கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/பந்தயக் களமும் பார்வையாளர்களும்


8. பந்தயக் களமும் பார்வையாளர்களும்

ஒலிம்பிக் பந்தயம் என்றால் கிரேக்க நாட்டு மக்களுக்கு மிகவும் விருப்பம். பந்தயம் நடக்க இருக்கும் நாளுக்கு, பல மாதங்களுக்கு முன்னமேயே பார்வையாளர்கள் தங்களை ஆயத்தம் செய்த கொண்டு விடுவார்கள்.

ஒலிம்பிக் பந்தயம் பார்ப்பது என்பது, புனிதமான இறைவன் ஆலயத்திற்குப் போய்வரும் மதச் சம்பிரதாயம் போன்று அவர்கள் எண்ணியே நடந்தனர். விழைந்தனர். பார்த்து மகிழ்ந்தனர். உழவர் முதல் உழைப்பாளிகள் வரை, உல்லாசபுரியில் வாழ்கின்ற செல்வர் முதல், அரசர்கள், வணிகர்கள் வரை அத்தனை பேரும் பந்தயம் பார்க்கக் கூடி விடுவார்கள். ஒலிம்பியா பள்ளத்தாக்கு முழுவதுமே கூடாரமாகத்தான் காட்சியளிக்கும்.

ஒலிம்பிக் போட்டிகள் கோடை காலத்தில், அதாவது ஏப்ரலில் இருந்து ஜூலை மாதம் வரை உள்ள இடைப்பட்ட நாட்களில் தான் எப்பொழுதும் நடந்தன. பார்வையாளர்கள் அனல் கக்கும் வெயிலில் அமர்ந்து கொண்டு, அவதிப்பட்டுக் கொண்டே ஆனந்தத்துடன் பந்தயங்களைப் பார்த்து மகிழ்ந்தனர்.

எங்கும் இளமை பவனிவரும் இன்ப நேரமல்லவா? எங்கும் எழுச்சியும் மகிழ்ச்சியும்தான் எதிரொலிக்கும். தமிழ்நாட்டில் பொங்கல் விழாவின்போதும், ஏறு தழுவும் விழாவின்போதும் நம் தமிழகக் காளையர்கள் நடந்து கொள்வதைப் போலத்தான்.

விழா நாட்களைக் குறித்து விமரிசையாகப் பாடி மகிழ்வார் புலவர்கள். விழி மயக்கும் ஓவியங்களைத் தீட்டி, மக்களைக் கவர்வர் ஓவியர்கள். சிந்தனைக்கு உயிர் கொடுத்து, செழுமை சிந்து பாடும் சிறந்த வீரர்களைச் சிலைவடித்துக் களிப்பார்கள் சிற்பிகள். பார்ப்போருக்கும் பங்கு பெறுவோருக்கும் படைக்கப்பட்ட வீர விருந்துதான் ஒலிம்பிக் விளையாட்டுக்கள். வீரமும் விவேகமும், ஆற்றலும் ஆண்மையும் ஒன்றுடன் ஒன்று அலைபோல மோதிக்கொள்ளும் அருமையான களமல்லவா பந்தயக்களம்: போட்டி தொடங்குவதற்கு முன் எத்தனை எத்தனை ஆர்ப்பாட்டங்கள்.

ஒலிம்பிக் பந்தயத்தின் திடல் 215 கெஜ நீளமும், 35 கெஜ அகலமும் கொண்டதாகும். அந்த பந்தயத்திடலைச் சுற்றி நாற்பதினாயிரம் மக்களுக்குமேல் அமர்ந்து வேடிக்கை பார்க்கக் கூடிய உட்காரும் இடம், புல் தரையினாலும் படிக்கட்டு போன்ற அமைப்புக்களுடனும் கட்டி முடிக்கப் பெற்றிருந்தன. இந்தப் பந்தயத் திடல், நாற்பது அடி உயரமுள்ள சீயஸ் என்ற கடவுளின் சிலையிருக்கும் பீடத்திற்கு எதிரிலேயே எழிலாக அமைக்கப்பட்டிருந்தது.

பந்தயம் நடத்துவதற்குரிய செலவுகள் அனைத்தும், பொதுமக்கள் மனமுவந்து வாரி வழங்குகின்ற பெருங்கொடையின் மூலமும், நகரங்கள் நல்குகின்ற தானத்தாலும், போட்டியில் பங்கு பெறுகின்ற வீரர்கள் இழைக்கின்ற தவறுகளுக்கரிய அபராதத்தின் மூலமும் மற்ற விரும்பத்தகாத காரியங்களுக்கான அபராதத்தின் மூலமும் சேர்ந்த தொகைகளால்தான் சரிகட்டப் பெற்றன.