கலைக்களஞ்சியம்/ஆட்லெஸ் மலைகள்

ஆட்லெஸ் மலைகள் வடமேற்கு ஆப்பிரிக்காவில் மத்தியதரைக் கடலுக்கும் சகாராப் பாலைவனத்திற்கும் இடையே உள்ள ஒரு மலைத்தொடர். இத்தொடர் மொராக்கோ, ஆல்ஜிரியா, டூனீஷ்யா வழியாக 1,500 மைல் நீண்டு கிடக்கிறது. இம்மலைகள், உயரம் குறைவான கரையோர மலைகளும், உயர்ந்து ஓங்கியுள்ள உள்நாட்டு மலைகளும் என இரு பகுதிகளாக இருக்கின்றன. உள்நாட்டு மலைகளில் மொராக்கோ மலைத் தொடர் மிகவும் முக்கியமானது. இதன் இடைப்பகுதியிலுள்ள டிசி மலையுச்சி, சு. 1,500 அடி உயரத்திலுள்ளது.

இம்மலைத்தொடருக்கு ஆட்லெஸ் என்று பெயரிட்டவர் ஐரோப்பியர்கள். ஆகாயத்தைத் தன் தோளிற் சுமந்துகொண்டிருக்கும்படி சபிக்கப்பட்ட ஆட்லெஸ் என்பவன் இம்மலைகளில் வசிப்பதாகக் கதை. அப்பெயரையே இம்மலைக்கும் இட்டனர். வட ஆப்பிரிக்கச் சுதேசிகளில் ஒருவகையினரான பர்பர்கள் இம்மலைப் பிரதேசத்தில் வசிக்கின்றனர். வெள்ளி, ஈயம், தாமிரம், இரும்பு முதலியன இங்குக் கிடைக்கும் தாதுப்பொருள்கள்.