காட்டு வழிதனிலே/கவிதை என் காதலி

கவிதை என் காதலி


தாமரை மலர் இதழ் அவிழ்த்து பொங்கு சுடர் போல விரிந்து நிற்கிறது. ஒரே வனப்பு! ரோஜா அழகாக மலர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறது. ஒரே சிரிப்பு. அவற்றைப் பார்த்தவுடனே என் உள்ளம் துள்ளிக் குதித்துக் கூத்தாடுகின்றது. ஏன்? அங்கே என் காதலி தோன்றுகிறாள்; கவிதை அணங்கின் புன்முறுவல் அவற்றிலே தவழ்கின்றது.

எழில் நிறைந்த பொருள்களெல்லாம் எனக்கு என்றும் இன்பம் தருகின்றன. இந்த எழில் எங்கே பிறக்கின்றது? உண்மை விளங்கும் இடத்திலே, சீலம் களிநடம் புரிகின்ற இடத்திலே, எழில் கோயில் கொண்டிருக்கின்றது. இயற்கை அமைப்பிலும், உருவத் தோற்றத்திலும் அழகுண்டு; ஆனால் உண்மையிலும், சீலத்திலும் பிறக்கின்ற அழகு அதை விடச் சாலச் சிறந்ததாகும். சனகனின் மகளாக வந்த சீதையின் மேனியழகு ஒப்பற்றதுதான். ஆனால் அதை விடச் சிறந்தது அப்பிராட்டியின் குண நலத்தினாலும் கற்பின் மாட்சியாலும் வெளியான ஆன்மிக அழகாகும்.

வடிவழகும், வாய்மை அழகும், சில அழகும், கவிதைத் தேவியின் உயிர், அவற்றைக் களைந்து விட்டால் அவள் பிணமாய்விடுகிறாள். அவளுக்கு எத்தனையோ அணிகளைக் கொண்டு ஒப்பனை செய்யலாம். ஆனால், இந்த உயிர் இல்லாவிடில் அவள் வெறும் சடலந்தான்.

கவிதை பணங்குக்கு அணிகள் பூட்ட எத்தனையே பேர் காத்திருக்கிறார்கள்; உயிர் கொடுக்க வேண்டும்

என்பது என்னுடைய மாறாத ஆசை, அவளுக்கு நான் உயிர் கொடுக்க வேண்டும்; அவள் எனக்கு உயிர் கொடுக்க வேண்டும், நாங்கள் ஒன்றாகிவிட வேண்டும். இதுவே என் கனவு.

“காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம்

காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே”

என்று பாரதி பாடுகிறான். கவிதை பெண் கடைக் கண்ணாற் பார்த்தாலும் போதும்; அற்புதங்களெல்லாம் செய்ய நான் காத்திருக்கிறேன்.

முழு நிலாவின் வெண் கதிர் வீச்சிலே ஒருகானம் பிறக்கின்றதை நீ அறிவாயா? கவிதைத் தேவியின் அருள் கிடைத்தவர்களுக்கு அந்தக் கானம் கேட்கிறது. நீலக்கடலின் கொந்தளிப்பிலே அவர்களுக்கு வெள்ளிப்பனிவரையின் உச்சியிலே வைகும் அமைதி தோன்றுகிறது!

அழகுகளை யெல்லாம் வடித்தெடுத்துக்கொடுக்க, உயர்வுகளை யெல்லாம் மனக்கண் முன்பு நிறுத்திக் காட்ட, இன்பங்களை யெல்லாம் திரட்டியளிக்க யாரால் முடியும்? அவளுடைய காதலைப் பெற்றவனே அவற்றைச் செய்கிறான். அவனுடைய சொல்லிலே ஒரு பாந்திர சக்தி குமிழியிட்டுக் கொண்டிருக்கிறது. அவனுடைய உள்ளம் வானிலே உயர்ந்து பறக்கிறது.

“தென்னையின் கீற்றைச் சலசல என்றிடச்
        செய்து வருங் காற்றே
உன்னைக் குதிரைகொண்டேகுமோர்

        உள்ளம் படைத்து விட்டோம்”

என்று பாடும் துணிச்சல் அவனுக்கு ஏற்படுகிறது.

காட்டுவெளியிலே உறவாட வா வென்றால் கவிதைப் பெண் எளிதிலே இணங்குவாள். தனிமையிலே அவளுக்கு விருப்பம் அதிகம். இயற்கையின் வளமும், பூரிப்பும் மிகுந்த தனியிடமென்றால் அங்கு அவள் நடமாடித் திரிய ஆசைப்படுவாள்.

அவளுடைய காதலை நாடி இப்படித் தனியிடத்திற்கு நான் ஒருநாள் சென்றேன். அவள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுவதற்குப் பெரியதோர் திட்டமிட்டுச் சென்றிருந்தேன். என் பேச்சைக் கேட்டதும் அவள் உரக்கச் சிரித்தாள்.

“அகராதியை மனப் பாடம் செய்துகொண்டு வந்துவிட்டாயா?” என்று அவள் ஏளனமாகக் கேட்டாள். “கவிதைத் தேவியே, சொல்மாலை தொடுத்து அணிய வந்திருக்கிறேன்; ஏற்றருள வேண்டும்'” என்று நான் வேண்டினேன்.

“என்னுடைய நேசம் வேண்டுமானால் செத்துப் போன நிகண்டுப் பேச்சை மறந்துவிடு; உனது உணர்ச்சியை அப்படியே வெளிப்படுத்தும் உயிருள்ள பேச்சைத்தான் நான் விரும்புகிறேன்” என்று கண்டிப்பாகச் சொன்னாள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை; அப்படியே திகைத்து நின்றேன்.

“என்னைக் கண்ணே என்றழைக்காமல் நயனமே என்றழைக்க விரும்புகிறாயா?” என்று அவள்

அவர் கருத்து எனக்கு விளங்கிவிட்டது. மேலும் அவர் கூறுகிறாள்:

“முதலில், என்னை உன் உள்ளத்திலே ஐக்கியப்படுத்திவிடு; பிறகு என்னால் பெற்ற இன்பத்தை மற்றவர்கள் உள்ளத்திலே தோன்றுமாறு செய். அதற்கான வாகனந்தானே வார்த்தைகள்? உயிருள்ள வாகனத்தில் ஏற்றி அனுப்பினால் நான் ஆசையோடு செல்லவேன். சவப் பெட்டியிலே என்னை அடைத்தனுப்ப முயலாதே உன்னுடைய முயற்சி பலிக்காது!”

நான் அவற்றிற்கு உயிர் கொடுக்க முடியாதா? என்று மிடுக்கோடு கேட்டேன்.

“நான் அவற்றை வாகனமாக ஏற்றுக் கொண்டால் உயிர் பிறக்கும். ஆனால் நீண்ட நாள் பயன்பட்டதால் சில வாகனங்கள் வலி குன்றி மங்கி விடுகின்றன. அவற்றில் எனக்கு விருப்பம் இல்லை” என்று அவள் பதிலுரைத்தாள்.

என் இறுமாப்பு மறைந்தோடி விட்டது. குதிரையைக் கொக்கென்று சொல்ல நான் பாடம் பண்ணியிருந்தேன். அதன் வலிமையால் கவிதையணங்கு என்னிடம் அடிபணிந்து வருவாள் என்று எண்ணியதெல்லாம் பகற் கனவு என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

“தேவீ, எனது தவறுகளை யெல்லாம் நீ எடுத்துக் காட்டிவிட்டாய்; இப்பொழுது தான் உன்னிடம் சரண்புகுகின்றேன். என் உள்ளத்திலே வந்து நின்று நீயே இனிப் பேசு. உனது இனிய குரலுக்கு இசைவாக நான் சுதி சுட்ட முயல்கிறேன்” என்று பணிவோடு மொழிந்தேன்.

அவள் விழிக் கோணத்திலே நகை காட்டினாள். ஆஹா! அந்த இன்முறுவலிலே நான் கண்ட இன்பங்களை யெல்லாம் எழுத வசமாகுமோ!

இந்த உலகத்திலே கவிதைத் தேவி இல்லாத இடமில்லை. அவள் என் காதலி. அவளை நான் எங்கும் காண்கிறேன். காற்றில் அவள் மிதக்கிறாள்; கடல் அலைகளிலே அவள் தாண்டவம் புரிகிறாள். வானத்திலே அவள் நீலப்பட்டாடை நெளிகின்றது. எண்ணத்தின் இசையாக அவள் விளங்குகிறாள்.

அவளுடைய முழு அன்பையும் பெறுகிறவர்களே பாக்கியம் செய்தவர்கள். அவளை நாடி உள்ளம் ஏங்குகிறது. ஒருகணம் அவள் உடனிருக்க இசைகிறாள்; மறுகணத்திலே மாயமாக மறைந்து விடுகிறாள்! அப்பொழுது உலகமே இருண்டு போகிறது.

கவிதைத் தேவியின் அருளைப் பெறுவது எவ்வளவு கடினம் என்று தெரிகின்ற போதுதான் அவள் அருள் பெற்ற கவிஞர்களின் பெருமை புலனாகின்றது. ஹோம்ஸ் என்ற அறிஞர் எழுதுகிறார்: “கற்ப காலத்தின் தூரக்குரல் கவிஞர்களின் நுட்பமான செவிகளில் இன்றே கேட்கிறது. மற்றவர்கள் நூறாண்டுகளுக்குப் பின் அறிந்து கொள்வதை அவர்கள் இன்றே அறிந்து சொல்லுகிறார்கள்.

கவிதைப் பெண்ணானங்கே. இது உன் செய்லல்லவா? உன்னை நான் போற்றுகிறேன். நீ தரும் இன்பம் சிலவேளைகளிலே என்னைச் சுடுகிறது; அனலைப் பிழிந்து நீஇன்பங் கூட்டுகிறாய். இருந்தாலும்

அது எனக்கு இனிக்கிறது. அதை நாடி நான் ஏங்கி நிற்கிறேன்; தேவீ, அருள் செய்ய வேண்டும்.