கவியகம், வெள்ளியங்காட்டான்/சொல்லும் செயலும்

சொல்லும் செயலும்

அந்தி மயங்கும் சமயத்திலேஅம
ராவதி யாற்றங் கரைதனிலே - அந்தச்
சுந்தரக் காட்சியில் சிந்தை சுகத்தினில்
சொக்கியமுங்கியிருக்கையிலே!

சின்னஞ் சிறுபிறை என்னவோ சீக்கிரம்
செப்ப விரும்பிச் சிரித்ததனால் - அதன்
கன்ன லுரைகளைக் கேட்கக் கருதியென்
காதைக் கொடுத்துக் களித்திடவே!

'ஏனெனக் கேட்க எவருமிங் கில்லையோ
ஈசா இதுமுறை யோ வெனவே - ஒரு
தீனக் குரலென் செவியில் விழுந்து
திடுக்கிடச் செய்தது. 'ஆ' வெனவே!

தேவன் பெயர்சொல்லிக் கூவி யுரைத்திடத்
திக்கு திசைதெரியாதவரோ? அந்தோ!
பாவம், பாவம்! அவர் யாரெனப்பார்த்துப்
பயத்தை யாற்றிடலாமெனவே.

கருணையைக் காட்டும் தருணத்திற்காகவே
காத்துக் கிடந்தவன் போன்றெழுந்து - சென்றேன்
மரணத் துயர மெனினும் சரியதை
மாற்றுவ தென்ற மணந்துணிந்து!

எல்லையில் லாத மனங்கமழ்ந் திவ்வுல
கெங்குமெல் லாரையு மின்புறுத்தும் - எழில்
முல்லை பெறும்நளிை நல்ல மலர்கள்
முகிழ்க்கும் அரிய பசுங்கொடியும்

சேயற்ற தாயெனத் தன்னுளஞ் செத்துச்
செயலு மிழந்து தரைதனிலே - பெரும்
நோயுற்ற வாறுதன் வாயுற் றழுதுமெய்
நொந்து கிடந்தது துறையிலே!

கல்லுங் கரையக் கசங்கிக் கிடக்குமக்
காட்சியைக் கண்டு கவலையொடு - ஆகா!
முல்லையே! சொல்லுனக் குற்ற துயரம்
முழுவது மென்னிடம் பற்றுடனே!

கல்லின் வலிதெனச் சொல்ல இப் புற்றரை
காய்ந்து கசங்க வருத்தியதோ? - இல்லை
மெல்லிய மேனியில் வெல்லைப் பொறாமலே
மெத்தவும் நைந்து குலைந்தனையோ?

வண்ண மலர்க்கொடி யாகிய வுன்னுடல்
வாட்டம் தவிர்த்து வளமுறவே - வானத்
தண்ணமு தென்னக் குளிர்ந்த பெருமழைத்
தாரைகள் வேண்டித்தவித்தனையோ?

உன்றளிர் மேனி யுலைவினுக் கேவலு
வயூட்டும் மருந்தை யுதவிடவே - அந்தத்
தென்றல் மருத்துவி யின்றும்வ ராததால்
தேம்பி யழுது திகைத்தனையோ?

உண்டு மகிழும் உறவின ராகி
யுவந்துனை நித்தமும் நாடிவரும் - கரு
வண்டுகள் கொடை மதுவெறி யாலே
வருத்தமுண் டாகவே வைதன வோ?

ஏறிப் படர்வதற் கேற்ற கொளுக்கொம்பொன்
றில்லையே என்பது காரணமோ - அன்றி
வேறெது வோனது வாயினும்நீசொல்ல
வேண்டுமுன் வாய்திறந் தென்னிடமே'

என்று வினவி யிதய முருகியே
இன்முகங் காட்டுகையில் - மனங்
குன்றிக் கிடந்தஅக் கோமள முல்லைக்
கொடியு முரைத்தது காண்.

மானிடர் கண்ணில்படாமல் மறைந்து
மகிழ்ச்சியாய் வாழ்வதற்கே - இது
தானிட மென்ப தறிந்துநா னிங்கு
தனித்துத் தழைத்திருந்தேன்!

உயிரி னினிய வுடைமைக ளாமென்
நுரிய மலர்களையின் - றெனது
வயிறெலாம் பற்றி யெரிந்திட வந்தொரு
வனிதை யபகரித்தாள்!

கருந்தன மென்னப் பொருந்திய என்னருங்
காதல் கவின்மலர்கள் - ஐயா!
மருந்துக்கொன் றின்றி வருந்தவே வந்தொரு
மங்கை யபகரித்தாள்!

இப்படிச் செய்தபின் இவ்வுல கத்தி
லிருந்துயிர் வாழுவது - இனி
எப்படி? ஐயனே! எப்படி? எவ்விதம்?
என்ன வகையிதற்கு?

கொல்லையில் வாழுங் கொடியன்று நாணிக்
கொடுமைப் படுவதற்கும்!' - என்று
முல்லை மொழிந்த முறையிது கேட்டு
முறுவ லொடும் மொழிந்தேன்;

'பாரி பிறந்தஇப் பைந்தமிழ் நாட்டினில்
பச்சைப் பசுங்கொடியே பிறர்க்கு
வாளி வழங்கும் வழக்கறி யாதுநீ
வாழ விரும்புவதோ!

தமிழை வளர்க்கும் கவிஞன் தழைத்திடத்
தண்தலை தந்தவனும் - அருங்
குமணன் பிறந்த குவலயந் தன்னில்
கொடேனென்று கூறுவதோ!

உன்னிட முள்ள வுயர்ந்த தனைத்தும்
உலகுக் களித்திடுக! - எனத்
தன்னிகரற்றநம் காந்தி யடிகளும்
தம்திரு வாய் மலர்ந்தார்!

ஈந்தவ ரன்றி யிருப்பவ ரெல்லாம்
இறந்தவராகிடுவார் - இது
மாந்தர்க்கு மாத்திர மன்று; மலர்க்கொடீ!
மற்றுனக் கும் பொருந்தும்!

வாடி வதங்கி யுதிர்ந்துலர் கின்றவுன்
வண்ண மலர்களெலாம் - மாதர்
நீடிய கூந்தலில் சூடல் நலமென
நெஞ்சு நெகிழ்ந்து ரைத்தேன்.

கூம்பிக் கிடந்த குலக்கொடி முல்லையும்
கூர்ந்திதைக் கேட்டவுடன் - நல்ல
பாம்பெனச் சீறிப் பகர்ந்தது மேனி
பதறப் படபடத்தே!

'சொன்னதைச் சொல்லுங் கிளியெனச் சொல்லவே
சொந்தமில் லாதசொற்கள் - சொல்லி
என்னையு மேய்க்க இயம்புவதில்பய
னெள்ளள வில்லை.ஐயா!

சொல்லும் விருப்பம் முளதெனிற் சொல்லுக!
சொந்த அனுபவத்தை - அது
இல்லை யெனின்சற் றிருந்தினிச் செல்லுக!
இவ்விடம் விட்டெனவே!

நல்லவர் சொல்லினில் முல்லைக்குங் கூடவா
நம்பிக்கை யற்றது நாட்டிலென ஒரு
எல்லையில் லாத இடும்பையில் மூழ்கியே
என்னை மறந்தித யம்மெலிந்தேன்.

ஈகை யெனுமின் வியல்பினைச் செய்கையில்
இக்கொடிக் கின்றுகாட் டாதவனாய்
ஏகுவதில்லை யினியென நொந்தென்
ளிைதய மிடகுறும் வேளையிலே!

செக்கச் சிவந்தநன் மேனியன், வாலிபன்
சிந்தை முழுது முருக்குகிற
துக்கம் மிகுந்த முகத்தின னக்கணம்
தோன்றியே நின்றனன் கண்னெதிரில்!

சொந்த வுறவினரான வொருவரின்
சுந்தரச் சாயல், சுறுசுறுப்பும்
அந்த இளைஞனின் மேனி யகம்புற
மாக அமைந்தததிசயமே!

முல்லைக் கொடியின் முகமும் கவிழ
முறையுடனிங்கிவ் வினையனுக்கு
நல்ல விதத்தி லுதவியே நானுமென்
நன்மதிப் பைநிலை நாட்டிடவே.

பொன்னான வேளை பொருந்திய தென்னப்
புகல்பவ னாகிப் பொருமலுடன்,
என்னா லியன்றதைச் செய்தவன்; தீர்ப்பதற்
கென்ன குறையுளக் குண்டெனவே!

நெஞ்சம் படபட வென்றுதுடிக்க
நெகிழ்ந்து நெருங்கியே நானவனைக்
கொஞ்சமும் கூடக்கூ சாமல் தழுவியே
கூறெனக் கூறினேன் கோமளமாய்!

ஆறுத லான இவ் வு,றகல் சொற்களா
லவனு மகமகிழ்ந் தார்வமுடன்
கூறினன் கூறத் தகாத குறைகளென்
கும்பி பகீரென் றெறிந்திடவே!

கால னெனச்சொலு வாரெனைக் கண்டவர்;
கண்க ளிரண்டுமில்லாதவன்நான்!
ஞால மிசைவலு வானவ ராமொரு
நல்ல மனிதனை நாடிவந்தேன்!

நாழிகை யைமணி யாக்கி யிரவினை
நண்பக லாக்கிய மோட்டுகிறேன்:
ஊழிகளைச்சிறு வேளைகளாக்கி
உலகை யுருட்டியுங் காட்டுகிறேன்!

கண்ணுக்கு முன்னொரு 'காணத் தகுந்தநற்
காட்சி யெனக்கை யொலியெ முப்ப,
மண்ணில் மறைந்தொரு சின்ன விதையை
 மராமர மாக்கியும் மாற்றுகிறேன்.

சின்னஞ் சிறுவுரு, பண்ணும் மழலைச்
சிறுமியை யேந்திச்சீ ராட்டயிலே,
கன்னலினும்நளிை நல்ல சுவைதரும்
கற்கண்டுக் காரிகை யாக்குகிறேன்!

சந்திரன் சூரியன் விந்தை மிகுந்ததோர்
சத்துரு மித்தரு வாயமைத்து.
அந்தி பகலெனப் பந்தப் படுத்தியே
ஆனந்த மூட்டுவே னாயிடினும்

ஈகை யிரக்க மிருக்கு மொருவகை
இவ்வுல கெங்கணும் தேடியேஎன்
தேக மிளைத்தது. தேய்ந்தன காலும்:
தெரிந்தது நீரிங் கிருப்பதுவும்!

'கண்ணிரண் டுந்தெரி யாத குரு'டென
காசினி மீது சனித்துவிட்டேன்.
அண்ண இரண்டுகண் ணுண்டெனி லொன்றை
யளித்தெனைக் காத்திட வேண்டுமென்றான்.

முல்லைக் கொடியின் துயரைத் தவிர்க்க
முயன்றது முற்றிலு மேயெனக்குத்
தொல்லையாய் வந்து தொலையத் தொடர்ந்தொரு
துன்பமுங் கூடவே தோன்றிடுது'

கண்ணையும் காசென எண்ணுகின் றானிவன்
கயவ னெனவே யினியெதனைப்
பண்ணுவதென்று பயந்தது நெஞ்சம்
பதறிய தென்னுட லும்முயிரும்!

'கண்ணப்ப நாயனாராகிக் கலங்கிடும்
காலமும் வந்துற்ற தோவெனவே
எண்ணவும் பண்ணிய தென்தலை எந்திர
மென்னவும் பண்ணிச் சுழற்றியதால்!

செப்படி வித்தையைச் செய்தனன் 'சீ' யெனச்
சிந்தை கலங்கிய தும்மயங்கித்
தொப்பெனப் புற்றரை மேல்விழுந் தேன்உயும்
தோதெது வும் துலங் காதவனாய்!

உதவி புரிகிற வுத்தம நற்குண
முள்ளஎன் அண்ணலே! மேடுகுழி
எதுவுமில் லாத இடத்தினில் தொப்பென
இப்படி யேன் விழுந்தீர்க'ளென்றான்

'உன்னைநான் தொட்ட அளவிலென் னுள்ளத்
துணர்வு முழுதும் தொலைந்து - அடா!
என்னுயிர் கூடவுடலைவிட் டிப்பொழு
தேகிற் றெனவுள்ள தென்கிறேன்.

'காணாமற் போகு முயிரைக் கணத்திலே
கண்டெடுத் துத்தரு வேனுளம் சற்றுங்
கோணாமற் சீக்கிர மாயொரு கண்ணைக்
கொடுத்தருள் செய்யுங்க' ளென்றனன்.

ஆழந் தெரியாமல் காலைவிட் டேனடா!
அற்பனே! நீ கெடு வாயடா! - என்றேன்
கோழையைப் போலப் புலம்பவே, முல்லைக்
கொடியு முரைத்தது கோபமாய்!

'சொல்லுக்குச் சொல்லழ காகவே சொல்லியென்
சோகந் தவிர்த்திடச் சொன்னநீர் - ஐயா!
சொல்லைச் செயலினில் காட்டெனச் சொல் லவே
சொக்கி மயங்கி விழுகிறீர்!

பாரி குமணன் கதைகளைக் கூறிப்
பரிபவம் தீர்க்கப் பரிந்தநீர் - கொஞ்சம்
நேருக்கு நேர்செய்து காட்டெனக் கூறவே
நினைவு தவறி விழுகிறீர்!

பாரி லிருக்கும் வரையினி யேனும்
படிப்பினைப் பாங்கறியாமலே - நாளும்
ஊருக் குபதேசம் செய்வதை மட்டும்
உடனடி யாய்மறப் பீரென

காரிய மில்லை யினியிருந் தென்னக்
கசந்தவ னாகி யெழுந்ததும் - மெல்ல
ஊருக்குப் போகும் வழிபிடித் தேனொரு
உமையைப் போலன்று நானுமே!

'தேவியே! என்குறை தீர்த்திடு வாயெ'னத்
தெருவினில் கோவிலைக் கண்டதும் - நொந்து
கூவவே, 'ஏனிதோ வந்தவிட் டேனெ'னும்
குரலும் குளுமையாய்க் கேட்பது.

'கலகல' வென்ற சிரிப்புடன் கூடவே
காதல் களிமயி லன்னவள் - வந்து
'பலபல' வென்று விடிந்த தெழுங்கள்
படுக்கை சுருட்டலா மென்றனள்!