறு பொருளுடையனவா?

வணக்கம்சலாம் ஒன்றுவேறு
திருட்டுபுரட்டுஒன்றுவேறு
பினே சிறப்பாக ஆற்றிய உதவி, மன வளர்ச்சி வயது (Mental age) என்று ஒன்றுளதாகக் காட்டியதாகும். எட்டு வயது குழந்தை, பத்து வயது குழந்தைக்குரிய சோதனையில் வெற்றிபெறுமானால் மனவளர்ச்சி வயது பத்தாகும். பல குழந்தைகளைச் சோதித்து, ஒவ்வொரு வயதுக்கும் தக்க சோதனைகள் வகுக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் அறிதிறனை அறிதிறன் ஈவு (Intelligence quotient) என்பதன் வாயிலாக மதிப்பிடுகிறோம். அறிதிறன் ஈவு என்பது அறிதிறன் வயதை ஆண்டு வயதால் வகுத்து வரும் பின்னமேயாம். அறிதிறன் ஈவு பின்னமாக இருப்பதைவிட முழு எண்ணாக இருந்தால் சொல்வதற்கு எளிதாக இருக்குமாதலால் அந்தப் பின்னத்தை நூறால் பெருக்குவார்கள். அந்தப் பெருக்குத் தொகையே அறிதிறன் ஈவு (அ . ஈ.) ஆகும். இந்தப் பயன்படு கருத்தைக் கூறியவர் ஸ்டெர்ன் என்னும் ஜெர்மன் உளவியலார் ஆவர். ஆகவே எட்டு வயது குழந்தை, பத்து வயது குழந்தையின் அறிதிறன் சோதனைகளில் வெற்றி பெறுமாயின் அதன் அ. ஈ. X 100 அல்லது 125 ஆகும். சராசரி அறிதிறன் ஈவை 100 என்னும் எண்ணால் குறிப்பிடுவார்கள். அதனால் 100க்கு மேற்பட்டதானால் அறிதிறன் கூடியதாகவும், 100க்குக் கீழ்ப்பட்டதானால் அறிதிறன் குறைந்ததாகவும் கொள்ளப்பெறும்.

அறிதிறன் ஈவை வைத்து மக்களைக் கீழ்க்கண்டவாறு பிரிப்பர் :

அ.ஈ.
மேதை (Genius) 140க்கு மேல்
கூரறிவுடையோன் (Superior) 120 140
சமநிலை (Normal) 90 110
சமநிலைக்குக் கீழ் (Low normal) 80 90
குறை அறிவுடையோன் (Moron) 50 70
மிகக் குறைந்த அறிவுடையோன் (Imbecile) 25 50
பிறவி முட்டாள் (Idiot) 0 25

ஒருவனுடைய அறிதிறன் பெரும்பாலும் மாறுவதில்லை. ஒரு குழந்தையை இரண்டாவது வயதில் சோதிப்பர். அதன் அ.ஈ.100. அது ஆண்டு வயதுப் படியே அறிதிறன் வயதுள்ள சராசரிக் குழந்தை. அதனால் எப்போது சோதித்தாலும் அதன் அ. ஈ. 100 ஆகவே இருந்துவரும்.

ஒருவர் வாழ்வில் வெற்றி பெறுவது அறிதிறன் ஈவை மட்டும் பொறுத்ததன்று. அவருடைய சிறப்பு ஆற்றல்களையும் (Special abilities) பொறுத்ததாகும். அறிதிறன் ஈவு சிறப்பு ஆற்றல் இரண்டையும் பெருக்கிய தொகையை வைத்தே அவருடைய வெற்றியை மதிப்பிடவேண்டும். அறிதிறன் ஈவு மாறாதிருக்கும். ஆனால் சிறப்பு ஆற்றல் நாளுக்குநாள் மிகுதியாகக் கூடும். அதனால் நாளடைவில் அவர் அதிக வெற்றி அடையலாம்.

எவரும் தம்முடைய அறிதிறன் ஈவைப் பெரிதாகும்படி செய்ய இயலாதாயினும், அது குறைந்துவிடாதவாறு கவனித்துக் கொள்ளுதல் இன்றியமையாததாகும். அதற்கு இடைவிடாப்பயிற்சியும், கண்ணுங் கருத்துமாயிருத்தலும், விடாமுயற்சியும் தேவையாகும்.

அறிதிறன் ஈவு மிகுவதில்லை என்பதை முதன்முதல் கண்டவர் அமெரிக்க உளவியலாரான டெர்மன் என்பவராவர். மிகும்படி செய்ய முடியுமா என்று அமெரிக்காவிலுள்ள அயோவாப் பல்கலைக் கழகத்து அறிஞர்கள் பல சோதனைகள் செய்தனர். ஆனால் சிலர்க்குச் சிறிதளவு மிகுந்ததாகத் தோன்றினும், மிகும்படி செய்யமுடியும் என்று உறுதியாகக் கூறக்கூடிய நிலைமை இன்னும் உண்டாகவில்லை.

அறிதிறன் சோதனையால் கண்ட இரண்டாவது உண்மை, கல்வியறிவுகொண்டு தொழில் செய்பவர்களின் குழந்தைகளுடைய சராசரி அ.ஈ. பெரியதாக இருப்பதாகும். அக்குழந்தைகட்கு அடுத்த படியிலுள்ளவர்கள் அலுவலகத் தலைவர்கள், கணக்கர், வியாபாரிகள், திறமைபெற்ற தொழிலாளர் ஆகியோரின் குழந்தைகள். திறமை பெறாத தொழிலாளர் மக்கள்தாம் அறிதிறன் மிகக் குறைந்தவர்கள்.

அறிதிறன் சோதனையாளர்கள் கண்ட மூன்றாவது உண்மை, மக்களிற் பெரும்பாலோர் சராசரி அறிதிறன் உடையவர் என்பதும், அறிதிறன் மிகுந்தோர் எத்தனை பேர் உளரோ அத்தனை பேருக்குச் சமமான எண்ணிக்கையுடைய குறைந்தோர் உளர் என்பதுமாகும்.

இந்தச் சோதனைகள் வாயிலாக அளந்து காணும் மன ஆற்றல்தான் அதாவது அறிதிறன்தான் யாது? அறிதிறன் என்பது திறமையாக எண்ணமிடுதலைப் பொறுத்தது; திறமையாக எண்ணமிடுதல் கற்றுக் கொள்ளவும், நினைவில் வைத்துக் கொள்ளவும், சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்துகொள்ளவுமுள்ள ஆற்றலைப் பொறுத்ததாகும். அறிதிறன் முக்கியமல்லாதவற்றை நீக்கிவிட்டு, இன்றியமையாதவற்றையே கருதும் ஆற்றலையும், அருமையான தொடர்புகளைக் காணும் ஆற்றலையும், தாராள மனப்பான்மையுடன் கருதும் ஆற்றலையும்கூடப் பொறுத்ததாகும். அனைத்திலும் மிகுதியாக மிகக் குறுகிய கால அளவில் கருதவும், செயல் புரியவும் கூடிய ஆற்றலைப் பொறுத்ததாகும். அறிதிறன் என்பது ஏதோ மனிதனுடைய மூளையில் பதுங்கிக்கிடக்கும் பண்பு அல்லது பொருளன்று; அறிதிறன் பற்றிய மேற்கூறிய பண்புகள் அனைத்தும் மனிதனுடைய நடத்தையின் பண்புகளேயாம்.

அறிதிறன் சோதனைகளுள் பெரும்பாலானவை பலதிறப்பட்டனவாக இருப்பதால், தொடர்புகாணும் புள்ளிவிவர முறையைப் பயன்படுத்தி, அறிதிறன் என்பதில் வேறு வேறு ஆற்றல்கள் உளவா என்பதையும், அவற்றை வேறு வேறாகப் பிரித்துக் கூற இயலுமா என்பதையும் அறிஞர்கள் ஆராய்ந்துளர். இந்த ஆராய்ச்சித் துறையில் தலையாயவர் ஸ்பீயர்மென் என்னும் ஆங்கிலேயரும், தர்ஸ்ட்டன் என்னும் அமெரிக்கருமாவர். அறிதிறனில் ஒரு பொது அமிசமும் பல்வேறு சிறப்பு அமிசங்களும் இருப்பதாக ஸ்பீயர்மென் கண்டார். அறிதிறனை ஆய்ந்தால், ஆராயும் ஆற்றல், விரைவில் காண்டல், இலக்கத்திறன், மொழித்திறன் போன்ற பல முதல்நிலை ஆற்றல்கள் (Primary abilities) காணப்படுவனவாகக் கூறுகிறார்.

வயதுக்குத் தக்கவாறு குழைந்தைகளைப் பிரித்து வைத்துக்கொண்டு ஆராய்ந்தால் பினே செய்த சோதனைகள் 'வயது தரச் சோதனைகள் (Age scale tests) என்று வழங்கப்பெறும். இக்காலத்தில் குழந்தைகள் எல்லோரையும் ஒன்றாக வைத்துக்கொண்டு ஒரேவிதமான சோதனைகளைப் பயன்படுத்துகிறார்கள். அச்சோதனைகள் 'மார்க்குத் தரச் சோதனைகள்' (Point scale tests) எனப்படும். பினேயின் சோதனைகள் குழந்தை சூழ்நிலையிலிருந்து பெறும் அறிவை அடிநிலையாகக் கொண்டவை. ஆனால் இக்காலத்துச் சோதனைகளுள் பெரும்பாலானவை குறிப்பிட்ட பொருள்களிடையேயுள்ள தொடர்புகளை அறியும் ஆற்றலை அடிநிலையாகக் கொண்டவையாம்.

அறிதிறன் சோதனைகள் பயனுடையன என்பதைக் குறித்து இக்காலத்தில் யாரும் ஐயம் கொள்வதில்லை. பள்ளிகளில் குழந்தைகளை அறிதிறன் ஈவுக்குத் தக்கவாறு பிரித்துவைத்துக் கற்பிப்பதற்கு இவை மிகுந்த பயன் தருவனவாக இருக்கின்றன. சிறுவர்களையும் சிறுமிகளையும் இவ்வாறு பிரித்து வைக்காமல் கற்றுக் கொடுக்கும் இக்காலத்து முறை தக்க பயன் தருவதில்லை என்பது தெளிவு. அறிதிறன் சோதனைகளைக் கொண்டு, மிகுந்த அறிவுடைய குழந்தைகளையும், குறைந்த அறிவுடைய குழந்தைகளையும் வேறாகப் பிரித்து வைத்துக் கற்பிக்காவிடில், அவ்விரு இனத்துக் குழந்தைகளும் கட்டுக்கடங்காதவர்களாகின்றனர். பல வேளைகளில் அவர்கள் குற்றவாளிகளாக ஆகிவிடுவதுண்டு. இவ்வறிதிறன் சோதனைகள் கற்பிப்போர்க்குக் கண்ணைத் திறந்துவிடுவனவாக அமைந்துள்ளன.

சேனைக்கும், கல்வி அறிவு கொண்டு செய்யும் தொழில்களுக்கும், தக்கவர்களைத் தேர்வு செய்வதற்கும் இச்சோதனைகள் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. தொழிற்சாலைகளிலும் அவை பயனுடையன என்பது உறுதியாய்விட்டது. சுருங்கக்கூறின், அறிதிறனை அளந்து காணவேண்டிய நிலைமைகளில் எல்லாம் இச்சோதனைகள் தாம் சரியான அளவுகோல்கள் ஐயமற நிலைநாட்டப் பெற்றுவிட்டதாகும். பி. எஸ். நா.