காட்டு வழிதனிலே/இளமை

இளமை



ளமை ! அந்தச் சொல்லிலே ஒரு மந்திர சக்தி இருக்கிறது. அளவற்ற பலம், அளவற்ற நம்பிக்கை, கரை கடந்த உற்சாகம், அஞ்சா நெஞ்சம், மவர்ந்து வழியும் அழகு—இவற்றிற்கெல்லாம் இருப்பிடமானது இளமையல்லவா?

இளமை என்றவுடன் கவிஞனின் உள்ளம் பொங்குகிறது. அதன் மோகன சக்தியிலே கவிதை பெருக்கெடுத்தோடுகிறது; கலை தழைத்தோங்குகிறது. இளமையே கவிஞனுக்கு உயிர் கொடுப்பது; கலைஞனுக்கு அமுதாவது. இளமையே கற்பனையின் ஊற்று ; இளமையே எண்ணத்தின் உயிர்நாடி.

ஒரு நாட்டிற்கு ஒளி தருவது இளமை. இளமை மார்தட்டி ஆர்த்தெழுந்தால் ஆகாததும் உண்டோ? எந்த நாட்டு வரலாற்றை வேண்டுமானாலும் ஆராய்ந்து பாருங்கள். அந்த நாட்டு வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இளமையே முக்கிய காரணமாக இருந்திருக்கும். ஆயிரக்கணக்கான இளைஞர்களின் சேவையாலும், தியாகத்தாலுமே நாடு முன்னேற்றமடைகிறது.

இளமை கணக்குப் பார்க்காது. செயலில் இறங்குவதற்கு முன்பே இலாப நஷ்டத்தைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்காது; அதன் உள்ளத்தை ஏதாவதொன்று தொட்டுவிட்டதானால், அதன் கற்பனையை ஏதாவதொன்று சுடர்விட்டெழச் செய்து விட்டதானால், அதற்காக எதையும் பலி கொடுக்கத் தயாராக இருக்கும். தயக்கமோ, சோர்வோ, பின் வாங்குதலோ இளமையின் இயல்பல்ல. ஏறமுடியாத மலைச் சிகரத்தின் மீது ஏறுதல், தாண்ட முடியாத மலைத் தாண்டுதல், எட்டிப் பிடிக்க முடியாத வானத்தை எட்டிப் பிடித்தல்—இவைகளே இளமையின் ஆர்வமிக்க முயற்சிகளாகும். “எண்ணித் துணிக கருமம்” என்பது மறை மொழியாயினும், எண்ணாது துணிவது இளமையின் இதயத் துடிப்பாகும்.

இமைதான் காதல் வளர்கின்ற பருவம். அதுவே கனவு காண்கிற காலம். எதிர்காலம் அதனுடைய நோக்கில் ஒளியுடன் விளங்குகின்றது. இளமையின் கண்களில் எல்லாம் ஒரே பசுமைதான்.

அழகும் இன்பமும் உயிர்த்துடிப்பும் விளங்குமிடத்திலெல்லாம் அவற்றை இளமையின் வடிவங்களெனக் காண்கிறேம். அழகும் இன்பமும் உயிர்த் துடிப்பும் நிறைந்துள்ள தமிழைக் கன்னித் தமிழ் என்கிறோம். என்றும் இளமையோடு, அழகோடு, ஆற்றலோடு, உயர்வோடு விளங்கும் இறைவனை இளமைக் கோலத்தில் தமிழ் நாட்டார் போற்றுகிறார்கள். முருகு என்ற சொல்லே இளமை, அழகு முதலிய தெய்வத் தன்மைகளைக் குறிக்கின்றது.

இளமையின் உள்ளம் எவ்வாறு துடிக்கிறதோ அதுபோலவே ஒரு நாட்டின் எதிர்காலம் உருவடையும். ஆதலால் இளைஞர்களைத் தன் வழியிலே திருப்ப முயலவேண்டும் என்று அரசியல்வாதி சூழ்ச்சி பேசுகிறான். தன் சுயநலத்திற்கும் அதிகார வெறிக்கும் இளமையைப் பலி கொடுக்க அவன் தந்திரம் செய்கிறான். வேகம் நிறைந்த இளமை அதிலே சில சமயங்களில் வீழ்ந்துவிடுகிறது. ஆனால், இளமைக்குத் தோல்வி என்பது கிடையாது. ஒரு கணம் அது தலைகுனிந்தாலும் மறுகணத்திலே தலை நிமிர்ந்து, தந்திரத்தையும் சூழ்ச்சியையும் சாடித் தகர்த்தெறிந்து விட்டு முன் செல்லுகிறது.

வயது அதிகப்படுவதால் மட்டும் ஒருவன் இளமையை இழப்பதில்லை. இளமையின் உள்ளக் கனலை அழியாது போற்றி வளர்ப்பவன் என்றும் இளமை யோடிருக்கிறான். “காலனைக் காலால் உதைப்பேன்” என்று வீறுபேசும் இளமை வீரத்தைக் கைவிடாதவன் என்றும் உயிரோடிருக்கிறான்.

இளமை ஓடுகிற பாம்பைக் காலால் மிதித் தழிக்கத் துள்ளி எழுகிறது. அச்சத்தைக் கண்டு சிரிக்கிறது. தோல்வியை எள்ளி நகையாடுகிறது.

இளைஞர்களே, உங்கள் பெருமையை உணர்ந்து கொள்ளுங்கள். மிகப்பெரிய எதிர்காலம் உங்களுடையது. எழுந்து நில்லுங்கள்; தோளைப் புடைத்து, மார் தட்டி, வீர முழக்கம் செய்யுங்கள். தவறுகளால் கட்டுண்டு இருளில் மூழ்கி உழலாதீர்கள். கண்ணைத் துடைத்துக்கொண்டு உங்கள் உண்மை வடிவத்தைக் காணுங்கள். உங்கள் வலிமையின் பேராற்றலை உணர்ந்து முன் செல்லுங்கள்.

இளமை வாழ்கென்று கூத்திடுவோமடா

இளமை வெல்கென்று கூத்திடுவோமடா

என்று கவிஞன் பாடுகிறான்.

இளைஞர்களே, எழுந்து முன் செல்லுங்கள். எதிர்காலம் உங்களுடையது. அதை உங்கள் சீரிய குறிக்கோள்களால் ஒப்பற்றதாகச் செய்யுங்கள். வையப்பரப்போடு வானப்பரப்பும் உங்களுடையது. வாழ்க இளமை !

"https://ta.wikisource.org/w/index.php?title=காட்டு_வழிதனிலே/இளமை&oldid=1535518" இலிருந்து மீள்விக்கப்பட்டது