கலைக்களஞ்சியம்/இந்திய அரசாங்க வானிலையியல் இலாகா

இந்திய அரசாங்க வானிலையியல் இலாகா: இதன் முக்கிய வேலைகள் : (1) இந்தியாவில் காலநிலையையும் தட்பவெப்ப நிலையையும் ஆராய்தல். (2) கால நிலைபற்றிச் செய்தி அறிக்கை வெளியிடுதல். (3) புயல், கடுமழை முதலியவை பற்றி எச்சரிக்கை விடுத்தல். (4) பூமி அதிர்ச்சி, வானவியல் சம்பந்தமான விஷயங்களை ஆராய்தல். இவ்விலாகாவின் நிருவாகத் தலைமை அலுவலகம் டெல்லியிலும், ஆராய்ச்சி அலுவலகம் பூனாவிலும் இருக்கின்றன. செய்தி வெளியிடும் நிலையங்கள் பம்பாய், கல்கத்தா, டெல்லி, சென்னை, நாகபுரி ஆகிய இடங்களில் உள்ளன. பம்பாயிலுள்ள வானோக்கு நிலையங்கள் பூமி அதிர்ச்சி, புவிக்காந்தம், வாயுமண்டல மின்சாரம் ஆகியவைபற்றியும், கொடைக்கானலிலுள்ள வானோக்கு நிலையம் சூரியமண்டல பௌதிகம் பற்றியும் ஆராய்ச்சிகள் நிகழ்த்துகின்றன. அண்மையில் ஷில்லாங் என்னுமிடத்தில் பூமி அதிர்ச்சியியல் மத்தியவானோக்கு நிலையம் நிறுவப்பட்டிருக்கிறது. இவ்விலாகா தனக்குத் தேவையான அறிஞர்களைத் தயாரிக்கப் பூனாவில் ஒரு பயிற்சிச்சாலை நடத்திவருகிறது.