கவியகம், வெள்ளியங்காட்டான்/விவசாயம்

விவசாயம்

மணஞ்செய்த மறுவருடம் தனிலி ருந்தே
மாதரசி தாரா.மல் கட்ட லானாள்
'பணம்செய்து கொண்டுவரா விடா லென்னால்
படைக்கமுடி யாதுணவு பாங்கா' யென்றே.

'புளி காரம் போடாம லுப்பைப் போட்டுப்
புது விதமாய்ச் சமைத்திட்டால் போது மெனறேன
'பழிகார ரிதையறிந்தால், நம்மைப் பற்றிப்
பார்முழுதும் பரப்பிடுவாரிழிவை' யென்றாள்.

'நாம்நமக்காய் வாழுவதே யன்றி மற்றிந்
நாட்டார்க்காய் வாழல் நல மாகா தென்றேன்.
போம்நுமக்குப் பொழுதுபோ காவிட்டால்நும்
புதுவிதத்தைப் பொறுக்கியெடுத் துக்கொண்' டென்றாள்.

'உள்ளதனை வைத்துக்கொண் டுண்மை யாக
உலகத்தில் வாழ்வதுதா னுசித மென்றேன்
'பள்ளியிலே படித்துவந்த பாடத் தாலே
பசிருசிதா னொருபோதும் படியா' தென்றாள்.

என்னசொன்ன போதும்துளி காதில் வாங்கா
தெதிர்த்தெதிர்த்துப் பேசுவதை யெதிர்த்து நானும்
கன்னத்தி லொப்புக்கோரடிகொ டுத்தேன்;
கண்ணையவள் கைகளினால் கசக்கிக்கொண்டே.

'என்னென்ன படவேண்டு மென்றத் தெய்வம்
என்தலையி லெழுதியதோ அறியே'னென்று
பன்னியழத் தொடங்கிவிட்டா லதனைக் கண்டு
பாகாக வருகிற்றன் றெனது நெஞ்சும்!



ஆயிரம்நூல் கற்றாலு மென்னே பெண்ணே!
அதிபதியாய் வாழ்ந்தாலு மென்னே, பெண்ணே!
நேயப் பெண் கண்ணிரைக் கண்டு, நெஞ்சம்
நிலைகுலையா ஆண்மகனெங் கேனு முண்டோ?

'பெண்மையே வெற்றிபெறு' மென்று முன்னோர்
பேசினது பன்முறைநான் கேட்ட துண்டு:
உண்மையாய் நேரிலதைக் கண்டேன்; காண
உடைந்ததுள மொழுகிற்றென் கொள்கை யெல்லாம்!

பரிவான குரலிலிது பகர்ந்தேன்; பெண்ணே!
பண்டையவன் னடிக்கடனைத் தீர்த்தே னேனும்,
இரவான வாழ்விதனை வேண்டே னீயாய்
எகுகிறேன் பொருள்தேட இனிநா னென்றே.

எனதுமறு மொழியால்தன் னிதயந் தன்னில்
இன்பமிகுத் திருப்பதனை யியம்பா ளாகித்
தனதருமைக் கன்னத்தைத் தடவி னாளாய்த்
'தகாத செயல் செய்தீர்நீ ரன்றோ! இன்று!

எத்தனையோ நாள்தவம்நான் செய்து பெற்ற
வெழிலார்ந்த கனியெனவே இனிக்க, நீங்கள்
முத்தமிடும் கன்னத்தி லடித்து, நோவை
மூட்டிவிட்டீ ரிதைமறக்க முடியா' தென்றாள்.

வார்த்தையிலே சினம் நிறைந்து வடிந்த
தேனும் வடிவழகி யவள் முகத்தை வலிந்து கூர்ந்து
பார்த்ததிலே எனைப்பகடி பண்ணல் போலட்
பட்டதனால் கலகலென நகைத்தே னன்றே!