காட்டு வழிதனிலே/காந்திய அடிப்படை
காந்திய அடிப்படை
ஏசுநாதரை மையமாகக் கொண்டு எத்தனையோ அழகிய ஓவியங்கள் தீட்டப் பெற்றிருக்கின்றன. அவற்றில் ஒன்றிலே அவர் தம் கரத்தினிலே சுடர் விட்டுக் கொண்டிருக்கும் விளக்கைத் தாங்கியவாறு ஒரு வீட்டை நோக்கி அன்போடு நிற்பது போலக் காட்சியளிக்கிறார். வீட்டின் கதவோ சாத்தி உட்பக்கம் தாளிடப்பட்டிருக்கிறது. அந்த மகானிடமிருந்து வரும் ஒளியைப் பெற யாருமே கதவைத் திறந்து வெளி வரவில்லை. கிறிஸ்து முனி கருணையோடுதான் காத்திருக்கிறார். ஆனால் யாராவது அதைக் கவனிக்க வேண்டுமே!
இந்த உயர்ந்த கற்பனையின் மூலம் ஓவியன் ஒரு பெரிய உண்மையை நமக்குக் காட்ட முற்பட்டிருக்கிறான். இறைவன் தனது அருளை வழங்கத் தயாராகத் தான் இருக்கிறான். அவனுடைய கருணைக்கு எல்லையே இல்லை. அவன் கருணைக் கடல். ஆனால், அந்த அருளைப் பெறுவதற்கு யார் நினைக்கிறார்கள்? எல்லோருடைய மனக்கதவுகளும் சாத்தித் தாளிடப்பட்டுத்தான் கிடக்கின்றன. அத்திப் பூத்தது போல எங்காவது ஒருவர் இதற்கு மாறாக இருந்தால் அவரையும் உலகம் புறக்கணித்து விடுகின்றது. அவருடைய பெருமையை உணரத் தொடங்கினாலும் அதற்குள் ஓர் ஆயிரம் ஆண்டுகளாவது மறைந்தோடிவிடுகிறது.அன்று சிலுவையில் அறையப்பட்ட மகானின் பெருமையை இன்றுதானே உலகம் ஓரளவிற்கு அறியத் தொடங்கியிருக்கிறது! ஆனால், அவருடைய உபதேசத்தை இன்றும் பின்பற்றுவதாகக் காணோம். இந்தக் கணக்கின்படி பார்த்தால் இன்று உயிர்த்தியாகம் செய்த காந்தியடிகளின் பொன் மொழிகளில் பொதிந்துள்ள உயர்ந்த கருத்துக்களை உலகம் சரிவர உணர்ந்து கடைப்பிடிப்பதற்கு எத்தனை நூற்றாண்டுகளாகுமோ?
இவ்வாறு எண்ணிப் பார்க்கும்போது உள்ளத்திலே சோர்வும் கலக்கமுத்தான் மிஞ்சுகின்றன. மானிட சாதியின் மேல் ஒரு அவநம்பிக்கை, ஒரு கசப்பு ஏற்படுகின்றது. “உலகம் இப்படித்தான் நெறியில்லா நெறியிலே போய்கொண்டிருக்கும்; அதைப் பற்றி நினைத்து அங்கலாய்ப்பது தவறு; ஒவ்வொரு வனும் அவனவனுடைய கதிமோட்சத்தை நாடுவ திலேயே கண்ணுங் கருத்துமா யிருக்க வேண்டும்” என்று கூறுகிறவர்களோடு நாமும் சேர்ந்து கொள்ளலாமா என்று தோன்றுகிறது.
மானிட சாதிக்கு உய்வே இல்லைதானா? இல்லை என்று சொல்லுவதற்கு மனம் இடங்கொடுப்பதில்லை. மானிட சாதி முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது; வழியிலே அங்குமிங்குமாகச் சில சமயங்களில் தள்ளாடிக் கொண்டிருந்தாலும் அது இந்த உலகத்திலேயே சுவர்க்கத்தை அமைக்காமல் ஓய்வு கொள்ளாது என்று சாதிக்க வேண்டுமென்று ஆசை எழுகின்றது. இது நாய் வாலப்பா, இதை நேராக்குவது முடியவே முடியாது. யாராவது ஒரு மகான் தோன்றிக் கொஞ்சம் இதை நீட்டி நேராக்க முயல்வார். அவருடைய அருஞ் செயலால் உலகம் சற்று இப்படி, யப்படி நெளிந்து கொடுக்கும்; அந்த வலிமைக் கை மறைந்த பிறகு மறுபடியும் பழைய நிலைமைக்கே வந்து விடும்” என்று நம்பிக்கையற்றவன் பேசுகிறான். உலகம் போகிற போக்கைப் பார்க்கிறபோது அவனுடைய பேச்சு மெய் போலவே காண்கிறது.
மனிதன் அறிவு வாய்ந்தவன்தான். அவன் தன் அறிவின் ஆற்றலினாலே பெரிய பெரிய காரியங்களைச் சாதித்திருக்கிறான்; இயற்கையை வென்றிருக்கிறான்; பல அற்புதங்களைப் படைத்திருக்கிறான். இவை மட்டுமல்ல, மிக உன்னதமான எண்ணங்களை யெல்லாம் எண்ணியிருக்கிறான்; இன்பத்திற்கு வேண்டிய சாதனங்களையும், கருத்துக்களையும் அவன் கொண்டிருக்கிறான்.
ஆனால், அவனிடத்திலே ஒரு பெருங்குறை இருக்கிறது. தனியாக எண்ணும்போது, தனியாகச் செயல் புரியும்போது அவன் அடைகின்ற உச்சநிலையைப் பலராகக் கூடிச் செய்யும்போது அடைவதில்லை. அவனுடைய கூட்டெண்ணம், கூட்டுத் தொழில் தனிமையில் பெற்ற அதன் தரத்தை இழந்து விடுகிறது. தனி மனிதன் இழிந்தவை செய்வதும் எண்ணுவதும் இல்லையென நான் கூறவில்லை; ஆனால் மக்கள் கூட்டமாகச் சேர்ந்து நிற்கும்போது தனி மனிதன் பல சமயங்களில் அடையக்கூடிய உயர் நிலையை அடைய முடிவதில்லை என்பதைத்தான் எடுத்துக் காட்டுகிறேன்.
என்ன இருந்தாலும் மனிதன் தன் விருப்பு வெறுப்புக்களின் அடிமைதான். அவன் எந்நாட்டினனாகவும் இருக்கலாம்; ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று கூறும் பண்பாட்டைப் பெற்ற தமிழ் மன்னோர்களின் வழி வந்தவனாவும் இருக்கலாம். அவனும் விருப்பு வெறுப்புக்களின் அடிமைதான். அவனுடைய பேச்சிலே வேண்டுமானால் இப்பண்பாடெல்லாம் தனி மெருகு பெற்று வெளியாகும் ; ஆனால், செயலில் இறங்கும்போது அவனும் பல குறுகிய சுயநலங்களுக்கு ஆளாகவே இருக்கிறான். ஒவ்வொரு நாட்டிலும் யாராவது ஒரு சிலர் இந்தக் குறுகிய இருள் திரையை ஊடுருவிச் செல்லும் ஒளி படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் விட்டுச் சென்ற உன்னதக் கருத்துக்கள் இன்றும் சிரஞ்சீவியாக வாழ்கின்றன. இருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் இக்குறுநெறியை விட்டு நீங்கினார்களில்லை. அதனால் சுயநலம் குறுக்கிடும்போது மக்களின் விருப்பு வெறுப்புணர்ச்சிகள் அவர்களின் அறிவொளியை மறைத்து விடுகின்றன. விலங்கு இனத்திலிருந்து பரிணாமக் கிரமத்தில் மனிதன் உருவாகியிருக்கிறான் என்பது இன்று பலரும் ஒப்புக் கொண்ட உண்மை. உணர்ச்சி வசப்படும் போது மனிதன் இன்றும் பழைய விலங்கு நிலைமையையே எய்தி விடுகிறான்.
மனிதனுடைய கீழ்த்தர உணர்ச்சிகளைக் கிளறி விடுவது இன்றும் வெகு எளிதாக இருக்கின்றது ; அவ்வளவு எளிதில் அவனுடைய மென்மை உணர்ச்சிகளை மேலெழச் செய்ய முடியாது. சாதி, மதம், நாடு, மொழி என்று ஏதாவதொன்றைக் கூறி அதன் மூலம் அவனை என்ன கொடுமை வேண்டுமானாலும் செய்யும் படி தூண்டலாம். சென்று மறைந்த ஓரிரண்டு ஆண்டுகளில் நம் தாய்நாட்டில் நடந்த நினைக்கமுடியாத குழந்தை வதைகளும், பெண் குலச் சீரழிவுகளும்: மற்ற அட்டூழியங்களும் இதற்குச் சான்று பகர்கின்றன. தனி மனிதன் தானகவே இவ்வளவு கேவலமான நிலைக்கு இறங்கியிருக்கமாட்டான். ஆனால் மேலே கூறப்பட்ட நான்கில் ஏதாவதொன்றின் பெயரால் அவனுடைய உணர்ச்சியைத் தூண்டி விட்டால் அவன் தன் இனத்தவர்களோடு சேர்ந்து கொண்டு என்ன வேண்டுமானலும் செய்யத் தயங்கு வதில்லை. அவ்வாறு செய்வது உயர்ந்த தருமம் என்று கூட அவன் எண்ணிக்கொள்ளுகிறான்.
மனித சாதியின் தலைவிதியை நிருணயிப்பதில் இன்று அரசியலுக்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது. ஆகவே, அரசியல் வாதிகளின் மனப்பான்மை உலகப் போக்கை உருவாக்குவதில் முக்கிய இடம் பெறுகிறது. அவர்கள் ஆழ்ந்த சிந்தனையோடும், விரிந்த மனப்பான்மையோடும் செயல் புரிவார்களானால் உலகத்திற்கு நன்மை உண்டாகும் ; இல்லாவிடில் உலகம் சீர்குலைய வேண்டியதுதான். ஆனால், இன்று பெரும்பான்மையான அரசியல்வாதிகள் மக்களின் கீழ்த்தர உணர்ச்சிகளைக் கிளப்பிவிட்டுத் தங்களுக்குச் செல்வாக்கு உண்டாக்கிக் கொள்ளுவதிலேயே கருத்தாயிருக்கின்றனர். பெர்னுட்ஷா ஒன்று கூறியுள்ளார்: “தெளிவாகவும் தர்க்க முறையிலும் நினைத்துப் பழகவேண்டும் என்று போதிக்கப் பல ஆண்டுகளாக நான் முயன்று வருகிறேன். ஆனால், பெரும்பான்மையான அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள விரும்புவதில்லை” என்று அவர் அங்கலாய்க்கிறார், அரசியல்வாதிகள் இவ்வாறிருந்தால் உலகத்தில் அமைதியோ, இன்பமோ நிலைக்க முடியாது. அவர்களுக்கு அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேதான் நாட்டமெல்லாம்.
உள்நாட்டு வியவகாரம் இவ்வாறென்றால் வெளிநாடுகளோடு கொண்டுள்ள தொடர்பிலும் இந்த அதிகார மோகமே தலைவிரித்தாடுகிறது. வல்லரசு ஒவ்வொன்றிற்கும் தனது கை ஓங்குவதிலேயே கண்ணும் கருத்தும். கையாளும் முறை நல்லதா, கெட்டதா என்பது பற்றிக் கவலையே இல்லை. அதற்காக எத்தனை பொய்ப் பிரசாரங்களும் செய்யத் தயார். சிறு நாடுகளெல்லாம் இவ் வல்லரசுகளின் கைப் பொம்மைகள். சமயத்திற் கேற்றவாறு எப்படி வேண்டுமானாலும் அவற்றை ஆட்டிக்கொள்ளலாம்.
இரண்டாவது உலகயுத்தம் முடிவடைந்த சிறிது காலத்திற்குள்ளேயே உலகம் இரு பெருங் கட்சிகளாகப் பிரியத் தொடங்கிவிட்டது. அணுக்குண்டின் அழிவுச் சக்தியை அறிந்த பின்னரும் தங்கள் விருப்பு வெறுப்புக்களை விட்டுத் தர்க்க முறையில் நினைக்க அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ளவில்லை. அதனல் தான் மற்றுமொரு உலக யுத்தம் தொடங்கியே தீரும் என்கிற எண்ணம் வேண்டியிருக்கிறது. மற்றொரு யுத்தமென்றால் அது அணுக்குண்டுயுத்தந்தான்; அணுகுண்டு யுத்தமென்றால் அதுவே மானிட சாதியின் அழிவாகவும் முடியலாம்.
இந்த நிலைமையிலிருந்து தப்ப வேண்டுமானால் காந்தியடிகள் காட்டிய ஒரே வழிதான் உண்டு. இதை நன்கறிந்துள்ள பேரறிஞர் ஐன்ஸ்டைன் விடுத்துள்ள சேதியொன்றில், “அப்பொழுதே உணரமற் போனோமே என்று வருந்தும் நிலை ஏற்படுவதற்கு முன்பே உலகம் காந்தியடிகளின் வழியைப் பின்பற்றி உய்வடைய வேண்டும்” என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்.
அதற்கு நம் மனப்பான்மையிலேயே ஒரு புரட்சிகரமான மாறுதல் ஏற்பட வேண்டும். பழைய வழியிலேயே எண்ணுவதை அறவே விட்டொழித்து மானிட சமூகம் ஒரு குடும்பம் என்ற அடிப்படையில் நம் சிந்தனையைச் செலுத்தவேண்டும். அதிகார ஆசையில் உழலும் உலகத்து அரசியல்வாதிகளை இன்று அப்படி மாற்றிவிட முடியுமென்று தோன்ற வில்லை. இனிமேல் நாட்டு மக்களாக நின்று பொறுப்பேற்க வரும் இளைஞர்களுக்கு இப்புது வழியில் மனம் செல்லும்படியான படிப்பு முறை அவசியம். உலகைக் காப்பதற்கு இதுவே இன்று மிக விரைவாகச் செய்யப்படவேண்டிய காரியமாகப்படுகிறது.
அறிவு என்பதொன்று மனிதனுக்குத் தனிச் சிறப்பாகக் கிடைத்திருக்கிறது என்பது மெய்யானால் அதைப் பயன்படுத்தி, காந்தியடிகளின் உபதேசத்தை உடனே புரிந்துகொள்ள முயலவேண்டும். உலகிலுள்ள மக்கள் அனைவரும் அதை நன்கு அறியுமாறு செய்யவேண்டும். அதில்தான் நமது கதிமோட்சம் உள்ளது.
இந்தியா உலகிற்கு வழிகாட்ட வேண்டுமானால் மற்ற நாட்டு அரசியல் நெறியையே பின்பற்ற முயலாமல் காந்தியத்தின் அடிப்படையில் புதிய நெறி வகுத்துக் கொள்ளவேண்டும். தொடக்கத்திலேயே நாம் நம் போக்கைச் சரியான பாதையில் செலுத்தாவிடில் பிறகு மற்ற நாடுகளைப் போல இப்புறமும் அப்புறமும் திரும்ப வகையறியாது திணற வேண்டியதாகும்.
இந்தியாவின் தந்தையெனக் காந்தியடிளைப் புகழ்வதோடு நின்றுவிடாமல் அவருக்குச் சிறந்த நன்றி செலுத்துவது நம் கடமையென உணர்ந்தோமாயின் நாம் முதலில் அவர் வழியில் நின்று உலகுக்கும் அதை எடுத்துக் காட்டி மானிட சாதியைச் சீர்பெறச் செய்யவேண்டும்.
உலகமெல்லாம் சேர்ந்து ஒரு நாடுபோல அரசாங்கமும், மற்ற காரியங்களும் நடைபெறும்படியான காலம் வரும்வரையில் மானிட சாதிக்கு நல்ல சுகம் கிடைக்காது. “உலக அரசாங்கம் நிச்சயம் வரும்; நிச்சயமாக வந்தாகவேண்டும். உலகத்தின் நோய்களுக்கு வேறு மருந்தே கிடையாது” என்று பண்டித நேரு கூறியிருப்பது பொருள் செறிந்த வாசகம். இன்றைய போக்கே நீடிக்குமானால் அது மற்றொரு யுத்தத்திற்கு வித்தாகி அழிவிற்கே காரணமாக முடியும். மானிட சாதி உய்ய வேண்டுமானால் ஒரே உலகம் என்ற கொள்கை ஓங்கவேண்டும். அதற்குக் காந்திய அடிப்படையன்றி வேறு வழி கிடையாது. அதை உடனே புரிந்து கொள்ள வேண்டியது அறிவு வாய்ந்த மக்களின் கடமையாகும்.