கலைக்களஞ்சியம்/ஆறுமுகநாவலர்
ஆறுமுகநாவலர் (1822-1879) யாழ்ப்பாணத்து நல்லூரிலே
செல்வாக்குள்ள சைவ வேளாளக் குடும்பம் ஒன்றில் 1822 ஆம் ஆண்டு, மார்கழி மாதம் பிறந்தவர்; தந்தை கந்தப்பிள்ளை. தாய் சிவகாமியம்மை. இவர் திண்ணைப் பள்ளியிற் படித்த 12ஆம் வயதில் பர்சிவல் பாதிரியாருடைய பாடசாலையில் ஆங்கிலமும், சேனாதிராய முதலியார், சரவண முத்துப்புலவர் முதலிய வித்துவான்களிடம் தமிழும் படித்தார். பர்சிவல் பாதிரியார் இவருக்கு 19ஆம் வயதிலேயே இருமொழித் திறமை இருப்பதைக் கண்டு, தமது பாடசாலையில் தமிழ் ஆங்கில உபாத்தியாயராகவும், தமக்குத் தமிழ்ப்பண்டிதராகவும் அமர்த்திக் கொண்டு, பைபிளைத் தூய தமிழில் மொழிபெயர்க்கச் செய்தார். நாவலர் பைபிளை மொழி பெயர்த்து வருகிற காலத்திலே தமது சமயத்தை உணரவேண்டுமென்ற உணர்ச்சி தோன்றச் சைவசித்தாந்த சாஸ்திரங்களையும், திருமுறைகளையும், சமஸ்கிருதத்தையும் கற்றுச் சைவாகமங்களிலே வேண்டிய பகுதிகளையுந் தாமே கற்றுக்கொண்டார். இளமை தொட்டே கோயில்களிற் புராணங்களுக்குப் பதப்பொருள் கூறி விருத்தியுரை சொல்லுதல், தருக்கித்தல் முதலிய பழக்கங்களும் இவரிடம் இருந்துவந்தன. சைவானுஷ்டானங்களில் என்றுமே இவர் தவறியதில்லை.
அக்காலத்தில் பாதிரிமார் மதமாற்றத்துக்குக் கையாண்ட முறைகளால் நாவலருக்கு வருத்தம் உண்டாயிற்று. அவருடைய வாழ்க்கையே மாறியது. அவர் இல்வாழ்க்கையிற் புகாமல் சமய வளர்ச்சிக்கே உழைக்கவேண்டும் என உறுதி செய்துகொண்டார். 21ஆம் வயதின் தொடக்கத்தில் மாணவர் சிலரைச் சேர்த்துச் சம்பளம் பெறாமல் இராக்காலங்களில் சமய நூல்களையும் கருவி நூல்களையும் படிப்பிக்கத் தொடங்கினார். 25ஆம் வயதில் வெள்ளிக்கிழமைதோறும் பெருந்திரளானவர்களுக்குச் சமயச் சொற்பொழிவு செய்துவந்தார். பின்னர் தமது உத்தியோகத்தை விடுத்து, 26-ஆம் வயதில் யாழ்ப்பாண நகரத்தில் சைவப்பிரகாச வித்தியாசாலையைத் தாபித்தார். இவருடைய மாணவர்களே ஆசிரியர்கள் ஆனார்கள். மருமகரும் மாணவருமான வித்துவ சிரோமணி பொன்னம்பல பிள்ளை பாடஞ் சொல்லுவதிலேயே காலங்கழித்தார். சபாபதி நாவலரும் இவருடைய மாணவர்களிற் சிறந்தவர். தமிழ்நாடு முழுவதிலும், சிதம்பரம் முதலிய முக்கியத் தலங்கள் தோறும் சைவ வித்தியாசாலைகள் அமைக்கவேண்டும், சைவப்பிரசாரகர்களை உண்டாக்க வேண்டும் என்கின்ற ஊக்கம் நாவலருக்கு வரவரக் கிளர்ந்தது. நாவலர் என்ற பட்டம் 27ஆம் வயதில் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்டது. இராமநாதபுர சமஸ்தானம் நாவலர் முயற்சிகளுக்கு வலிந்து உதவ முன்வந்தது.
சிறியவர்களுக்கும் வயது வந்தவர்களுக்கும் உபயோகமான கருவி நூல் சமய நூல்களின் இன்றியமையாமையை உணர்ந்து, புதியனவாக நூல்கள் எழுதவும், ஏட்டிலிருந்தவைகளை ஆய்ந்து அச்சிடவும் இவருக்குப் பணி ஏற்பட்டது. இலங்கைப் பூமிசாஸ்திரங்கூட இவர் எழுதினார்; கணிதவாய்பாடுகளும் எழுதினார். நாவலருடைய எழுத்துக்களும் பேச்சுக்களும் பதிப்புக்களும் சூழ்நிலையின் படிப்படியான வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டவை. அக்காரணத்தால் இவர் முயற்சிகளெல்லாம் சிறந்த அடிநிலையிலிருந்து தொடங்கி நடந்தவைகள் என்னலாம்.
1. இவர் எழுதிய 1, 2, 3, 4ஆம் பாலபாடங்கள், திருவிளையாடற்புராண வசனம், பெரியபுராண வசனம், சூசனம் என்பவை ஒருவகையில் அமைந்திருக்கின்றன.
2. இலக்கணவினாவிடை, இலக்கணச் சுருக்கம், நன்னூற் காண்டிகை எழுதியதும், நன்னூல் விருத்தி, இலக்கணக்கொத்து, இலக்கணவிளக்கச் சூறாவளி, தொல்காப்பியப் பாயிர முதற் சூத்திரவிருத்தி, பிரயோக விவேகம், சேனாவரையம், தருக்க சங்கிரகம், நிகண்டு பதிப்பித்ததும் மற்றொரு வகை.
3. 1,2ஆம் சைவவினாவிடை, நித்தியகரும விதி, சிவாலயதரிசன விதி, புட்பவிதி, சிதம்பரமான்மியம், சைவசமயநெறி உரை, கோயிற்புராண உரை, திருமுருகாற்றுப்படையுரை எழுதியதும், சிவஞானபோதச் சிற்றுரை, பதினோராந்திருமுறை, திருவாசகம், அகத்தியர் தேவாரத்திரட்டுப் பதிப்பித்ததும் வேறொரு வகை.
4. பாரதம், சேதுபுராணம், கந்தபுராணம், பெரியபுராணம், திருக்குறள் பரிமேலழகர் உரை, திருக்கோவையார் உரை ஆகிய பதிப்புக்கள் வேறொரு வரிசை.
5. சைவதூஷணப் பரிகாரம், சுப்பிரபோதம், மித்தியாவாத நிரசனம் முதலிய கண்டன நூல்கள் எழுதியது ஒருவகை. மேலும், சமூக அரசியற் பிரச்சினைகளில் ஈடுபட்டுக் காலந்தோறும் வெளியிட்ட கட்டுரைகள், கண்டனங்கள் மிகப் பல. அவற்றுள் சில நாவலர் பிரபந்தம் என்ற பெயரில் வந்திருக்கின்றன. இவர் இயற்றிய கீர்த்தனங்களும் பாடல்களும் சில உண்டு. எண்ணிறந்த பிரசங்கங்களும் புராண வியாக்கியானங்களும் இவர் செய்தவை எழுதப்படவே இல்லை. தமிழ் உரைநடை ஆறுமுகநாவலரால் ஒருவகைத் திருத்தமும் அழகும் பெற்றது. சி. க.