காற்றில் வந்த கவிதை/கொடும் பாவி


கொடும்பாவி

செங்கோல் வழுவாமல் நாட்டிலே ஆட்சி நடந்தால் மாதம் மும்மாரி பெய்யும் என்று கூறுவார்கள். ஆட்சி முறையிலே தர்மம் குன்றிவிட்டால் வானம் பொய்த்துவிடுமாம். அதேபோல மக்கள் நீதி தவறி நடந்தாலும் மழை சரியாகப் பெய்யாதாம்.

நாட்டுப்புறத்திலே யாராவது ஒருவர் புதிதாக ஓர் ஊருக்கு வந்தால் அவரிடத்திலே முதலில் மழையைப்பற்றித் தான் விசாரிப்பார்கள், "என்னப்பா, உங்கள் ஊரிலே மழைதுளி உண்டா?" என்று கேட்பார்கள்.

"மழையே கிடையாது. இந்த வருஷம் இன்னும் ஒரு சொட்டுத் துளிகூட விழவில்லை. எங்கள் ஊருக்கு மழையே வராது. ஊரிலே எல்லோரும் நீதியாக நடந்தால்தானே மழை வரும்?" என்று பதில் சொல்வதுண்டு.

நியாயம் தவறி நடந்தால் மழை பெய்யாது என்பதில் மக்களுக்கு அத்தனை நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் மழை இல்லாத காலத்திலே, "கொடும்பாவி சாகவேனும்: கொள்ளை மழை பெய்ய வேணும்" என்று பாடத் தோன்றுகிறது அவர்களுக்கு.

மழையை நாடி மழைக் கஞ்சி குடிக்கும் வழக்கத்தை ஒரு நாடோடிப் பாடலிலே பார்த்தோம். மற்ருெரு நாடோடிப் பாடல் மழைக்கு அதிபதியான தேவனைப் பரிந்து வேண்டிக்கொள்வதாக அமைந்திருக்கின்றது. 'வான மகா தேவா, மழையாய்ப் பொழிய வேணும்' என்று மக்கள் விண்ணப்பம் செய்து கொள்கிரு.ர்கள். வட்டிக்குக் கடன் வாங்கி வயலையும் அடகு வைத்துவிட்டார்கள். வட்டி பெருகிக்கொண்டே இருக்கிறது. கடனைத் தீர்க்க வழி யொன்றும் ஏற்படவில்லை. மழை பொழிந்து பயிர் செழித் தால்தானே கடனைத் தீர்க்க முடியும்? ஆதலால் கோடை மழை பெய்ய வேண்டும் என்றும், மாசி மழை பெய்ய வேண்டும், மரங்கள் தழைய வேண்டும் என்றும் மக்கள் விரும்புகிறார்கள்.

மழை எப்படிப் பெய்ய வேண்டுமாம்? ஊசிபோல மின்னல் மின்ன வேண்டும். உதயக் காலத்திலே கதிரவனின் பொற் கிரணங்கள் மேகங்களை ஊடுருவிக்கொண்டு பாய்ந்து வருகின்ற வகையிலே மழை காலிறங்க வேண்டும். பாசி மின்னல், கொடி மின்னல் எல்லாம் தோன்ற மழை பொழிய வேண்டும். இந்த அழகிய வருணனைகள் ஒரு நாடோடிப் பாடலிலே வருகின்றன. பாட்டைப் பார்ப்போம்.

வானமழை ராசாவே வான மகா தேவா
வான மகா தேவா மழையாய்ப் பொழியவேனும்
சோனைமழை யில்லாமல் சோறுன்னு அழுகுருர்கள்
காசிராஜா பெத்த மக்கள் கஞ்சியின்னு அழுகுருர்கள்
காரைப் பழம் பறிச்சுக் கையிரண்டும் கொப்புளமாம்
சூரிப் பழம் பறிச்சுத் துன்ப மிக வாகுதய்யோ
வட்டிக் கடன் வாங்கி வயலை யடகு வைத்தோம்
வட்டி பெருகுதய்யோ வயல் சாவி யாகுதய்யோ

காலம் தெளிய வேணும் காரிமழை பெய்ய வேணும்
ஊரு தெளியவேணும் உத்த மழை பெய்யவேணும்
கோடை மழை பெய்யவேணும் குடிமக்கள் வாழவேனும்
மாசி மழை பெய்யவேணும் மரங்கள் தழைய வேணும்
கொடும்பாவி சாகவேனும் கொள்ளைமழை
                                                பெய்யவேனும்
மாபாவி சாகவேணும் மாய மழை பெய்யவேணும்
ஊசிபோல மின்னல் மின்னி உதயம்போல் காலிறங்கி
பாசிபோல மின்னல் மின்னிப் பவளம்போல் காலிறங்கி
சந்து சந்தா மின்னல் மின்னி சலமூலை தண்ணிர் வர
கொடி கொடியா மின்னல் மின்னிக்கொடிமூலை
                                                      தண்ணிர்வர
வானமழை ராசாவே வான மகாதேவா
வான மகாதேவா மழையாய்ப் பொழியவேணும்

[சோனை மழை - விடாது பெய்யும் மழை. பெத்த - பெற்ற சாவியாதல் - தானியமணிகள் பிடியாமல் பதராகப் போதல். காரி மழை - கார் மழை. உத்த - உற்ற..]

காரைப் பழத்தையும், சூரிப் பழத்தையும் செழித்த காலத்தில் யாரும் தீண்டமாட்டார்கள். கஞ்சிக்கு வாடுகின்ற காலத்தில் அவற்றையும் பறித்து மக்கள் உண்டு பசியாற்றிக்கொள்ள முயற்சி செய்கிரு.ர்கள். காரைச் செடியிலும் சூரி மரத்திலும் முள் நிறைய இருக்கும். அவற்றிலே பழம் பறிப்பதென்ருல் கையெல்லாம் முள் தைக்கும்.