கலைக்களஞ்சியம்/அழிஞ்சி

அழிஞ்சி சிறு மரம். செடியாகவும், பரவி வளரும் புதராகவும் இருக்கும். இந்தியாவிலும் இலங்கையிலும் வெப்பமான பாகங்களில் உள்ளது. தென்னிந்தியக் காடுகளில் நன்றாக வளர்வது. சாதாரணமாக இந்தச் செடியை எங்கும் காணலாம். வேரின் பட்டை நாக்குப்பூச்சி மருந்தாகவும், பேதிக்குச் சாப்பிடவும், சுரத்துக்கும் தோல் நோய்களுக்கும் மருந்தாகவும் உதவும். இதைத் தூளாகக் கொடுக்கிறார்கள். மரம் கடினமானது, அழுத்தமானது. தென்னிந்தியாவில் இது உலக்கை, செக்குலக்கை, ஏந்திர அச்சு, ஆயுதங்களுக்குப் பிடி முதலியன செய்ய உதவுகிறது. செதுக்கு வேலைக்கும் உதவும். விறகாகவும் பயனாகிறது. பூ வெண்மையாகவும் நல்ல மணமுடையதாகவும் இருக்கும். பழம் சிறியது; சிவப்பாக இருக்கும். அதைத் தின்னலாம். குடும்பம்: அலாஞ்சியேசீ (Alangiaceae). இனம்: அலாஞ்சியம் சால்விபோலியம் (Alangium salvifolium).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அழிஞ்சி&oldid=1503509" இலிருந்து மீள்விக்கப்பட்டது