கால்டுவெல் ஒப்பிலக்கணம்/012-033

௪. திராவிட மரபு மொழிகள் ஒரே மூல மொழியின் மண்டிலவகைத்திரிபு மொழிகள் அல்ல

ஒரே மண்டிலத்தில் வழங்கும் மொழிகள் கோட்டத்திற்குக் கோட்டம் சிற்சில மாறுதல்களுடனும், சிறப்பியல் புகளுடனும் வழங்கப்படுதல்கூடும். அப்பொழுது அவற்றைத் திசைமொழிகள் என்றும், வகைத்திரிபுமொழிகள் என்றும் கொள்வது வழக்காறு. அவ் வழக்காற்றின்படி மேற்குறிக்கப்பட்ட பன்னிரண்டு வகை மொழிகளையும் ஒரே மூல திராவிட மொழியின் வகைத் திரிபுமொழிகள் என்று கொள்வதற்கில்லை. ஏனெனில், இவற்றினிடையே உள்ள வேற்றுமை யியல்புகள் பலப்பல வாதலினாலேயே. ஒரு வகையினர் பேசும் மொழியை மற்றொருவகையினர் எளிதில் கேட்டுப் பொருளுணர்ந்துகொள்ள முடியாது. தமிழையும், மலையாளத்தையும் ஏறக்குறைய நெருங்கிய தொடர்புடையன வாகக் கொள்ளலாம். எனினும், அவ்வம் மொழியில் பேசப்படும் எளிய சிறு தொடர்களையே மற்ற மொழியாளர் உணர்ந்துகொள்ளுதல் இயலும். அடுக்குத் தொடர்களையோ, சிக்கலான வாக்கியங்களையோ ஒருவருக்கொருவர் தத்தம் மொழியிற் கூறினல் மற்றவர் அறிந்துகொள்ளுதல் இயலாது.

பேசும் மொழி ஒருபுறமிருக்க, இலக்கியத்தை எடுத்துக்கொண்டாலும் இதே வேறுபாடுதான். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட சிறப்பான இலக்கியக் கலைவளம் இருக்கின்றது. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்றில் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட வரி வடிவமும் உள்ளது. ஆனல், இக்காலை வழங்கும் கன்னட எழுத்துக்களோ தெலுங்கிலிருந்து பெறப்பட்டு, ஒருசிறிது மாறுபட்டியலுகின்றன. இக் காரணத்தால் கன்னடம், தெலுங்குடன் நெருங்கிய உறவுடையது என்று கொள்வதற்கு மில்லை. ஏன்? மொழி என்ற முறையில், கன்னட மொழி தெலுங்கைவிடத் தமிழையே பெரிதும் சார்ந்ததாகும். அதிலும், பழைய கன்னட எழுத்துக்கள் தெலுங்கெழுத்துக்களுக்கு முற்றிலும் வேறானவையாம்.

திருந்திய மொழிகளாகக் கொள்ளப்பட்ட, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு என்ற ஆறனுள், தமிழிற்கும் தெலுங்கிற்கும் இடையேயுள்ள வேறுபாடு மிகப் பெரிதாம். இரு மொழிகளிலும் உள்ள வேர்ச் சொற்களிற் பெரும்பாலன இரண்டற்கும் பொதுவாகக் காணப்படுகின்றமை உண்மையே. எனினும், தமிழை மட்டும் அறிந்த ஒருவர், தெலுங்கில் இலக்கண முறைப்படி அமைக்கப்பட்ட ஒரு முழு நீண்ட சொற்றொடரை அறிந்துகொள்ளுதல் என்பது எளிதில் முடியாது; அவ்வாறே தெலுங்கைமட்டும் அறிந்த ஒருவர் தமிழில் இலக்கண முறைப்படி அமைக்கப்பட்ட ஒரு முழு நீண்ட சொற்றொடரை அறிந்துகொள்ளுதல் என்பதும் எளிதில் முடியாது. எனவே, இம் மொழிகள் அனைத்தும் ஒரே மூல மொழியினின்றும் கிளைத்தனவே யாயினும், இன்றைய நிலையில், ஒன்றற்கொன்று உறவுடைய தனிப்பட்ட மொழிகளாகவே கருதப்படும்.

திருந்திய இம் மொழிகளினிடையே இத்துணை வேறு பாடானல், திருந்தா மொழிகளான துதம், கோதம், கோண்டு, கந்தம், ஒராவோன் என்ற மொழிகளுக்கிடையே மிகுந்து காணப்படும் வேற்றுமைகளை எடுத்துரைக்கவும் வேண்டுமோ? உண்மையைக் கூறின், அவற்றிற் கிடையே காணப்படும் வேற்றுமை மிகுதியால், அவை ஒன்றுட னென்று வேறுபடுகின்றன என்பதைச் சான்றுகளுடன் எடுத்து விளக்கிக் காட்டுதலைவிட்டு, அவையெல்லாம் ஒரே மூல மொழியைச் சார்ந்தவையே என்றும், அம் மூல மொழி திராவிட மொழிதான் என்றும் சான்றுகளுடன் ஈண்டு விளக்கிப்போதலே, கடமையாயிற்று.