கால்டுவெல் ஒப்பிலக்கணம்/028-033
௨. திராவிடப்பெருங்குழுவினரே முதுகுடிகள்
திராவிடர்களுடைய குட்டை உருவமும், கறுத்ததோலும், நீண்ட தலையும், அக்ன்ற மூக்கும், சற்று நீண்ட முன்கையும் அவர்களை ஏனைக் குழுவினர்களினின்றும் வேறு பிரித்துக் காட்டுவனவாகுமென்று மேற்கூறினோம். இக்குழு உச் சிறப்புக்களையே துணையாகக்கொண்டு, ஹக்ஸ்லி[1] என்பார் ஆஸ்திரேலிய[2] நாட்டு முதுமக்களுடன் தொடர்பு பூண்டவர்களே திராவிடர்கள் என்று கூறிய கூற்றுக்கு அரண்கோல ஒருசிலர் முயல்வர். முண்டாரி[3] மொழிக்கும் ஆஸ்திரேலிய மொழிகள் சிலவற்றிற்கும் எண் முறையில் காணப்படும் சில ஒற்றுமைகளையும், தென்னிந்தியாவில் மாய்ந்து மறையும் நிலையிற் காணப்படும் வளைதடிகளின்[4] வேறுபாடுகளையும் அவர் தம் கூற்றுக்கு உறுதுணையாகக் கொள்வர்.
மடகாஸ்கர் [5] தீவிலிருந்து மலேயாத்[6] தீவுகள் வரையிற் பரந்து கிடந்து, இந்திய நாட்டை ஆஃபிரிக்காவுடனும், [7] ஆஸ்திரேலியாவுடனும் இணைத்திருந்த பெருநிலப் பகுதியாகிய இலெமூரியா [8] என்றொன்று இருந்ததென்றும், அப்பகுதியில் வாழ்ந்தவர்களே திராவிடர்களென்றும் ஸ்க்ளேட்டர்[9]என்பார் ஊகத்தாற்கூறிய கொள்கையோடு தொடர்புபடுத்த மற்றொரு சாரார் முயல்வர்.
எனினும், ஆஸ்திரேலியப் பண்டை மக்களின் மண்டையோடுகளையும், பண்டைத் திராவிட மக்களின் மண்டையோடுகளையும் ஒப்புநோக்கி ஆராய்ச்சிசெய்த ஸர் உவில்லி யம் டர்னர்[10] என்ற அறிஞர் அவ்விருதிறத்தினரும் ஓரினத்தினர் என்று கொள்வதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார். அவருடைய கூற்றிலிருந்து, அந்தமான் [11] தீவுகளிலும், பிலிப்பைன் [12] தீவுகளிலுமுள்ள நீக்ரோவரினத்தைச் சேர்ந்தவர்களுடன் திராவிடர்களை ஒன்றுபடுத்துவதும் முடியாதாகின்றது. டர்னரின் முடிபுகள் இவ்வாராய்ச்சித் துறையில் முடிந்த முடிபுகளாகவே கருதப்படுகின்றன.
அவ்வாறு கருதப்பட்டாலும், ஸர் உவில்லியம் ஹன்டர் [13] என்ற பேரறிஞர், திராவிடர்கள் இருகிளையினர் என்றும், முண்டாரி மொழித்தொகுதியைச் சேர்ந்த திருந்தா மொழிகளைப் பேசிய கோலேரியர்[14] என்பவர் ஒருகிளையும், தமிழ் மொழித் தொடர்புடைய மொழிகளைப் பேசிய உண்மைத் திராவிடர் மற்றொரு கிளையுமாவர் என்றும் ஆராய்ந்து புதிய தொரு கொள்கையைப் பின்னர் நிறுவியுள்ளார். மேலும், கோலேரியக் கிளையினர் இந்தியாவிற்குள் வடகீழ்ப்பகுதியூடு வந்து, விந்தியமலைக்கு வடக்கிலுள்ள மேட்டு நிலப்பகுதியிற்றங்கியவர்களென்றும், பின்னர் இந்தியாவின் வடமேற்குப் பகுதியூடு பஞ்சாபிற் புகுந்துவந்த திராவிடர்களால் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டார்களென்றும், இத்திராவிடர்களே தெற்கு நோக்கித் தொடர்ந்து முன்னேறிச்சென்று தங்கினார்களென்றும் அவர் கூறுவர். பலூச்சிஸ்தானத்தில்[15] வழங்கும் பிராகுவிமொழிக்குந் [16] தென்னிந்தியாவில் வழங்கும் மொழிகளுக்கும் தொடர்புள்ளதென்று ஐயுறுதற் கிடனிருப்பதையும், சோட்டாநாகபுரியிலுள்ள மக்கள்பால் மங்கோலியக் குழுவினர்க்குரிய சில குழூஉச் சிறப்புக்கள் காணப்படுவதையுமே ஆதாரமாகக்கொண்டு இக்கூற்று எழுந்ததாகும். இவ்வடிப்படைதானும் வலுவற்ற தொன்றன்றென்று கூறவும் வேண்டுமோ? அன்றியும், மொழிவேற்றுமை, ஒற்றுமைகளையே கருவியாகக்கொண்டு ஒரினத்தாரைக் கோலேரியரென்றோ, கிராவிடரென்றோ இரு பிரிவினராகப் பிரிக்க முயல்வது அறிவியன்முறைக்கு ஒவ்வாததொன்றாமன்றா? இருதிறத்தினரின் உடலமைப்புக்களில் எத்தகைய தீர்ந்த வேறுபாடுகளுங் காண்டற்கில்லை யாதலின் மேற்குறித்த கொள்கையையேற்றுக்கொள்ளலரிதாகின்றது. அதுவுமன்றி, மஞ்சள்நிற மேனியும், பெரிய தலைகளும் வாய்ந்த மக்கட் குழுவினரே வதிந்துவரும் நிலப்பகுதி யொன்றிலிருந்து, கருநிறமும், நீண்ட கலையமைப்புமுடைய ஒரு பெருங் கூட்டத்தினர் புறப்பட்டு வந்தனர் என்பது நம்பத்தக்கதொன்றாமோ?
எனவே, இமயத்திற்கு அப்புறமிருந்து திராவிடர்கள் இந்தியாவிற்குள் வந்திருத்தல் வேண்டுமென்று கொள்ளும் கொள்கைகளுக்கு அறிவியன் முறைப்படி நம்பத்தக்க எத்தகைய ஆகாரமுமிருப்பதாகத் தோற்றவில்லை. இந்தியாவில் இந்நாளிலும் திராவிடர்கள் வாழ்ந்து வருவதாகக் கொள்ளப்படும் நிலப்பகுதிகளின் இயற்கை யமைப்பையும், அவர்களுடைய தனிப்பட்ட பண்டைய உடலமைப்புக் குறிகளையும், உயிருண்மை[17] தெரிக்கும் அவர்களுடைய சமயத்தையும், சிறப்பியல்பு பொதுளும் மொழிகளையும், கற்றச்சுவேலைகளையும், கொன்மைக் கறிகுறியான குல தெய்வ வழி பாட்டையும்[18] நோக்கினால் அவர்கள்தாம் இந்தியாவின் முது குடிகள் என்று கொள்வதே சிறப்புடைத்தாகும்.