காற்றில் வந்த கவிதை/பொன்னு மச்சான்

பொன்னு மச்சான்

த்தை மகன் என்றால் அவனிடத்திலே தனிப்பட்ட அன்பிருப்பது இயல்பு. அத்தையும் மாமனும் வருகிறார்கள். கூடவே நிறையத் தின்பண்டங்கள் வருகின்றன. வேறு என்னென்னவோ பரிசுகள் அவர்களிடமிருந்து கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.

வீட்டிலே தினமும் கூடவே இருக்கின்ற தாயும் தந்தையும் பல கட்டுப்பாடுகள், ஒழுங்கு விதிகள், கடமைகள் ஏற்படுத்துகிறார்கள். எப்பொழுதாவது ஊரிலிருந்து வரும் அத்தையும் மாமனும் அப்படி விதிகள் ஏற்படுத்துவதில்லை. நாள்தோறும் செய்யவேண்டியவற்றைச் சற்று தளர்த்துவதற்கும் அவர்கள்! வருகை உதவியாக இருக்கின்றது. அந்த அத்தையிடத்திலும் மாமனிடத்திலும் தனிப்பட்ட அன்பு வளர்வது இயல்புதானே? அத்தை மகன் வருகிறான். புதிய அன்பும் வருகிறது. உடன் பிறந்தவர்களுக்குள்ளே வளர்கின்ற அன்பு ஒருவகை. அதற்கும் அத்தை மகனிடத்திலே வளர்கின்ற அன்புக்கும் வேறுபாடு உண்டு. அத்தை மகனை மச்சான் என்று அழைப்பார்கள். மைத்துனன் என்று கூறுவதைவிட மச்சான் என்கிறபோது உறவு அதிகமாகக் காண்கிறது. அவன் அன்பு மச்சான்: பொன்னு மச்சான். பொன்போல மதிப்பிற்குரியவன்.

மச்சான் ஒருவன் கோயம்புத்தூருக்குப் புறப்படுகிறான். கொங்குநாட்டுக் கிராமத்திலிருந்து பட்டணத்திற்குப் போகிறவன் மாட்டு வண்டியில்தான் சாதாரணமாகப் போவான். காரிக் காளையையும் மயிலைக் காளையையும் பூட்டிய வண்டியிலே மச்சான் புறப்படுகிறான்.

சுகமாகப் போய் வரும்படி அவனை வழியனுப்புகிறாள் ஒரு பெண். வரும்போது தனக்கு விருப்பமான சேலையும் வாங்கிவரச் சொல்லுகிறாள்.

பட்டுச் சேலை என்று அவள் கூறவில்லை. ஆனல், பொன்னு மச்சான் பட்டுச் சேலையே வாங்கி வருவதாக வாக்களிக்கிறான். சேலை மட்டுமா? ரோஜாப் பூவும் வாங்கி வருவதாக அவன் கூறுகிறான். அவள் கேட்டது மருக் கொழுந்துதான். அன்பின் பெருமையை அவர்களுடைய பேச்சிலே நாம் காண்கிறோம்.

காரிமயிலைக்காளை பொன்னுப் பூங்குயிலே
கட்டினேண்டி வண்டியிலே பொன்னுப் பூங்குயிலே
பாதை கிடுகிடுங்க பொன்னுப் பூங்குயிலே
போயிவாரேன் கோயமுத்துார் பொன்னுப் பூங்குயிலே


சொகமாகப் போயிவாங்க பொன்னு மச்சானே
செவப்புச் சிலவாங்கிவாங்க பொன்னு மச்சானே
வழிக்குத் துணை கூட்டிப்போங்க பொன்னு மச்சானே
மருக்கொழுந்து வாங்கி வாங்க பொன்னு மச்சானே

பட்டுப் புடவை வாங்கி வாரேன் பொன்னுப் பூங்குயிலே
கட்டிப்பாத்தா நல்லாயிருக்கும் பொன்னுப் பூங்குயிலே
ரோசாப் பூவும் வாங்கிவாரேன் பொன்னுப் பூங்குயிலே
ரொம்ப உனக்கு நல்லாயிருக்கும் பொன்னுப்

பூங்குயிலே

அவள் பொன்னுப் பூங்குயில்; அவன் பொன்னு மச்சான். அவர்களுடைய அன்பின் பெருமையை மேலேயுள்ள பாடலிலே பார்த்தோம்.

வேறோரு பூங்குயிலுக்கும் பொன்னு மச்சானுக்கும் இடையே வளர்ந்துள்ள அன்பையும் அதற்கு இடையூறாக நிற்கும் உறவினர்களைப் பற்றியும் மற்றொரு பாடலிலே காண்போம்.

ஒருத்திக்குத் தன் அத்தை மகனிடத்திலே அன்புண்டு. ஆனால், என்ன காரணத்தினலோ அவளுடைய அண்ணன் தம்பிகள் அவளை அத்தை மகனுக்குக் கலியாணம் செய்து கொடுக்க இசையவில்லை.

அந்த மங்கை தன்னுடன் பிறந்தவர்களிடமும் மாறாத அன்புடையவள். அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக ஒரு நாளும் நடக்கமாட்டாள். அண்ணனும் தம்பியும் அவளிடத்திலே கொண்டுள்ள அன்பையும் அவள் அறிவாள். அவர்களுடைய அன்பிலே வளர்ந்தவள் அவள். தன்னைத் தன் அண்ணன் தம்பிகள் அன்போடு வைத்து வளர்த்த தென்னம் பிள்ளையாக அவள் கருதுகிறாள். ஆதலால் அவள் அவர்களுடைய எண்ணத்திற்கு விரோதமாக ஒரு நாளும் நடக்க மாட்டாள். அதை அவள் குறிப்பாக ஒரு பாடலிலே அத்தை மகனுக்குத் தெரிவிக்கிறாள்:

ஆத்துக்கு இந்தப்புறம்-அத்தை மகனே
அண்ணன் வைத்த தென்னம் பிள்ளை-அத்தை
மகனே
ஆத்தைத்தான் தாண்டுவேனே-அத்தை மகனே
அண்ணனைத்தான் தள்ளுவேனே-அத்தை மகனே
சாலைக்கு இந்தப்புறம்-அத்தை மகனே
தம்பி வைத்த தென்னம்பிள்ளை-அத்தை மகனே
சாலையைத்தான் தாண்டுவேனே-அத்தை மகனே
தம்பியைத்தான் தள்ளுவேனே-அத்தை மகனே

அத்தை மகளை உரிமைப் பெண் என்று கூறுவார்கள். அவளைக் கலியாணம் செய்துகொள்ள உரிமை இருக்கிறதாம்! உரிமைப் பெண்ணை உரியவனுக்குக் கலியாணம் செய்து கொடுக்க மறுக்கும்போது கிராமங்களிலே பெரிய பெரிய மனத்தாங்கல்கள் ஏற்படுவதுண்டு.

அத்தை மகளைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்று ஒருவன் ஆசைப்படுகிறான். அவனுடைய ஆசையை ஒரு நாட்டுப் பாடல் அழகாக வெளியிடுகின்றது.

அத்தைமகள் ரத்தினத்தைக் கட்டலாமா
அழகான தாலிபண்ணிப் போடலாமா
குன்றிமணிச் சீலைவாங்கிக் கொடுக்கலாமா
கூசாமல் கைகோத்து நடக்கலாமா