கால்டுவெல் ஒப்பிலக்கணம்/013-033
திராவிட மொழிகள் வடமொழியின் வேறானவை:
தங்களுக்குத் தெரிந்த ஒவ்வொன்றும் பார்ப்பனர்களிடமிருந்து பெறப்பட்டதாகத்தா னிருக்க வேண்டுமென்று வடமொழிப் பண்டிதர்கள் இயல்பாகவே நம்பிவந்தார்கள். அதனை யொட்டியே அவர்கள் திராவிட மொழிகள், வட இந்திய மொழி மரபுகளிலிருந்து எத்துணையோ மாறுபட்டிருப்பினும், வடமொழி யினத்திலிருந்து பெறப்பட்டவைகளே என்று சாதித்துவந்தனர். இதனைப் பண்டைய ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் எளிதில் நம்பிவந்தனர். அவர்கள் ஆராய்ந்த திராவிட மொழிகள் ஒவ்வொன்றிலும் ஓரளவிற்கு வடமொழிச் சொற்கள் தத்பவமாகவும், தத்சமமாகவும் கலந்திருக்கக் கண்டனர். ஆனால், அம் மொழிகளில் வடமொழிக் கலப்பில்லாத சொற்களும், மரபுமொழிகளும் பல இருந்தன வென்பதையும், அவையே அம்மொழிகளின் சிறப்பியல்புகள் என்பதையும், அவற்றிலேதான் அவ்வம் மொழிகளின் தனிப்பட்ட உயிர்நிலை அமைந்துகிடந்தது என்பதையும் அவர்கள் கண்டறிந்துகொள்ளவில்லை. அதன் பயனாக, அவர்கள் அம்மொழிகளிற் காணப்படும் வடமொழியைச் சார்ந்தனவல்லாத பகுதிக ளெல்லாம் யாதோ ஒரு பண்டைய புறநாட்டு மொழியைச் சார்ந்தவை என்று கூறிவந்தனர். அக் கொள்கைப்படி திராவிரர்களுக்கும்,[1] கெளரர்களுக்கு[2]மிடையே முதன்மையான வேறுபாடுகள் கிடையா. அதற்குக்காரணம், வங்காளி முதலிய கெளரிய இனத்தைச் சேர்ந்த மொழிக ளெல்லாம் வடமொழிச் சிதைவுகளேயாயினும், அவற்றுள் வடமொழி யல்லாத சொற்களும், மரபுமொழிகளும் ஒரு சிலவே காணப்படுகின்றன என்பதே. அவற்றைப் போன்றவையே திராவிட மொழிகளுள் காணப்படும் வடமொழிச் சார்பற்ற சொற்களும், மரபு மொழிகளும் என்று அவர்கள் ஊகித்தமை இயல்பே. எனவே, வடமொழியிலிருந்துதான் திராவிட மொழிகள் தோன்றின என்று முடிவுகட்டிக் கொக்கரித்து வந்தார்கள் கோல்புருக், காரி, வில்கின்ஸ் முதலிய ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் வடமொழி யாராய்ச்சியில் வல்லுநரேயாயினும் திராவிட மொழிகளைப் பற்றிய வரையில் மிகவுங் குறைந்த அறிவுடையவர்களென்றே, அவற்றைப்பற்றி ஒன்றுமே தெரியாதவர்களென்றேதான் கொள்ளல்வேண்டும். ஒப்பிலக்கணத்தின் உண்மைகளைத் தெரிந்த எவரும் திராவிட மொழிகளின் இலக்கண அமைதிகளையும், சொற்றொகுதிகளையும், வடமொழி இலக்கண அமைதிகளோடும், சொற்றொகுதிகளோடும் ஒப்பிட்டுப் பார்த்தபின், அவை எக்காரணத்தைக் கொண்டும் ஒன்றற் கொன்று உறவுடையன வென்றோ, வடமொழியிலிருந்துதான் திராவிட மொழி இலக்கண அமைப்பும், சொல்லாக்கத் திரிபுகளும் தோன்றியிருத்தல் வேண்டும் என்றோ கூற முன்வரமாட்டார் என்பது திண்ணம்.
திராவிட மொழிகளுக்கும் வடமொழிக்கு மட்டுமேயன்றி, அவ் விரண்டிற்கும் இந்து-ஐரோப்பிய[3] மொழிகளுக்குமே ஏதோ ஒருவகையான மூலத் தொடர்பு இருந்திருக்கவேண்டுமென்று கொள்வதோ, அக் கொள்கையே அடிப்படையாக, இந்து-ஐரோப்பிய மொழியினத்தில் திரா விட மொழிகளுக்கும் இடம்பெற உரிமை யுண்டு என்று கொள்வதோ, வடமொழியி லிருந்தே திராவிட மொழிகள் தோன்றி யிருத்தல் வேண்டும் என்ற கொள்கைக்கு முற்றிலும் வேறுபட்ட கொள்கைகளாகும். இலக்கண அமைப்பு முறைகளையும் சொற் றொகுதிகளையும் ஆராய்ந்தால், மேற் குறித்த இந்து - ஐரோப்பிய மொழியினத்தில் திராவிட மொழிகளுக்கும் இடமுண்டு என்று நிறுவுதல் ஒருவாறு இயலும். ஆரியர் வருகைக்கு முற்பட்ட காலத்திலேயே சித்திய[4] மொழியினத்திலிருந்து இந்து-ஐரோப்பிய மொழியினங்கள் பிரிந்துவிட்டன. இம் முடிபு பின்னிஷ்[5] மொழியிலும், துருக்கிய மொழியிலும் காணப்படும் சில பண்டை மூலச் சொற்களால் வலியுறுகிறது; அதுபோலவே, திராவிட மொழிகளிலும் ஆரியர் வருகைக்கு முற்பட்ட காலத்து வழங்கியிருந்தனவாகக் கருதக்கூடிய சில மொழிச் சொற்கள் பயின்று வருகின்றமை மேற்கூறிய முடிபை வலியுறுத்துவதாகும். அதனால், திராவிட மொழிகள் இச் சொற்களை வடமொழியிலிருந்து பெற்றன என்றே, அன்றி இரண்டு மொழிகளுக்கும் பொதுவான ஒரு பண்டைப் பாகத மொழியிலிருந்து பெற்றிருக்கக்கூடும் என்றே கொள்வது தவறென்பதும், அருகில் வழங்கிய திராவிட மொழிகளி லிருந்து வடமொழி பல சொற்களைப் பெற்றுப் பயன்படுத்தப் பின்வாங்கவில்லை யென்று கொள்வதே சரியான முடிபென்பதும், எளிதில் ஊகிக்கப்படும்.
எஃது எப்படியாயினும், வடமொழியிலிருந்து திராவிட மொழிகள் பிறந்திருக்கவேண்டும் என்று கொண்ட பழங் கொள்கை குருட்டுக் கொள்கையே என்பதில் ஐயமேயில்லை. இந்தி, வங்காளி முதலிய கெளரிய மொழிகள் வடமொழியிலிருந்து தோன்றியிருக்கக்கூடு மாதலால், திராவிட மொழிகளும் அவ்வாறேதான் தோன்றியிருக்க வேண்டும் என்று கொள்ளுதல் சால்பாமோ? ஆகாது. கீழ்வரும் உண்மைகளைச் சரிவா உய்த்துணராமையே தவறான இம் முடிபுக்குக் காரணமாகும்.
(1) திராவிட மொழிகளில் வடமொழிச் சார்பில்லாத தனிப் பகுதி, வடமொழிச் சார்புள்ள பகுதியினும், மிகமிக விரிந்ததொன்று என்பதைப் பண்டையாராய்ச்சியாளர்கள் புறக்கணித்துவிட்டனர்.
(2) ஒரு மொழியின் உயிர்நிலைகள் என்று கருதப் படுவனவான இடப்பெயர்கள், வினைத்திரிபுகள், பெயர்த் திரிபுகள், சொல்லாக்க முறை முதலிய எல்லாவற்றிலும் திராவிட மொழிகள் வடமொழியினின்று அடியோடு மாறுபடுகின்றன என்ற கண்கூடான உண்மையையும் அவர்கள் புறக்கணித்துவிட்டார்கள்.
(3) திராவிட மொழிகளும் வடமொழியினின்று தோன்றினவே என்று கொண்ட மேனாட்டாராய்ச்சியாளர் தங் கொள்கைக்குத் திராவிட மொழிகளில் அக்காலை வெளியிடப்பட்டிருந்த அகர வரிசைகளையே[6] ஆதாரமாகக் கொண்டிருந்தனர். அவற்றுள் வடமொழிச் சொற்களிற் பெரும்பாலன மாறுதலின்றி அப்படியே காணப்படுகின்றன ; மாறுதல் பெற்ற சில சொற்கள் தம் வடமொழித் தொடர்பை நன்கு தெரிவிப்பனவாகக் காணப்படுகின்றன. ஆனால், திராவிட மொழிப் புலவர்கள் இச் சொற்களைத் திராவிடச் சொற்களாகக் கொள்ளாமல், (வடமொழியிலிருந்து வந்த) திசைச் சொற்களாகவே கொண்டனர் என்பதும், அவற்றின் திரிபளவிற்கேற்றவாறு அவை அவர்களால் ஒழுங்குபடுத்திப் பதிப்பிக்கப்பட்டன என்பதும் பாவம்! அவ் வாராய்ச்சியாளர்க்குத் தெரியாது. அன்றியும், வடமொழிச் சார்பற்ற சொற்களின் தொகுதியே பெரும் பகுதியாகும் என்பதை உணர்ந்து, அச் சொற்களைத் தனியாகப் பிரித்து முறைப்படுத்தி நாட்டு மொழிச் சொற்கள் அல்லது “செஞ்சொற்கள்” என்று பாராட்டிவந்தனர் என்பதை அவ் வாராய்ச்சியாளர் யாங்கனம் அறிந்திருப்பர்?
உண்மையில் திராவிட மொழிகளிற் காணப்படும் வட சொற்களையும், சிதைவுகளையும் பிரித்தறிதல் அரிதன்று. ஒருசில சொற்களே வட சொல்லா, திராவிடச் சொல்லா என்று ஆராய்ந்தறிதற் குரியனவாம். நீர் என்பதும் மீன் என்பதும் இரு மொழியாளராலும் தத்தம் மொழிச்சொற்கள் என்று உரிமை பாராட்டப்படுகின்றன. எனினும், இரண்டும் திராவிடச் சொற்கள் என்பதே ஏற்புடைத்தாகும்.