கவியகம், வெள்ளியங்காட்டான்/இன்பச்சிகரம்
இன்பச்சிகரம்
சின்னஞ் சிறிய பிறைமதி தோன்றுது
தேன்நில வைப்பொழிந்து - நிறைந்
தென்னித யக்கடல் பொங்குது வானையே
எட்ட அலையெழுந்து!
வான வெளியினில் ஞான வடிவைனும்
வண்ணச் சுடரினங்கள் - பர
மோன நிலையில் முகிழ்த்தன வந்துவென்
முத்தம் தெளித்தது போல்!
அன்றலர் மல்லிகைப் பூவில் கமழும்
அரிய நறுமணத்தை - வரும்
தென்றல் பணிமகள் நன்றென ஏந்தித்
திளைக்க வழங்கிடுவாள்!
ஆகங் குளிருமிவ் வேளையி லாரணங்
காவல் வடிவினளாய்க் - கரு
மேகத் திரையை விலக்கி நகைத்தெழில்
மென்முகங் காட்டுகிறாள்!
போதும் அளவு பருகியே மோகனப்
போதையில் ஆழ்ந்திடவே - பெருங்
கீத மதுவை நிறைத்த நறுந்தமிழ்க்
கிண்ணியை நீட்டுகிறாள்!
என்னை மறந்த நிலையில் விளைந்த
இனிய மயக்கினிலே - அருங்
கன்னிக் கவிதையென் காதலி சீவனைக்
கட்டித் தழுவுகிறாள்!
அன்பும் அறிவும் கலந்த அமிழ்தெனும்
அற்புதம் சேர்க்கையில்நான் - இருந்
தின்பச் சிகரத்திலேறித் திளைக்கிறேன்
இவ்வுல கந்Oதனி லே!