கலைக்களஞ்சியம்/அவுது பேகம்கள்

அவுது பேகம்கள்: அவுதில் நவாபு ஷூஜா வுத்தௌலா 1775-ல் இறந்ததும், அவன் மகனான அசாபுத்தௌலா பதவிக்கு வந்தான். இவனுடைய தாய் பாகூ பேகம் ; பாட்டி புர்ரா பேகம். ஷூஜா வுத்தௌலா இறந்தபின் இவர்களுக்கு மொத்தமாக 2 கோடி ரூபாய் சொத்துக் கிடைத்தது. அசாபுத் தௌலா, 1775-ல் அவர்களிடமிருந்து 25 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டான். அப்போது அவனும் கம்பெனியாரும் இனி அவர்களைப் பணம் கேட்பதில்லை என்று உறுதி கூறினர். ஆயினும் பிறகு, அவுதின் ஆட்சி நிருவாகத்தைச் சீர்ப்படுத்தவேண்டும் என்று காரணம் காட்டி, அசாபுத்தௌலா பேகங்களின் சொத்தைப் பறித்துக்கொள்ள ஆங்கிலேயர்களோடு சேர்ந்து திட்டமிட்டான். அப்போது வங்காளக் கவர்னர் ஜெனரலாயிருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் வாக்குறுதியை மீறிப் பணம் பறிப்பதில் முனைந்தான் ; ராஜா சைத்சிங் தனக்கு விரோதமாக நடந்துகொண்டதற்கு அவுது பேகங்களும் உடந்தையென்று குற்றம் சாட்டினான். அவனுடைய ஆட்கள் பேகங்களுக்கு உதவியாயிருந்த வேலையாட்களைச் சங்கிலியாற் பிணைத்துச் சிறைப்படுத்திப் பேகங்களையும் அச்சுறுத்திப் பணத்தைப் பறித்தனர். 1782-ல் நவாபும், பிரிட்டிஷ் அதிகாரிகளும் பைசாபாத்திற்குச் சென்று, பேகங்களின் அரண்மனையில் துருப்புக்களை யிறக்கினர். பிறகு வாரன்ஹேஸ்டிங்ஸ் மிகவும் தவறான முறையில் நடந்துகொண்டதாகப் பிரிட்டிஷ் காமன்ஸ் சபையில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்தது. தே. வெ. ம.