ஒலி: தமிழுள்ளிட்ட இந்திய மொழிகளில் நெடுங்கணக்கில் வரும் மூன்றாம் எழுத்து ; மூன்றாம் உயிர். இது குறில். சுற்றியுள்ள பற்களின் அடியினை மெல்ல ஒற்றிப் பரவி நிற்குமாறு நாவினை அமைத்து, அண்ணத்திற்கும் நாவிற்கும் இடையே இடைவெளி சிறிதே இருக்கும்படி, வாயைக் குவியாது, உதட்டினைக் குறுக்காக விரித்து ஒலிக்கும் ஒலிப்பு உயிர் இதுவாம். இதனைச் செறிவுடை (Close) குவியா (Unrounded) முன்வாய் (Front) நெகிழ் (Lax) குறில் உயிர் (Short vowel) என்பர். தமிழில் முதலாகாத ய, ர, ல என்பவற்றில் ஒன்றில் தொடங்கும் பிறமொழிச் சொற்களில் இது இன்னிசை முந்துநிலை எழுத்தாகவும் (Prothesis) (இயக்கன், இராமன், இலக்கம்), தமிழில் வாராத கூட்டெழுத்துக்களைப் பிரிக்க வரும் இன்னிசை இடைநிலை எழுத்தாகவும் (Epenthesis) (ரத்னம்-இரத்தினம்), பின்வரும் யகரத்தின் சார்பால் அண்ணச் சாயல்பெற்று உதட்டுச் சாயல் நீங்கிய குற்றியலுகரத்தின் குற்றியலிகர ஒலியாகவும் (காடு + யாது = காடியாது), ஞ, ண, ந, ம, ன, ர, ல, வ, ழ, ள என்பவற்றின் பின் யாகாரத்தினை ஒலிக்க முந்தும்போது எழும் வழுக்கொலியாகவும் (Glide), (மண் + யாது = மண்ணியாது), வடமொழியில் ஈற்று யகரத்தின் தமிழ் ஒலியாகவும் (கன்ய > கன்னி), சிறு > சிறி முதலிய இலக்கிய வழக்கில் உகரத்தின் மாற்றெழுத்தாகவும், இருவர் இரிவர் என்பது போன்ற மலைநாட்டு வழக்கில் உகரத்தின் மாற்றெழுத்தாகவும், கத்திக்கு> கத்திக்கி எனத் தெலுங்குறவால் வடதமிழ்நாட்டிலே முன்வரும் இகரச் சார்பால் பின்வரும் உகரத்தின் மாற்றெழுத்தாகவும் இந்த இகரம் வரக்காண்கிறோம். கொடுந்தமிழ் வழக்கில் இகரம் எகரமாக ஒலிக்கும் (இடை, எடை). இழி வழக்கில் முதலில் வரும் எழுத்துடன் சேர்ந்து இது அதனை மாற்றுவதும் உண்டு (இரட்டி-ரெட்டி; இரண்டு - ரெண்டு). நாச் சிறிது அண்ணத்தை ஒட்ட வரின் யகரம் ஒலிக்குமாதலின் இழிவழக்கில் இகரம் யகரத்தோடு ஒலித்தலும் உண்டு. முன்னாளிலும் இலக்கிய வழக்கில் போஇ> போய் என இகரம் யகரமாக ஒலித்ததும் உண்டு.

பொருள்: இவன் என்பதைப்போல அகச்சுட்டாகவும், இக்குதிரை என்பதைப்போலப் புறச்சுட்டாகவும், இருதிணை முக்கூற்றொருமை விகுதியாகவும் (கையிலி), ஆண்பால் விகுதியாகவும் (வில்லி), பெண்பால் விகுதியாகவும் (கூனி), ஒன்றன்பால் விகுதியாகவும் (காலி), வினைமுதற்பொருள் விகுதியாகவும் (அலரி), செயப்படுபொருள் விகுதியாகவும் (தீனி), கருவிப்பொருள் விகுதியாகவும் (மண்வெட்டி), வினைச்சொற்களில் எதிர்கால முன்னிலை ஒருமை விகுதியாகவும் (வருதி), ஏவல் ஒருமை விகுதியாகவும் (செல்லுதி), வியங்கோள் விகுதியாகவும் (காட்டி), பகுதிப்பொருள் விகுதியாகவும் (உருளி), தொழிற்பெயர் விகுதியாகவும் (வெகுளி), வரும். திராவிட மொழியில் முன்னிலையின் அடிப்படை உயிர் இகரம் என்பர்.

இ என்பது அரை என்னும் எண்ணின் குறியாக வரும்.

வடிவம்: இந்த எழுத்தின் வடிவம் வளர்ந்த வரலாறு பின் வருமாறு :

வட்டெழுத்தின் வளர்ச்சி கீழ்க்கண்டபடியாம் : 3 போல் எழுதப்பெறும் இகரம் வட்டெழுத்தில் அடிவளைவு வலப்புறமாகச் சுழிக்கப்பெறும்.

உயிர்மெய்யெழுத்தில் இகரத்தைக் குறிக்கும் மேல் விலங்கு கோலெழுத்தில் மெய்யெழுத்தின் உச்சியின் மேல் முதலில் கோணமாக நின்றது வளைவாகிப் பின் தனித்து நின்று, பின்னர்த் தலையின் வலப்புறத்தில் ஒதுங்கிவரத் தொடங்கியது.

வட்டெழுத்தில் வலப்புறத்தில் வலஞ்சுழியான வளைவாக எழுகிறது. தெ.பொ. மீ.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/இ&oldid=1462480" இலிருந்து மீள்விக்கப்பட்டது