கலைக்களஞ்சியம்/ஆடர்

ஆடர் (Adder): இதற்கு ‘வைப்பர்’ என்றும் பெயர். ஒருவகை நச்சுப்பாம்பு. இது குட்டையானது. 15 அங்குலத்துக்கு மேலிராது. விரியன் கணம். கழுத்துப்பாகம் சிறுத்துத் தோன்றும். இதன் நிறம் பழுப்பு அல்லது சற்றுச் சிவப்பு. முதுகு நடுவே நெளிநெளியான கோடு அல்லது புள்ளித் தொடர் உண்டு. வயிறு கறுத்த சாம்பல் நிறம்; அல்லது கறுப்பாகவே இருக்கும். நிறத்தில் வேறுபாடுகள் உண்டு. பெரியனவாகவும் சற்றுச் சிவப்பாகவும் உள்ளவை பெண் பாம்புகள். ஐரோப்பாவில் நெடுகப் பரவியிருப்பது இந்தப் பாம்பு தான். பைன் மரக்காடுகளிலும், ஹெதர் செடி வெளிகளிலும் காணப்படும். இது ஒன்றுதான் பிரிட்டனில் உள்ள விஷப்பாம்பு. பல்லி போன்ற ஊர்வனவும், சுண்டெலி போன்ற சிறு விலங்குகளும் இதற்கு இரை. இது கடித்தால் சாமானியமாக மனிதர் சாவதில்லை; ஆடு, நாய் முதலியன செத்துப்போகும். ஆபத்துக் காலத்தில் இது தன் குட்டிகளைத் தன்னுள் வைத்துக் காப்பாற்றும் அல்லது அவற்றைத் தன் தொண்டைக்குள் நுழைந்துகொள்ளச் செய்யும் என்று சொல்லுவதுண்டு. இந்தச் செய்கை உண்மைதானா என்று தெரியவில்லை. பார்க்க: பாம்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆடர்&oldid=1505336" இலிருந்து மீள்விக்கப்பட்டது