கலைக்களஞ்சியம்/அஸ்ஸாம்

அஸ்ஸாம் இந்தியாவில் வடகிழக்கேயுள்ள இராச்சியம். பதினொரு மாவட்டங்கள் உடையது. மக் : 90,43,707 (1951). ஆண்கள் 48,12,166. பெண்கள் 42,31,541. அவர்களுள் இந்துக்கள் 58 இலட்சம், முஸ்லிம்கள் 19 இலட்சம், சீக்கியர் 4,107. பௌத்தர் 22 இலட்சம், கிறிஸ்தவர் 6 இலட்சம், ஆதிக்குடிகள் 5 இலட்சம். பரப்பு : 85,012 ச.மைல்.

அஸ்ஸாம்

விவசாயம்: நதி தீரங்கள் மிகச் செழிப்பானவை. மழை மிக அதிகம். ஆண்டில் சராசரி 569.50 அங்குலம் மழை பெய்யும். செரபுஞ்சி உலகத்தில் மிகவும் மிகுதியாக மழை பெய்யுமிடங்களில் ஒன்றாகும். ஆறுகளில் வரும் பெரும் வெள்ளங்கள் நிலங்களைப் பாழ்படுத்தாதிருக்கப் பார்த்துக்கொள்வதே நீர்ப்பாசனத்தைவிட முக்கியப் பிரச்சினையாம். அரிசி முக்கிய உணவுப் பொருள். தேயிலையும் சணலும் முக்கிய ஏற்றுமதிப் பொருள்கள். தேயிலைத் தோட்டங்கள் பெரும் பாலும் ஐரோப்பியர் வசம் உள்ளன. சுமார் 5 இலட்சம் ஏக்கர் பூமியில் தேயிலை பயிராகிறது.

சுரங்கங்கள்: முக்கியமாகக் கிடைக்கும் தாதுக்கள் பெட்ரோலியமும், நிலக்கரியும், சுண்ணாம்புக் கல்லுமாகும். பிரமபுத்திரா வடிநிலமும் சூர்மா வடிநிலமுமுள்ள இடத்தில் 800 மைல் தொலைவரை பெட்ரோலியம் காணப்படுகிறது. நிலக்கரிச் சுரங்கங்கள் நாகமலையிலும் இலக்குமிபுர மாவட்டத்திலும் உள்ளன. சுண்ணாம்புக்கல் காசி மலையிலும் செயிந்தியா மலையிலும், பெட்ரோலியம் இலக்குமிபுரத்திலும் கச்சாரிலும் எடுக்கப்படுகின்றன.

கைத்தொழில்கள் : விவசாயமே முக்கியத் தொழில்; 80 சதவிகித மக்கள் அதை நடத்துகிறார்கள். கைத்தொழில்களுள் முக்கியமானது பட்டு நெய்தல். அது குடிசைத்தொழிலாகவே இருக்கிறது. நடத்துபவர்கள் பெரும்பாலும் பெண்களே. தீக்குச்சி செய்தல், எண்ணெய் ஆட்டுதல் முதலிய வேறு தொழில்களும் நடைபெறுகின்றன. வியாபாரம் பெரும்பாலும் பக்கத்திலுள்ள நாடுகளுடனும், குன்றுவாழ் ஆதிக்குடிகளுடனும் நடைபெறுகின்றது.

போக்குவரத்து: வியாபாரப் போக்குவரத்துப் பாதைகள் பெரும்பாலும் ஆறுகளேயாம். மற்ற இராச்சியங்களிலுள்ளதைவிட இங்கே சாலைகள் குறைவு. அஸ்ஸாமை இந்தியாவின் மற்றப் பகுதிகளுடன் இணைப்பதற்குத் தேவையான புகைவண்டிப் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நாடோறும் கௌகத்திக்கும் கல்கத்தாவுக்குமிடையில் ஆகாய விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது. கௌகத்திக்கும் நவகாங்குக்குமிடையே உள்ள ஐம்பது மைல் தொலைவிலும் அரசாங்கமே மோட்டார் போக்குவரத்து நடத்திவருகிறது. பாகிஸ்தான் வழியாகச் செல்லாமல் இந்தியாவில் மற்றப் பாகங்களுடன் இணைக்கக்கூடிய சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

கல்வி: மத்தியதரப் பாடசாலைகள் 645ம், உயர் தரப்பாடசாலைகள் 163ம், இன்டர்மீடியட் கல்லூரிகள் 7ம், பட்டதாரிக் கல்லூரிகள் 6ம், சட்டக் கல்லூரி 1ம், பொறியியல் பாடசாலைகள் 16ம், வியாபாரப் பாடசாலைகள் 3ம், வயதுவந்தோர் பாடசாலைகள் 452ம், ஆசிரியர் பயிற்சிப் பாடசாலைகள் 10ம் இருக்கின்றன. கௌகத்தியிலுள்ள பல்கலைக்கழகம் 1948-ல் நிறுவப் பெற்றதாகும்.

ரேடியோ: அகில இந்திய ரேடியோ நிலையம் ஷில்லாங்கிலும் கௌகத்தியிலும் இருக்கின்றது. டெல்லி நிலையமும் அஸ்ஸாம் மொழியில் ஒலி பரப்புகின்றது. காடுகள் : 6.645 ச. மைல் காடுகள் ஒதுக்கப்பட்டுள. அவற்றில் கிடைக்கும் முக்கியமான மரம் ஆச்சாவாகும். யானைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. அதைப் பிடிக்கும் உரிமையை அரசாங்கம் குத்தகைக்கு விடுவதோடு தானும் பிடிக்கிறது. பலவிதமான பறவைகள் கிடைப்பதால் வேட்டையாடப் பல பகுதிகளிலிருந்தும் வருகிறார்கள். காடுகளில் கிடைக்கும் முக்கியமான பொருள்கள் ரப்பரும், யானைத் தந்தமும், காண்டா மிருகத்தின் கொம்புமாகும்.

அரசாங்கம் : அஸ்ஸாம் தனி இராச்சியமாக ஆக்கப்பட்டது 1874-ல் ஆகும். அது பல மாறுதல்கள் அடைந்து, 1919-ல் கவர்னர் மாகாணமாக ஆயிற்று. சுதந்திரம் வந்த பிறகும் அவ்விதமே இருந்துவருகிறது. இது இப்போது இந்திய ஐக்கியத்தில் அடங்கிய ஒன்பது பிரிவு இராச்சியங்களில் ஒன்று. ஷில்லாங் அதன் தலைநகரம். இது 6,540 அடி உயரமுள்ள ஷில்லாங் மலையின் சரிவிலுள்ளது.

தொல்பொருளியல் : இங்கே சில புதிய கற்காலக் கருவிகளும், சில வரலாற்றுக் காலப்பொருள்களும் கிடைத்திருக்கின்றன. எனினும் அஸ்ஸாமின் முழு வரலாற்றையும் விளக்கும் அளவிற்குப் புதைபொருள்களோ மற்றைய ஆதாரங்களோ இல்லை. வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த கோயில்கள், நாணயங்கள், இன்னும் மட்பாண்டங்கள் போன்றவை முக்கியமாகக் காமரூபம், சிப்சாகரம், தர்ராங் போன்ற ஜில்லாக்களில்தான் கிடைத்திருக்கின்றன. இவற்றில் காமரூபஜில்லாவிலுள்ள தேஜ்பூரில் பல சிற்பங்களும் பாழடைந்த கோயில்களும் கண்டறியப்பட்டன. இவை 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இக்கோவில்களில் சிவன் கோவிலும் சூரியன் கோவிலும் குறிப்பிடத்தக்கவை. தேஜ்பூரின் அருகே உள்ளே தாஹ்பர்வதியா கிராமத்தில் 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குப்த காலத்திய சிவன் கோவிலின் பாகங்கள் கிடைத்தன. இதிலுள்ள கங்கை, யமுனையின் சிற்பங்கள் மிகவும் அழகுவாய்ந்தவை. பிற்காலத்தில் அஸ்ஸாம், அஹோம் என்பவர்களால் 14ஆம் நூற்றாண்டிலிருந்து ஆளப்பட்டு வந்தது. ஆனால் இதற்குப் பிறகு சுமார் 16ஆம் நூற்றாண்டிலிருந்தே சமீபகாலத்திய கட்டடங்கள் முதலியவை ஏற்பட்டன. பி.ஆர்.ஸ்ரீ.

வரலாறு: இராச்சியத்தின் பழைய பெயர் காமரூபம். தற்காலம் மேற்கு வங்காளத்தைச் சார்ந்த கூச் பீகார் (Cooch Behar), கிழக்கு வங்காளத்தைச் சார்ந்த ரங்கபுரம் (Rangapur) ஆகிய பகுதிகளும் பண்டைய காமரூபத்தில் அடங்கியிருந்தன. பண்டைத் தலைநகர் பிராக்ஜ்யோதிஷம் (Pragjyotisha) இப்போதுள்ள கௌகத்தி நகருக்கு அருகிலிருந்தது. மௌரியரின் காலத்தில் காமரூபம் தனி அரசாகவேயிருந்தது. சமுத்திரகுப்தன் காலத்தில் குப்தப் பேரரசுக்குக் கப்பம் செலுத்தி வந்தது.

இந்நாட்டின் அர்ச வமிசத்துக்கு மூல புருஷன் பகதத்தன். முதன் முதல் புகழ் பெற்றவன் புஷ்யவர்மன் (சு. 350-650). கடைசி மன்னன் பாஸ்கரவர்மன் ஹர்ஷ சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்டிய சிற்றரசர்களில் ஒருவன். ஹர்ஷனுடைய அன்பையும் பாதுகாப்பையும் பெற்றவன். இவன் காலத்தில் சீனப் பேரறிஞர் ஹியூன் சாங் இந்நாட்டுக்கு வந்தார். நாட்டின் அரசன் விஷ்ணு வமிசத்தினன் என்று அவர் சொல்லுகிறார். பௌத்த மடங்கள் இங்குக் காணப்படவில்லை என்று அவர் எழுதியிருப்பது புத்த சமயம் இங்குப் பரவவில்லை என்பதைக் குறிக்கிறது. பாஸ்கரவர்மனின் வேண்டுகோட்கிணங்கியே சீனச் சக்கரவர்த்தி ஹியூன்சாங்கை லௌட்ஸு (Laotse) என்ற சீனப்பெரியாரின் அருள் மொழிகளை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கும்படி வேண்டினார்.

சாலஸ்தம்ப வமிசம் 650 முதல் 800 வரை ஆண்டது. பிராலம்ப (Pralamba) வமிசம் 800 முதல் சு. 1000 வரை ஆண்டது. ஜயபாலன், பாலவர்மன், தியாகசிம்மன் ஆகியோர் இவ்வமிசத்தவர்கள். இக்காலத்தில் காமரூபம், வங்காளத்தை ஆண்ட பால (Pala) மன்னர்களுக்குக் கீழ்ப்படியும்படி நேரிட்டது. பால்மன்னர்கள் சிவன், விஷ்ணு என்ற பேதமில்லாமல் இரு சமயத்தையும் ஆதரித்தார்கள். அடிக்கடி விடுதலைப்போர் நடந்துவந்தது. 11ஆம் நூற்றாண்டில் பால வமிசத்தின் அரசகுமாரன் ஒருவன் காமரூபத்தின் மன்னனானான். அவனுடைய தலைநகர் கெளகத்தி. 12ஆம் நூற்றாண்டில் வங்க மன்னன் ராமபாலன் காமரூபத்தைக் கைப்பற்றித் தன் அமைச்சன் போதி தேவனை அங்கு ஆளும்படி அமர்த்தினான். போதி தேவன் வமிசம் சு. 1150 வரை ஆட்சியிலிருந்தது. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காமரூப மன்னர்களுக்கும் வங்கத்தை அப்போது ஆண்ட சேன (Sens) மன்னர்களுக்கும் அடிக்கடி போர் நடந்தது.

காமரூபம் முஸ்லிம் ஆட்சிக்குள் வரவில்லை. முகம்மது பின் பக்தியார் - கில்ஜி திபெத்துக்குத் தன் வீரர்களை இந்நாட்டு வழியாக நடத்திச் செல்ல முயற்சி செய்தபோது இங்கு முறியடிக்கப்பட்டு இறந்தான். 1228-ல் ஆஹோம் என்ற ஷான் சாதியார் (Shans) இங்குக் குடியேறினார்கள். அவர்கள் இந்து மதத்தைத் தழுவி, நாட்டின் ஆட்சியைப் பெற்றார்கள். நாட்டுக்கு அஸ்ஸாம் என்ற பெயர் இந்தச் சாதியாரின் பெயரைத் தழுவியே ஏற்பட்டது.

ஆஹோம் ஆட்சியில் பல துறைகளில் இந்நாடு மேன்மையடைந்தது. அக்பர் காலத்தில் (1542-1605) இங்குச் சுற்றுப் பிரயாணம் செய்த ரால்ப் பிட்ச் (Ralph Fitch) தாம் இங்குக் கண்ட மருத்துவச் சாலைகளையும், கல்விச் சாலைகளையும் புகழ்ந்திருக்கிறார். ருத்ரசிம்மன் (1696-1714) என்ற அஹோம் அரசன் பெரும்படையைத் திரட்டி, மற்ற இந்து மன்னர்களின் உதவியைக் கொண்டு மொகலாயப் பேரரசைத் தாக்கச் செய்த முயற்சி அவன் அகால மரணத்தால் நின்று விட்டது.

1770 வரை ஐரோப்பியர்கள் அஸ்ஸாமுக்குள் நுழையவில்லை. 1771-ல் ஆங்கிலேயர்களுடன் முதல் வியாபார உடன்படிக்கை செய்யப்பட்டது. 1822-ல் பர்மியர் இந்நாட்டை வென்றனர். ஆங்கில-பர்மிய யுத்தத்துக்குப் பிறகு 1826-ல் செய்துகொள்ளப்பட்ட யந்தபோ (Yandabo) உடன்படிக்கையின்படி அஸ்ஸாம் ஆங்கில ஆட்சிக்குட்பட்டது.

அன்னிய ஆட்சியிலிருந்து தம் நாட்டை மீட்டுக்கொள்ள வட அஸ்ஸாமியர் பல தடவை கலகம் செய்தார்கள். 1831-ல் புரந்தர சிம்மனை அரசனாக ஆங்கிலேயர் அமர்த்தினர்; 1838-ல் அவனை நீக்கினர். அவன் பேரன் கந்தர்ப்பேசுவர சிம்மன் 1857-ல் கலகம் செய்தான். அவனையும் அவன் துணைவர்களையும் ஆங்கிலேயர் கைதுசெய்தார்கள். 1858-ல் கம்பெனியின் ஆட்சி முடிவடைந்தது; இந்தியாவின் மற்றப் பகுதிகளைப் போல அஸ்ஸாமும் ஆங்கில மன்னரின் நேராட்சியின்கீழ் வந்தது. கூ. ரா. வே.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அஸ்ஸாம்&oldid=1455978" இலிருந்து மீள்விக்கப்பட்டது