கிரிக்கெட் ஆட்டத்தின் கதை/விக்கெட்டின் முன்னே கால்
7. விக்கெட்டின் முன்னே கால் (L.B.W.)
விக்கெட்டின் முன்னே கால் இருந்ததா என்று பார்க்கப் பயன்படுகின்ற விதியானது, தோன்றிய நாளிலிருந்தே தொல்லைதரும் விதியாகத் தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. விளக்கத்திற்குரிய விதியாக அமையாமல், விவாதத்திற்குரிய விதியாக இருப்பதால், நடுவர்களுக்கு விடுகின்ற ஒரு சவாலாகவே சதிராட்டம் போட்டுக்கொண்டு விளங்குகிறது. கிரிக்கெட் குழந்தைப் பருவத்தில் இருந்த காலத்தில், வளைந்த மட்டைகளுடன் (Curved bat) பந்தை அடித்தாடிய போது, விக்கெட் முன்னால் நின்று கொண்டிருந்த போது இந்தப் பிரச்சினை எழவே இல்லை. பந்தாடும் மட்டைகள் தங்கள் கூன் முதுகை தொலைத்து, நிமிர்ந்தவையாக மாறிய (Straight bat) போது, பிரச்சினைகளும் நிமிர்ந்து சிலிர்த்தெழுந்து கொண்டன. வளைந்த பந்தாடும் மட்டையுடன் விளையாடிய போது பந்தை அடித்தாடத்தான் முடியுமே தவிர, நன்றாக ஒதுக்கித் தடுத்து நிறுத்திட முடியாது என்பதால், விக்கெட்டைக் காத்துக் கொள்ளும் தந்திரம் அப்பொழுது முளையாகக் கூட முளைக்கவில்லை. நிமிர்ந்த, தட்டையான அடிபாகம் கொண்ட பந்தாடும் மட்டை வந்தவுடன், அடித்தாடாமல் தேக்கியாட ஆரம்பித்து, விக்கெட்டருகில் நின்று நெடுநேரம் ஆடக்கூடிய அளவுக்கு நுணுக்கம் வளர்ந்துவிட்டது. விக்கெட்டைக் காத்துக் கொள்ள முயன்றது தவறில்லை. பெருந்தன்மையுள்ள பண்பாளர்கள் ஆடுகின்ற ஆட்டம் என்று புகழப்பட்ட கிரிக்கெட் ஆட்டத்தில், வஞ்சகமாக சூழ்ச்சியாக, பந்தைக் காலால் தேக்கியபடி தடுத்தாட ஒரு சிலர் அக்காலத்தில் தலைப்பட்டார்கள். காலுறைகள் (Pads) கண்டுபிடிக்கப்பட்டு, கால்களில் கட்டியிருந்ததும், அவர்கள் கால்களினால் பந்தைத் தேக்கிக்கொள்ளுதல் மிகவும் கஷ்டமில்லாமல் இருந்தது. நெஞ்சாரத் துணிந்து குறுக்கு வழியில் செல்லும் வஞ்ச மனத்தினராய் ஆடும் முறையினர் ஆட்டத்தைத் தடுக்கவே. 1774ம் ஆண்டு, ஒரு புதிய விதியை ஆட்ட வல்லுநர்கள் புகுத்தினார்கள். புதிய விதியானது, ஒரு பொறுமையான தன்மையில் பிறந்தது. ஒரு பந்தடி ஆட்டக்காரர் (Batsman) தனது விக்கெட்டைத் தாக்கப் போகின்ற பந்தைக் கால்களால் வேண்டுமென்றே தடுத்தால், அவர் ஆட்டமிழந்தவராகின்றார் (Out) என்பதுதான் அந்த விதி. நான்காண்டுகள் இந்த விதியே சிறந்த விதியாக விளங்கிக் கட்டுப்படுத்தியது என்றாலும், அதிலே பல சிக்கல்கள் கிளைத்தெழுவது போல் தோன்றியதால், புதிய மாற்றம் ஒன்றைச் செய்ய முனைந்தனர் ஆட்ட வல்லுநர்கள். 1788-ஆம் ஆண்டு புதிய திருத்தம் ஒன்று விதியில் புகுந்தது. வேண்டுமென்றே தடுத்தால் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, 'விக்கெட்டின் முன்னே பந்து விழுந்து, விக்கெட்டை நோக்கி வருகின்ற பந்தைத் 'தடுத்தால்' என்று திருத்திவைத்தனர். திருத்தம் பெற்றுக்கொண்ட விதியானது ஆட்டத்திற்குப் பொருத்தமில்லாதது போல் தோன்றியதனாலோ என்னவோ, வளர்ந்து வரும் தொடர்ந்து வரும் பிரச்சினையை அது தீர்த்து வைக்க இயலாததாக இருந்ததால். 1821-22ம் ஆண்டில் மேலும் ஒரு சிறு திருத்தம் இடையிலே செய்து செருகப்பட்டது.
விக்கெட்டின் முன்னே பந்து நேராக விழுந்து வர வேண்டிய அவசியமில்லை. ஆனால், விக்கெட்டிற்கு நேராகப் பந்தை எறிந்திருந்தால் போதும் (Delivered straight) என்கிற விதிதான் 1821-22ல் வந்தது. நேராக வரவேண்டியது அவசியமில்லை; நேராகப் பந்தை எறிந்திருந்தால் போதும் என்கிற விதிக்கு உண்மையான அர்த்தத்தை நடுவர்களே புரிந்துகொள்ள முடியாமல் திணறத் தொடங்கி விட்டார்கள். குழப்பத்தைக் குவித்து வைக்கின்ற அளவுக்குக் குறித்துக் காட்டுகின்ற விதியை, எல்லோரும் ஏற்றுக்கொள்ளாமல் மறுப்பு விடுத்ததற்கேற்ப, 1839-ம் ஆண்டு. ஒரு புதிய நிலையை தெளிவு தர மீண்டும் ஏற்படுத்தினார்கள்.
அப்புதிய நிலையானது, 1788-ம் ஆண்டு இருந்த, விக்கெட்டின் முன்னே பந்து விழுந்து, விக்கெட்டை நோக்கி வருகின்ற பந்தைக் காலால் தடுத்தால், தடுத்தவர் ஆட்டமிழக்க வேண்டும் என்ற விதியையே மீண்டும் சரியானதென்று 1839-ல் ஏற்றுக் கொள்ள வைத்தனர்.
இந்த விதியை ஏற்றுக்கொண்டு, எறத்தாழ 49 ஆண்டு காலம் விளையாடியபோது, மெரிலிபோன் கிரிக்கெட் சங்கத்தினர் (M.C.C.) மீண்டும் ஒரு முறை, இந்த விதியைப் பற்றி, ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். இந்த சிந்தனையின் பயனாக, விதி மீண்டும் ஒரு திருத்தத்தைப் பெற்றுத் தாங்கிக் கொண்டது.
'பந்தெறியாளரிடமிருந்து எறியப்பட்டுவரும் பந்தை, பந்தடி மட்டையில் தடுக்காமல் வேண்டுமென்றே உடலால், (Person) அல்லது காலால் தடுத்து விக்கெட்டைக் காத்துக் கொண்டு ஆடுதல், ஆட்டத்தின் உண்மையான உணர்வுக்கும், நீதிக்கும் நியாயத்திற்கும் அப்பாற்பட்ட செயலாகும் என்று 1888ம் ஆண்டு விதிக்குப் புதிய வடிவத்தைத் தந்தனர். உணர்வையும் உண்மையான குறிக்கோளையும் மதித்தவர்கள் பண்புடனே ஆடத்தான் செய்தனர் என்றாலும், மாற்றம் பெற்ற விதி, முழுமையடையாமலே தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
1902ம் ஆண்டு. மெரிலிபோன் கிரிக்கெட் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், விதியை மாற்றியமைக்க முயன்று தோல்வி அடைந்தது. தோல்வியடைந்த சங்கத்தினரும் தொடர்ந்து பழைய விதியையே பின்பற்றி வந்தனர். அந்த இடைவெளி 35 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.
இரண்டாண்டுகள் சோதனையாக விதியமைத்துக் கொண்டு வந்த விதியை, 1937ம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். அதாவது, பந்தெறியாளர் எறிகின்ற பந்தானது, பந்தடி ஆட்டக்காரருக்கு இடப்புறமாக (offside) விழுந்து, பிறகு விக்கெட்டை நோக்கி வரும்போது, காலால் தடுத்தாடினால், அவர் ஆட்டமிழந்து விடுவார் என்பதுதான் அந்த விதியாகும்.
இந்த விதியே 1970லும் 1972லும் சற்று மாறி இன்றைய விதியாக மாறி, மறுமலர்ச்சி பெற்றிருக்கிறது. அத்தகைய விதியையே, கீழே கொடுத்திருக்கிறோம்.
பந்தெறியும் ஒரு விக்கெட் முனையிலிருந்து, தான் தடுத்தாடுகின்ற விக்கெட்டுக்கு நேராக இருந்து ஆடும்போது, தனது கையிலோ அல்லது பந்தாடும் மட்டையிலோ முதலில் பந்து படாமல்; அந்தப் பந்தானது இணைப்பான்களுக்கு (bails) மேலாக வந்தாலும், அதன் வழியில் குறுக்கிட்டு இடையிலே தடுத்தால், ஒரு விக்கெட்டிலிருந்து இன்னொரு விக்கெட்டுக்கு நேர்க்கோட்டு அமைப்பில் நேராக எறியப்பட்ட அந்தப் பந்து நேராக விக்கெட்டை நோக்கிச் சென்றிருக்கும் அல்லது ஆடுவோரின் வலப்புறத்தில் விழுந்த பந்தானது அவரது விக்கெட்டை நோக்கி வந்திருக்கும், அதனால் விக்கெட் விழுந்திருக்கும் என்று நடுவர் கருதினால், அபிப்ராயப்பட்டால், விக்கெட்டின் முன்னே கால் வைத்திருந்தார் என்ற குற்றத்திற்கு அந்த பந்தடி ஆட்டக்காரர் ஆளாகின்றார்.
'விக்கெட்டின் முன்னே கால்' எனும் விதி பற்றிய விளக்கமும் விவரமும் இப்படியாக மாறி மாறி வந்து வளர்ந்தது.