கலைக்களஞ்சியம்/அஸ்ஸாம் மொழி
அஸ்ஸாம் மொழி: இது கிழக்கு மகத அபப்பிரம்ச் மொழியினின்று பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரியா மொழியின் ஆதி உருவங்களும், வங்காளி மொழியின் ஆதி உருவங்களும் திபெத்து நாட்டில் காணப்பட்ட பௌத்த தோகாக்களில் காணப்படுவன போலவே, அஸ்ஸாம் மொழியின் ஆதி உருவங்களும் காணப்படுகின்றன. காமரூபம் என்று வழங்கப்பட்ட பண்டை அஸ்ஸாம் நாட்டில் பயிலப்பெற்ற மொழி மத்திய இந்தியாவில் பயிலப்பெற்ற மொழியினின்றும் சிறிது வேறுபட்டிருந்ததாக ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த ஹியூன்சாங் கூறுகிறார். ஆதி காலத்துக் கல்வெட்டுக்களில் அஸ்ஸாம் மொழி வளர்ந்து உருவான விதத்தைக் காணலாம். அஸ்ஸாம் மொழியானது ஆதிகாலத்து மங்கொலாயிடு மக்களுடைய மொழியிலிருந்தும் ஆஸ்டிரிக் மக்களுடைய மொழியிலிருந்தும் ஏராளமான சொற்களைப் பெற்றிருக்கின்றது. சமஸ்கிருதமல்லாத மற்ற மொழித் தொடர்பு சொற்கள் விஷயத்தில் அதிகமாகவும் தொடரிலக்கணத்தில் ஓரளவும் காணப்படுகிறது. அஸ்ஸாம் என்னும் சொல்லும் 'தோற்கடிக்கப்படாத' என்னும் பொருளுடைய மங்கொலாயிடு தாதுவிலிருந்தே பிறந்ததாகும்.
அஸ்ஸாம் மொழியில் எழுதப்பெற்ற மிகப்பழைய நூல்களில் இப்பொழுது கிடைத்திருப்பது 13ஆம் நூற்றாண்டிலிருந்த ஹேம சரஸ்வதி இயற்றிய பிரகலாத சரித்திரம் என்பதாகும். அது புராணங்களில் காணும் ஒரு கதையைச் செய்யுள் வடிவத்தில் செய்தது. அரிகரவிப்ரர், கவிரத்ன சரஸ்வதி ஆகிய இரண்டு கவிஞர்களும் மகாபாரதக் கதைகளைப் பாடியுள்ளார்கள். பழைய காவியங்களுள் தலைசிறந்தது 14ஆம் நூற்றாண்டிலிருந்த குறுநில மன்னன் ஒருவனுடைய ஆதரவிலிருந்த மாதவி கண்டலி என்பவர் பாடிய இராமாயணம். அது கவிதைச் சிறப்புடையது. மக்கள் பயிலும் எளிய நடையில் இயன்றது. மாதவ கண்டலி இயற்றிய தேவஜித் என்னும் மற்றொரு நூல் அடுத்த நூற்றாண்டில் எழுந்த புது வைணவ இயக்கத்தின் முன்னோடிபோல் விளங்குகிறது. அக்காலத்துக் கவிஞர்களுள், துர்க்காபர் என்பவர் இராமாயணத்தைக் கீர்த்தனைகளாகப் பாடியுள்ளார். மங்கர் என்பவர் மனஸா என்னும் நாக தேவதையைப்பற்றி மக்களிடைப் பரவியிருந்த கதையைப் பயன்படுத்தியிருக்கிறார். பீதாம்பர் என்பவர் உஷை, அனிருத்தன் ஆகியவர்களுடையகாதற்கதைகளைக் கீர்த்தனைகளாகப் பாடியிருக்கிறார். இந்தக் கவிஞர்கள் நாடோடிப்பாடல்களில் காணப்படும் கிராம மக்களுடைய வாழ்வையும் எளிய தன்மையையும் பயன்படுத்த முயன்றிருக்கின்றனர்.
15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சங்கரதேவருடைய தலைமையில் புது வைணவ இயக்கம் தோன்றிய காலத்திலேயே அஸ்ஸாம் இலக்கியம் முழு உருவத்துடன் திகழத் தொடங்கியது. சங்கரதேவரும் அவருடைய முதற்சீடர் மாதவதேவரும் ஆண்டான் அடிமை பக்தி முறையைப் பரப்பினார்கள். அதற்குக் கலையையும் இலக்கியத்தையும் பெருந்துணையாகப் பயன்படுத்தினார்கள். சங்கரதேவர்பாகவதத்தில் பல பகுதிகளை மொழிபெயர்த்தார். ஆசாரியரும் சீடரும் சேர்ந்து, மாதவ கண்டலியின் இராமாயணத்தில் அரசியல் குழப்பங் காரணமாகக் காணாமற் போய்விட்ட இரண்டு படலங்களைப் பாடிச் சேர்த்தனர். அதனுடன் கீர்த்தனைக் கோஷம் என்பதையும் இயற்றினர். சங்கரதேவர் அதன் கதைப் பகுதியையும் மாதவ தேவர் கீர்த்தனைப் பகுதியையும் செய்தனர். அது பொது மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு சிறந்த நூலாகும். சங்கரதேவர் ஆறு நாடகங்களும், சில சிறந்த பக்திப் பாடல்களும் சில காவியங்களும் செய்திருக்கிறார். அவர் தம் நாடகங்களைப் பிரஜபுலிச் (Brajabuli) சொற்களைச் சேர்த்து உரைநடையில் இயற்றியிருக்கின்றார். மாதவதேவரும் சில நாடகங்களும் பாடல்களும் செய்துளர். இந்தப் பாடல்கள் பண்டை இராகங்களில் பாடப்பெறுகின்றன. இக்காலத்துப் புலவர்களுள் ராம் சரஸ்வதி என்பவர் முன்னால் அஸ்ஸாம் நாட்டினதாக இருந்து, இப்போது மேற்கு வங்காளத்தைச் சேர்ந்திருக்கும் கூச் பீகாரின் மன்னன் நரநாராயணனுடைய ஆதரவில் மகாபாரதம் முழுவதையும் மொழி பெயர்த்தார். அதனுடன் அவர் மகாபாரதத்திலுள்ள வனபருவக் கதைகளைக்கொண்டு பல காவியங்களும் இயற்றியுள்ளார். அவர் கதை கூறுவது கண்முன் நடப்பதுபோல் காட்டுவதாகவும் நகைச்சுவை நிரம்பியதாகவுமிருக்கிறது. மற்றொரு முக்கியமான எழுத்தாளரான பட்டதேவர் பாகவதத்தையும் கீதையையும் உரைநடையில் மொழிபெயர்த்திருக்கிறார். இவருடைய நடையில் சமஸ்கிருதச் சொற்களும் பிரயோகங்களும் அதிகம். ஸ்ரீதர கண்டலி என்பவர் தத்துவார்த்தமுடைய கான்கோவா என்னும் காவியத்தை எழுதினார். அதை இப்போது தாய்மார்கள் தாலாட்டுப் பாட்டாகப் பாடுகிறார்கள். கிருஷ்ணனுடைய லீலைகள் அக்காலத்துப் புலவர்களுடைய உள்ளத்தை எவ்வளவுக்குக் கவர்ந்திருந்தன என்பதை இவருடைய காவியமும் மாதவ தேவருடைய நாடகங்களும் பாடல்களும் விளக்கும்.
புது வைணவ இயக்கத்தின் ஆற்றல் 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் நலியத் தொடங்கிற்று. ஆயினும் அக்காலத்திலேயே சங்கரதேவர், மாதவதேவர் ஆகிய இருவருடைய வாழ்க்கை வரலாறுகள் செய்யுள் உருவில் உண்டாக்கப்பட்டன. புது வைணவக் கவிஞர்கள் பெரும்பாலும் இரண்டடியுடைய 'பதம்' என்னும் செய்யுள் வகையிலேயே எழுதி வந்தனர். எதுகைத் தொடையுடைய நாலடிச் செய்யுள் வகையையும் கையாண்டார்கள்.
அஸ்ஸாம் நாட்டைச் சில நூற்றாண்டுகட்கு முன்னர் படையெடுத்துக் கைப்பற்றிய ஆஹோமியர்கள் புதிதாக உண்டாக்கிய புரான்ஜி என்னும் உரைநடை வரலாறுகள் 17ஆம் நூற்றாண்டில் தோன்றலாயின. புரான்ஜிஉரைநடை எளியதாயும், ஓசையுடையதாயும், இயற்கைக்கு ஒத்ததாயும், இடையிடையே கிராமியப் பிரயோகங்களும் பழமொழிகளும் விரவியதாயுமிருப்பதால் அதுவே தலைசிறந்த உரைநடையாகும். இந்த நடையே பிற்காலத்தில் நாடகாசிரியர்கட்கும் நாவலாசிரியர்கட்கும் இலக்கிய உற்சாகம் ஊட்டியதாகும். ஆகோமி அரசர்கள் மத சம்பந்தமான இலக்கியங்களையும் போற்றினார்கள்.
18ஆம் நூற்றாண்டில் எழுந்த நூல்களுள் முக்கியமானவை யானை இயல் நூலான ஹஸ்தி வித்யார்ணவம் என்பதும், பிரமவைவர்த்த புராணக் கதையை ஆதாரமாகக் கொண்ட சங்காசுரவதம் என்னும் நூலும், நாட்டியத்தைப்பற்றிக்கூறும் ஸ்ரீ ஹஸ்த முக்தாவலி என்னும் நூலுமாகும். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாட்டில் அரசியல் குழப்பங்களும், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பர்மியர் படையெடுப்பும் நிகழ்ந்தன. பிரிட்டிஷார் வந்து அமைதி நிலவுமாறு செய்தபோதிலும் 1836-ல் அவர்கள் நீதிமன்றங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் வங்காளி மொழியே உபயோகிக்குமாறு செய்ததால் நாட்டுக்கு அது ஒரு பெரிய கேடாக ஆயிற்று. வங்காளி மொழி முப்பத்தைந்து ஆண்டுகள் தங்கி நாட்டுக்குச் செய்த தீங்கை அளவிட்டுக் கூறமுடியாது. இந்த நிலைமை மாறுவதற்குக் காரணமாயிருந்தவர்கள் வடகிழக்கு அஸ்ஸாமில் தங்கியிருந்து கொண்டு, விவிலிய நூலை அஸ்ஸாம் மொழியில் மொழி பெயர்த்துப் பரப்ப முயன்ற பிரிட்டிஷ் பாதிரிமாரும் அமெரிக்கப் பாதிரிமாருமாவர். அவர்கள் 1819-ல் விவிலிய நூலின் புதிய ஏற்பாட்டின் அஸ்ஸாம் மொழி பெயர்ப்பையும், 1846-ல் அருணோதய சம்பாத பத்திரம் என்னும் அஸ்ஸாம் மொழிச் சஞ்சிகையையும், 1867-ல் அஸ்ஸாம் அகராதியையும் வெளியிட்டார்கள். இக்காலமே அஸ்ஸாம் இலக்கியத்தின் நவீன காலத் தொடக்கமாகும். இது முதல் அஸ்ஸாம் இலக்கியம்
மேனாட்டுக் கருத்துக்களையும் மாதிரிகளையும் ஏற்று வளரலாயிற்று.19ஆம் நூற்றாண்டிலிருந்த புலவர்களுள் தலைசிறந்தவர்கள் ஹேமசந்திர பரூவா (1835-1896) என்பவரும், குணாபிராம பரூவா (1837-1895) என்பவருமாவர். ஹேமசந்திர பரூவா அபினியின் தீமைகளை வைத்துக் காணியார் கீர்த்தனம் என்னும் நாடகம் எழுதினார். அதுவே நவீன காலத்து முதல் நாடகமாகும். அவரே புரோகிதர்களுடைய பித்தலாட்டங்களை வைத்துப் பாகிரே ரங்சங் பிதரே கொவாபாதுரி என்னும் நவீன காலத்து முதல் நாவலையும் இயற்றியுள்ளார். அவரே முதன்முதலாக விஞ்ஞான அகராதியும் தயார் செய்தார். அதனுடன் அவர் சுயசரிதம் எழுதும் வழக்கத்தையும் தொடங்கி வைத்தார். குணாபிராம பரூவா நாட்டின் வரலாற்றை மேனாட்டு முறையில் எழுதினார். சமூக விஷயங்களை வைத்துச் சில நாடகங்களும் இயற்றினார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அஸ்ஸாமிய இலக்கியமானது செழித்து வளரத் தொடங்கிற்று. இந்தக் காலத்து எழுத்தாளர்களுக்குள் மிகச் சிறந்தவர்கள் லட்சுமிநாத பெஸ்பரூவா (1868-1938), சந்திரகுமார் ஆகர்வாலா (1867-1937), ஹேமந்திர கோஸ்வாமி (1879-1928) ஆகிய மூன்று நண்பர்களாவர். இம் மூவருள் பெஸ்பரூவா பலதுறைப் புலவராக இருந்தார். அவர் சங்கர தேவருடைய வாழ்க்கை வரலாறும், மாதவதேவருடைய வாழ்க்கை வரலாறும், சில நல்ல சிறு கதைகளும், வரலாற்று நாடகங்கள் சிலவும், ஒரு வரலாற்று நாவலும், மிகச் சிறந்த சில இசைப்பாக்களும் இயற்றியுள்ளார். அவர் புகழ் பெற்ற பத்திரிகை எழுத்தாளராகவுமிருந்தார். அவருடைய வசன நடை நகைச்சுவையும் எள்ளித்திருத்தற் சுவையும் நிரம்பியது. ஆகர்வாலா அருள் நிரம்பிய கவிஞர். அவர் செய்த மிகப் பெருந்தொண்டு அஸ்ஸாமியா என்னும் பத்திரிகையை நிறுவியதாகும். கோஸ்வாமி கவிஞராயினும், பிற்காலத்தில் பண்டைப் பொருள் ஆராய்ச்சியில் ஈடுபடலானார். பெஸ்பரூபா நாடோடிக் கதைகள் சிலவற்றைப் புது உருவத்தில் எழுதி, நாடோடி இலக்கியத்தில் அக்கறை எழுமாறு செய்தார். இளவேனிற் காலத்தில் நடைபெறும் பிகு (Bihu) விழாவில் பாடப்பெறும் பிகு பாடல்களே மக்களின் குறிக்கோளைக் காட்டுவதாகக் கருதப்படுகின்றன.
இந்த எழுத்தாளர்களுக்குப் பின் வந்த எழுத்தாளர்களுள் கீழ்க்கண்டவர்கள் முக்கியமானவர்கள். ரஜனிக்காந்தா பர்தலை என்பவர் சிறந்த நாவலாசிரியர். சிறுகதை எழுதுவதில் சிறந்தவர்கள் சரத்சந்திர கோஸ்வாமியும், மஹிபொராவுமாவர். ஹிதேசவர் பர்பவோவும், சந்திரதர பரூவாவும், அகவற்பாவைச் செய்யுள் எழுதுவதற்குப் பொதுவாக அனைவரும் கையாளும் யாப்பாகும்படி செய்தார்கள். ஐதின்துவாரா உமர்கையாம் பாடல்களை மொழிபெயர்த்தார். நகைச்சுவை ததும்பும் பாக்களும் இயற்றினர். அம்பிகாகிரி ராய்சௌத்ரியின் பாக்கள் துன்புறுவோர் துயரங்களைச் சித்திரிப்பனவாகும். ஜோதி பிரசாத் ஆகர்வாலா மிகச்சிறந்த நாடகாசிரியராக இருக்கின்றார். உரைநடையில் சிறந்தவராக இருப்பவர்கள் சத்யநாத பொரா என்பவரும் நீல்மணிபூகன் என்பவரும் ஆவர். இக்காலத்து இலக்கியமானது உள்ளதை உள்ளபடி கூறுவதிலும் சமூக உணர்ச்சியை எழுப்புவதிலும் கவனம் செலுத்துவதாக இருக்கிறது. பி.கா. - பி. கோ.