கிரிக்கெட் ஆட்டத்தின் கதை/எட்டாத பந்தெறி
6. எட்டாத பந்து ஏறி(Wide Ball)
1810 ஆம் ஆண்டில் ஒரு நாள், இங்கிலாந்து நகரில் உள்ள லார்டு எனும் கிரிக்கெட் மைானத்தில். ஒற்றை விக்கெட் போட்டி ஆட்டம் (Single Wicket Tournament) நடக்கவிருந்தது. அந்தப் போட்டியில் ஆடவிருந்த இரு குழுவினர்களும் மைதானத்திற்கு வந்திருந்தனர்.
ஒற்றை விக்கெட் போட்டியில், ஒரு குழுவிற்கு இரண்டு ஆட்டக்காரர்கள் தான் இருப்பார்கள். ஒருவர் பந்தெறிவாள் (Bowl). இன்னொருவர் தடுத்தாடுவாள் (Field). அடித்தாடும் ஆட்டக்காரர்களில் யாராவது ஒருவர் அவுட்டாகி ஆட்டமிழந்தாலும், அந்தக் குழு ஆடும் வாய்ப்பை இழந்து விடும். இந்த முறையில் அமைந்த போட்டிக்குரிய இரண்டு குழுவினர்தான் அன்று வந்திருந்தனர்.
ஃபிரடெரிக், ஹவார்டு என்பவர்கள் ஒரு குழுவினர், ஸ்கொயர், லாம்பர்ட் என்பவர்கள் மற்றொரு குழுவினர். விளையாட வந்திருந்த ஸ்கொயர் (Squire) எனும் ஆட்டக்காரருக்கு உடல் நலம் இல்லாத காரணத்தால், ஆட இயலாமல் இருந்தார். அதனால் இன்னொரு நாள் ஆடலாம் என்பதற்கு, எதிர்க்குழுவினர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர் குழுவைச் சேர்ந்த பிரடெரிக் என்பவர் இன்றே ஆடித் தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தினார். ‘ஆடினால் இன்றே ஆடவேண்டும். இல்லையேல் ஆட்டத்தில் தோற்றதாக ஒத்துக்கொள்ள வேண்டும்.’ என்றும் வலியுறுத்தினார்.
'விளையாடிப் பார்த்துவிட வேண்டியதுதான். வேறு வழியில்லை என்று ஸ்கொயர் லாம்பர்ட் குழு முடிவு செய்தது. அதன்படி, பிரடெரிக் குழு பந்தாட (Batting) இருந்த பொழுது, லாம்பர்ட்தான் பந்தெறிபவராக இருந்தார்.
விக்கெட்டுக்கு நேராகப் பந்தையெறிந்தால், எதிராட்டக்காரர் அடித்து விட்டால், தன் பாங்கர் ஆடமுடியாது என்று எண்ணிய லாம்பர்ட், ஒரு தந்திரம் செய்தார். விக்கெட்டுக்கு நேராகப் பந்தை எறியாமல், அவருக்கு எட்டாமல் அதாவது எட்டி அடிக்க முடியாதவாறு பந்தை எறிந்து கொண்டேயிருந்தார். தொடர்ந்து அதேபோல் எறிந்து கொண்டிருந்ததால், பொறுமை இழந்து போன பந்தடித்தாடும் ஆட்டக்காரர், வேகமாக ஆடி தனது விக்கெட்டை இழந்தார் (Out). அத்துடன், போட்டியிலே தோற்றும் போனார்.
இந்த நிகழ்ச்சியே எட்டாத பந்தெறி என்ற விதி வருவதற்கு வழியமைத்து விட்டது. கண்காணிக்கின்ற நடுவர்கள் குழம்பிப்போய் நிற்க, பந்தடித்தாடும் ஆட்டக்காரர்கள் என்ன செய்வது என்று திகைத்துபோய் நின்று தடுமாறி ஆடச் செய்த, இந்த எட்டாத பந்தெறிக்கு ஒரு விதியமைத்து, கட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டுமென்று வல்லுநர்கள் தீர்மானித்தனர். எட்டாத பந்தெறி என்றால் அதற்குத் தண்டனை தந்து தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலையும் உருவாகியது. 1820 ஆம் ஆண்டு. எட்டாத பந்தெறி என்றால், எப்படி இருக்க வேண்டும் என்ற விதிமுறை ஒன்றை அமைத்து வரையறுத்து வைத்தனர். வந்தடையும் எல்லைக் கோட்டுக்கு (Return Crease) அப்பால் எறியப்படும் பந்தானது எட்டாத பந்தெறி என்று விதி அமைத்து வைத்தனர். இதிலே எடுக்கப்படுகின்ற ஒட்டங்கள் எல்லாம் பொய் ஓட்டங்கள் (Byes) என்ற தலைப்புள்ள குறிபபில் 1828ம் ஆண்டு வரை குறிக்கப்பட்டு வந்தன. அந்த காலவரையறையில், எட்டாத பந்தெறியை நிலைப்பந்து என்று கூறி, அதற்குத் தண்டனையாக அடித்தாடும் குழுவிற்கு (batting Side) ஒரு ஒட்டம் என்றும் கொடுத்து வந்தனர்.
அதற்கடுத்தபடியாக, எட்டாத பந்தெறிக்குள்ள விதிமுறை சற்று விரிவு பெற்றது. அதாவது, பந்தடித்தாடும் எல்லைக்கோடானது (Popping Crease) எட்டடி நீளமாக ஆக்கப்பட்டு, அந்தக் கோட்டிற்கு அப்பால் போய் பந்தெறியாளரது பந்து போனால், அதுவே எட்டாத பந்தெறி என்றும் முடிவு செய்தனர். அவ்வாறு போனாலே, எட்டாத பந்தெறி என்று சொல்லிவிடலாம் என்று நடுவருக்கும் தைரியமாகப் பணியாற்ற வழிகோலினர். அந்தப் பந்து நிலைப்பந்தல்ல. (Dead Ball) ஆட்டத்தில் ஆடப்படும் பந்தே என்றும் கூறி, ஆட்டத்தில் விறுவிறுப்பான நிலையை ஏற்படுத்தினர். அதற்குத் தண்டனையாக ஒரு ஒட்டம் எதிர்க் குழுவிற்குத் தரப்பட்டது.
அதன்பின்னர், 1844ம் ஆண்டு, புதிய விதிமுறை ஒன்றும் புகுத்தப்பெற்றது. அதாவது, எட்டாத பந்தெறி என்று நடுவர் கூறிவிட்டால், பந்தடி ஆட்டக்காரர் முடிந்தவரை எத்தனை ஓட்டங்கள் வேண்டுமென்றாலும் ஓடி எடுத்துக் கொள்ளலாம் என்று அனுமதித்து விட்டனர். இதனால் அடித்தாடும் குழுவிற்கு அதிகமான பயன்கள் நிகழ்ந்தன.
இவ்வாறு விரிவு பெற்றுவிட்ட விதிமுறையானது, 1947 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து வந்தது. அவ்வப்போது பல சிக்கலான சூழ்நிலைகள் தோன்றினாலும், உள்ள விதியை வைத்துக் கொண்டே சமாளித்து வந்தனர். 1947ம் ஆண்டு, எட்டாத பந்தெறி என்றால், எப்படி இருக்க வேண்டும் என்று திட்டவட்டமாக விளக்கித் தெளிய வைக்க, ஒரு விதிமாற்றத்தைப் புகுத்தினர்.
ஒரு பந்தடி ஆட்டக்காரர், தனது விக்கெட்டைக் காத்து நின்று கொண்டிருக்கும் நிலையில் இருந்து, எவ்வளவு முயற்சித்தாலும் பந்தைத் தனது பந்தாடும் மட்டையில் எட்டி அடிக்க முயற்சித்தும் எட்டாத தூரத்தில் அந்தப் பந்து எறியப்பட்டிருந்தால், அதுவே எட்டாத பந்தெறி என்று முடிவெடுக்குமாறு கூறினர்.
ஆகவே, நடுவர்களுக்கு மிகவும் எளிதாகக் கண்காணிக்கின்ற அளவுக்கு விதி நெகிழ்ந்து தந்தது. இன்னும் ஒரு இனிய குறிப்பினையும் இங்கே காணலாம். பந்தெறியாளரது கையிலிருந்து வருகிற பந்து, வேகமிழந்து, அடித்தாடுபவர் முன்னே வந்து கிடந்தால், அது எட்டாத பந்தெறி என்று சிலர் எண்ணினார்கள். அதை எட்டாத பந்தெறியல்ல, அடித்தாடுவோர் அது முறையான பந்தாகவே கருதி அடித்தாடிவிடலாம் என்ற விதிக்குறிப்பினையும் தந்தனர்.
இவ்வாறு பந்தெறி முறையில் எட்டாத பந்தெறி தோன்றி, புதுக் குழப்பத்தை விளைவித்து, பிறகு தெளியவைத்து, ஒரு முக்கிய விதியாகவே மாறிய வரலாற்றை மேலே கண்டோம். அடுத்த பகுதியில் 'விக்கெட்டின் முன்னே கால்' (LBW) என்ற விதி வளர்ந்த விதத்தைக் காணலாம்.