கலைக்களஞ்சியம்/அவிநாசி

அவிநாசி கோயம்புத்தூர் ஜில்லா, திருப்பூர் புகைவண்டி நிலையத்துக்கு வடக்கே 8 மைலில் உள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார் முதலை வாயினின்றும் பிள்ளையை மீட்டுக் கொடுத்த தலம். சுந்தரர் பாடியருளிய திருப்புக்கொளியூர் அவிநாசிப்பதிகத்திலே பல செய்யுட்களிலும், 'திருப்புக்கொளியூர் அவிநாசியே' என இறைவனை விளிப்பதாக வருவதால், இப்போது அவிநாசி என்று வழங்குந் தலம் சுந்தரர் காலத்திலே திருப்புக்கொளியூர் என்று வழங்கியதென்றும், அவிநாசி என்னும் பெயர் இறைவன் பெயராக இருந்ததென்றும், பிற்காலத்தில் அவிநாசி என்னும் பெயரே தலப் பெயராக மாறியதென்றும் அறியலாம்.

முதலையிருந்த ஏரிகரையருகில் சுந்தரர் கோயில் இருக்கின்றது. கோயிலிற் பாதிரிமரம் உண்டு. சுவாமி அவிநாசியீசுவரர். அம்மன் கருணாம்பிகை. சுந்தரர் பாடல் பெற்றது. தலபுராணம் ஒன்று உண்டு. திருப்பூரிலிருந்து அவிநாசிக்குப் போகும் வழியில் 5ஆம் மைலில் திருமுருகன் பூண்டி இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அவிநாசி&oldid=1455059" இலிருந்து மீள்விக்கப்பட்டது