கவியகம், வெள்ளியங்காட்டான்/எதிர்பார்த்தல்
கூடிக் குழந்தைகள் ஓடித் தெருவினில்
கும்மாளம் கொட்டயிலே - அவர்
வேடிக்கைப் பேச்சுக்கள் பேசியென் நெஞ்சில
விருப்பம் விளைத்து விட்டார்!
கொல்லைப் புறந்தனில் நெல்லைக் கொறிக்கும்
குருவி விரட்டையிலே - எழில்
மல்லிகைப் பூவினை மெல்ல எறிந்து
'மறந்தனை யோடி' யென்றார்!
தங்கக் குடத்தினைத் தேய்த்துக்கழுவியே
தண்ணீர் முகக்கையிலே - வந்து
புங்க மரத்தின் மறைவி லிருந்து
பொழுது குறித்துரைத்தார்!
'தாயர் தமக்கையர் காவல் கடந்திடத்
தாமத மாகு' மென்றேன்; - அடி
ஆயிரம் ஆண்டுகள் காத்திருப் பேனிந்த
ஆற்றங் கரையிலென் றார்!
நீலத் துகில்துணி கொண்டு வியர்க்குமென்
நெற்றி தனைத்துடைத்தேன் - உன்றன்
சேலொத்த கண்களைச் சேலை மறைக்கவும்
சிந்தை வருந்துதென்றார்!
என்னகந் தன்னையோர் கோவிலாய்க் கொண்டதில்
என்றும் இருப்பவரை - ஒரு
புன்னகை யால்வர வேற்றுக் களிக்கப்
பறந்தெதிர் பார்த்திடவே!
வாழும் பயிரின மோங்கி வளர்ந்திட
வானத்தைப் பார்ப்பதுபோல் - இன்று
வீடு மறந்து வினைமறந்து நின்றேன்
வீதி முனைதனிலே!