காற்றில் வந்த கவிதை/சொக்குப் பேச்சு

சொக்குப் பேச்சு

அத்தை மகளைத் திருமணம் செய்துகொள்ள ஆசை கொண்டவனின் உள்ளக் கிளர்ச்சிகளைப் பார்த்தோம்.

அவனுடைய ஆசை நிறைவேறாத காலத்தில் அவன் கட்டுகிற மனக்கோட்டையையும் பார்த்தோம்.

ஆசை நிறைவேறிய ஒருவனுடைய உள்ளக் கிளர்ச்சிகளை இப்பொழுது பார்ப்போம்.

அவன் ஒர் உழவன். கழனியிலே வேலை செய்துகொண்டிருக்கிறான். கழனியிலே வேலை செய்கிறவர்கள் குறித்த நேரத்தில் வீட்டுக்குப் போய் உணவருந்த முடியாது. வீடு தொலைவிலிருக்கும். அங்கு போய்த் திரும்புவதென்றால் நேரமாகும்; வேலை கெட்டுப் போகும்.

கிணற்றிலிருந்து தோட்டத்துக்குத் தண்ணிர் இறைக்கிறவன் அதிகாலையிலே தனது வேலையைத் தொடங்குவான். வெய்யில் ஏற ஏற மாடுகள் களைத்துப் போகும். மேலும் வெய்யில் நேரத்திலே பயிர்களுக்குத் தண்ணிர் சரியாகப் பாயாது. அது மட்டுமல்ல. வெய்யில் நேரத்தில் பாய்கிற தண்ணிர் சூடேறிவிடும். நிலமும் காய்ந்திருக்கும். அதனால் அந்த நேரத்தில் தண்ணீர் பாய்ச்சுவது பயிருக்கு அவ்வளவு நல்லதல்ல.

அதிகாலையில் புறப்பட்டு வேலைக்கு வந்த உழவன் தனது காலை உணவை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறான். உடலுழைப்பால் அவனுக்கு நல்ல பசி எடுத்திருக்கிறது: அந்தச் சமயத்திலே கஞ்சியென்றாலும் அமுதமாக இருக்கும்.

அவனுக்கு வயிற்றுப் பசியைவிட வேறொரு பசி அதிகமாக இருக்கிறது. தனது அன்பையெல்லாம் கொள்ளை கொண்டிருக்கும் தன் மனைவியை அவன் பிரிந்து வந்து வேலை செய்துகொண்டிருக்கிறான். அவளுடைய இனிய முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மேலோங்குகிறது. அன்புக்குப் பாத்திரமானவர்களை எத்தனை தடவை பார்த்தாலும்.ஆசை அடங்காது. அந்த ஆசை அவன் உள்ளத்தைக் கிள்ளுகிறது) வயிற்றைக் கிள்ளும் பசியைவிட இது அதிகமாக இருக்கிறது.

அதானால், அவள் வந்தவுடன் அவளிடம் கோபித்துக் கொள்ளுகிறான். கஞ்சி கொண்டுவர நேரமாகிவிட்டதே என்று கோபமல்ல. அவளைப் பார்க்க நேரமாகி விட்டதே என்று கோபம். அன்புக் கோபம்!

கஞ்சி கொண்டுவர இவ்வளவு தாமதமா என்று அவன் தொடங்கினன். அதைக் கேட்டதும் அவள் மனம் படாத பாடு பட்டிருக்கும். வயிற்றுப் பசியால் அத்தான் வாடிப் போயிருக்கிறார் என்று அவள் வருந்தியிருப்பாள். ஆனால், அவனுடைய அடுத்த கேள்வி அவள் உள்ளத்திலே மகிழ்ச்சித் தேனை வார்த்திருக்கும். உன்னைப் பார்க்க எனக்கு இவ்வளவு நேரமாகிவிட்டதே என்கிறான் அவன். அதுதான் அவனுக்குக் கோபம். அந்தக் கோபத்தை அவள் முழுமனதோடு ஆமோதித்திருப்பாள் பாட்டைப் பார்க்கலாம்,

கஞ்சிகொண்டு வாரதுக்கு இந்நேரமா
ஏபுள்ளை வீராயி உனைக்
காத்திருந்து பார்ப்பதுக்கு இந்நேரமா ?
சோத்துக்கு உப்புப்போட்டுக் கொண்டாந்தியா
ஏபுள்ளே வீராயி-உன்றன்
சொக்குப் பேச்சுக் கேட்பதுக்கு இந்நேரமா ?
ஊறுகாய் ரண்டு வச்சுக்
கொண்டாந்தியா
ஏபுள்ளை வீராயி- உன்னை
உத்துப் பார்த்துப் பேச்சுக் கேட்க இந்நேரமா ?


[சோத்துக்கு-சோற்றுக்கு. உத்துப் பார்த்து-உற்றுப் பர்ர்த்து.]